ஹாங்காங்

ஹாங்காங்

ஹாங்காங் மீதான சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணையும் உலக நாடுகள் !

இங்கிலாந்து தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்த ஹாங்காங்கை 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. அதையடுத்து சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனால் அதன் தன்னாட்சியை சிதைக்கின்ற வகையில் சீனா பல நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை ஹாங்காங்கில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து போராடுகிறவர்களை தனது நிர்வாகம் மூலம் ஒடுக்குகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக போராடிய சட்டசபை உறுப்பினர்களை சீன நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஹாங்காங் விடுதலைக்கான போராட்டம் - எதிர்

இதனால் சீனாவினுடைய அடக்கு முறைகளுக்கு  எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய உலக நாடுகள் அணி திரண்டுள்ளன. இந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள், கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹாங்காங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தி உள்ளனர்.

சீனாவின் செயல்பாடுகள், சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஹாங்காங் மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதின் மூலம் விமர்சன குரல்களை சீனா ஒடுக்குவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை காக்க மக்கள் தங்கள் நியாயமான கவலைகளை வெளிப்படுத்த உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

எனவே சீனா, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹாங்காங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் தங்கள் கடமைகளை செய்யும் வகையில் மீண்டும் பதவி அமர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.