“18ஆவது திருத்தச்சட்டத்தை போன்றே 20ஆவது திருத்தச்சட்டத்திலும் ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (22.10.2020) நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் ஏற்படும் பாதகத்தன்மை பற்றி கடந்த காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் பேசினர். அதனை அடிப்படையாக கொண்டு தான் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டார்கள்.
19ஆவது திருத்தத்தில் சர்வாதிகார போக்குடைய ஜனாதிபதி முறையை ஓரளவு குறைத்தோம். மீண்டும் அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு தனிநபரிடம் அதிகாரங்களை குவிக்காது பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை கொடுக்கும் சூழல் உருவாக்கப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்.
தேர்தல்களில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளனர். 18ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 20ஆவது திருத்தச்சட்டத்தில் அதுதான் நடைபெறுகிறது. தனிப்பட்ட சுயலாபம் மனசாட்சியை தாண்டியுள்ளதால் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
பாராளுமன்றம் சர்வாதிகார ஜனாதிபதி முன்னிலையில் மண்டியிட்டிருக்கிறது. பிரதமரை நினைத்தவுடன் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. எந்தவொரு அமைச்சினையும் எச்சந்தர்ப்பத்திலும் பறிக்கலாம். இவ்வாறு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் கிடைத்தால் அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லாது போய்விடும். ஜனாதிபதியால் நினைத்தப்படி அமைச்சர்களை ஆட்டிவைக்கவும் முடியும்.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. ஐந்து வருடத்திற்கு மக்கள் வழங்கு ஆணையை அடிபணிய வைக்கும் செயற்பாடே இது. கடும் அழுத்தங்களால் 20இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்தவாறு இது நிறைவேற்றப்பட்டிருந்தால் மக்களின் அடிப்படை உரிமைக்கூட கேள்விக்குறியாகியிருக்கும் என்றார்.