30 ஆண்டு போர்

30 ஆண்டு போர்

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் தாண்டியும் யாழில் வீடுகள் இன்றி தவிக்கும் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் !

யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடங்கள் இன்றித் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் யாழில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது யாழில் இடம்பெயர்ந்த “1,512 குடும்பங்களைச் சேர்ந்த 4,567 பேர் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் எனவும், 10 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் குறித்த மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் எனவும், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வருடத்திற்குள் அவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதனையடுத்து இதுவரை மீள்குடியேறாத மக்களை மீள்குடியேற்றுவதற்கான வேலைத்திட்டம் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட ஏனைய வசதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆளுநர், மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.