வீ.ஆனந்தசங்கரி

வீ.ஆனந்தசங்கரி

தனது 15 ஏக்கர் காணியை வீட்டுத்திட்டங்களை இழந்து நிற்கும் மக்களிற்காக கையளித்த வீ.ஆனந்தசங்கரி !

சுதந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை அரசாங்கத்திடன் கையளிக்கும் பத்திரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஒப்பிமிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வீ.ஆனந்தசங்கரிக்கு 15 ஏக்கர் மத்தியவகுப்பு காணியாக இருந்தது. குறித்த காணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்த வந்த நிலயைில் அக்காணியை தமக்கே பகிர்ந்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்குமாறு ஆனந்தசங்கரி எழுத்துமூலமான கோரிக்கையை பிரதேச செயலாளர் மற்றம் அரசாங்க அதிபரிடம் முன்வைத்தார். கொவிட் பரவல் காரணமாக குறித்த நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வந்த நிலயைில் அக்காணியை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்னெடுத்த வருகின்றது.

அந்த வகையில்,  இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் அமைந்துள்ள ஆனந்தசங்கரியின் இலத்திற்கு சென்ற பிரதேச செயலக காணி அலுவலக உத்தியோகத்தர்கள் பகிர்நதளிப்பு செய்வது தொடர்பில் பேசியிருந்ததுடன், மத்திய வகுப்பு காணியை அரசாங்கத்திடம் பாரமளிப்பதற்கான ஆவணத்தினையும் வழங்கியிருந்தனர்.

குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்ட ஆனந்தசங்கரி, அவற்றை உரிய முறையில் மக்களிற்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். குறித்த காணிகள் அரச காணியாக்கப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் காணியற்ற மக்களிற்கு பகிர்நதளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், 3 மாத கால அவகாசத்திற்குள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

குறித்த காணி பகிர்நதளிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி, மத்தியவகுப்பு காணி என்பதற்காக வீட்டுத்திட்டங்களை இழந்து நிற்கும் மக்களிற்கு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், இயலுமானவரை மக்களின் கரங்களிற்கு குறித்த காணி விரைவாக கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறும் வினயமான கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

“தை பிறந்தால் வழி பிறக்கும் என்றாலும் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வலிகளுக்கும், வேதனைகளுக்கும் இன்று வரை வழி பிறக்கவே இல்லை” – வீ. ஆனந்தசங்கரி

“தை பிறந்தால் வழி பிறக்கும் என்றாலும் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வலிகளுக்கும், வேதனைகளுக்கும் இன்று வரை வழி பிறக்கவே இல்லை”  என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம்(13.01.2021) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நாம் காலம் காலமாக கூறி வந்தாலும் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வலிகளுக்கும், வேதனைகளுக்கும் இன்று வரை வழி பிறக்கவே இல்லை. இந்தத் தைத்திருநாள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல திருப்பங்கள் நிறைந்த நாளாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முப்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்தாலும், அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் தனது கொள்கையினை தளர்த்திக் கொண்டு, கடந்த 15 வருடங்களாக இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக போராடிக் கொண்டு வருகின்றது.

இந்தத் தைத்திருநாளில் இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்து எமது தமிழ் மக்களை நிம்மதியாகவும், சுபீட்சமாகவும் வாழ வழிசமைத்துக் கொடுப்போம் என்று சபதம் எடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய தலைவர்களின் கனவை நனவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

“இரா.சம்பந்தன் – ஒரு நாட்டை ஆளும் அரசால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை உடையவராவார் ” – வீ. ஆனந்தசங்கரி நகைப்பு !

“ஒரு நாட்டை ஆளும் அரசால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை உடையவராவார் ” என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தன்னுடைய ஊடக அறிக்கையில் நகைப்பாக தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று (28.12.2020) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகிவிட்டது. ஆரம்பத்தில் சமஷ்டி என்ற வார்த்தையை சிங்களத் தலைமைகள் தான் பேச ஆரம்பித்தனர். அது ஒரு காலம். பின் அவர்களே தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்தார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வரும் வரை சமஷ்டி நோக்கித்தான் அனைவரும் செயற்பட்டோம். அதன் பின்னர் இன்று வரை நடக்கும் சம்பவங்களை சம்பந்தன் மறந்துவிட்டாரா?

2015ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு நல்லாட்சியை மக்கள் உருவாக்கி, ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதற்கும் தாங்கள் தான் காரணம் என சம்பந்தன் தம்பட்டம் அடித்தார். அந்த நல்லாட்சி முழுவதும் இரா. சம்பந்தன் எதிர் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஒரு நாட்டை ஆளும் அரசு வருடா வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொடுத்தவர். “

அன்றைய அரசின் ஜனாதிபதியாக இருந்த கௌரவ மைத்திரிபால சிறிசேன, பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான சகாவாக இருந்து எதிர்கட்சி தலைவர் என்ற கதிரையை அலங்கரித்தவர். அப்போது இந்த சமஷ்டியைப்பற்றி பேசாது அந்த தீர்வை பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்காமல் தனது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு, இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி அவர் கண்களை மறைத்துவிட்டது.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமஷ்டி கொள்கையை வலியுறுத்தி அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும், ஒற்றையாட்சியை வலியுறுத்தி கௌரவ மகிந்த ராஜபக்சவும் களத்தில் இறங்கி போட்டியிட்டார்கள். 49 வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றார். அந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் சம்பந்தன் குழுவினர் பிரச்சாரம் செய்ததால் தமிழ் மக்கள் வாக்களிக்காமலே சிங்கள மக்கள் சமஷ்டிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் மக்களை அந்த நேரத்தில் வாக்களிக்க அனுமத்தித்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க மூன்றில் இரண்டு வீத பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பார். அந்த வராலாற்றுத் துரோகத்தை தமிழ் மக்களுக்கு செய்த சம்பந்தன் இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார். இது பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு சம்பந்தனின் கபட நாடகம் எப்போதும் புரிவதில்லை. அதனால் தான் அவரும் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்.

தமிழ் மக்களுக்கு அவர் ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், நல்லெண்ணத்துடன் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி உருவாக்கும் அணியினருக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். கூடவே இருந்து குழிபறித்து விடுதலைப் புலிகளை அழித்ததிற்கும், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவை தடுத்து நிறுத்தும் சந்தர்ப்பம் இருந்தும், வேடிக்கை பார்த்ததற்காகவும்  பிராயச்சித்தமாக இதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பதவி சுகத்தில் மூழ்கி இதுவரை அனுபவித்த சலுகைகள் போதும் இனியாவது தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுவார் என்று எண்ணுகின்றேன். அதுமட்டுமல்லாமல் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு வருடாவருடம் காவடி எடுக்கும் சம்பந்தன் தலைமை இந்த வருடம் எதைக் கொண்டு செல்லப்போகின்றார்கள்? என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசபிதாவினுடைய கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இன்று ராஜபக்ஷர்களுடைய கையில்தான் உள்ளது ! – மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் வீ.ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

ஐந்து ராஜபக்ஷர்களும் இணைந்து பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் தார்மீக கடமை காணப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) எழுதியுள்ள கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடித்ததில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதற்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள். இப்பதவி தங்களுக்கு புதிதல்ல என்பதையும் அனைவரும் அறிவோம்.

2007ஆம் ஆண்டு மாசி மாதம் 4ஆம் திகதி காலி முகத்திடலில் 59ஆவது சுதந்திரதின விழாவில்  நீங்கள், என்னையும் டக்ளஸ் தேவானந்தாவையும் குறிப்பிட்டு ஆற்றிய உரையின் பகுதியை தங்களிற்கு ஞாபகமூட்டுவதற்காக இங்கே தந்துள்ளேன்.

‘தமிழ், இஸ்லாமிய மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அத்துடன் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால உலகத்தை வளம்பெற வைக்க வேண்டும், என்று மொறக்ககாகந்த மகா சமுத்திர திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போது நான் கூறியதை, மீண்டும் வற்புறுத்தி கூறுவது யாதெனில், பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு மிகப்பொருத்தமான ஆயுதம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதே.

அதற்கு தற்போது தென்னிலங்கை சிங்கள மக்கள் தயாராகிவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் வெறித்தனமான வேண்டுகோளிற்கு இடமளியோம். இருப்பினும் நாம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பின் குறைந்தபட்சம் திருவாளர்கள் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இசைந்து செயற்பட வேண்டும்’

என்னைப்பற்றி குறிப்பிட்டதில் இருந்து உங்கள் சிந்தனை என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனது ஞாபகசக்திக்கு எட்டியவகையில் உங்களைப் போன்ற தரத்தில் உள்ள ஒருவர் பிரச்சினையையும் கூறி அதற்குரிய தீர்வையும் குறிப்பிட்டமை முதற் தடவையாகும்.

ஆகவே, ஐந்து ராஜபக்ஷர்களாகிய நீங்கள், சுயமாக முன்வந்து பிரச்சினையை கையில் எடுத்து அதற்கு தீர்வு காண வேண்டிய தார்மீக கடமையை புரிந்து, உங்களின் மூதாதையர்களின் நற்பெயரை காப்பாற்றி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வைப்பீர்கள் என நம்புகின்றேன்.

தேசபிதாவினுடைய கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இன்று ராஜபக்ஷர்களுடைய கையில்தான் உள்ளது என” கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.