பிரித்தானியாவின் மிக உன்னதமான மனிதத்துவ போராளியான ஜெரிமி கோபின் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது கட்சியில் இருந்த யூதர்களுக்கு எதிராக செயற்பாடுகளை கண்டுகொள்ளவில்லை என்று சமத்துவத்திற்கும் மனித உரிமைக்குமான ஆணைக்குழு நேற்று (29/10/2020) குற்றம்சாட்டி இருந்தது. இந்த அறிக்கை வெளிவந்து சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோர்பின் இந்த அறிக்கையை விமர்சித்து இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக மிகைப்படுத்தப்பட்டது என ஜெரிமி கோபின் மிகச்சரியாகவே குற்றம்சாட்டி இருந்தார்.
ஆனால் ஜெரிமி கோபினின் இந்த விமர்சனத்தை தற்போதைய தொழிற்கட்சித் தலைவர் ஹியஸ் ராமர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஜெரிமி கோபின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்ககாணலில் தன்னுடைய விமர்சனத்தை மிக அழுத்தம் திருத்தமாக வெளியிட்டார். அதன்படி தனக்கு எதிரான ஒரு அரசியல் சதி என்பதை அவர் மிகத் தெளிவாக சுற்றிக்காட்டினார். இதனை தொழிற்கட்சியில் இருக்கும் பல யூதப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், ஜெரிமி கோபினுக்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். ஜெரிமி கோபினின் இந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பப்பட்டு சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோபின் நேற்று மதியம் ஒரு மணியளவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அன்ரிசெமற்றிசம் – anti semitisam என்பது ஹிட்லருடைய காலத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை மறுப்பது. இவ்வாறான எவ்வித மறுப்பையும் ஜெரிமி கோபின் செய்ததற்கு நேரடியான மறைமுகமான எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால் கட்சியில் இருந்த சிலர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தனர். அது சம்பந்தப்பட்ட ஒழுங்காற்று நடவடிக்கைகளை கட்சி எடுத்துவந்தது. ஆனால் தொழிற்கட்சியில் இருந்த வலதுசாரி பிரிவினர் ஜெரிமி கோபினின் தீவிர இடதுசாரியப் போக்கை நிராகரித்து வந்ததுடன்; ஜெரிமி கோபினை கட்சியின் தலைமையில் இருந்து ஓரம்கட்ட இந்த அன்ரி செமற்றிசம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து ஊதிப் பெருப்பித்து இந்நிலைக்கு இட்டுச்சென்றனர். இதுவொருவகையில் சகல விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கின்றவர்களை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயலாகவே கருதப்படுகின்றது.
பிரித்தானியாவில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர் அதனால் அவர்கள் தினம் தினம் அவமானப்படுகின்றனர் வன்முறைக்கு உள்ளாகின்றனர். சிறுபான்மைச் சமூகங்கள்நாளாந்தம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். கறுப்பினத்தவர்கள் தங்களுடைய தோற்றம் இயல்புகளுக்காக பொலிஸாரின் ஸ்ரொப் அன் சேர்ச் போன்ற கெடுபிடிகளுக்கு உள்ளாகின்றனர். ஸ்லாமியர்கள் தினம் தினம் பிரித்தானியாவில் நையப்புடைக்கப்படுகின்றனர். அகதிகள் கேவலப்படுத்தப்படுகின்றனர். இவையெல்லாம் பிரித்தானிய தெருக்களிலும் பாராளுமன்றத்திலும் அப்பட்டமாக வெளித்தெரிகின்ற சமத்துவம் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள். இந்த கோவிட்-19 இந்நிலையயை மேலும் மோசமாக்கி ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் தூண்டியுள்ளது.
மேற்குறிப்பிட்ட சம்பவங்களோடு ஒப்பிடுகின்ற போது யூதர்கள் தொழிற்கட்சிக்குள் ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள் என்பது மின்னணு நூக்குக்காட்டியயைக் கொண்டு பெருப்பித்து பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம். மேலும் இந்த அன்ரிசெமற்றிசம் என்ற குற்றச்சாட்டை வைப்பவர்கள் இஸ்ரேலிய கொடுங்கோன்மை கொலைவெறி அரசை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். இஸ்ரேலிய கொடுங்கோண்மை அரசை விமர்சிப்பது எந்தவகையிலும் யூதர்களின் உரிமைகளை மறுப்பதாகாது. தொழிற்கட்சி உறுப்பினர்கள் பலர் அன்ரி ஸ்யோனிஸ்ட் anti zionists டுக்களாக உள்ளனர். அவர்கள் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதையும் இஸ்ரேலிய அரசின் நில ஆக்கிரமிப்பையும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசின் கொடுங்கோண்மையயையும் வன்மையாகக் கண்டிக்கின்றனர். இந்தப் பின்னணியியேலயே ஜெரிமி கோபின் மீது இவ்வாறான ஒரு அபாண்டமான பழி போடப்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இஸ்ரேலிய அரசு மனிதத்துவத்திற்கு எதிரானது; இஸ்ரேலிய அரசை எதிர்ப்பது; பாலஸ்தீன மக்களின் நில அபகரிப்புக்கு எதிராக குரல்கொடுப்பது; பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல்கொடுப்பது ஒருபோதும் யூதமக்களை அவமானப்படுத்துவதாகாது. ஜெரிமி கோபினை தொழிற்கட்சியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவு கட்சிக்குள் உள்ள வலதுசாரி சக்திகள் கடந்த ஆண்டுகளாக ஜெரிமி கோபின் சாதித்த மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நிராகரிக்க முயற்சிப்பதன் வெளிப்பாடே.