வி.மணிவண்ணன்

வி.மணிவண்ணன்

நாவலர் கலாசார மண்டபத்தை வடமாகாண ஆளுநர் அரசுக்கு கையளித்த விவகாரம் – மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் !

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குறித்த வழக்கை இன்றையதினம் (03) தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்தார்.

குறித்த விடயத்தை கைவிடக்கோரி யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 28 பேரின் கையொப்பத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜரொன்றும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபனால் கையளிக்கப்பட்டநிலையில் தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அழிக்கப்படும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் – பின்னணியில் அரசாங்கம் என்கிறார் வி.மணிவண்ணன்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கத்தின் பின்னணி இருப்பது தெளிவானது என்று யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த செயற்பாட்டின் மூலம், முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக சிலர் அரசியல் இலாபத்தை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.

விக்கியுடன் இணைந்தார் மணி !

உள்ளூராட்சி தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரனுடன் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

மணிவண்ணன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன் சந்திப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் அணியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிட நாங்கள் தீர்மானித்து உள்ளோம்.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

தமிழர் வரலாற்று மரபுரிமை யாழ்.மந்திரிமனையை புனரமைக்க உதவுங்கள் – யாழ்ப்பாண மரபுரிமை மையம் அவசர கோரிக்கை!

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் இந்த அவசர கோரிக்கையை விடுத்தனர்.

இதில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவர் வரலாற்று துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்,

தற்போது எமக்குள்ள வசதி வாய்ப்பை மீள்நிர்மாணம் செய்யும் போது பல்வேறு தடைகள் ஏற்படுகின்றது. மந்திரிமனையை மீள்நிர்மாணம் செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற தொல்லியல் திணைக்களம் எங்களுக்கு அனுசரணை தந்திருக்கின்றது. இந்த பணியை செய்வதற்கு பல தடைகள் காணப்படுகின்றது. அந்தத் தடையை தாண்டி தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு அதனை செய்யவுள்ளோம்.

மரபுரிமை சின்னங்களினுடைய நில உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். நில உரிமையாளர்கள் மரபுரிமை சின்னங்களை அழித்துவிட்டு வேறு பணியை செய்ய முடியாது. மரபுரிமை சின்னங்களினுடைய நிலங்களை. அன்பளிப்பாகவோ அல்லது விலைக்கோ எங்களுக்கு தந்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

புனரமைக்க வேண்டிய முந்நூறுக்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச அனுமதியோடு புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து நிதியை பெறுவதற்கு முயல்வதோடு தனவந்தர்கள் இவ்வாறான பணிகளுக்கு உதவமுன்வர வேண்டும். அரசியல் வேறுபாடின்றி அனைவரும் இதில் பங்கேற்று கைகொடுக்க வேண்டும் -என்றார்.

ஊட சந்திப்பில் கலந்துகொண்ட யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், மந்திரிமனை அமைந்துள்ள நிலத்தை கொள்வனவு செய்து முற்று முழுதாக மீள்நிர்மாணம் செய்வதாக இருந்தால் இலங்கை ரூபாய் 07 கோடி  செலவாகுமென மதிப்பிட்டுள்ளோம். மந்திரிமனை இடிந்துவிழாதவாறு உடனடியாக அதனை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு 5 மில்லியன் ரூபாய் தேவைப்படுமென மதிப்பிட்டுள்ளோம். செல்வந்தர்கள் மரபுரிமைச் சின்னங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இந்தப் பணியில் கைகோர்க்கவேண்டும்.

செல்வந்தர்களிடமும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் உறவுகளிடம் அமைப்புகளிடம் நாங்கள் மன்றாட்டமாக கேட்பது இந்த வேலை திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க உள்ளோம். உங்களால் இயன்ற நிதி உதவிகளை விரைவாக எமக்கு தந்தால் அவற்றை செய்து கொள்ள முடியும் என்றார்.

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவர் வரலாற்று துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், மையத்தின் பதிப்பாசிரியர் வ.பார்த்திபன், மையத்தின் உறுப்பினரும் யாழ் மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் என்கிற அமைப்பு கடந்த வருடம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“யாழ்ப்பாணத்துடன் தொடர்புகளை பேண விரும்புகின்றோம்.” – சீனா தூதுவர்

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார்.

பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இன்றைய தினம் நீண்ட கால வரலாற்றினைக் கொண்ட யாழ் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டமையிட்டு நான் மகிழ்வடைகிறேன். யாழ் நூலகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளருடன் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் நூலகம் பற்றிய முழு விபரங்களையும் எமக்கு விளங்கப்படுத்தியிருந்தார். எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என்றார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்,

இன்று சீன நாட்டின் தூதுவர் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு கணணிகளையும் மேலும் பல புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இந்த நூலகத்தினை இணையவழியிலான நூலகமாக மாற்ற உதவ முடியுமா..? என கோரிக்கையை முன்வைத்தபோது தாங்கள் அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியிருந்தார் என்றார்.

“எல்லா மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும்.” – யாழ்.மாநகர முதல்வர்

நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்ல மதவாதியும் அல்ல எனவும்  எல்லா மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும். எனவும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. அதன் போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்கு, அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் சபையில் முதல்வர் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நான் ஒரு மதவாதி அல்ல , அத்தோடு பௌத்த மதத்துக்கு எதிரானவும்அல்ல. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல. என்னை மதவாதி என சித்தரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியினால் யாழ் மாநகர முதல்வர் என எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே என்னை தவறான புரிதலுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்கள் என விகாராதிபதிக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

அப்பகுதி புனிதபிரதேசமாக இருக்க வேண்டும் நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் அந்த வகையில் நாம் எதிர்காலத்தில் அடையகூடிய தமிழ் தேசியத்தை ஒரு மதச் சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும்” என்றார்.

“மக்களின் கவனத்தை திசை திருப்பவே மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.” – சஜித் பிரேமதாஸ

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர்,

யாழ். மாநகர முதல்வர் தமது கடமையின்போது ஏதாவது பிழை செய்திருந்தால் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடைமுறைகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதைவிடுத்து, அவரைப் பயங்கரவாதிபோலச் சித்தரித்து, நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இன்னும் அறியப்படாது உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே, புதிதாக அச்சங்களை ஏற்படுவதைத் தவிர்த்து ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

“மணிவண்ணன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யவே முயன்றார்.” – அமைச்சர் சரத் வீரசேகர

“யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்ற குற்றச்சாட்டிலேயே  கைதுசெய்யப்பட்டார்.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஊடக நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவரிடம் மணிவண்ணன் கைது தொடர்பாக கேட்கப்பட்ட போது ,

கேள்வி:- யாழ்ப்பாணம் முதுல்வர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள்?

பதில்:- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறை பயன்படுத்திய சீருடையை ஒத்த சீருடையைத்தான் யாழ்ப்பாணம் மாநகர சபைமுவல்வர் மணிவண்ணன் பயன்படுத்தியுள்ளார்.

கேள்வி:- இதே சீருடையைத்தானே கொழும்பு மாநகர சபையும் பயன்படுத்தியுள்ளதே?

பதில்:- கொழும்பு மாநகர சபையின் சீருடைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. கொழும்பு மாநகர சபை மேற்படி திட்டத்தை சபையின் முழுமையான அனுமதியுடன் செயற்படுத்துகின்றது. ஆனால், யாழ்ப்பாணம் மாநகர சபையில், முவல்வர் மணிவண்ணனின் தனிப்பட்ட விருப்பில்தான் இந்தப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சீருடையும் அவரின் விருப்புக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளன. இது எமது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் மாநகர காவல் படைக்கோ அவர்களது சீருடைக்கோ மாநகர சபையின் அனுமதியை மணிவண்ணன் பெற்றுக் கொள்ளவில்லை. மாநகர சபையின் அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும், யாழ். மாநகர காவல் படை காவற்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட ஆரம்பித்தது. சமூக ஊடகங்களில் யாழ். மாநகர சபையின் சீருடையையும் விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையையும் ஒப்பிட்டுப் படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனைத் தமிழ்த் தரப்பினரே சுட்டிக்காட்டியுள்ளனர்.” என்று அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்

“தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும்  இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும் ” – யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்

“தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும்  இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும்” என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நியலையில், இந்த செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை.

அத்துடன், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலம்பெயர் தேசங்களில் எமது தமிழ் மக்கள் தாயகத்தில் உரிமைகளை வென்றெடுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்.மாநகர முதல்வருக்கான தேர்தலில் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்டை விட ஒரு மேலதிக வாக்கைப் பெற்று மேயராக தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் வி.மணிவண்ணனுக்கு ஆதரவளித்த தங்களுடைய கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவாக ஆதரவு வழங்கி கட்சியின் கொள்கைக்குத் துரோகம் செய்த யாழ்ப்பாண மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்குத் துரோகம் இழைத்து, யாழ்ப்பண மாநகர சபையின் எமது கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 10 பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது கட்சியிலிருந்து நீக்குவோம். இந்த நிலைப்பாட்டில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்”  என்றார்.