JCC

JCC

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் தெரிவில் வெளிப்படுவது சாதிய குளறுபடியா அல்லது ஆணாதிக்க சிந்தனையா..?

கடந்த வருடம் யாழ்ப்பாண தீவுப் பகுதி இந்து பாடசாலை ஒன்றில் கிறிஸ்தவர் ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டார் என்பதற்காக மாணவர்களை மதவாதம் சார்ந்த கருத்தியலுக்குள் தள்ளி ஒரு போராட்டம் ஒன்றை குறித்த பாடசாலை ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தமை சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்களை கிளப்பிவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(19) காலை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு கல்லூரியின் முன்னைய அதிபராக செயற்பட்டவரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துகிறது என்ற கருத்தை மையப்படுத்தி விவாதங்கள் வெளியாகியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க சாதி தொடர்பான பிரச்சனைகளும் குறித்த பாடசாலை அதிபர் தெரிவில் காணப்படுவதாக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதுடன் பாடசாலையின் முன்னாள் அதிபர் உயர் சாதியை சாராதவர் என்பதற்காக புதிதாக உயர்சாதியை சேர்ந்த பெண் அதிபரை நியமித்துள்ளதாகவும் இருந்தபோதிலும் அது தொடர்பிலும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசம்நெட்இற்கு தகவல் அளித்த சமூக நலன்விரும்பி ஒருவர்  தெரிவித்துள்ளார்.