13 பிளஸ்

13 பிளஸ்

கூட்டமைப்பினர் இந்தியாவிடம் கையேந்துகிறார்கள் என விமர்சித்த முன்னணியினர் அரசியல் தீர்வு கோரி இந்திய பிரதமருக்கு மகஜர் !

திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

 

13 ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருப்பதை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமைந்துள்ளமையினால் அதனால் எந்தவொரு தீர்வும் கிடைக்காது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் ஊடாக அனுப்பி வைத்த பின்னர் இதனை கூறியுள்ளார்.

 

ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் பல இணைந்து ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக பிரதமருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் இந்தியா தமிழர்களின் எதிரி என்ற தோரணையிலும் – இந்தியா முன்மொழிந்த 13ஆம் திருத்தச் சட்டம் தேவையில்லை எனவும் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னணியினர் மேற்கொண்டு இருந்தனர். மேலும் இந்தியாவையே சார்ந்து இருக்கும் கூட்டமைப்பினர் பா.ஜ.க அரசின் எடுபிடிகளாக செயற்படுவதாகவும் கஜேந்திரர்களும் அவர்களின் முன்னணி ஆதரவாளர்களும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்த நிலையில் இன்றையதினம் தீர்வு விடயமாக இந்தியாவுக்கே முன்னணி கட்சியினர் மகஜர் கொடுத்துள்ளமை தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருகிறார்கள்.

கடந்த வருடம் 2022 ஜனவரி மாதமளவில் இந்தியாவின் தமிழர்கள் தொடர்பில் முகம்பாராமல் இருக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் – 13ஆவது திருத்தம் வேண்டாம் என்பதையும் வலியுறுத்தியும் பாரிய போராட்டங்களை மேற்கொண்ட போது இன்று மகஜர் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது” கடந்த 70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக” தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.”இந்தியாவிடம் கூட்டமைப்பினால்  முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – பஷில் ராஜபக்ச

13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

ஆனால் ஒற்றையாட்சியையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது. எனவே, எல்லைமீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஸில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

’13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. சொல்லளவில் இருந்த ஒற்றையாட்சியை மஹிந்த ராஜபக்சவே நிஜமாக்கினார்.

நாட்டின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார். ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளேயே நடவடிக்கை இடம்பெறும் எனவும் பஷில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பஸில் ராஜபக்ச,

‘நாட்டில் சட்டம், ஒழுங்கு தற்போது உள்ளவாறு உறுதிப்படுத்தப்பட வேண்டும், மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மொட்டு கட்சியை பலவீனப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேசினேன்.

ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்தன. மொட்டு கட்சியை பலவீனப்படுத்துவதற்கு அவர் துணை நிற்கமாட்டார்.’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.