USAID

USAID

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரத்திற்கு அழுத்தம் – USAID

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்து இலங்கை மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தம் காரணமாக சர்வதேச சமூக வலைத்தள நிறுவனங்கள் குற்றவியல் வழக்குகளுக்கு உட்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு USAID உதவி !

நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் ($42) உதவித்தொகை வீதம்  வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID) முன்வந்துள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாதாந்த வருமானம் 41,500 ரூபாவுக்கும் குறைவாக பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக அந்த மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு இத்தொகையை வழங்குமாறு USAID அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த தொகை ஜனவரி மாதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு 08 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகளுக்கு 10,000 முதல் 20,000 ரூபாய் வரை வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 04 பில்லியன் ரூபாவை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 04 பில்லியன் ரூபா எதிர்வரும் ஜனவரி மாதம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என கமநல மக்கள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், 1 ஹெக்டேர் வரை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, 10,000 ரூபாயும், 2 ஹெக்டேர் வரை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, 20,000 ரூபாவும் வழங்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து இந்தப் பணம் மீள அறவிடப்பட மாட்டாது என்றும், இந்த சர்வதேச உதவிகள் அனைத்தும் நாட்டின் விவசாயிகளுக்கு இலவச மானியமாக வழங்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் கூறுகிறார்.

இலங்கை விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் – சமந்தா பவர்

நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.

நேற்றையதினம் (10) இலங்கை வந்தடைந்த அவர், ஜா எல பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இங்குள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்ததாகவும், எரிபொருள் நெருக்கடி, உரமின்மை காரணமாக விவசாயிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய, இலங்கை விவசாயிகளின் தேவைகளுக்காக அமெரிக்க மக்களிடமிருந்து மேலதிகமாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளதாகவும், இதன் மூலம் 1 மில்லியன் உள்ளூர் விவசாயிகள் உரம் மற்றும் அவர்களுக்கு அவசியமானவற்றை பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இந்த புதிய நிதியானது, அடுத்த பயிர்ச்செய்கைப் பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விவசாயத் தேவைகள் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் பெறுவதற்கும், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவும் வகையிலும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார்.

நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில், இலங்கைக்கு நிதி உதவி வழங்கியதற்காக இந்தியாவைப் பாராட்டியுள்ள சமந்தா பவர், அமெரிக்கா இந்தியா மற்றும் இலங்கை மக்களின் அனைத்து நண்பர்களுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக வலியுறுத்தினார்.

IMF திட்டம் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், IMF உடனான ஈடுபாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்றும், IMF திட்டத்தைப் பெறுவதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாகவும், பூர்வாங்க ஒப்பந்த நிலையை எட்டியுள்ள இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், நாட்டில் கடன் தொல்லைகள் கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகவும், அரசாங்கமும் இலங்கையர்களும் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த தேவையான கடனை எவ்வாறு பெறுவது என்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.