வியாழேந்திரன்

வியாழேந்திரன்

“தமிழ் தேசியம் தடம்புரளக் கூடாது.” – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் !

கடந்த வரலாற்றில் தமிழ் தேசியம் தடம்மாறி சென்றிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் தடம்புரளக் கூடாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணியை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தி கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துகின்ற அரசியல் பயணத்தை முன்னெடுக்க போவதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு இருக்கின்ற உரிமை சார்ந்த விடயங்களை இராஜதந்திர ரீதியில் நகர்த்தி அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் வியாழேந்திரன் தெரிவித்தார்.

“தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்கப்பெறவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” – வியாழேந்திரன்

“கிராமிய பொருளாதாரத்தை கட்டமைத்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தினை விருத்தி செய்யும் வகையிலான விடயங்களை உயர்த்துவதற்கே அதிகளவான நிதி எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படவிருக்கின்றது.” என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்  தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

”கொரோனா வைரசின் தாக்கமே பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. இது எங்களை விட வளர்ச்சியடைந்த நாடுகளிற்கே சவால விடயமாக இருக்கின்றது. எனவே தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமை பெறுகின்றபோது கொவிட் தொற்றிலிருந்து விடுபட முடியும். அதன்போது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. இதேவேளை கிராமிய பொருளாதாரத்தை கட்டமைத்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தினை விருத்தி செய்யும் வகையிலான விடயங்களை உயர்த்துவதற்கே அதிகளவான நிதி எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படவிருக்கின்றது.

அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் புறம்தள்ளவில்லை. அதிலே நியாயம் இருக்கின்றது. ஆயினும் தற்போதைய நெருக்கடியான சூழலில் இவர்களுடைய பிரச்சனையை அணுகுவது சவாலானவிடயம். ஆயினும் அதனை தீர்ப்பதில் அரசாங்கம் கவனமாக இருக்கின்றது. பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அது சுமூகமாக தீர்க்கப்படும். இப்போதுள்ள எதிர்க்கட்சியினர் கடந்த ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தினை அழித்தவர்கள். வடகிழக்கு தமிழ்மக்கள் அந்த ஆட்சிக்கு கூடுதலான ஆதரவை வழங்கினார்கள். அதுபோல தமிழ் அரசியல் தலைமைகளும் அந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினையே முன்னெடுத்திருந்தனர். ஆனால் வடகிழக்குமக்கள் அபிவிருத்தி சார்ந்து எந்த முன்னேற்றத்தினை அடைந்தார்கள் என்பதை நாங்கள்சிந்திக்கவேண்டும்.

சில நாடுகளில் ஆளும் கட்சிகள் நல்லதை செய்தால் எதிர்க்கட்சிகள் அதனை பாராட்டும். இங்கு அப்படி இல்லை. தடுப்பூசி வருவதற்கு முன்னர் அதனை கொண்டுவரவில்லை என்று எதிர்ததார்கள். அதனை கொண்டுவந்த பின்னரும் விமர்சிக்கின்றார்கள். ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் பிரச்சனை, கொடுக்காவிட்டாலும் பிரச்சனை. இவர்களது நோக்கம் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மாத்திரமே. நல்லதையும் பிழையாக மாற்றி தங்களது அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர. இவர்களுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித நலன்களும் இல்லை. கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வரும்போது பலகேள்விகளிற்கான பதிலை அரசாங்கம் வழங்கும்.

தமிழ்மக்களின் பிரச்சனையை பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். பாதிப்பை மிக்ககூடுதலாக சந்தித்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி நியாயம் கிடைக்கப்பெறவேண்டும் என்பதில் நாங்கள் இப்போதல்ல பலவருடங்களாக எமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அவர்களுக்கு செய்யவேண்டிய ஆற்றக்கூடிய உடனடிக்கருமங்களை நாங்கள் செய்யவேண்டும். பாதிப்புக்குள்ளான மக்களுடைய நீதி நியாயம் அவர்களது எண்ணங்களுக்கும், எதிர்பார்ப்புக்களும் ஏற்ப கிடைக்கப்பெறவேண்டும்”  என்றார்.

“யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்களையும் வலிகளையும் மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்கின்றோம்” – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

“யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்களையும் வலிகளையும் மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்கின்றோம்” என மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் “நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக நாட்டில் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சிபாரிசுக்கமைவாக மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சின்னகாலபோட்டமடு கிராமத்தின் பிரதான வீதியினை 01 கிலோ மீட்டர் கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் திட்டத்தினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு நேற்று  (30.03.2021) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு  வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
அடிப்படை உரிமைகளான வீதி, வீடு, மலசல கூடம் போன்றவை எமது தமிழ்
மக்களுக்கு தேவைதானா என கேட்கும் சில அரசியல்வாதிகளிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். எங்களுக்கு உரிமை தேவை என்பது உண்மை ஆனால் அத்தோடு அடிப்படை உரிமை என்ற விடயமும் இருக்கின்றது. அவைதான் உணவு, உடை, உறையுள் அதுவும் எமக்கு தேவை, அதை கூட மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இழந்து நிற்கின்ற ஒரு சமூகமாகத்தான் எமது தமிழ் சமூகம் காணப்படுகின்றது.

கிராமங்கள் தன்னிறைவு அடையவேண்டும், இன்று பலர் அரசியலுக்காக சொல்லுகின்றார்கள், நிலம் பறிபோகிறது வளம் பறிபோகிறது என்று, அப்படியானால் அந்த நிலத்தையும் வளத்தையும் பாதுகாக்க என்ன வழி என்று கேட்டுப்பாருங்கள் அவர்களுக்கே அதற்கான வழி தெரியாது.

சிந்தித்துப் பாருங்கள் ஏன் பறிபோகின்றது என்று, எல்லை கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் அந்த கிராமங்களில் இல்லை. அவர்களுக்கு சரியான போக்குவரத்து இல்லை, சரியான சுகாதார வசதிகள் இல்லை, கல்வி வசதி இல்லை, மின்சார வசதி இல்லை, வீட்டு வசதி மற்றும் மலசல கூட வசதி இல்லை அப்படியானால் இவ்வளவு வசதிகளும் இல்லாமல் ஒரு எல்லை கிராம மக்கள் என்ன செய்வார்கள். அந்த எல்லைக் கிராமங்களை விட்டு நகரை நோக்கி அவர்கள் இடம் பெயர்வார்கள், அவர்கள் கிராமத்தில் இருந்து இடம்பெயரும் போது என்ன நடக்கும், அந்த எல்லைகளில் இருக்கும் நிலவளங்கள் பறிபோகத்தான் செய்யும்.

ஆகவே நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் பின்தங்கிய எல்லைக் கிராமங்களிலே வாழுகின்ற மக்கள் அந்த இடங்களிலே இருந்து இடம்பெயராதவாறு அவர்களுக்கு நல்ல போக்குவரத்து வசதி, நல்ல சுகாதார வசதி, நல்ல கல்வி வசதி, தொழில் சார்ந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறவேண்டிய அவசியம் வராது.

கிராமங்களை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும் அனைத்து வசதி வாய்ப்புக்களையும் கிராமங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும், ஆகவே பல விமர்சனங்களையும் விசமத்தனங்களையும் தாண்டி கிராமங்களை நோக்கி அந்த மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை நாங்கள் செய்துவருகின்றோம்.

அதே போல் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் எம்மால் இயன்றளவு எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்புற மக்களுக்காக பல்வேறுபட்ட உதவிகளை நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.

மாவட்டத்தில் இருக்கின்ற பாரிய பிரச்சனைகளில் ஒன்றுதான் தொழில் இல்லா பிரச்சனை, அதற்காகவும் நாங்கள் தொழிற்சாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம், அதனடிப்படையில் 8000 பேருக்கு தொழில் வழங்கக் கூடிய ஆடைக் கைத்தொழிற் பூங்காவை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவில் நிறுவுவதற்கான வேலைத்திட்டங்கங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மாவட்டத்தில் நிலவும் வேலையில்லா பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமெனவும்” இதன்போது தெரிவித்திருந்தார்.
இரண்டு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படவுள்ள வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் வைத்தியலிங்கம் சந்திர மோகன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எந்திரி கே.சிவகுமார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியாளர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், பொதுமக்கள், முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை – அமைச்சர் வியாழேந்திரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என தபால் தொடர்புகள் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இப்போது தமிழ்ப்பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கிறது. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கலையரசனின் பெயரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்த நிலையில் மாவை சேனாதிராஜாவுக்கு அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர்,

“இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினை, இதில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு கேள்வி முன்வைக்கப்படும் போது ஒரு அபிப்பிராயத்தையும் கூறியாக வேண்டும்.

ஒரு தமிழ் மாவட்டம் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கும் போது அதற்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். என்றார்.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்து அதிலிருந்து விலகியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

கட்சி அரசியல் என்பது மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றும் பயணத்திற்கு துணை புரியும் ஒரு சாதனம்.

அந்தச் சாதனத்தினால் நமது தேவையை அடைய முடியாதென நமக்குத் தெரியும் போது எம்மால் அப்பாதையில் பயணிக்க முடியாது. அப்படியாயின் மாற்று வழியொன்றைத் தேடவேண்டும். எந்த மக்கள் என்னைத் தெரிவு செய்தார்களோ அந்த மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே நான் அதிலிருந்து விலகினேன்.

மக்கள் எத்தனை வருடங்களுக்கு துன்பங்களையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்வது? நன்றாகச் சிந்தித்தால் நான் தெரிவு செய்த பாதை சரியானது என்றார் அமைச்சர் வியாழேந்திரன் .

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – வியாழேந்திரன்

சதாசிவம் வியாழேந்திரன் கடந்த 05ஆம் திகதி நடைபெற்ற 09ஆவது பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 22,218 விருப்பு வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் தெரிவானார்.

இந்நிலையில் கண்டி தலதா மாளிகை வளாகத்தில்(12.08.2020) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வியாழேந்திரன் தபால், வெகுசன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக தெரிவித்தார்.   தொடர்ந்தும் பேசுகையில்

தேர்தல் தொனிப்பொருளிலும் தாம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளதை நினைவுகூர்ந்த இராஜாங்க அமைச்சர், பல்வேறு தேவைகளுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்களுக்கு சேவை செய்வதை நோக்காகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து தமது தொழில்சார் அனுபவங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்கள் தமது வாழ்வாதாரம் உள்ளிட்ட தேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவே அதிகளவு வாக்குகளால் தம்மை தெரிவு செய்துள்ளார்கள் என்றும் மக்கள் எதிர்பார்ப்பை உச்சளவில் தாம் நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.