வே. இராதாகிருஷ்ணன்

வே. இராதாகிருஷ்ணன்

தேர்தலுக்கு முன்பு செய்வதாக கூறிய எதையுமே செய்வதற்கு ஜனாதிபதி அனுர குமார நடவடிக்கைகள் எடுக்கவில்லை – வே. இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

நாட்டின் சந்தையில் தற்பொழுது தேங்காய் விலை அதிகரித்துள்ளது. பாக்கின் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவா மாற்றம்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு நேற்று (22) மாலை நுவரெலியா – நானுஓயா காந்தி கலாச்சார மண்டபத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனின் தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இக்கூட்டம் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள், தோட்டத் தலைவர்கள், தலைவிமார்கள், இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய வே. இராதாகிருஷ்ணன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதல் செய்தவர்களை பிடிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அத்தோடு தற்பொழுது சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. அத்தோடு ஜனாதிபதி கூறியிருந்தார். தன்னிடம் ஊழல் செய்த அரசியல்வாதிகளின் கோப்புகள்  அதிகமாக இருப்பதாகவும், அதனை தான் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தற்பொழுது மலையகப் பகுதியில் உள்ள மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது தவறு என அநேகமானவர்கள் சொல்கிறார்கள். தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவை அதற்கு நாங்கள் வாக்களிப்போம் என பலரும் தற்பொழுது உணர்ந்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடக் கூடியவர்கள் எவருமே மக்களுக்கு நன்கு பரீட்ச்சியம் ஆனவர்கள் கிடையாது.

ஆகையால் மக்கள் இப்பொழுது தெளிவாக இருக்கிறார்கள். அத்தோடு தேர்தல் மறுசீரமைப்பு வந்தால் உங்களுக்கு தெரியும் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 2 ஆசனங்களை மட்டுமே பெற முடியும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் குறைந்தபட்சம் 5 ஆசனங்களையாவது பெற முடியும். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையிலும் இதை ஒழிப்பதற்கு தற்பொழுது அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

அத்தோடு உங்களுக்குத் தெரியும் கோட்டாபய அரசாங்கம் ஒரே நாளில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தது. இதனால் நாட்டின் உற்பத்தி குறைந்து பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் ஒரு நடவடிக்கையாக தான் அவரின் ஆட்சி மாற்றத்திற்கு உள்ளாகி இருந்தது என தெரிவித்தார்.

“13ஆம் திருத்தம் அமுலாக்கப்பட்டு, அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.” – வே. இராதாகிருஷ்ணன்

“13ஆம் திருத்தம் அமுலாக்கப்பட்டு, அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் அமையும்.” என  வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 18ஆம், 19ஆம், 20ஆம் திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறேன். ஆனால் 20இக்கு எதிராகவே வாக்களித்திருந்தேன். இரட்டைக் குடியுரிமைகள் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தடை, சுயாதீன ஆணைக்குழுக்களை மீள ஸ்தாபித்தல் உள்ளிட்ட நல்ல விடயங்கள் 22ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளதால் அதற்கு ஆதரவளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

அத்துடன் 22ஆம் திருத்தத்தில் உள்வாங்குவதற்கு எமது யோசனைகளையும் முன்வைத்திருக்கின்றோம். குறிப்பாக தேர்தல் மறுசீரமைப்பின் போது விகிதாசா முறையும் பின்பற்றப்படவேண்டும். அதேபோன்று நிறைவேறறு ஜனாதிபதி முறையை இருந்தாலும்கூட, 13ஆம் திருத்தம் அமுலாக்கப்பட்டு, அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் அமையும்.

கடந்த அரசியலமைப்புப் பேரவையில் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை. எனவே 22 இன் ஊடாக ஸ்தாபிக்கப்படும் அரசியலமைப்புப் பேரவையில் மலையகத்தைச் சேர்ந்தவர்களும் உள்வாங்கப்பட வேண்டும். அதேவேளை, மக்கள் பெருளாதார ரீதியில் கஷ்டப்படும் நிலையில் இன்று ஒருஇலட்சம் ரூபா வருமானம் பெறுபவர்கள் 6வீதம் வரி செலுத்தவேண்டி இருக்கின்றது.

ஒருஇலட்சம் ரூபா என்பது இன்று 30ஆயிரம் ரூபா பெறுமதியாகும். அதனால்  30ஆயிரம் ரூபாவுக்கு 6வீதம் வரி செலுத்துவது கஷ்டமான நிலையாகும். அரசாங்கத்தின் பிழையான தீர்மானமே இதற்கு காரணமாகும்.

அத்துடன் இந்த அரசாங்கம் செய்த நல்ல செயல்தான் 8அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகும். அதற்காக நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஏனையவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

எமது சேவையை அங்கீகரித்திருப்பதாலேயே இரண்டாவது முறையும் முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது! – வே. இராதாகிருஷ்ணன்

” எமது சேவையை அங்கீகரித்திருப்பதாலேயே இரண்டாவது முறையும் முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.” – என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நேற்று (24.08.2020) மதியம் ஹட்டன் நகரில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

” 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியாகவே நாம் போட்டியிட்டோம். அதில் வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகளாக எமது மக்களுக்கு பல சேவைகளை முன்னெடுத்தோம். அவற்றை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரம் செய்தோம். எமது சேவையை அங்கீகரித்திருப்பதாலேயே இரண்டாவது முறையும் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை மக்கள் வெற்றிபெற வைத்துள்ளனர்.

கொழும்பிலும், கண்டியிலும், பதுளையிலும், நுவரெலியாவிலும் வாக்குகளை சிதறடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தம் தமிழ் முற்போக்கு கூட்டணி நூறுவீத வெற்றியை பெற்றுள்ளது. எம்.பியாக இருந்த எவரும் தோல்வியடையவில்லை. எனவே, எமது மக்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்கு உரிய வகையில் சேவைகள் தொடரும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியாக பயணித்து எமது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம். எந்த கொம்பன் வந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்கமுடியாது.” – என்றார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தில் கை வைத்தால் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம் ! – வே. இராதாகிருஷ்ணன்

அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முழுமையாக நீக்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று (16.08.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 28 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மலையக தமிழருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 1977 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை அமைச்சரவையில் மலையக தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இம்முறை அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

அதேபோல் புத்தசாசனத்துக்கு தனி அமைச்சொன்று இருக்கும் நிலையில், ஏனைய மதங்களுக்கான அமைச்சுகள் நீக்கப்பட்டு சமய விவகார அமைச்சென உருவாக்கப்பட்டு அவை சார்ந்த திணைக்களங்கள் பிரதமரின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலைமை எதிர்காலத்தில் மாற்றப்படவேண்டும். அத்துடன் சில அமைச்சுகள் பொருத்தமற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. அதனை முழுமையாக நீக்குவதற்கு இடமளிக்கமாட்டோம். வேண்டுமானால் திருத்தங்களை மேற்கொள்ளலாம். 13 ஆவது திருத்தச்சட்டமானது சிறுபான்மையின மக்களுக்காக உருவானது. அதில் கைவைத்தால் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியாக சில விட்டுக்கொடுப்புகளை செய்து பயணித்ததாலேயே 100 வீத வெற்றி கிடைத்தது.வருகின்ற தேர்தல்களிலும் முற்போக்கு கூட்டணியாகவே முடிவுகளை எடுப்போம். எதிரணியில் இருந்தாலும் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதற்கு எதிராகவும் நீதிக்காகவும் உரத்து குரல் எழுப்புவோம் என்றார்.