விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

2023ஆம் ஆண்டு காய்கறி இறக்குமதிக்காக இலங்கை $326.5 மில்லியன் செலவிட்டுள்ளது !

2023 ஜனவரி முதல் நவம்பர் வரை காய்கறி இறக்குமதிக்காக இலங்கை $326.5 மில்லியன் செலவிட்டுள்ளது – இது 2022ல் இதே காலப்பகுதியில் செலவிடப்பட்ட தொகை $297.2 மில்லியன் ஆகும்.

29 டிசம்பர் 2023 அன்று இலங்கை மத்திய வங்கியின் (CBSL) செய்திக்குறிப்பின்படி, ஜனவரி முதல் நவம்பர் 2023 வரையிலான காய்கறிகளின் இறக்குமதி செலவினம் 326.5 மில்லியன் டொலர்களாகும், நவம்பர் மாதத்திற்கான செலவு 29.3 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் 2022 வரை, காய்கறிகள் இறக்குமதிக்காக $ 297.2 மில்லியன் செலவிடப்பட்டது. இது உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயம் மற்றும் திராட்சை, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்றவற்றுக்காக செலவிடப்பட்டது,” என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

CBSL இன் படி, 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் $ 1,541 மில்லியன் உணவு மற்றும் பானங்கள் (முக்கியமாக தானியங்கள் மற்றும் அரைக்கும் தொழில் பொருட்கள், பால் பொருட்கள், காய்கறிகள், கடல் உணவுகள், சர்க்கரை மற்றும் தின்பண்டங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள்) இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மொத்தம் 1,478 மில்லியன் டொலர்கள் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. இதேவேளை ஜனவரி-நவம்பர் 2023 காலப்பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி வருவாய் $ 397 மில்லியனாக குறைந்துள்ளது – 2022 இல் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட வருவாய் $ 418.8 மில்லியன்களாகும்.

2023 ஆம் ஆண்டில் மீன் மற்றும் மீன் தயாரிப்புகளின் ஏற்றுமதி மூலம் இலங்கை $ 274.8 மில்லியன் ஈட்டியுள்ளது, ஆனால் 2023 ஜனவரி முதல் நவம்பர் வரை கடல் உணவு இறக்குமதிக்காக $71.4 மில்லியன் செலவிட்டுள்ளது.

சீனாவுக்கு 100,000 குரங்குகளை அனுப்பும் ஆரம்ப வேலைத்திட்டம் – சுற்றாடல் அமைப்புகளினால் பாதிப்பு !

சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு 100,000 குரங்குகளை அனுப்பும் ஆரம்ப வேலைத்திட்டம் சுற்றாடல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஏர் ரைபிள்களை விநியோகிக்கும் போது, ​​பயிர் சேதம் பெரும்பாலும் டோக் குரங்குகளால் ஏற்படுவதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுப்பதற்காக இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் நடைமுறையில் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச் சூழல் அமைப்புகளின் ஆலோசனைகள் பயிர்களைச் சுற்றி புடவைகளை தொங்கவிடுவது, தென்னை மரங்களில் தட்டுகள் கட்டுவது போன்ற யோசனைகள் என்றும், அரை ஏக்கர் பயிர்ச்செய்கையை வன விலங்குகளுக்காக ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதால், வன விலங்குகளால் பயிர்ச்செய்கை பயிர்கள் நாசமாக்கப்படுவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரே வருடத்தில் குரங்குகளினால் சேதமாக்கப்பட்ட 03 மில்லியன் தேங்காய்கள் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

அதன் ஊடாக விவசாய அமைச்சு வெளிநாட்டு வருவாயை ஈட்டும் அமைச்சாக மாறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

விவசாய தொழிற்துறைக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்தமையால் இம்முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது என்று தெரிவித்த அமைச்சர், ஹெக்டெயார் ஒன்றில் அதிகளவான அறுவடையை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான தொழில்நுட்ப முறைமைகளை கண்டறியும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

கடந்த காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து போராட்ட களத்திற்கு சென்ற விவசாயி தற்போது மீண்டும் விவசாய நிலத்திற்கு வந்து தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

நாட்டின் நுகர்வுத் தேவைக்காக அனைத்து விவசாயப் பொருட்களையும் வெற்றிகரமாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் விளைநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும். ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது உர வரிசை, எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை போன்ற வரிசைகள் மாத்திரமே காணப்பட்டன. நான் விவசாய அமைச்சராக பதிவியேற்றுக்கொண்ட போதும் பாரிய சவாலொன்று காணப்பட்டது. உள்நாட்டு விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அந்த சவாலை ஏற்றுக்கொண்டு முதற்கடமையாக விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுத்தேன். ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய விவசாயிகளுக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் தற்போது பெரும்போக விளைச்சல் போதியளவு கிடைத்துள்ளது. சிறுபோகத்திற்கு அவசியமான உரமும் தற்போது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது விவசாயிகள் விவசாய நிலத்தை விடுத்து ஆர்ப்பாட்ட பூமியில் களமிறங்கியிருந்தனர். தற்போது விவசாயிகள் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

சில அரசியல் தலைவர்களே விவசாயிகளை ஆர்ப்பாட்ட களத்திற்கு இழுத்தார்கள் என்பது ரகசியமல்ல. விவசாயிகளை விவசாய செயற்பாடுகளிலிருந்து விடுபடச் செய்து மக்களையும் பசியில் வாடச் செய்யும் அரசியல் சூழ்ச்சி செயற்பாடுகளையும் சிலர் முன்னெடுத்தனர். அந்த சவால்களுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சாதகமான முறையில் முகம்கொடுத்தது.

 

ஜனாதிபதியின் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் ஹெக்டெயார் ஒன்றில் பெற்றுக்கொள்ளக்கூடிய அறுவடையின் தொகையை அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளது. சில விவசாயிகள் குறிப்பிட்ட பருவகாலங்களில் 11 ஆயிரம் கிலோவை அறுவடை செய்துள்ளதோடு மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்திச் செயற்பாடுகளிலும் புதிய தொழில்நுட்பத்தை உள்ளீடு செய்வதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன்கீழ் இலங்கை மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய வலுவான திட்டமிடல் ஒன்றை தயாரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய விவசாய அமைச்சு ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு சலுகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முட்டை வியாபாரம் மற்றும் விவசாயம் தற்போது நல்ல நிலைக்கு வருகின்றது. மக்கள் பட்டினியால் வாடுவதாக ஊடகங்கள் முன் கூறி மக்களைத் தூண்டிவிடும் நோக்கில் சில எதிர்க்கட்சிக் குழுக்கள் செயற்படுகின்றன.ஆனால் இலங்கையில் பசியால் யாரும் இறப்பதில்லை. ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்ற போது இருந்த அரிசியின் விலைக்கும் தற்போது அரிசியின் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. இப்போது வெள்ளைப் பச்சரிசி ஒரு கிலோவை நீங்கள் 125 முதல் 130 ரூபாவுக்கு வாங்கலாம். கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவான விலைக்கு அரிசியை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்போம். அதன்படி, கடந்த ஆண்டை விட மக்கள் எளிதாக பொருட்களை வாங்க முடியும்.

 

இவ்வாறு கொள்வனவு செய்வதற்கான போதிய நிதி திறைசேரியில் இருந்து வழங்கப்படும் என எமக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறுபோக விளைச்சலை கொள்வனவு செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

 

வன விலங்குகளால் விவசாயத்திற்கு அதிகளவில் சேதம் ஏற்படுகின்றது. கடந்த வருடம் மாத்திரம் 03 மில்லியன் தேங்காய்கள் குரங்குகளினால் சேதமடைந்துள்ளன. ஆனால் இதுபற்றிப் பேசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவசாய அமைச்சிடம் இது வரை குரங்குகளின் பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை. ஆனால் உலக நாடுகளில் விலங்குகள் பெருகியபோது அவற்றைக் கொன்று விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே, அனைவரும் சேர்ந்து கலந்துரையாடி இதற்கு விரைவான தீர்வை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு துப்பாக்கி வழங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்பு !

பயிர்ச்செய்கைகளை பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக வெடிமருந்துகளுடன் கூடிய துப்பாக்கிகளை வழங்குமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், துப்பாக்கிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுக்குமாறு, விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வன விலங்குகளால் பயிர்ச்செய்கைக்கு பாரிய சேதம் ஏற்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

வேலையற்ற இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய 20 இலட்சம் ரூபா வரை மானிய வட்டி வீதத்துடன் கடன் !

வேலையற்ற இளைஞர்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக மானிய வட்டி வீதத்துடன் கடன்களை பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அரச வங்கிகளில் கடன் பெற முடியாத விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இளைஞர்களிடையே இதுபோன்ற ஆர்வங்களை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும், ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஆர்வமுள்ளவர்கள் சொந்தமாக பண்ணை அல்லது கால்நடை வளர்ப்பை அனுமதிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தினது ஒரு பகுதியாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 50 இளைஞர்களுக்கு, 6.5% என்ற வட்டி வீதத்தில் 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாவை வழங்குவதுடன், அரச வங்கிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகளை கொல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி !

பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று தெரிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, ​​குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல் பயிர்களை நாசம் செய்வது குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், குரங்குகள் உட்பட பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகள் இலங்கையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனவே, அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் பயன்படுத்த விவசாயிகள் சுதந்திரம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உட்பட அதிகப்படியான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் , சிக்கலைத் தீர்க்க வேறு வழிகள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் – விவசாய அமைச்சர்

இலங்கையில் பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐந்து வருட காலத்திற்குள் காணி சுவீகரிக்கப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார். அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்படும் என்றார்.

அடுத்த அறுவடைக் காலத்தில், விளைச்சலை அதிகரிப்பதற்காக குறுகிய காலத்திற்கு இளைஞர்களுக்கு கையளிப்பதற்காக பயிர் செய்யப்படாத நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுமார் 100,000 ஏக்கரில் நெற்செய்கைகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை எனவும், நெல் பயிரிடப்படாவிட்டால் ஏனைய பயிர்களை பயிரிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.