தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது. ஆகவே இந்த செயல்முறையில் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன். மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று கண்டியில் வெளியிடப்பட்டது.
இதிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும்,6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் மேலும் அதிகபட்ச நிதி திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.