ஒற்றுமை ஏன் எதற்காக? : அழகி

Pongu Thamil Kudaiஎமது தமிழ் தொலைக்காட்சிகளைத் திறந்தாலே அங்கே பேசப்படுவது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, அதனால்தான் எமது போராட்டம் இவ்வளவு அழிவுகளையும் சந்தித்து தோற்றுக் கொண்டு இருக்கிறது என்பதேயாகும். பல நேரடி நிகழ்சிகளிலும் கூட பல தமிழர்கள் தொலைபேசியூடாக வந்து ஒற்றுமையில்லை – தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் – ஒட்டுக்குழுக்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் – எமது ஊர்வலங்களிலும் பார்த்த முகங்களையே காணக்கூடியதாக இருந்தது – எமது தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவார் என இப்படியே மாரடிக்கும், அரசியல் அறிவைப் பெறாமல் இவ்வளவு காலமும் இந்த தொலைக்காட்சிகள் ஊடாக பிதற்றி வந்திருக்கிறார்கள்.

1986 ம் ஆண்டே ரெலோ போராளிகளை ரயர் போட்டு கொளுத்தி எந்த தார்மீகங்களுக்கும் மதிப்பழிக்காது கொன்று குவித்த அன்றே தமிழர் போராட்டம் பகிரங்கமாக இந்த உலகிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதை ஒற்றுமை இல்லை எனப் புலம்பும் இந்த பிரகிருதிகளுக்கு ஒரு போதும் உறைக்கவில்லை.

இதைவிட மேலும் நகைப்பிற்குரிய விடயம் இவர்கள் எல்லாம் உலக அரசியல் பேசுவதுதான். அமெரிக்க அரசியல், இங்கிலாந்து அரசியல் இந்திய அரசியல், உலக ராணுவ அரசியல் எல்லாவற்றையும் தண்ணீர்பட்ட பாடாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பேசிய தமிழ் ஈழ அரசியல் புலி அரசியல் தலைவர் அரசியல் – எங்கட தலைவர் அரசியல் எல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டு புதை குழி தோண்டிப் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக கரைத்து இவர்களுடைய சாம்பலையும் கடலிலே வீசி விட்டார்கள். இவர்களுக்கு நடந்தது முன்னமே பல தடவைகள் வரலாற்றில் நிகழ்ந்தவைதான். ஆனால் எல்லா அரசியலும் பேசிய இவர்களுக்கும் அதே வரலாறு ஏன் நிகழ்ந்தது?

ஏன் இவர்களுடைய அரசியல் இப்படி பரிதாபமாகரமான நிலைக்கு சென்றது? எதற்காக? எமது அப்பாவி தமிழினத்தின் உயிர்களோடும் உடமைகளோடும் பெண்களோடும் குழந்தைகளோடும் விளையாடினார்கள்? இவர்கள் விடை சொல்லியே ஆக வேண்டும். எமது மக்களை இந்த இழிநிலைக்கு கூண்டோடு கொண்டு சென்றது ஏன்? தமிழினம் தமது வரலாற்றில் ஒரு நேர உணவுக்கும், குடி நீருக்கும், உடுபுடவைக்கும் ஏங்கும் நிலைக்கு ஏன் கொண்டு வந்து விட்டார்கள்?

தியாகம் என்பது என்ன? மற்றவர்கள் துன்பப்படும் போது அந்த துன்பத்தை போக்கி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்களுடைய முகங்களிலே மகிழ்ச்சியை உருவாக்கி தானும் மகிழ்ச்சியடைபவனே தியாகி. ஆனால் எமது போராட்டத்திற்குள் வந்தவர்கள் (ஒரு சிலரை தவிர) இப்படி நடந்தார்களா? ஈழ மக்களின் குருதியை குடித்தார்கள். அவர்களின் உழைப்பையெல்லாம் தட்டிப் பறித்தார்கள். ரௌடித்தனத்தாலும், கொலைகளாலும், பாலியல் வன்புணர்வுகளாலும் வாழ்க்கையின் சுக போகங்களை அடைவதற்கெனவே இயக்கங்களுக்கு சேர்ந்தவர்கள் பலர். இவர்களால் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தி விட முடியுமா?

புலம்பெயர் தமிழர்களை நோக்கினாலோ அவர்கள் பல வகையினர். 1986 ம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். போராட்டத்தை மாற்று இயக்கங்கள் மீது புலிகள் படுகொலைகளைப் புரிந்து காட்டிக் கொடுத்தபோது இதில் இருந்து தப்பி வந்தவர்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1) உண்மையான போராளிகள்.
2) இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்து வெளிநாடு வந்தவர்கள்.
3) இவர்கள் எப்போதும் சுயநலம் மிக்கவர்கள்.

இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும் சுயநலம் மிக்கவர்களும் இங்கு ஒன்று சேர்ந்தார்கள். எந்த அரசியல் நோக்கும் இல்லாமல் தங்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டும் கொலைகள் செய்தும் கப்பம் வாங்கியும் எமது போராட்டததை வலுவிழக்கச் செய்து விட்டார்கள். மக்கள் எல்லோரையும் புலிகள் ஈழத்திலே கொன்றொழிக்க உறுதுணையாக இணையம் மூலமும், வானொலி, தொலைக்காட்சி, ஊர்வலங்கள், பொதுக் கூட்டஙகள், கொண்டாட்டங்கள், கோயில்கள், தமிழ் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், நிதி சேகரிப்பு, வியாபார நிறுவனங்கள் என சமூகத்தின மூலை முடுக்கெல்லாம் நுழைந்து செயற்பட்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் புலம்பெயர் மக்கள் சிந்திக்க தவறி விட்டார்கள்.

ஆனால் இன்று ஒற்றுமை இல்லை, தோற்று விட்டோம் என நேரலைகளில் வந்து கூப்பாடு போடுகிறார்கள்!

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் விடப்பட்ட தவறுகள் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தவறு விட்டவர்கள் தமது தவறுகளை மனந்துணிந்து அதே தொலைக்காட்சிகள் ஊடாக மன்னிப்பு கோர வேண்டும். புலம்பெயர் தமிழர்களை மிகவும் தவறாக வழிநடத்திய தீபம், தினேஸ், அனாஸ், டாக்டர் மூர்த்தி, இராஜமனோகரன், குமார் போன்ற முன்னணியில் நின்றவர்களும் இவர்களுக்கு பின்னணியில் நின்றவர்களும் அரசியலைக் கரைத்துக் குடித்த இவர்களைப் போன்றவர்கள் முரண்டு பிடிக்காமல் அரசியலில் இருந்து பேசாமல் ஒதுங்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணம் முழுவதும் அந்தந்த நாட்டு முகவர்கள் ஊடாக திருப்பி வழங்கப்பட வேண்டும். இவர்கள் விட்ட தவறுகளுக்கு மனம் வருந்த வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வீதி வீதியாக கத்திக் குழறி, உண்ணாவிரதம் இருந்து மிரட்டி, பாதைகளை மறித்து ஆட்டம் போட்டும் முள்ளிவாய்க்காலில் தலைவரோடு, ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்து பலியிட்டதற்கு, ஏன் அப்படி நடந்தது என்பதற்கு, இன்னமும் தொலைக்காட்சிகளில் ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி ஆய்வுகளும் காரணங்களும் தேடிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.

இதை விடுத்து ஒற்றுமை இல்லை, ஒற்றுமை இல்லை என திரும்ப திரும்ப சொல்லக் கூடாது. தமிழ் மக்களின் ஐக்கியத்தை தாங்களே ஒட்டுக்குழு துரோகிகள் என பிரித்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை என்றால் என்ன? தம் தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேட்டு மனிதர்களாக செயற்பட வேண்டும். நல்ல காரியங்கள் நல்ல மனிதர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான மக்களால் அவர்களின் விருப்புக்களோடு 100 வீதம் செயற்பட வேண்டும். எமது சமூகம் நற்சிந்தனைகளால் வளர்க்கப்பட வேண்டும். ஒருவன் இன்னொருவனை ஏமாற்றினால் ஒவ்வொருவனும் தலைகுனிய வேண்டும். ஏமாற்றுபவனைத் திருத்த முற்பட வேண்டும். ஏமாற்ற நினைப்பவனுக்கு ஊக்கம் கொடுத்து தங்கள் நலன்களை வளர்த்துக் கொண்டதால் ஒரு இனமே இன்று கண்முன் அழிந்து கொண்டிருக்கிறது.

நாம் ஓரளவிற்கேனும் ஜனநாயகம் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறோம். இந்த நாடுகளில் இருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். பொது விடயங்களில் எப்படி நடக்க வேண்டும், பொதுப் பணத்தை எப்படி கையாள வேண்டும் (கையாட அல்ல) என்பவற்றைக் கற்றுக் கொண்டாலே எமது மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

விடுதலை என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்றொழித்த பிரபாகரனுக்கு பின்னால் அணிதிரளுங்கள் என்று சொன்னதும் – சொல்வதும் மிகவும் வேதனையான விடயமே. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கு தற்கொலைக் குண்டுகளைக் கட்டி விட்டு; தமது பிள்ளைகளை அரச பரம்பரை மாதிரி வளர்த்ததற்கு பெயர் போராட்டமா?

இறுதியாக ஒற்றுமை ஒற்றுமை என போலியாக கூக்குரல் இடுபவர்கள் தமது உள்ளங்கiளில் கை வைத்து சொல்லட்டும் – என்னத்திற்கு ஒற்றுமை வேண்டும்? இப்பொழுதாவது தமிழ் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். சுயமாக சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தை சுயநலமற்ற தமது வாழ்க்கைக்கு பொதுப் பணத்தை கையாடாத நல்லவர்களை முன்னிறித்தி சரியான சிந்தனைகளோடு எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்லலாம். இப்பொழுதும் நாம் சிந்திக்கவில்லையென்றால் இப்போதிருந்து எமது ஈழத்தில் எமக்கான நிலம் இல்லாமலே போய்விடும். தயை செய்து புலம் பெயர் தமிழர்கள் விழித்து செயற்படுங்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • itam
    itam

    செய்வாரா இவர்கள்

    முதலில் விடப்பட்ட தவறுகள் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தவறு விட்டவர்கள் தமது தவறுகளை மனந்துணிந்து அதே தொலைக்காட்சிகள் ஊடாக மன்னிப்பு கோர வேண்டும். புலம்பெயர் தமிழர்களை மிகவும் தவறாக வழிநடத்திய தீபம், தினேஸ், அனாஸ், டாக்டர் மூர்த்தி, இராஜமனோகரன், குமார் போன்ற முன்னணியில் நின்றவர்களும் இவர்களுக்கு பின்னணியில் நின்றவர்களும் ‘அரசியலைக் கரைத்துக் குடித்த இவர்களைப் போன்றவர்கள் முரண்டு பிடிக்காமல் அரசியலில் இருந்து பேசாமல் ஒதுங்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணம் முழுவதும் அந்தந்த நாட்டு முகவர்கள் ஊடாக திருப்பி வழங்கப்பட வேண்டும். இவர்கள் விட்ட தவறுகளுக்கு மனம் வருந்த வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வீதி வீதியாக கத்திக் குழறி, உண்ணாவிரதம் இருந்து மிரட்டி, பாதைகளை மறித்து ஆட்டம் போட்டும் முள்ளிவாய்க்காலில் தலைவரோடு, ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்து பலியிட்டதற்கு, ஏன் அப்படி நடந்தது என்பதற்கு, இன்னமும் தொலைக்காட்சிகளில் ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி ஆய்வுகளும் காரணங்களும் தேடிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    நன்றி அழகி

    விடுதலைப்புலிகள் போராட்டத்தை தமது புலம் பெயர்நாடுகளில் வியாபாரம் செய்யும் விடயமாக்கி விட்டிருந்தனளர் என்பதே மிகவும் முக்கியம். இதன் அடிப்படையிலேயே தான் இந்த நீங்கள் அத்தனை விடயங்களும் நடைபெற்றது உதாரணமாக ரேடியோ இவர்களில் பலரின் இரண்டாவது உழைப்பாகவே இருந்தது.

    அடீப்படையில் போராட்டம் ஒரு இராணுவ வெற்றியாகவே பார்க்கப்பட்டது நல்ல உதாரணம் புலிகளின் ஆதவாளர் ஒருவர் ரதன் ரகு இதனை ஒப்புக்கொண்டு பல பின்னூட்டங்கள் தேசம் நெற்றில் விட்டிருந்தனர்.

    போராட்டம் என்பது என்று தோற்கடிக்க முடியாதது என்பது பலருக்கு இன்று வரையில் தெரியாது.

    போராட்டமானது வாழ்விற்கானது. அது மற்றவர்களை அழிப்பதற்காக அல்ல என்பதையும் தோழர் துரை பின்னூட்டத்தில் எழுதியது போல மிருகங்களைக் கூட பழக்கி மனிதன் சாதாரண வாழ்க்கைக்கு உதவி பெற கற்றுக்கொண்ட மனிதன், எப்படி அந்த மிருகத்துக்கு மதிப்பளித்து வாழ்கிறான் என்பதை நாளாந்த வாழ்விலிருந்து கற்றுக் கொள்ளவில்லை. இப்படி இருக்க மற்று மொரு மொழி பேசும் சிங்கள மக்களுக்கு எமது உரிமையின் அவசியத்தை உணர்த்த முடியாது போயினர் அலலது மற்றவர் இவற்றை செய்யவும் விடாது போயினர். இது இன்று வரை போராடிய இனத்துக்கு விளங்கவில்லை.

    இன்று வரையில் அரசின் உதவியிலேயே எமது தமிழர்கள் வன்னியிலும் வாழ்ந்து வந்தனர். ஏன் இந்த நிலை தொடர்ந்தும் இருந்தது. புலிகள் சொன்னது போல் முழுதாக நாட்டை பிரிப்பது என்றால் சொந்த அபிவிருத்தி- இலங்கை அரசிடம் கை ஏந்தாத பொருளாதாரத்தை -கட்டியெழுப்பியிருக்க வேண்டும். வெளிநாடுகளில் சேர்க்கப்பட்ட பணங்கள் எப்படி செலவு செய்ப்பட்டது என்பதை புலிகளின் கடைசிக்காலத்தில் நேரடியாக பார்க்கக் கூடியதாக இருந்தது.

    எமது போராட்டத்தின் முக்கிய அம்சம் தொடர்ந்து ஆட்சிக்குவருபவர்கள் எமக்குரிய உரிமைகளை அல்லது அதிகாரத்தை பகிரவில்லை என்பதிற்கு பதிலாக சிங்கள மக்களை எமது எதிரியாக்கியது புலிகளே!

    எமது போராட்டத்திற்கு முக்கியமாக ஆதரவளித்து எமது அதிகாரப் பரவாலாக்கத்தை வெற்றி பெற சிங்கள மக்களே உதவியிருக்க முடியும். அதற்கான பல சந்தர்ப்பங்களை சிங்கள புத்திஜீவிகள் பல தடவைகள் தெரியப்படுத்தி இருந்தனர். அந்த நேரங்களில் எல்லாம் புலிகள் தற்கொலைக் குண்டுகளையே அனுப்பியிருந்தனர். எத்தனையோ உதாரணங்கள் சொல்ல முடியும்.

    ஏன் மிகசுருக்கமாக சொன்னால் எத்தனை ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் கோட்டை விட்டது புலிகள் தமிழர்களை கோட்டை விடப்பண்ணியது புலிகள்.

    முன்னாள் ஜளாதிபதி சந்திரிகா காலத்தில் தெரிவிக்கப்பட்ட உடன்படிக்கை (நீலன் திருச்செல்வத்தினால் தயாரிக்கப்பட்டது) அந்த ஒப்பந்தத்தை ஏன் புலிகள் அரசுடன் பேசிப் பார்த்தால் என கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பேராசிரியர் இழுத்து செல்ப்பட்டு அடித்து முறிக்கப்பட்டார் (தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ளார்).

    புலிகள், புலிகள் அமைப்பு, புலிகள் ஆதவாளர்கள், புலிகள் ஏஜென்டுக்கள், புலிகளின் ஆதரவு ஊடகங்கள் என்பன இதர தமிழ் அமைப்புக்களை அழித்தனர்- புலி தளபதிகள் இதர தமிழ் போராளிகளை ரயர்போட்டு கொழுத்தி தமிழ்மக்களை கொலைப்பயமுறுத்தலில் போராட்டத்தை நடாத்தி அழித்தனர். இதுவே தமிழ் ஒற்றுமை சீர்குலைப்பின் உச்சக்கட்டம் (சுந்தரத்தில் ஆரம்பித்து) எத்தனையோ அரசியல் சந்தர்ப்பங்களை தமது சுகபோகங்களுக்காக பேச்சுக்களை குழப்பினர்.

    புலிகள் தமிழ் போராட்டத்தை தமிழர்களுக்காக, மக்களுக்காக நடாத்தவில்லை. தமது சுகபோகங்களுக்காகவே நடாத்தினர். இன்று புலிகளின் அழிவிலும் வெளிநாட்டு புலிகளின் அமைப்பினர் என்ன செய்கிறார்கள். தமது கடந்தகாலம் சம்பந்தமாக, தவறுகள் சம்பந்தமாக என்ன வெளியிட்டனர். இன்று இவர்களது பிரச்சினைகள் எல்லாம் சேர்க்கப்பட்ட சொத்துக்களே மக்களின் உரிமைப் போரட்டமல்ல.

    புலிகள் போராட்டத்தை அதன் அர்த்தம் புரியாமலே மக்களின் நலனிலிருந்து சிந்திக்காமலே புலிகள் போராட்டத்தை காட்டிக் கொடுத்து விட்னர்.

    புலிக்கொடி புலிச்சினனம் புலிகள் அமைப்பு உள்ளவரை இத்தனை தவறுகள் துரோகங்களுக்குமான பொறுப்பிலிருந்து தப்பிவிட முடியாது.

    இவ்வளவுக்கு ஒற்றுமையை குலைத்த புலிகளின் போராட்டத்தினுள்ளும் கடந்த 30 வருட தமிழர் போராட்டத்தில் புலிப்போராளிகளின் அர்ப்பணிப்பு தமிழர் உரிமைப் போராட்டத்தின் அவசியத்தையும் வரலாற்றையும் எழுதியுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    Reply
  • Katchi_Pattu
    Katchi_Pattu

    தோழர்,
    தயவுசெய்து சொல்லுஙோ, எவர் கொன்ரது இரைகுமார், உமைகுமார்

    Reply
  • மாயா
    மாயா

    // எமது போராட்டத்தின் முக்கிய அம்சம் தொடர்ந்து ஆட்சிக்குவருபவர்கள் எமக்குரிய உரிமைகளை அல்லது அதிகாரத்தை பகிரவில்லை என்பதிற்கு பதிலாக சிங்கள மக்களை எமது எதிரியாக்கியது புலிகளே! – T Sothilingam //

    இதைத் தொடங்கியவர்கள் தமிழ் அரசியல்வாதிகள். அவர்களின் வாலாக வளர்ந்தவர்கள் புலிகள். பின்னர் வால் தலையாகி , தலை வாலாகியது. அதாவது புலி சொல்வதை தமிழ் அரசியல்வாதிகள் தலையாட்டி பொம்மைகள் போல் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். தாம் நடக்கச் சொன்ன கோணல் பாதையில் விருப்பமின்றி நடக்க வேண்டி வந்தது. உள்ளே புலிகளுக்கு எதிராகவும் , வெளியே புலிகளாகவும் பொய் முகத்தோடு அரிதாரம் பூசி பேசத் தொடங்கினர்.

    கடைசியில் மக்களும் மந்தைகளாக பயணித்ததின் பலன் , இன்றைய நரக வாழ்கை. தாகம் என்றவனுக்கு தண்ணி கொடுத்த போது , எனக்கு கூல் டிரிங்ஸ் வேண்டும் என்பது போன்ற முட்டாள்தனத்தால் புலிகள் தொண்டை வறண்டு செத்து போக வேண்டி வந்தது. அதுவும் நல்லதாக போச்சு. இல்லையென்றால் , உலக தமிழருக்கே தாம் சொன்னதுதான் சட்டம் என்று அனைத்துலக தமிழரையே அழித்திருப்பார்கள். அல்லது அழிவுக்கு வித்திட்டு இருப்பார்கள்.

    அறிவிலிகளான மக்களை விட அறிவாளிகள் எனும் உருத்திரகுமார் போன்றவர்களது நடத்தைகள் , இலங்கை வாழ் தமிழருக்கு அமைதி கிடைப்பதற்கு பதிலாக , அப்பாவிகள் கைதுகள் தொடர்வதற்கே வழி வகுத்துள்ளது. செய்திகளில் வராத கைதுகளும் , வதைகளும் இன்னும் தொடர்கின்றன. இவை நிறுத்தப்பட வேண்டுமானால் ” ஆயுதங்களை மெளனிக்க செய்து விட்டோம் ” என கேபீ சொன்னது போல “இலங்கை அரசு ஒரு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் ” என அறிக்கை விட்டு மெளனிப்பது வாழும் பலரது உயிர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும். இல்லாதவிடத்தில் புலத்தில் கூவும் இவர்களால் இலங்கையில் தமிழர் சாவுகளோ அல்லது கைதுகளோதான் தொடரும். அதை தடுக்க ஆண்டவனாலும் முடியாது.

    உங்கள் இருப்புக்காக நடந்த சாவுகளை இனியாவது நிறுத்த சற்று கரிசனை எடுங்கள்.சற்று சிந்திப்பீர்களா?

    Reply
  • பல்லி
    பல்லி

    தேசத்தில் வரும் அனைவரும் (பின்னோட்டம் இடும்) ஒரே சிந்தனையில்தான் இருக்கிறார்கள்; இடைக்கிடை முட்டி மோதினாலும்(அதுவும் நல்லதுதானே அப்போதுதானே பல உன்மைகள் தெரிகிறது) மக்கள்நலனே பலரது நோக்கமாக உள்ளது; மாயா சொன்னதுபோல் தலை வால்ஆகி வால்தலையாகி கெட்டது போதாது என மீண்டும் தலை தலை தலைஎன ஏலம்விடாமல் மக்களே தங்களை நிவகிக்கட்டும் அதுக்கு இடையூறு செய்யும் எவரையும் விருப்பு வெறுப்பின்றி விமர்சிப்போம்; புலி மட்டும் தூங்கி விட்டால் போதுமா? வேறு சில மிருகங்கள் கூட தமிழரைதானே இரையாக பார்க்குது; இதில் சிங்கம் முதலிடம் வகிப்பதால் அதன் இரைக்கு குட்டி மிருகங்கள் இரைதேடி (எமது அமைப்புகள்தான்) கொடுக்கின்றன; இதில் வெக்கபட வேண்டிய விடயம் பல ஆய்வுகள் செய்வதாக சொல்லும் சிலஊடகங்கள் கூட சிங்கதுக்கு இரை தேட(தமிழர் அழிப்பு) உதவுவதுதான்;

    இன்றய நிலையில் பலருக்கு பெருமையே மகிந்தாவுடன் படம் எடுப்பது அல்லது நாலு வார்த்தை கதைப்பது, தேசத்தை மூட தவமாய் தவம் இருந்தவர்கள் அரசுசெய்யும் நரிதனத்தையோ அல்லது அக்கிரமத்தையோ ஏன் அந்த சிறையில் வாடும் அந்த எம்இன மக்களுக்காக ஏதாவது ஒரு சில வரிகளாவது கண்டித்து தமது சொந்த தளத்தில் (அனைவரிடமும் அதுமட்டும் இருக்கு) கிறுக்க கூடாதா? இதில் சில விமானத்தில் சீட்டுவாங்கி தமிழகத்தில் போய் வாந்தி எடுக்கிறார்கள், ஆக அமைதியாகி கோவில் குளம் என திரிய வேண்டியவர்கள் புலி பிரமுகர்களுடன் பல மாற்று கருத்து மன்னர்களும் தான் எந்த வேலைதிட்டமும் இருக்காது ஆனால் பல அமைப்புக்கு அந்த குழு இந்த குழுவென பல உண்டு போற போக்கை பார்த்தால் ; ,

    பல்லியோடு பழகியவர்கள் அமைப்பு,;
    தேசத்தை பார்த்தவர்கள் முன்னேற்ற கலகம்,
    கண்டபடி பேசுவோர் இயக்கம்,
    அடிக்கடி கொழும்பு போவோர் அணி,
    யாருக்கும் தெரியாதோர் அமைப்பு,
    இப்படி தொடங்கினாலும் ஆச்சரியபட தேவையில்லை; ஆக மக்களுக்கு உதவவோ அல்லது அவர்களுக்காக பேசவோ எந்த அமைப்பும் வராது, அவை தங்கள் நலன் கருதியே செயல்பட்டு நாசமாய் போகும், ஆகவே மக்களே தங்களை தாங்கள் நிர்வகிக்கட்டும் அதுக்கு எம்மால் முடிந்ததை செய்யலாமே:

    Reply