இலங்கை மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயற்பட எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – ஜனாதிபதி

mahinda-0000.jpgஇலங்கை மண்ணைப் பயன்படுத்தி எவரும் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவின் என். டி. ரி. வி.க்கு (தொலைக்காட்சிக்கு) பேட்டி வழங்கிய அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“இலங்கை மண்ணில் இருந்து எவரும் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது” எனக் கூறிய ஜனாதிபதி இலங்கையில் இருக்கும் சீனர்கள் அபிவிருத்திப் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் துறைமுக அபிவிருத்திப் பணிகளில் ஈடு படுகின்றனரென்று தெரிவித்தார்.

கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், இலங்கையில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது. இரண்டு இனங்கள் தான் இருக்கினறன. ஒன்று நாட்டை நேசிப்பவர்கள். மற்றயவர் நாட்டை நேசிக்காதவர்கள் என்று கூறினார்.

இதேவேளை, இலங்கையின் அபிவிருத்திக்கு இந்திய தொழில் துறையினர் பங்களிப்புச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில், இலங்கையின் அபிவிருத்தியில் இந்திய தொழிலதிபர்கள் பங்களிப்பு வழங்கவேண்டு மெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவிலிருந்து வெளியாகும் வாரவெளியீடான ‘த வீக்’ சஞ்சிகைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகள் மீதான எனது போர் பயங்கரவாதத்திற்கு எதிரான தெற்காசியாவின் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே நான் கருதுகிறேன். உண்மையில் சொல்லப் போனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற புலிகளை அழித்ததன் மூலம் நான் இந்தியாவுக்காக சண்டையிட்டுள்ளேன் என்றே கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினரின் அடுத்த கட்ட கடமை, வடக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் புலம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் அதே சமயம் சண்டை நடைபெற்ற போது கூட இராணுவத்தினர் வடக்குப் பகுதிகளில் சாலைகள் அமைப்பது மற்றும் பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையில் தற்போது போர் முடிவுற்றுள்ள நிலையில் பல ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமது அரசு ‘உள்நாட்டு வளர்ச்சி’யுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வுக்கான அணுகு முறையானது இந்தியாவின் நிலைப்பாட்டையும் உள்ளடக்கியதாக அமையும். இந்தத் தடவை அரசியல் தீர்வானது இலங்கையரின் ஒவ்வொரு தரப்பினரினதும் அபிப்பிராயங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாக அமையும். இலங்கையில் ஆர்வமுள்ள விடயமாக சமாதானம் உள்ளது. அதன் உள்ளடக்கம் தொடர்பாக நாம் அமர்ந்திருந்து தீர்மானிக்க வேண்டியுள்ளது.

இந்தியா நினைப்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமானது இல்லை. யுத்த காலத்தில் ஆதரவளித்தமைக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றி செலுத்துகிறேன்.எனது வெற்றியானது அவரின் (சோனியா) தேர்தல் வெற்றியுடன் சமகாலத்தில் அமைந்தது. தேர்தலில் வெற்றியடைந்தமைக்காக நான் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தேன்.

யுத்தத்தின்போது இந்தியாவின் தார்மீக ஆதரவானது மிகவும் முக்கியமானதாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளுடன் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிர்களா? என்று கேட்கப்பட்ட போது, யுத்தத்தின் பின்னர் தமிழ் நாட்டின் பல அரசியல்வாதிகள் தனக்கு வாழ்த்துத தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களின் விதியை தேர்தலின்போது பாருங்கள். புலிகளுக்கு ஆதரவளித்த சகலரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்களுக்கு தமிழக மக்கள் பொருத்தமான பதிலை அளித்திருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெற்காசியா முழுவதும் நண்பர்களைக் கொண்டிருக்க விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாகிஸ்தானுடனும் சிறந்த உறவுகளைக் கொண்டிருப்பது சரியானதாகும் என்று கூறியுள்ள அவர், இஸ்ரேலியர், பலஸ்தீனியர்கள் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற எதிரெதிர் தரப்பினருடனும் தான் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கைப் படைவீரர் மீதான மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குறிப்பிட்ட அவர் மனித உரிமைகள் தொடர்பாகப் பேசப்படும் தருணமானது பிழையானது என்று தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார். இலங்கையரைப் புலிகள் பயங்கரவாத நிலைக்கு உள்ளாகிய வருடங்களில் அவர்கள் எங்கே இருந்தார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Sutha
    Sutha

    இலங்கை மண்ணைப் பயன்படுத்தி எவரும் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். — அப்ப ஜே.வீ.பீ. பாடும் சிக்கல் தான் பாருங்கோ.

    Reply