13 ஆவது திருத்தம்

13 ஆவது திருத்தம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுக்கு வழங்கும் அதிகாரங்கள் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

 

இச்சந்திப்பின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள விடயங்களை உள்ளடக்கி அண்மையில் சுமந்திரனிடம் கையளித்த ஆவணத்தை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

அதேவேளை அந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்படவேண்டிய சட்டங்கள், நீக்கப்படவேண்டிய சட்டங்கள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

 

அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கவேண்டும் எனவும் இதன்போது சுமந்திரன் வலியுறுத்தினார்.

 

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அதனை செனெட் சபை மூலமாகச் செய்வதாக அல்லவா ஏற்கனவே கலந்துரையாடினோம் என வினவினார். அதனை ஆமோதித்த சுமந்திரன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னர் கலந்துரையாடிய வேளையில், மேற்குறிப்பிட்டவாறு வழங்கிய அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு செனெட் சபையை நிறுவுவது குறித்துத் தாம் பேசியதாகவும், இருப்பினும் அதுகுறித்து பகிரங்கமாகத் தெரியக்கூடியவகையில் ஜனாதிபதி உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

மேலும் தேசிய கொள்கைகள் முழு நாட்டுக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதன்கீழ் உரிய கட்டமைப்புக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும் எனவும், விசேட சட்டங்களுக்கான தேவைப்பாடுகள் உள்ளபோதிலும், அவை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படாதவண்ணம் அவற்றை மாற்றியமைக்கவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதுபற்றியும் சுமந்திரனுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

எனது ஆட்சியில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன் – கிளிநொச்சியில் சஜித் பிரேமதாச !

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

அதன்படி நீங்கள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், பேகராக இருந்தாலும் ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும்.

இதேவேளை 13வது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும் தான் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன் என எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்..?

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வௌியிடப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கையைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

இந்த உத்தரவு 14 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

 

மனுதாரரான புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கனிமச் சுரங்கம், அது தொடர்பான அனுமதிகள் வழங்குதல், அவற்றின் நிர்வாகம் போன்றவற்றின் முழு அதிகாரமும் தங்கள் பணியகத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய திருகோணமலையில் 13 கிலோமீற்றர் பரப்பளவில் தாது மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதற்கு தமது பணியகம் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான அனுமதிகள் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, சம்பந்தப்பட்ட நிலத்தில் தேவையான அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள, “மிட் வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்து, அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு, அதன்படி, அகழாய்வு பணியை, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆரம்பித்ததாக, மனுவில் கூறப்பட்டுள்ளது. .

 

இருந்த போதிலும், கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில், கிழக்கு மாகாண செயலாளர் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி, தேவையான அனுமதி பெற வேண்டும் என்றும், அதுவரை திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து.

 

புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தனது மனுவில், கனிம வளங்கள் மற்றும் அவற்றின் சுரங்கம் தொடர்பான உரிமங்களை வழங்குவதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசின் கீழ் செயல்படும் தமது நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கனிம வளங்கள் தொடர்பான செயற்பாடுகள் மாகாண சபையின் எல்லைக்கு தொடர்பில்லாதது எனவும், கிழக்கு மாகாண ஆளுநரின் இந்த உத்தரவு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முற்றாக மீறுவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை மீறி, கிழக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட கடிதம் செல்லுபடியாகாது என ரிட் ஆணையை பிறப்பிக்குமாறும், அந்த கடிதத்தின் அடிப்படையில் மேலதி நடவடிக்கை எடுப்பதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவது சரியானது.” – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தழிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகர்வு சரியானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் வடக்கின் காணி அபகரிப்பு, பௌத்த மத ஆக்கிரமிப்பு பற்றியும் குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

“13ஆம்திருத்தம் முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ளதால் அதனை நாம் கிழியாமல் எடுக்க வேண்டும்.” – டக்ளஸ் தேவானந்தா

“13ஆம்திருத்தம் முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ளதால் அதனை நாம் கிழியாமல் எடுக்க வேண்டும்.” ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பயனாக இலங்கையில் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் தற்போது முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ள நிலையில் அதனை கிழியாமல் எடுத்து செய்ய வேண்டியதை செய்வதே எமது இலக்காக இருக்க வேண்டும்.

இதை ஏன் நான் உதாரணமாக கூறினேன் என்றால் பதின்மூன்றுக்கு எதிரானவர்கள் தென் இலங்கையில் இருக்கின்ற நிலையில் பதின்மூன்று தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் ஆரவாரப்பட்டால்  தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் நான் இலங்கைக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காக தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கம் ஊடாக பிரச்சனை அணுகுதலை இன்று வரை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன்.

பிரேமதாச காலத்தில் வாகனங்களில்  (சிறீ)  எழுத்துப் பதிவிடுவது தமிழ் மக்களின் முதலாவது போராட்டமான சிறீ எதிர்ப்பு போராட்டத்தை அப்போதைய தமிழ் தலைவர்கள் முன்னெடுத்தனர்.

ஆனால் குறித்த போராட்டத்தை நீடிக்க விடாமல் இரவோடு இரவாக பிரேமதாசா அரசாங்கத்தோடு கச்சிதமாக பேசி கலவரங்கள் ஏற்படாத வகையில் (சிறீ )  தீர்மானத்தை இல்லாமல் செய்தோம்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் நமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலையில் அவர்களின் விருப்பத்தை மீறி தீர்மானங்களை மேற்கொள்வது  கஷ்டமான காரியம்.

அதேபோன்றுதான் 13 வது திருத்தம் தொடர்பில் சிங்கள மக்களை குழப்புவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களின் உசுப்பேத்தல்களுக்கு தமிழ் தரப்புகள் கூக்காடு போட்டால் அரசாங்கத்துக்கு இடையூறுகள் ஏற்படும்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆரம்ப கட்ட தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.

பதின்மூன்றை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமற்ற நிலையில் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நடைமுறைப்படுத்த முடியும்.

ஆகவே பதின் மூன்று தொடர்பில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து தந்திரமான முறையில் அதனை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

” நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன்.” – மனோ கணேசன்

” நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன்.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துக் கொண்ட கூட்டணி தலைவர் மனோ கணேசன், எம்பீக்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான கட்சிகள் கூட்டாக அமைத்துள்ள உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவைவிடம் மேலும் கூறியதாவது,

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன?நீர் கூறுவதை கேட்டுக் கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக் கொண்டு வாயை மூடிக் கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

அதைவிட 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை உமது கட்சி, பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும். அதன் அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், விமல் வீரவன்ச எம்பி தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவை நோக்கி கூறியுள்ளார்.

நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன். அதுவே எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை. நீங்கள் எந்தவொரு தீர்வுக்கும் தயார் இல்லை. அதுதான் உங்கள் கொள்கை. அப்படியானால் உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.இந்த ப்ளஸ், மைனஸ் வெட்டிப்பேச்சுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, உங்கள் கட்சியின் சார்பாக, 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை, பாராளுமன்றத்தில் கொண்டு வாருங்கள். அதை இந்த பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது, எம்.பிக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம். உலகமும் தெரிந்துக்கொள்ளும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். உலகம் சொல்வதை கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, சாளரம், கதவுகளை மூடி வைத்து இந்நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால்தான் இன்று இந்நாடு விழுந்து போய் கிடக்கிறது.

ஆகவே இப்போதும் நீங்கள் திருந்தவில்லை என உலகம் அறியட்டும்.மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது. என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான பிழையான கண்னோட்டத்திலிருந்து பெரும்பான்மையின மக்களும் வெளியே வரவேண்டும்” – சந்திரகாந்தன்

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், நாட்டில் நல்லிணக்கம் ஸ்தீரப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர்,

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான பிழையான கண்னோட்டத்திலிருந்து பெரும்பான்மையின மக்களும் வெளியே வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தெற்கு மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் வடக்கு கிழக்குத் தொடர்பில் கொண்டிருக்கின்ற பார்வைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.குறிப்பாக வடக்கு கிழக்கினைப் பொறுத்தளவில் பிரிவினைவாத மற்றும் முற்போக்குவாத கட்சிகள் காணப்படுகின்றன. எனினும் தெற்கு மக்கள் குறிப்பாக பெரும்பான்மையின மக்கள் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது நாட்டைப் பிளவுபடுத்தும் என்ற சிந்தனையை முதலில் அகற்ற வேண்டும்.இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தினைப் பொறுத்தவரையில் தற்போது ஜனாதிபதிக்கு மிகவும் சவாலான விடயமாகக் காணப்படுவது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் என்பனவாகும்.எனவே இந்த விடயத்தில் அனைவருமே ஒரு விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.நம்பிக்கையீனங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்காமல் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

ராஜீவ் – ஜே. ஆர் ஜயவர்தன ஆகியோர் அன்று 13 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டுவந்தபோது அன்றைய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக அங்கம் வகித்த தற்போதைய ஜனாதிபதி, இந்த அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வை முன்வைப்பார் என்று எனக்கு நம்பிகை இருக்கின்றது.அதிகாரப் பகிர்வின் மூலம் நாடு துண்டாடப்படும் என்று தெற்கில் உள்ள அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடும் அதே நேரம், முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும், எமக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு மாத்திரமே வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு அரசியல் தலைவர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை இரண்டுமே இரு தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறதுஎனவே ஜனாதிபதியின் முடிவுகளுக்கு விட்டுக் கொடுப்புக்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் பேசவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்  அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை  ரணில் விக்ரமசிங்க விளக்குவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து முன்மொழிவுகளும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின் மாறுபட்ட கருத்துக்கள் தடையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்து இரண்டு வாரங்களின் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“13ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் 1987ற்கு முன்பு காணப்பட்ட நிலை மீண்டும் ஏற்படும்.” -உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றின் ஊடாக நீக்கப்பட்டால், 1987ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமை மீண்டும் இலங்கையில் ஏற்படும். எனவே 13 நீக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இறைவனே அறிவார் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

 

எனவே இனியும் தாமதிக்காது சகல கட்சிகளும் இணைந்து 13 தொடர்பில் ஸ்திரமான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது.

 

இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

 

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட பதற்ற நிலைமையை தணிப்பதற்காக இந்தியாவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட இந்து – லங்கா ஒப்பந்தத்தின் மூலம் 13ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் முந்தை ஜனாதிபதிகள் எவரும் தலையிடவில்லை என்று தெரிவிக்கப்படுவது கற்பனை கதையாகும்.

 

ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைவரும் இவ்விடயத்தில் அவதானம் செலுத்தியிருக்கின்றனர்.

 

எனினும் அவர்களால் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது மக்களால் விரும்பப்படாத ஒரு விடயமாகக் காணப்பட்டாலும், ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இதற்கொரு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

அதற்கமைய கடந்த புதனன்று கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது 13 ஐ நடைமுறைப்படுத்துவதா? அல்லது நீக்குவதா என்பதை நீங்களே தெரிவு செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அதற்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும். 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இணங்க முடியாதெனில் , பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை முன்வைத்து அதனை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

 

ஜனநாயக தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்கும் உரிமையை சகல கட்சிகளுக்கும் வழங்கியுள்ளார்.

 

எனவே இனியும் தாமதிக்காது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சகல கட்சிகளும் ஒருங்கிணைந்த ஸ்திரமான நிலைப்பாடொன்றை அறிவிக்க வேண்டும்.

அதனை விடுத்து 13 பிளஸ் உள்ளிட்ட புதிய கருப்பொருட்களை முன்வைத்தால் , இந்த சிக்கல் தொடர்ந்தும் நீடிக்குமே தவிர இறுதி தீர்வினை எட்டாது என்றார்.

இதன்போது , ஜனாதிபதியின் டில்லி விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ’13ஐ முழுமையாக அமுல்படுத்தி தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புகின்றோம்.’ எனத் தெரிவித்திருந்தார்.

அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்தினால் 13 நீக்கப்பட்டால் இந்தியாவின் அழுத்தங்களை எதிர்கொள்ள நேருமல்லவா? இதற்கு இந்தியாவுக்கு எவ்வாறு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ,அதை என்னால் கூற முடியாது.

13 நீக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இறைவன் மாத்திரமே அறிவார். அல்லது 1987 கால கட்டங்களில் காணப்பட்ட நிலைமைக்கு இலங்கை மீண்டும் செல்லக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

“13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.” -உதய கம்மன்பில

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார்.

 

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

 

ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்கில் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான விசேட பொறிமுறை ஒன்று வகுக்கலாமே தவிர காணி அதிகாரங்களை வழங்க கூடாது என்றும் கூறினார்.

 

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.