முகாம் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் : வோல்டர் கெலின்

210909walter-kalin.jpg“மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயல்தான். என்றாலும் அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும் “என்று இடம்பெயர் மக்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார். இந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவது குறித்து தான் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்டர் கெலின் தனது விஜயம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கியநாடுகள் உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ இங்கு வந்த போது இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளின் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது பற்றியும் மீள குடியமர்த்துவதில் இடம்பெறும் தாமதங்களை நீக்குவது பற்றியும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து நான் அவதானம் செலுத்தினேன். இடம்பெயர்ந்தவர்களில் 70, 80 சதவீதத்தினரை இந்த வருட முடிவில் மீள குடியமர்த்துவது என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. மன்னாரில் அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றவதிலும் புனர்நிர்மாணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயலாக இருந்த போதிலும், அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும்.

விரைவில் இதனைச் செய்ய முடியாவிட்டால் இந்த மக்களை வரவேற்று அரவணைக்க விரும்பும் உறவினர், நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கும் திறந்த இடைத் தங்கல் முகாம்களில் வசிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். பருவப்பெயர்ச்சி மழைக் காலம் நெருங்குவதால் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

உடனடி அவசரத்தின் பேரில் அமைக்கப்பட்ட தற்போதைய முகாம்கள் பலத்த மழையைத் தாங்கும் சக்தியற்றவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பெருக்கினால் தாழ்ந்த பகுதிகளிலுள்ள முகாம்களில் வசிப்பவர்களின் சுகாதாரத்திற்கும் உயிருக்கும் பேராபத்து ஏற்படலாம்.

அரசாங்கத்தின் சார்பில் என்னுடன் பேசியவர்கள் மேற்கண்ட தேவைகளின் அவசியத்தை தம்முடன் பகிர்ந்து கொண்ட போதிலும் அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை செயல்படுத்த மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்

தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் நடமாடும் சுதந்திரத்தை வழங்குவது அவசியமாகும். இந்த விடயம் தொடர்பாக, அண்மையில் இடம் பெற்ற ஒரு சம்பவம் பற்றி கடந்த 26ஆம் திகதி இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.  ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மாறிச் செல்ல முயன்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இருவர் காயமடைந்தமை பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.

கட்டாயத் தடுப்புக் காவலில் பெருந்தொகையான மக்களை நீண்ட நாட்களுக்கு தடுத்து வைக்கும் போது, முகாம்களின் இடவசதிகள் பற்றி கவனம் செலுத்தாதிருப்பது அவர்களது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் கட்டாயத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவது பற்றிய தீர்மானம் கூட்டாக அன்றி தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் வசதியையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டும். அத்துடன், எடுக்கப்பட்ட தீர்மானங்களை பாதுகாப்பு, தராதரம் ஆகியவற்றை மனதிற் கொண்டு சுயாதீன குழு ஒன்று அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டும்.

20 வருடங்களுக்கு முன்னரே இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அகதிகளாக இருப்போரையும் புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *