வித்யா கொலை வழக்கு

வித்யா கொலை வழக்கு

வித்யா கொலை வழக்கு விசாரணை; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு !

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட குமரன் சர்வானந்தனுக்கும் குறித்த அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி குறித்த இருவரும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியத்துக்கமைவாகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வித்யா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான மஹாலிங்கம் சசிகுமார் எனப்படும் சுவிஸ்குமார் என்பவரை விடுவிக்குமாறு விஜயகலா மகேஸ்வரன் நேரடி அழுத்தம் வழங்கியதாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சாட்சியமளித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2011ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தான் உள்ளிட்ட 5 பேர் 10 வருட சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமை, விஜயகலா மகேஸ்வரனின் அழுத்தம் காரணமாகவே என கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.