திருகோணமலையில் டெங்கு அச்சுறுத்தல் 197 பேர் பாதிப்பு; இரு சிறுவர் உயிரிழப்பு

mosquito_preventionss.jpgதிரு கோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை டெங்கு நோயினால் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு சிறாரும் சுமார் மூன்று வயதுக்குட்பட்டவர்கள். உயிரிழந்த சிறார் கிண்ணியா பிரதேசசெயலகப் பிரிவில் ஆலங்கேணிக் கிராமத்தையும் மூதூர் பிரதேசசெயலர் பிரிவில் அக்கரைச்சேனைக் கிராமத்தையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை மாவட்டத்தில் 197 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டனர். இவர்களில் 164 பேர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்தவர்கள். குச்சவெளி பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்த 14 பேர் டெங்கு காய்ச்சலிற்கு ஆளாகினர் என்று சுகாதாரசேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.ஞானகுணாளன் தெரிவித்தார்.

திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் பணிபுரியும் கடற்படை வீரர்கள் சிலரும் டெங்கினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, டெங்குக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையில், நுளம்பு உற்பத்தியைப் பெருக்கும் விதத்தில் தாம் வசிக்கும் வீடுகள், வளவுகளைத் துப்பரவு செய்யாமல் வைத்திருப்போருக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சட்டநடவடிக்கை எடுக்கவும் மாகாண சுகாதாரத்திணைக்களம் ஈடுபட்டுவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *