வழக்குப்பதிவா? விடுதலையா? – அமைச்சு ஆராய்வு: அரசியல் இலாபம் வேண்டாம் – புத்திரசிகாமணி

210909jail.jpgசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 600 இற்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். கைதிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

எனவே, கைதிகளை உண்ணாவிரதமிருக்குமாறு தூண்டிவிடுவதோ, அரசியல் இலாபத்திற்காக அறிக்கைகளை விடுவதோ, கைதிகளின் நன்மையைப் பாதிக்குமென்றும் பிரதியமைச்சர் கூறினார்.

தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறும் தமிழ்க் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் அவசரகாலச் சட்டத்தின் கீழும், பல்வேறு காலகட்டங்களில் கைதுசெய்யப்பட்டவர்களே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி, கைதிகளின் விபரங்களைத் தனித்தனியே ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில் தமது நடவடிக்கைகளுக்குக் கைதிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார். அதேநேரம் இந்தப் பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். கைதிகள் சிறைகளில் இருப்பது தமக்குக் கவலையளிப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி, கைதிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *