வலி வடக்கு

வலி வடக்கு

“காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்ட சுமார் 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பரப்பில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக அரச காணிகளாகவே இப்போதும் காணப்படுகின்றமையினால், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிட வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் 2013 வர்த்தமானியை மீளப்பெறுவதற்கும், தற்போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற காணிகளில் முடிந்தளவு காணிகளை விடுவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படும் போது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர் காலத்து சிவன் கோயில் இடிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை – அருட்தந்தை மா.சக்திவேல் விசனம்!

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நாகரீகம் அற்ற செயலை மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் மலையக தமிழர் பண்பாட்டுப் பேரவை என்பன வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துன்புற்றிருக்கும் மக்களின் வேதனையோடு தாங்களும் நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அராங்கம் இந்து மக்களிடத்திலும், தமிழ் மக்களிடத்தும் இச்செயல் தொடர்பாக மன்னிப்பு கோருவதோடு அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை முற்றாக அங்கிருந்து அகற்றி அங்கு இந்து மக்களின் சுதந்திர வழிபாட்டுக்கும் இடம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“பருவ மழை பெய்கிறது. அது முடியட்டும் வடக்கு காணி பிரச்சினைகளுக்கு தீர்வு.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ்

வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற அமைச்சர் அங்கு கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

“வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

பருவ மழை காலம் நிறைவடைந்ததும் நேரடியாக சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து தீர்க்கமான சாதகமான முடிவுகளை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளார். எனவே, கடந்த காலங்களில் தமிழ்த்தரப்புகள் விட்ட தவறுகள் என்னவென்றால் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டிருக்காது.

தற்போது கிடைக்கும் சாதகமான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இனியாவது இருப்பதை பாதுகாத்துக்கொண்டு அதனை முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

பிரச்சினைகள் தீர்வை நோக்கி போகவேண்டுமேயொழிய அதனை குழப்பிக்கொண்டு போகும் நோக்கம் எனக்கில்லை” என அமைச்சர் தெரிவித்தார்.

வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன் பிரதேசக் கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் தொடர்பில் ஆராய்ந்தது தேவையான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.