“இலங்கையில் இருந்து வெளிநாட்டு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு பெண்களை அனுப்பாமல் இருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் முறையான பயிற்சி இல்லாமல் இவ்வாறு தொழில்வாய்ப்புகளுக்கு செல்வதே இதற்கு காரணமாகும். அதேபோன்று போலி முகவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி செல்பவர்களும் இவ்வாறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேருடுகின்றனர்.
அதனால் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து செல்லுமாறே நாங்கள் தெரிவிக்கின்றோம். அவ்வாறு பதிவு செய்து செல்பவர்கள், அங்கு ஏதாவது பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டால் அதுதொடர்பில் எமக்கு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
அத்துடன் 5வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலுக்கு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் இருந்தது. என்றாலும் வாழ்க்கைச்செலவு காரணமாக இவ்வாறான தாய்மார்கள் சட்ட விரோதமான முறையில் செல்கின்றனர்.
அதனால் இந்த சட்டத்தை தற்போது இலகுவாக்கி, 2வயதுக்கு குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலவதற்கு தடைவித்திருக்கின்றோம். அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அனுப்பாமல் இருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அவ்வாறு அனுப்புவதாக இருந்தால், அவர்கள் அது தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்றவராக இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுச்செல்பவர்கள் அங்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியுமான தொழில் பயிற்சி வழங்கியே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மாத்திரமே வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பப்படுவார்கள். அத்துடன் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டும் கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
என்றாலும் தற்போது பெண்களுக்கு நிகராக ஆண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்கின்றனர். நாட்டில் தற்போது நூற்றுக்கு 24வீதமான பெண்களே வெளிநாட்டு தொழிலுக்கு சென்றிருக்கின்றனர். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கட்டமைப்பை முழுமையாக டிஜிடல் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் மூலம் இந்த துறையில் ஏற்படுகின்ற மோசடிகளை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.