பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

091009.jpgநாகப் பாம்பு தன்னைத் தீண்டிவிட்டதை அறியாத பதினைந்து வயது பாடசாலை மாணவி, அப்பாம்பினை கொல்ல முயன்ற தகப்பனை தடுத்து பாம்பைக் காப்பாற்றினார். எனினும் சிறிது நேரத்தினுள் அப்பாம்பின் விஷம் உடலில் ஏறியதால் அம்மாணவி பரிதாபகரமாக மரணமானார். இச் சம்பவம் ஆனமடுவ தேர்தல் தொகுதியில் உள்ள ஊரியால என்னும் விவசாயக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் குறித்து மேலும் கூறப்படுவதாவது :- ஊரியாவ கிராமத்தில் உள்ள விவசாயியான இலங்கக்கோன் தனது குடும்பத்தாருடன் இங்கு வசித்து வருகின்றார். சம்பவம் இடம்பெற்ற தினமான செவ்வாயன்று (06.10.2009) வழக்கம் போன்று இரவு பணிகளை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்று விட்டனர்.

இரவு சுமார் 11.30 மணியளவில் தன் மீது ஏதோ ஊர்ந்து செல்வதை அவதானித்த இலங்கக்கோன் படுக்கையை விட்டு எழுந்து பார்த்தபோது நாகப்பாம்பொன்று ஒரு மூலையில் நிற்பதை அவதானித்தார். அவ்வமயம் வீட்டிலுள்ள அனைவரும் எழுந்துவிட்டனர்.

இலங்கக்கோன் பாம்பை அடித்துக்கொல்ல முயன்ற போது அவரது மகளான சிங்கள மகா வித்தியாலயத்தில் பயிலும் 15 வயது நிரம்பிய நிரோஷா சந்திரரத்தின என்பவர் குறுக்கிட்டு பாம்பை அடிக்க வேண்டாமென்றும் அது எமக்கு எதுவிதமான தீங்கும் செய்யவில்லையே என்று கூறவும் தகப்பன் மனம் இரங்கி பாம்பை கொல்லாமல் துரத்தி விட்டார்.

இதனையடுத்து சற்று நேரத்தினுள் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், தொண்டை அடைப்பதாகவும் மகள் நிரோஷா தெரிவித்தார். சில கைமருந்துகள் செய்தும் நிலைமை மோசமாகவே புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானார்.

பிரேத பரிசோதனையின் போது நிரோஷாவின் காலில் நாகப் பாம்பு தீண்டியதற்கான அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. மரண விசாரணை நடத்திய புத்தளம் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம். எச். எம். சபீயூ பாம்பு கடித்ததால் ஏற்பட்ட விபத்து மரணம் எனத் தீர்ப்பு வழங்கினார். வைத்திய அதிகாரி ஏ. ரவீந்திரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *