வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் – சிவாஜிலிங்கம்

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன.

 

EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்.

 

வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.

 

தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்.

 

நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர்.

 

நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

வைத்தியர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றத்துக்காக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில், நீதிபதி ஜுட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைத்தியர் அர்ச்சுனா தான், சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை மற்றும் பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை போன்ற காரணத்தினால் வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து செய்யப்பட்டது.

அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் நேரில் தோன்றி தம்மை பிணையாளிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சரீரப்பிணையில் விடுதலையானார் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தீர்ப்பானது இன்று (7.8.2024) மன்னார்  நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர்.

இதனையடுத்து நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, வைத்தியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், வைத்தியர் அர்ச்சுனா இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், நீதிபதியால் இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்சுனாவை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (5) நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்சுனா வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் வைத்தியசாலையினுள் அனுமதி இன்றி வைத்தியருடன் நுழைந்து காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் மன்னார் காவல்நிலையத்தில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (05) சட்டத்தரணிகள் ஊடாக வைத்தியருக்கு பிணைமனு மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் குறித்த நகர்தல் பத்திரம் ஊடான பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன் தொடர்ந்து வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் யார்..? – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண வெளியிட்டுள்ள தகவல் !

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை மருத்துவ நிர்வாக துறையில் இருந்து பதவி விலகுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தினை அவர் தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார்.

 

மக்கள் திரள வேண்டும். தங்கள் பாதிப்புக்களை வெளிப்படுத்த வேண்டும். மக்களை கொள்ளையடிக்க உரிமை கோரும் SLMGOA மற்றும் மருத்துவ மாஃபியாக்கள்…..!

மக்கள் திரள வேண்டும். தங்கள் பாதிப்புக்களை வெளிப்படுத்த வேண்டும். மக்களை கொள்ளையடிக்க உரிமை கோரும் SLMGOA மற்றும் மருத்துவ மாஃபியாக்கள்…..!

 

“இலங்கையில் உள்ள மிகச் சிறந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளை எங்கள் செலவில் அர்ச்சுனாவிற்குத் தரத் தயாராக உள்ளோம்.” – வைத்தியருக்கு அருண் சித்தார்த் அழைப்பு !

“இலங்கையில் உள்ள மிகச் சிறந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளை யாழ் சிவில் சமூக நிலையம் தனது செலவில் அர்ச்சுனாவிற்குத் தரத் தயாராக உள்ளது.” எனவும் “எம்மைப் பயன்படுத்திக் கொள்ள விருப்பம் இருந்தால் அர்ச்சுனா எம்முடன் எத்தருணத்திலும் தொடர்பு கொள்ளலாம்.” எனவும் யாழ் சிவில் சமூக நிலையத்தினுடைய தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மீது சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் 05 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கான சட்ட ஆலோசனைகளை வழங்குமாறு பகிரங்கமாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சமூக வலைத்தளப்பதிவினூடாக கோரியிருந்த நிலையில் அவருக்காக உதவி செய்வதாக குறிப்பிட்டு யாழ் சிவில் சமூக அமைப்பினுடைய தலைவர் அருண் சித்தார்த் முகநூலில் பதிவு செய்துள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவு வருமாறு..,

 

வைத்தியத்துறைசார் மாஃபியாவைப் பாதுகாக்கச் சட்டத்துறைசார் மாஃபியா களமிறங்கியுள்ளது.

—————————————————————-

Ramanathan Archchuna மீது 5 வழக்குகள் பாய்ந்துள்ளது. தனக்கு எதிராக வழக்குத் தொடுநர்கள் சார்பாக 7சட்டத்தரணிகளுக்கு மேல் களமிறங்கியுள்ளதாக வைத்தியர் “சமூகம்” எனும் ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிடுகின்றார். அதில் இருவர் சிரேஷ்ட சட்டத்தரணிகள்.

 

ஒருவர் கிரிமினல் வழக்குகளில்

பிரபலமானவர். கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், பாரிய

அளவிலான போதைப் பொருள் வியாபாரம் சார்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், வாள் வெட்டுத் தெருச் சண்டியர்களாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அதாவது சமூக விரோதிகளாகப் பொலிஸாரினால் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு வழக்குகளில் சிக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் தனது சட்டப்புலமை மூலம் வெளியில் கொண்டு வரக்கூடிய கெட்டிக்கார சட்டத்தரணி என யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்றவர்.

 

மிகவும் டிமான்ட் உள்ளவர் அவருடைய பீஸூம் ஏனைய சட்டத்தரணிகளை விட சற்று அதிகமானது. ஆனால் பேர் போனவர். அவரது தம்பியும் ஒரு பிரபலமான அரசியல்வாதி.

 

இவரிடம் ஏன் ஐயா பொலிஸார் கஷ்டப்பட்டு குற்றவாளிகளைப் பிடிச்சு மீண்டும் மீண்டும் உள்ள போடப் போட நீங்களும் திருப்பித் திருப்பி அவர்களை வெளியில எடுக்கிறீங்கள் இது அறமா எனக் கேட்டால் தம்மைச் சேவை நாடி வருபவர்களுக்கு சார்பாக வாதாடுவது தமது தொழில் தர்மம் என அவர் கூறுவார்.

 

ஆனால் கொழும்பில் மிகப் பிரபலமான மிகத் திறமையான ஜனாதிபதி சட்டத்தரணிகளை எனக்குத் தெரியும். அவர்களில் சிலர் போதைப் பொருள் சார்ந்த குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் , பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த குற்றாவாளிகளுச் சார்பாக தமது வாதத் திறமையையோ சட்டப் புலமையையோ பாவிப்பதில்லை எனக் கொள்கையாக வைத்துள்ளவர்களை நான் அறிவேன்.

 

மற்றவர் சட்டத்துறையில் ஜாம்பவான். அரசியலிலும் முக்கிய புள்ளி. பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியில் இருக்கும் போதே வெளியிலும் வழக்குகளை எடுத்து நடத்தினார். (இது மருத்துவர்கள் அரசாங்க வைத்தியசாலையின் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்கு ஒப்பானது)

 

ஒரே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் வெளியில் நீதிமன்றங்களில் வழக்கும் எடுத்து நடத்தமுடியாது எனக் கூறி இவருக்கு நீதிமன்றங்களில் ஆஜர் ஆகத் தடை விதிக்கப்பட்டது.

 

உயர்நீதிமன்றில் இத்தடைக்கெதிராக வழக்குப் போட்டு பல்கலைக்கழகப் பதவியில் இருந்து கொண்டே தான் வழக்கும் பேச வேண்டும் எனப் போராடிப் பார்த்தார். ஒன்றும் சரிவரவில்லை. பின்னர் தனது பல்கலைப் பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு ஒன்றுக்குச் சென்று அண்மையில் மீண்டும் நாட்டுக்கு வந்தவர்.

 

யாழ்ப்பாணத்தில் கள்ள உறுதி முடித்து ஊழல் மோசடி பண்ணியதாக சில சட்டத்தரணிகளைப் பொலிஸார் அண்மையில் கைது செய்து உள்ளே தள்ளியது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். அவர்கள் சார்பாக ஜனாதிபதியைச் சந்தித்த சட்டத்தரணிகள் குழுவை வழிநடத்திச் சென்று இனிமேல் சட்டத்தரணிகள் பிழை செய்தாலும் கைது செய்யப் பொலிஸாருக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தவர் இவர்.

 

சிஸ்டத்தை உப்பிடி உடைக்க கூடாது என்று அர்ச்சுனாக்கு தாபன விதிக் கோவை குறித்து யூரியூப்பில் பாடம் நடத்தியவர் இவர்.

 

தமிழ்த் தேசியம் எங்கள் உயிர்மூச்சு என்று மேடைகளில் கொந்தளிப்பவர்களில் ஒருவர் இவர். தமிழ்த் தேசியப் போரவை என்று யாழ் மாவட்ட ஊழல் மோசடி அரசியல்வாதிகளை வைத்து ஒரு அமைப்பையே பெரும் எடுப்பில் அறிமுகப்படுத்தியவர். அது புஸ்வானமாப் போனது வேற கதை.

 

ஆகவே மக்களே !

தமிழ்த் தேசியத்தைப் போலியாகப் போர்வையாகக் போர்த்திக் கொண்ட நீதித்துறைசார் மாஃபியா, வைத்தியத்துறைசார் மாஃபியாவைக் பாதுகாக்க அர்ச்சுனாவிற்கு எதிராகக் களம் இறங்கியிருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 

சிலவேளை அர்ச்சுனா நீதிமன்றால் தண்டிக்கப்பட்டால் அது அங்கொன்றும் இங்கொன்றுமாக அநீதிகளுக்கெதிராக, ஊழல் மோசடிகளுக்கெதி்ராக அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கெதிராக அதிகாரத் தரப்புகளுடன் மோதும் சாமானியனை மெளனிக்க வைக்கும் ஆபத்தை உருவாக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

 

அந்நிலை எமது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

 

இங்கு காலங்காலமாகத் தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு அதிகாரம் கேட்பதும் அதிகாரம் கிடைத்ததும் அவ்வதிகாரத்தை மக்களுக்காகப்

பாவிக்காமல் இருப்பதும் இப்போதாவது கண்கூடாக உங்களுக்குத் தெரிகிறதா?

 

இந்த இலட்சணத்தில் அர்ச்சுனாக்களும் இல்லாது போனால் இச்சமூகத்தில் வாழும் எளிய, வறிய , அறியாமையுடன் உள்ள சமான்ய குடிமகன், என் பாட்டனையும் பூட்டனையும் போன்றவன் என்ன செய்வான்.?

 

அர்ச்சுனாவை நீதிமன்றுக்கு இழுக்க அவசரமாக வந்தவர்கள் அர்ச்சுனா கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு Public interest litigation (PIL) வழக்கொன்றை ஏன்

போடவில்லை.?

 

அர்ச்சுனாவினால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இன்னமும் அந்த வைத்தியசாலையில் வேலையில் இருக்கின்றார்கள. அர்ச்சுனா கூறிய குற்றச்சாட்டுகளின் ஆதாரங்களை இவர்கள் அழித்திருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.?? சிறந்த சட்டத்தரணிகள் அவர்களுக்காக முன்வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவர்களுக்குத் தப்பும் வழிகளை இந்நேரம் சொல்லிக் கொடுத்து இருக்கமாட்டார்களா???

 

ஆகவே இந்த வழக்கில் அர்ச்சுனாவிற்காக என்பதை விடப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அர்ச்சுனாவிற்குத் தேவையான சட்டத்தரணிகளை கொழும்பில் இருந்து அழைப்பித்துத் தர நாம் தயாராக உள்ளோம்.

 

இலங்கையில் உள்ள மிகச் சிறந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளை யாழ் சிவில் சமூக நிலையம் தனது செலவில் அர்ச்சுனாவிற்குத் தரத் தயாராக உள்ளது.

 

எம்மைப் பயன்படுத்திக் கொள்ள விருப்பம் இருந்தால் அர்ச்சுனா எம்முடன் எத்தருணத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

 

பின்குறிப்பு – வைத்தியத்துறை மாஃபியா என்ற பதத்தை நாம் ஊழல் மோசடி செய்யும் ஒரு சில வைத்தியர்களை மட்டும் குறிக்கவே பயன்படுத்துகின்றோம். சட்த்துறை மாஃபியா எனும் பதமும் அவ்வாறானதே எனத் தெளிவுபடுத்துகின்றோம்.

 

அருண் சித்தார்த்

தலைவர்

யாழ் சிவில் சமூக நிலையம்

077-4842464

 

17/07/2024

5:29 Am

வைத்தியர் அர்ச்சுனா ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் – நீதிமன்றம் விதித்துள்ள தடை !

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக ஐந்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய நீதிமன்ற வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிடவோ நேரலை வெளியிடவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி காவல்துறையில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

வைத்தியர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்கா விட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் முறைப்பாடளித்த சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்கள் சார்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன், குருபரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

எனினும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளை மையப்படுத்தி புதிய பதவி !

சாவகச்சேரி வைத்தியசாலையில்  இடம்பெற்ற இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்த பின்னர் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள நேரலையிலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ”அரசாங்கமும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மத்திய அமைச்சின் கீழ் இல்லாத அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான 2 அல்லது 3 வருட செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் இதற்கான நிதியுதவிக்கான கோரிக்கைகளை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.

 

அதற்கான பொறுப்பினை நான் எடுத்துக் கொள்வேன். அத்துடன் இந்த செயற்திட்டத்திற்கான தயாரிப்பாளராக என்னை இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்து நான் எந்த வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டுமென கேட்டிருந்தேன். இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கின்றது.

அந்த செயற்திட்டத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாவும் எனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவேற்றப்படும்.

 

என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே இது வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல, தவறிழைக்கும் வைத்தியர்களுக்காகவும் வைத்தியசாலையை மேம்படுத்துவதற்குமான போராட்டம்.” என தெரிவித்துள்ளார்.