ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

3,750 மில்லி லீற்றர் கசிப்பு காய்ச்சி பிடிபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் !

திறப்பனை, பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு திற்பனையில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்தபோது  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கசிப்பு காய்சிக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது காணி ஒன்றில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்தபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

3,750 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 1,80,000 மில்லி லீற்றர் கோடாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

பட்ஜட் தோல்வி – பதவி விலகினார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்பதன் அடிப்படையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3
உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவால் வெற்றி பெற்றது என்பதும் இந்த ஆண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரணிலுடனோ – சஜித் தரப்புடனோ ஒரே போதும் இணைய மாட்டேன் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

நான் ஐக்கியதேசிய கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள மாட்டேன் என மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .

முகநூல் பதிவொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நான் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியிலேயே பிறந்தேன் அந்த கட்சியிலேயே வளர்ந்தேன் இறுதி வரை அந்த கட்சியிலேயே இருப்பேன்.

இன்று பல தவறான கொள்கைகளை பின்பற்றியதால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

ஆகவே நான் பண்டாரநாயக்கவின் கொள்ளைகளை பாராட்டுகின்றேன் அந்த கொள்கையை ஏற்று தெளிவான கொள்கை அடிப்படையில் நான் பணியாற்றுகின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர்கள் தங்கள் குறுகிய நோக்கங்களிற்காக கட்சியின் கொள்கைகளிற்கு துரோகமிழைக்கின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்குள்ளும், பாராளுமன்றத்துக்கு வெளியேயும் மக்கள் சார்பில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

“அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார்.” – அமைச்சர் நாமல் ராஜபக்ஸ

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்ற விதத்தில் அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்படுவார்களாயின், தான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை குறைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதனால், தமது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு முன்னுதாரணமாக செயற்பட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முடியும் என நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அவ்வாறு செய்யும் பட்சத்தில் தானும் பதவி விலக தயார் என அவர் கூறுகின்றார்.ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னுதாரணமாக செயற்படுமானால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தான் முன்னுதாரணமாக பதவி விலகுவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்

“அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான ஒரு துயரமான கதியை மக்கள் எதிர்கொண்டதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் அவர் தெரிவித்த போது,

எனது ஆட்சிக்கு பிறகு பிரச்சனைகள் இல்லாத அழகான நாட்டைக் நான் கையளித்தேன். மக்கள் உணவருந்தி மகிழ்ச்சியாக இருந்தார்கள், விவசாயிகள் நன்றாக விவசாயம் செய்தார்கள், என் காலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கவில்லை, ஆனால் இந்நாட்டு குடிமக்களின் அன்றாட வாழ்க்கை இன்று இருக்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கவில்லை.

அரசாங்கத்தை குற்றம் சாட்டி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காப்பாற்ற, சிதைந்து கொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க இது ஒரு சந்தர்ப்பமாகும். இன்று என்னை அவதூறாக பேசுகின்றனர், இழிவு படுத்துகின்றனர். ஏறக்குறைய 54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.

இன்று நம் நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன, விவசாயிகள் கண்ணீரில் வாழ்கிறார்கள், நான் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். பொலன்னறுவை மக்களிடம் வாக்குகளைப் பெற்ற மூன்று அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னைத் தவிர. அவர்களில் ஒருவரேனும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வௌியிலோ விவசாய சமூகத்தின் அவல நிலையைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆமாம் சார். ஆமாம் சார். அவ்வளவுதான்.”