இன்று (யூன் 25) காலை 5 மணியளவில் யாழில் இருந்து வெளிவரும் உள்ளுர் பத்திரிகைகள் தீக்கிரையாக்கபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளே தீக்கிரையாக்கபட்டு உள்ளது. யாழ் புறநகர்ப் பகுதிகளான ஆணைப்பந்தி, கன்னாதிட்டி ஆகிய பகுதிகளில் வைத்து இப்பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.
கன்னாதிட்டியில் நடந்த இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்துபேர் வரையானோர் விநியோகத்தரிடம் இருந்து பத்திரிகைகளைப் பறித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகத் தெரிவித்தார். வந்தவர்கள் தீ வைத்துவிட்டுச் செல்ல மக்கள் அத்தீயை அணைத்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய மூன்று பத்திரிகைகளும் ஒரே நிறுவனத்தினூடாகவே விநியோகிக்கப்படுவதால் மூன்று பத்திரிகைகளுமே ஒரே நேரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. மேலும் சாவகச்சேரி பருத்தித்துறை ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தேசம்நெற்க்கு தகவல் தருகையில் யாழ் நகரில் உதயன் தினக்குரல் ஆகிய இரு பத்திரிகைகளினது விற்பனையையும் தன்னால் காணக் கூடியதாக இருந்ததாகவும் ஆனால் வலம்புரி பத்திரிகையை நகரில் எங்கும் காணக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கான காரணம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த அவர் இப்பத்திரிகைகளில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சிலருக்கு எதிரான செய்தியை பிரசுரிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அது பிரசுரிக்கப்படாததனால் இப்பழிவாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று பேசப்படுவதாகவும் தெரிவித்தார்
இன்று யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பதிவு செய்யும் இறுதிநாளாகும். தேர்தல் களம் சூடாகி உள்ள நிலையில் எதிர்கால நிகழ்வுகளை கட்டியம் கூறும் நிகழ்வாக இத்தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
சென்ற வாரம் இலங்கை ஊடக அடக்குமுறை காரணமாக சிறந்த ஊடகவியலாளர்களை இழந்துள்ளதென அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு Committe to Protect Journalist – CPJ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து உரிய கவனம் செலுத்தப்படாதமை மிகவும் வேதனையளிப்பதாக அவ்வமைப்பிக் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜோல் சிமோன் தெரிவித்திருந்தார்.
இவ்வாண்டில் மட்டும் உலகெங்கும் 17 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா சுயாதீன ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்தி ஆகிய இருவரும் இலங்கையர்கள். மே 31 வரையான ஓராண்டு காலத்தில் உலகின் பலபாகங்களிலும் இருந்தும் 37 ஊடகவியலாளர்கள் தங்களது நாடுகளை விட்டு அச்சம்காரணமாக வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்களில் மூன்றில் ஒருவர் – 11 பேர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கையின் மோசமடைந்துவரும் ஊடக நிலைமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.
அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டுள்ளதாகக் கூறிக்கொண்டிருக்கையில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக ஊடகவியலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
1992 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் 18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இலங்கை ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான முதல் இருபது நாடுகளில் 11வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் ஊடகங்களின் நிலை மிகவும் துயர்மிக்கது. சர்வதேச சமூகத்தை எட்டாத யாழ் தமிழ் ஊடகங்கள் பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புபவர்கள் அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். – Fact-finding report by the International Press Freedom Mission to Sri Lanka : Jaffna’s media in the grip of terror – August 2007. தற்போதைய தீ வைப்புச் சம்பவம் ஊடக சுதந்திரம் இலங்கை ஊடகங்களுக்கு வெகு தொலைவில் உள்ளதையே வெளிக்காட்டுகிறது.
செல்வன்
ஊடகவியலாளர் கிருஷ்ணி இப்ஹாம் வெள்ளை வானில் வந்தவர்களால் நேற்று காலை கடத்தப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
தன்னைக் கடத்தியவர்கள் விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் கண்டியில் வைத்து விடுவித்து சென்றுள்ளனர் என கிருஷ்ணி இப்ஹாம் தெரிவித்துள்ளார்.தனக்கு இதற்கு முன்னரும் அச்சுறுத்தல் இருந்த நிலையில், இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பார்த்திபன்
வன்முறையை யார் கையிலெடுத்தாலும் அது தவறுதான். ஏற்கனவே வன்முறையைக் கையாண்டவர்களுக்கு என்ன இறுதியில் நடந்தது என்பதை ஞாபகத்தில் வைத்திருப்பது எதிர்காலத்திற்கு நல்லது…..
chandran.raja
ஆயுதங்களைப் பாவிப்பது பயன்படுத்துவது எல்லாம் வன்முறையாகாது. மகபேற்றிக்காக சத்திரசிகிச்சைக்காக கடுமையான ஆயுதங்கள் கோடாலி அரிவாள் கூடப்பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன. யுத்தம் நடந்துமுடிந்து ஐந்து வாரங்கள் தான் ஆகிறது புலிகளுக்கு சிம்மாசனம் போட்டு கொடுத்தவர்கள் “புலி தாலாட்டு பாட தொட்டில் போட்டு கொடுத்தவர்கள்” ஆதாயம் பெற்றவர்கள் இன்னும் ஜனநாயகத்தன்மையை பயன்படுத்தி மறைமுகமாகவே வாழ்கிறார்கள் இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மட்டுமல்லாமல் ஊடகவியலாளர் பத்திரிகைகளும் அடக்கம்.
இந்தப் பத்திரிக்கைகள் லட்சக்கணக்கான மக்களை பயணக்கைதியாக புலிகள் பிடித்து வைத்திருந்தபோது எப்படியான குரலை கொடுத்தார்கள். சிறுவர் சிறுமிகளை பிடித்துக் கொண்டுபோன போது எப்படியான குரலைகொடுத்தார்கள். எதிர்மறையாக இருந்து வாழ்த்துப்பா அல்லவா? பாடினார்கள்: இவர்களை “பத்திரிக்கை” என்று கூறடியுமா? புலம்பெயர்தேசத்தில் இருந்து கருத்துச்சொல்வது சுலபமானது. இது எனக்கும் பொருந்தும்.
shantha
அட பாவிகளா! கருத்து கொட்டும் குளவிகளே புலிகளின் அத்தியாயம் முடிந்து ஒருமாசத்திற்கு மேல் ஆனால் இன்னமும் புலியெதிர் குப்பை கொட்டுகிறார்களே ஒளிய இங்குவந்து ஒரு தரமான குரல் எழுப்ப மனம் வரவில்லை! பத்திரிகை சுதந்திரத்தை புலிகள் செய்திருந்தால் இங்கு குறைந்தது ஒரு 25 கருத்தாவது வந்திருக்கும்! இந்த செய்திக்கு பின் டக்கிளஸ் பற்றிய செய்திக்கு வாழ்த்து கூற 6 கருத்து அனால் பத்திரிகை சுதந்திர மறுப்பக்கு 2 கருத்து. புலிகளையும் இப்படிதான் மக்கள் வளர்த்தார்கள் இனி நீங்கள் டக்கிளசையும் தலைவனாக்கி பழதாக்குங்கோ!
shantha
Chandran
வாழ்க உங்கள் ஜனநாகயம்!!
ஆயுதத்திற்கும் பத்திரிகைக்கும் நிறைய வேறுபாடு. கருத்தை கருத்தால் தான் எதிர்க வேண்டும் என்ற கோட்பாட்டை மீறி பத்திரிகைகளை எரிப்பது என்பது புலி பாசிசத்தைவிட மிகவும் மனநோயான விடயம். இதற்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் புலிகளை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது காரணம் இவர்களும் புலிகளுக்கு இணையானவர்கள்! முதலில் ஜனநாயக பண்புக்குள் முழுமையாக வாருங்கள்! கருத்தை கருத்தால் எதிருங்கள்! வன்முறையின் முடிவு தான் பிரபாகரனின் முடிவு. அதை முடிவுதான் அதை ஆதரிப்பவர்களுக்கும்!
vanthijathevan
கடும் மழை இப்போதுதானே விட்டிருக்கிறது. தூவானம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அது திரும்ப கடும் மழையாகாமல் காப்பாற்றிக் கொள்ள வேலை செய்யத் தான் வேண்டும். இதை யார் செய்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
rohan
//இன்று அதிகாலை யாழ் குடாநாட்டின் பத்திரிகைகளை விற்பனைக்கு கொண்டு சென்ற சமயம் அப்பத்திரிகைகளை வழிமறித்து அவற்றை எரித்து நாசமாக்கியதுடன் அவற்றைக் கொண்டு சென்ற நபர்களைத் தாக்கிய விஷமத்தனமாக நடவடிக்கையை மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களி மேற்படி செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். //
அட்றா அட்றா….
எங்கள் தலைவர் சொல்லிவிட்டார். இதை உலகின் எல்லா மூலைகளுக்கும் கொண்டு செல்ல ஜால்ராக்களும் தயார்.
அது சரி. பொலிசுக்கு உத்தரவு தர சமூகநல சமூக சேவைகள் அமைச்சருக்கு என்ன அதிகாரம் உள்ளது?
பார்த்திபன்
//அது சரி. பொலிசுக்கு உத்தரவு தர சமூகநல சமூக சேவைகள் அமைச்சருக்கு என்ன அதிகாரம் உள்ளது – றோகன் //
ஏன் சமூக நலத்துறைக்கு மக்கள் பாதுகாப்பு பற்றிய கவலை இருக்கக் கூடாதோ?? அல்லது சமூகநலத்துறை அமைச்சர் இதுபற்றிய விசாரணையை நடாத்தக் கோர முடியாதென்று தங்களுக்கு யாருங்க சொன்னது?? டக்ளஸ் தேவானந்தா சமூகநலத்துறை அமைச்சர் மட்டுமல்ல அவர் யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் என்பதையும் வேண்டாம்
நண்பன்
//அட்றா அட்றா….
எங்கள் தலைவர் சொல்லிவிட்டார். இதை உலகின் எல்லா மூலைகளுக்கும் கொண்டு செல்ல ஜால்ராக்களும் தயார்.
அது சரி. பொலிசுக்கு உத்தரவு தர சமூகநல சமூக சேவைகள் அமைச்சருக்கு என்ன அதிகாரம் உள்ளது? – rohan //
சமூகநல சமூக சேவைகள் அமைச்சருக்கு உள்ள அதிகாரம். ஒரு அமைச்சருக்கு உள்ள அதிகாரம். மகிந்த சொன்னால் அங்குள்ள தமிழருக்கு விளங்காது. அதுதான் டக்ளஸ் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
மகிந்தவின் கருத்தை போகொல்லாகம சொல்கிறார். பசில் சொல்கிறார். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதுபோல இதுவும். புலிகளின் கருத்தை பிரபாகரன் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்ற புலிகளின் தொற்று வியாதிதான் உங்களை இப்படி எழுத வைக்கிறது. இனி பிரபாகரன் உயிர்த்தெழும் வரை யார் சொன்னாலும் உங்களுக்கு ஏறாது.
பத்திரிகையை எரிச்சதுக்கே இந்தக் கத்து கத்துறீங்களே? புலிகள் 500 பேருக்கும் மேல் பச்சையாக முல்லைத்தீவில் எரித்ததாக அந்த மக்கள் சொல்கிறார்களே, அதற்கு உங்கள் கருத்தை சொல்வீர்களா?
msri
அவர்தான் இப்போ “யாழ்பாண ஐனாதிபதி” என கூட்டாளி ஆனந்தசங்கரியார் சொல்லியுள்ளார்! அப்ப ஏன் பொலிசுக்கு உத்தரவு போட முடியாது!
EPRLF
ஈபிஆர்எல்எப் பத்திரிகை அறிக்கை
யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளான தினக்குரல் உதயன் வலம்புரி ஆகிய பத்திரிகைகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் வன்முறைக் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் நம்பிக்கைகளை சிதறடிக்கச் செய்யும்.
கருத்துகளில் எப்போதும் ஐனநாயகம் நிலவ வேண்டும். பன்முகத்தன்மை ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும். பொதுவாக உருவாகிவரும் ஐனநாயக சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
வேறுபட்ட சமூக சாதகமான அபிப்பிராயங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். நூறு கருத்துகள் மலர்வதும் முட்டி மோதுவதுமே சமூகத்தில் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். கருத்து சுதந்திரத்திற்கு அடிநாதமாக இருப்பது பத்திரிகைச் சுதந்திரம் அது பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையேல் மக்கள் மெளனமாகி விடுவார்கள. மக்கள் மனங்களிலிருந்து பீதி நிலையை நீக்க வேண்டும் அதற்கான சூழ்நிலை உருவாக்கப் படவேண்டும்.
கருத்துக்களிலும் வன்முறை களையப்பட வேண்டும்.
எமது சமூகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய கருத்து வன்முறையே பல அழிவுகளுக்கு இட்டுச் சென்றதென்பதை மனதிலிருத்தி ஆகவேண்டும்.
கண்ணியமானதொரு கருத்து சுதந்திர பண்பாடு எமது சமூகத்தில் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
அதற்கான சூழ்நிலை உருவாகிவரும் வேளையில் நம்பிக்கைளை தளர்வடைச் செய்யும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்.இயல்பு நிலையை தோற்றுவிக்கவும் ஜனநாயக சூழலை உருவாக்கவும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது அவசியம். உள்நோக்கமில்லாது உண்மையாக செயற்படும் அனைவருடனும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கரம்கோர்த்துக் கொள்ளும்.
மகுடி
உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைளை எதிர்வரும் 30ம் திகதியிலிருந்து விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அதன் ஊழியர்கள் பதவி விலக வேண்டும் என்றும் இல்லாவிடில் மரண தண்டனை கிடைக்கும் என்றும் தமிழர் இன மீட்பு இயக்கம் எனும் பெயரில் மடல் ஒன்றை வரைந்து பத்திரகையின் ஆசிரியருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இது நம்ம கேபீயோட வலது கை கேணல் ராம் வேலையாக இருக்குமோ?
msri
உந்த மீட்பு இயக்கத்தின் அறிக்கையோடு> ஊரடங்குச் சட்டம் பழைய நிலைக்கு வரப்போகின்றது! தேர்தல் கொணடாட்டக்காரர் பாடும் திண்டாட்டம்தான்!
chandran.raja
கருத்தை கருத்தால் வெல்லவேண்டும் என்பதில் எமக்கு எந்த வேறுபாடும் கிடையாது. தத்துவம் சித்தாந்தம் புத்தங்களை படிப்பது சுலபம் மனிதன் அதைபடித்து தெளிவு பெறுவதற்கு மனிதனுக்கு வாழ்நாளே போதுமானது இல்லை. கருத்தெல்லாம் கருத்தாகலாமா? பத்திரிக்கைகள் எல்லாம் பத்திரிக்கைகள் ஆகுமா?? இலங்கைளில்லுள்ள சமூகங்களின் கருத்தெல்லாம் ஒருசமூகத்தின் கருத்து எனக் கொள்ளலாமா?
யாழ்பாணதமிழ் சமூகத்திற்கும் யாழ்தமிழ்சமூகத்திற்கும் கிழக்கில்லுள்ள இதே போன்ற இருசமூகங்களுக்கும் வேறுபட்டகருத்துக்கள் இருக்கின்றன? ஏன்சாதியால் ஒடுக்கப்பட்டதமிழ் சமூகத்திற்கும் எவரும் மறுக்கமுடியாத கருத்துக்கள் இருக்கின்றன. மலையக சமூகத்திற்கும் சிங்கள சமூகத்திற்கும் இதே போலத்தான் இவ்வளவு கருத்துக்களையும் ஒருகருத்தாக்கும் போது தான் அது ஒருகருத்தாகிறது. எரிவூட்டப்பட்ட பத்திரிகைகள் இந்த “தாய்கருத்தை” பிரதிபலித்தார்களே யானால் அது ஜனநாயகமறுப்பே! வன்முறையே!!