வவுனியா பல்கலைகழகம்

வவுனியா பல்கலைகழகம்

“பல்கலைகழகங்கள் விவசாயதுறை தொடர்பான பட்டப்படிப்பை கொடுக்க முன்வர வேண்டும்.” – வவுனியாவில் கோட்டாபாய !

“30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.” என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு விசேஷமான நாள். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பல்கலை கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பிரதேசத்தினை கல்வி, பொருளாதார ரீதியில் உயர்வடைய இந்த பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படுகிறது.  எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல நாட்டில் புதிய பல்கலைகழகம் உருவாக்கப்பட்டு இந்த பிரதேச மாணவர்களிடம் கையளிக்கபடுவதில் பெருமையடைகிறேன்.

இந்த பல்கலைகழகம் ஊடாக இளமாணி பட்டங்களை மட்டுமல்ல, மேலதிக பட்டங்களையும், வேலை வாய்ப்புகளையும், வெளிநாட்டு வாய்ப்புகளையும் உருவாக்கி எமது இளைய சமுதாயத்துக்கு பெற்று கொடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்ல தயாராக வேண்டும். இந்த பல்கலை கழகம் ஊடாக தொழில் நுட்ப சவால்களை முறியடித்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். எதிர் வரும் காலங்களில் எமது நாட்டில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க அயராது உழைக்க வேண்டும்.

எமது நாடு விவசாய நாடு என்பதால் எதிர்காலத்தில் விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி அவற்றில் பட்டங்களை பெற்று கொடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்று கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும். எதிர் காலத்தில் மிக அதிகளவான மாணவர்களை பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க எதிர்பார்த்து இருக்கிறோம். அதிகளவான மாணவர்கள் உயர்தரத்திலே சித்தியடைந்தாலும், அனைவரையும் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க முடியவில்லை எதிர்காலத்தில் இந் நிலைமை மாற்றியமைக்கப்படும்.

பல்கலைகழகங்களில் பட்ட படிப்பு கற்கை நெறிகளுக்கு மேலதிகமாக டிப்ளோமா, சான்றிதழ் கற்கை நெறிகள் புதிது புதிதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் 30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன் என்றார்.

இவர்களை நம்பி தானே எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம்.? – ஜனாதிபதியிடம் நீதி கேட்க திரண்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் !

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன்,  பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்பவிழா நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.  இதனையடுத்து ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

IMG 20220211 WA0053

ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்த குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களை பம்பைமடு இராணுவச் சோதனைசாவடியில் குவிக்கப்பட்டிருந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து முன்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.  இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், குழப்பநிலை ஏற்பட்டது.

எமது பிள்ளைகளை அவர்களை நம்பியே நாம் ஒப்படைத்தோம். எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் தெரிவித்தபோதும், அதனை பொருட்படுத்தாத பொலிசார் அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்க வரவில்லை எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரினர். மேலும் எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா, எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள் நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா? என்று காவற்துறையினரை பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இருமணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக தடுத்து நின்றனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.