The conspiracy

The conspiracy

வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத கோட்டாபாய ராஜபக்ஷ ஒரு அறிவிலி – மனோகணேசன் விசனம்!

சிங்கள பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று திரண்டு அரகலவை நடத்தினார்கள்” என தன் நூலில் கூறும் கோட்டாபய ராஜபக்ச, வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

 

சிங்கள-பெளத்தர் பலமடைவது இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. சிங்கள மொழி பேசுவதன் மூலமும், பெளத்த தரிசனத்தை கடை பிடிப்பதன் மூலமும் நானும்கூட சிங்கள பெளத்த சிந்தனையை பலப்படுத்தி வருகிறேனே! எமக்கு அதில் என்ன பிரச்சினை?

 

இந்நாட்டில் சிங்கள- பெளத்தம், பேரினவாதமாக மாறி, பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள் என்ற இலங்கை பன்மைத்துவதை இல்லாது ஒழிப்பதே எமது பிரச்சினை. அதுதான் எமது நீண்டகால போராட்டம். உங்கள் “அரகலய” வுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என மனோ கணேசன் கூறியுள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள “சதி” என்ற நூல் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் கருத்து கூறியுள்ள மனோ எம்பி மேலும் கூறியதாவது,

 

கொழும்பிலும், நாடு முழுக்கவும் நடைபெற்ற அரகலவில் பங்கு பெற்ற மக்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினர், 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு, வாக்கு அளித்தவர்கள். அவர்கள்தான், கோட்டாபயவின் முட்டாள்தனமான, பொருளாதார கொள்கைள் காரணமாக வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன் தெருவுக்கு வந்து போராடியவர்கள்.

 

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூட இவை பிரச்சினைகள்தான். ஆனால், அவற்றையும் மீறிய இன, மத ஒடுக்குமுறைகளால் அவர்கள் துன்பம் அடைந்தார்கள். ஆங்காங்கே ஒரு சில தமிழ், முஸ்லிம் மக்கள் இறுதி கால கட்டங்களில் அரகலவில் கலந்து கொண்டார்கள். சில அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அதீத கற்பனை பண்ணிகொண்டு, “இத்தோடு சேர்த்து இந்நாட்டில் இனவாதத்தையும் ஒழித்து விடுவோம்” என முழங்கியதும் உண்மைதான். “நல்லது நடந்தால் சரி” என நாம் அவர்களை வாழ்த்தியதும் உண்மைதான். அவர்கள் இன்று அரசியல் அரங்கில் அந்த அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்களை காணவில்லை.

 

எது எப்படி இருந்தாலும், அரகல முழுக்க முழுக்க, “வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன், தெருவுக்கு வந்த சிங்கள பெருந்திரள் மக்களால்” நடத்தப்பட்டது ஆகும். அதுவும் 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்த மக்களால் நடத்தபட்டது. இதுதான் உண்மை. சிங்கள-பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு பிடிக்காததாலேயே, அவர்கள் அரகலவை நடத்தினார்கள் என்ற மாதிரி கூறி, உண்மையை திரிபு படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவுக்கு கடுமையாக கூறி வைக்க விரும்புகிறேன் என்றார்.

தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை சர்வதேச சக்திகள் ஓயவில்லை – தனது நூலில் கோட்டாபய ராஜபக்ஷ!

தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை சர்வதேச சக்திகள் ஒருபோதும் ஓயமாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி’ என்ற பெயரிலான கோட்டாபய எழுதிய புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 

சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகளையும் நாசகார செயற்பாடுகளையும் வகுத்து, அதற்கான நிதியுதவிகளை வழங்கினர்.

வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை, அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்.

மேலும் பௌத்த சமயத்தை பலப்படுத்த தாம் செயற்பட எத்தனித்த போது தமிழ் மற்றும் முஸ்லீம் உள்ளிட்ட சிறுபான்மை சக்திகள் தனக்கு எதிரான அரகலய போராட்டத்தில் முன்னிலையில் செயற்பட்டதாகவும் குறித்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் சதி மற்றும் நாசகார செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாம் பதவி விலகியதாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘The Conspiracy ‘ – தனது ஆட்சி கவிழ்க்கப்பட்ட சதி பற்றி நூல் வெளியிடுகிறார் கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகுறித்து நூல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

 

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள் என்ற நூலை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் முதல் 60 வருடங்களில் இந்த நிலை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

என்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

2022 இல் இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்;சிமாற்றத்திற்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை தனது நூல் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.