இடம்பெயர்ந்த மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்ற யுனிசெப் தொடர்ந்தும் செயற்படும்

fily-ap.jpgவிமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட 50 தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று கொழும்பில் இறக்கப்பட்டதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இவை கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேலாக நீடித்த கடும் சண்டையால் இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் துரிதமாக வடபகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்தப் பொருட்களில் போஷாக்குப் பண்டங்கள், நீர் சுத்திகரிப்புக் கருவிகள், உடலில் இருந்து நீரிழப்பை தடுக்கும் உப்பு, மருந்துவகைகள் போன்றவை உள்ளடங்கும். தொடர்ந்து மேலும் பல பொருட்களை விமானம் மூலம் எடுத்து வரப்படவுள்ளன.

யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப்பே துவாமெல்லே இதுதொடர்பாக தெரிவித்துள்ளதாவது; “துரித பதில் நடவடிக்கைகளை கோரி நிற்கக்கூடிய மனிதாபிமான நெருக்கடியொன்றை இலங்கை எதிர்கொள்கிறது’. “சுமார் இரண்டரை இலட்சம் பேருக்கு உதவி தேவையெனவும், அந்த உதவி துரிதமாக தேவை எனவும் நாம் மதிப்பிட்டுள்ளோம்.’

கடந்த வாரம் யுனிசெவ் ஸ்தாபனம் இடம்பெயர்ந்த மக்களுக்கு அதிசக்தியுள்ள 50 மெட்ரிக் தொன் பிஸ்கட்டுகளை அனுப்பி வைத்திருந்தது. அதற்கு முன்னதாக, போஷாக்கின்மையைப் போக்குவதற்காக 130 மெட்ரிக் தொன்னுக்கு மேலான போஷாக்குப் பதார்த்தங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்தக் காலப்பகுதியில் பிள்ளைகளுக்குரிய கற்றல் உபகரணங்களை விநியோகித்ததுடன் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பல்லாயிரக்கணக்கான தொகுதிகளையும், பல நூற்றுக்கணக்கான நீர்த்தாங்கிகளையும், மலசலகூடங்களையும் பெற்றுக் கொடுத்ததுடன், வவுனியா பொது வைத்தியசாலையில் குழந்தை நல மற்றும் மகப்பேற்று வார்ட் ஒன்றை நிர்மாணிக்கவும் உதவியது.

வடக்கின் நிலைவரம் சிறுவர்களுக்கு பேரனர்த்தத்தை விளைவிப்பதாக அமைந்துள்ளது என்பதை வலியுறுத்துவதுடன், இங்கு பெருமளவு சிறுவர் சிறுமியர் அடங்கலாக பல்லாயிரக்கணக்கான சிவிலியன்கள் சிக்கியிருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

இருதரப்பு துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு மத்தியில் சிக்குவது மாத்திரமன்றி, இந்த மக்கள் போதிய உணவு, குடிநீர் மற்றும் மயக்கமருந்துகள், நுண்ணுயிர்க்கொல்லிகள் போன்ற அடிப்படை மருந்துப்பொருட்கள் போதியளவில் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

நெருக்கடிப் பிரதேசத்தில் இருந்து தப்பிய மக்கள் பெரும்பாலும் சோர்வடைந்தவர்களாகவும் பட்டினி மிக்கவர்களாகவும் , அனேக தருணங்களில் காயமடைந்தவர்களாகவும், போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டவர்களாகவும் சனநெரிசல் மிக்க முகாம்களை வந்தடைகிறார்கள்.

இந்த மக்களின் சுகாதார, போஷாக்கு, குடிநீர், மலசலகூட, பாதுகாப்பு, கல்வித் துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடியாக அவசியப்படுகிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *