ஹரிணி அமரசூரிய

ஹரிணி அமரசூரிய

அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன் – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய!

அடுத்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் தனது அமைச்சுப் பதவியை இன்று (20) பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், கல்வி போன்றதொரு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

விடயத்தின் ஆழத்தை தான் முழுமையாக புரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாடசாலைக் கல்வியானது முறையாகவும் கால ஒழுங்கிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும், தற்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், மக்கள் அனைவரினதும் கணிசமான ஆதரவு அதற்கு அவசியம் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளராக கே. எம். ஜி. எஸ். என். களுவெவவும் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் – ஹரிணி அமரசூரிய

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய  தொிவித்துள்ளாா்.

 

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஹரிணி அமரசூரிய,

 

தேர்தல் நடைபெறும் போது போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கொள்கை பிரகடனத்தை வெளியிடுவது வழக்கமானதே.ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் நாட்டிற்கு பொருத்தமான மக்களுக்கு தேவையான கொள்கை திட்டமொன்றே அவசியமாகின்றது.

 

கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதை பலர் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுகின்றனர்.இது இன்று நாட்டில் அரசியல் கலாசாரமாக உள்ளது.

 

பலர் கட்சிமாறுகின்றனர் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதனை முற்றாக மாற்றுகின்றார்கள். மக்களால் தெரிவு செய்யடுகின்ற ஆட்சியாளர்களினால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

 

தேர்தல் ஒன்று இடம்பெறும் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் வேட்பாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.அதன்பின்னர் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் அங்கு செயலற்றுபோகின்றது.

 

இவ்வாறான அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மேலும் தொிவித்தாா்.

“இனநல்லிணக்கம் பற்றி பேசிவிட்டு ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டால் தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்? – ஹரிணி அமரசூரிய கேள்வி !

இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ்ப் பிரதிநிதிக்கு எதிராகச் செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி, பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்ட கேள்வியை அவர் எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கும் செய்தி என்ன? இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ் பிரதிநிதிக்கு எதிராக செயற்படும் போது, தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்?

குற்றமிழைப்பவர்களை சமமாக நடத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த வித்தியாசத்தை அவதானித்தோம். ஆளும் தரப்புக்கு ஒரு சலுகையும் எதிர்க்கட்சிக்கு பிறிதொரு சலுகையும் என அரசாங்கம் மனம்போன போக்கில் செயற்படுகிறது” என்றார்.

“ஜனாதிபதி ரணிலின் சிம்மாசன உரை பழைய புராணம் தான்.”- தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில், புதிதாக எதுவும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிம்மாசன  உரைக்கு பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அரசியல் வரலாற்றில் இருந்ததையே மீண்டும் இந்த உரையில் முன்வைத்துள்ளது. அத்துடன் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றத்தையே அந்த உரையில் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களை  கலந்துரையாடலுக்கு அழைத்தமை நகைச்சுவையானது”- ஐக்கிய மக்கள் சக்தி

“மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களை  கலந்துரையாடலுக்கு அழைத்தமை நகைச்சுவையானது” என தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை கைக்குழந்தைகளாகக் கருதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நகைச்சுவையானது.

இணக்கமற்ற இருவருக்கு இடையில் திருமணம் நடைபெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை போலவே இந்த அழைப்பு காணப்படுகிறது.  எனவே முழு அரசாங்கமும் பதவி விலகுவதற்கான நேரம் இது.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே பொதுமக்கள் தற்போது கற்பிக்கும் முக்கியமான அரசியல் பாடத்தை அரசாங்கம் உணர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டார்.