2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

வரவு -செலவு திட்ட 3ம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் – வாக்களிக்காத தமிழ்தேசிய கூட்டமைப்பினர் !

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 3ஆம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்களிக்கவில்லை.

மேலும் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்கவினால் கடந்த மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போதும் வாக்களிக்காத கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு தருவதாக கூறியதால் கூட்டமைப்பினர் எதிராக வாக்களிக்காது நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்ததாக அறிவிறித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“இராணுவத்துக்கு 530 பில்லியன் ரூபா ஒதுக்கிவிட்டு கல்வி, சுகாதார துறைகளுக்கு குறைந்தளவு நிதியை ஒதுக்கியுள்ளார்கள்.”- சி.வி.விக்னேஸ்வரன்

“530 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கதிகமான இராணுவத்தினருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்காக அல்ல.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரவு செலவுத் 530 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கதிகமான இராணுவத்தினருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்காக அல்ல.

2009 க்கு பின்னர் இராணுவத்தினருக்கான செலவு குறையும் என்று எதிர்பார்த்தாலும் ஒவ்வொரு வருடமும் இது அதிகரித்துக்கொண்டே போகின்றது. கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு குறைந்தளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சமூக பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது இது தொடர்பில் கேள்வியெழுப்புகின்றனர். மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாப்பு செலவீனம் வருடாந்தம் அதிகரிக்கின்றது. இவ்வாறு பாதுகாப்புக்கான செலவீனம் அதிகரிப்பதன் ஊடாக வடக்கு ,கிழக்கில் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என்பதனையே காட்டுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் மக்களின் காணிகள், விவசாய காணிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. மக்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் காணிகள் அதிகளவில் இராணுவத்தினர் வசமுள்ளது. மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

மாகாண சபைகள் மக்களுக்காக நல்ல வேலைத்திட்டங்களை கொண்டு வந்த நிலையில் இராணுவம் காணிகளை கைப்பற்றி செயற்படுகின்றது. மேலும் வடக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் சோதனை சாவடிகள் இருக்கின்றன. இங்குள்ள காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.

நியாயமான அதிகார பரவலாக்கத்துடனான  சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும். ஒற்றையாட்சி முறைமை அமுலில் இருக்கும் வரை புலம் பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை, நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரவு செலவுத்திட்டத்தில் அவதானம் செலுத்தப்படாமல் இருப்பது பிரதான குறைப்பாடாக கருதப்படுகிறது.

இதேவேளை ஒற்றையாட்சிக்குள் இருந்துகொண்டு வெளிநாட்டு தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது. வடக்கு, கிழக்கிற்கு நீதி வழங்க வேண்டும். எங்களுடைய தேவைகள் எங்களுக்கு முன்னுரிமையதாகவே இருக்குமே தவிர மத்திய அரசுக்கு தேவையானதாக இருக்காது.

ஒற்றையாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான அதிகார பகிர்வை செயற்படுத்த வேண்டும். இதன்படி சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் என்றார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் – துர்நாற்றம் வீசுகிறது என்கிறார் புத்திக பத்திரன !

வரவு செலவுத் திட்டம் விஷம் ஊட்டப்பட்ட கேக் துண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

கேக்கின் ஐசிங்கில் இரண்டு அல்லது மூன்று மலர்கள் தூவப்பட்டிருந்தாலும், உள்ளே துர்நாற்றம் வீசுவதாகவும் புத்திக பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே புத்திக பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டம்.” – வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இந்த யோசனையை முன்வைத்தார்.

தனியார் துறையில் பணிபுரியும் போது பல்வேறு காரணங்களால் வேலையிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இது மிகவும் சிக்கலான சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்கு, ஒரு காப்புறுதிக் கொள்கையை வழங்குவதற்கும், வேலை இழக்கும் வரையிலான காலத்துக்கு காப்புறுதி நிதியை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டதுடன் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு வரையறுக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படலாம்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் நிவாரணம் பெறுவார்கள் என்றும், தனியார் துறை ஊழியர்களுக்கும் இதுபோன்ற மருத்துவக் காப்புறுதி வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உத்தேச சுகாதார மற்றும் காப்புறுதித் திட்டங்களுக்காக ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து சில தொகைகளை ஒதுக்குவது பொருத்தமானது எனத் தெரிவித்தார்.

இதன்படி, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் கீழ் இந்த இரண்டு புதிய முறைகளையும் உள்ளடக்கும் வகையில் ஊழியர் நம்பிக்கை நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.