அன்புடன் நண்பர்களுக்கு,
வன்னி முகாம்களில் உள்ள மக்களின் நிலை நீங்கள் அறியாதது அல்ல. அங்குள்ள 280 000 மக்கள் தொகையில் 60 000 பேர் மாணவர்கள். இளமையில் கல்வி சிலையில் எழுத்தென்பது பெரியோர் வாக்கு. துரதிஸ்டவசமாக அம்மாணவர்கள் மோசமான சூழலில் தங்கள் கல்வியைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எம்மாலான உதவியை வழங்குவது புலம்பெயர்ந்து வாழும் எங்களின் பொறுப்பும் கடைமையும் கூட.
அந்த வகையில் 5ம்தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 4872 மாணவர்களுக்கும் 15 000 பவுண் செலவில் 4 வழிகாட்டிப் புத்தகங்களையும் 30 மாதிரி வினாத்தாள்களையும் வழங்கி அவர்களது பரீட்சைக்கு எம்மாலான உதவியை வழங்கி இருந்தோம்.
அத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததை அடுத்து வரும் டிசம்பரில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் எமது உதவியை வன்னி முகாம்களில் உள்ள மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பாக உள்ள அதிகாரி த மேகநாதன் கேட்டுள்ளார். அத்திட்டம் பற்றிய விபரங்கள் 2 – 4 பக்கங்களில் உள்ளது.
பரீட்சைகள் டிசம்பரில் நடைபெற இருப்பதால் மிகத் துரிதமாக இவற்றை செய்ய வேண்டிய நிலையுள்ளது. நாம் பலரிடம் தொடர்பு கொண்ட போதும் மிகச்சிலரே உதவ முன்வந்துள்ளதால் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனக் கருதவில்லை. அதனால் கிடைக்கும் நிதிக்கு ஏற்ப ஒவ்வவொரு பாடத்திற்கும் மாதிரி வினாத்தாள்களை 6200 மாணவர்களுக்கும் வழங்குவதென முடிவெடுத்துள்ளோம். இக்கல்வித் திட்டத்திற்கு உங்களது உதவியையும் எதிர்பார்க்கின்றோம்.
நிதிப்பங்களிப்புச் செய்பவர்களின் விபரங்கள் ஒவ்வொரு வினாத்தாளின் முடிவிலும் அச்சிடப்படுவதுடன் முழுமையான கணக்கறிக்கை பொதுத் தளத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கல்வித்திட்டத்தின் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியும் உள்ளது.
உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
த ஜெயபாலன் (தேசம்நெற்)
._._._._._.
தரம் 5 – புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு தேசம்நெற் – சிந்தனை வட்டம் மேற்கொண்ட கல்வி நிவாரணப் பணிகளுக்கு வன்னி முகாம் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரி த மேகநாதன் அனுப்பி வைத்த கடிதம்:
விசேட கல்வி அலுவலகம்
செட்டிகுளம் ம வி
செட்டிகுளம்
2009 – 08 – 24
எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வருகை தந்து நிவாரணக் கிராமங்களில் தங்கி கற்றுவரும் மாணவர்களுக்காக தங்களால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயற் திட்டம் காரணமாக நேற்றைய நாளில் நடைபெற்று முடிந்துள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களிற்கு பெரிதும் பயன் தந்துள்ளது. ஆசிரியர்க்கான கற்பித்தலை இலகுபடுத்தி உள்ளது. கையேடுகள் மாணவர்கள் சுயமாகக் கற்ற உதவின. தங்கள் பயிற்சி மாதிரி வினாப்பத்திரங்களில் காணப்பட்ட வினாக்களை ஒத்ததாகக் வினாக்கள் காணப்பட்டதாகவும் ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 30 வினாப் பத்திரங்களைச் செய்து பழகியதன் காரணமாக பரீட்சைப் பயமின்றி மாணவர்கள் விடைஎழுதி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கற்றலுக்கு எவ்வித உதவியும் இன்றி முகாமை வந்தடைந்த மாணவர்களுக்கு தங்கள் வினாப்பத்திரங்களும் கையேடுகளும் பரீட்சைக்குத் தயார்படுத்தலுக்கு உதவியுள்ளன. இச்செயற்திட்டம் மூலம் வன்னி மாணவர்களுக்கு நீங்கள் ஆற்றிய கல்விப் பணிக்காக எல்லோர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
த மேகநாதன்
._._._._._.
5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் கல்வி நிவாரணப் பணிகளுக்கு உதவியவர்கள்:
சிந்தனை வட்டம் : 925 680 ரூபாய்
மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் : 700 000 ரூபாய்
அகிலன் பவுண்டேசன் : 564 000 ரூபாய்
தேசம்நெற் : 200 000 ரூபாய்
லிற்றில் எய்ட் : 188 000 ரூபாய்
லண்டன் நண்பர்கள் :
பி சோமசுந்தரம் : 56 000 ரூபாய்
பொன் சிவகுமார் : 30 000 ரூபாய்
ஆர் சுகேந்திரன் : 28 000 ரூபாய்
எஸ் தீபன் : 28 000 ரூபாய்
ஆர் தர்மராஜ் : 18 000 ரூபாய்
எஸ் செல்வகுமார் : 18 000 ரூபாய்
எஸ் ரவீந்திரகுமார் : 9 000 ரூபாய்
பி விஜி : 9 000 ரூபாய்
ஒத்துழைப்பு வழங்கிய அனைவரிற்கும் மனமார்ந்த நன்றிகள்!!!
._._._._._.
தேசம் நெற் – சிந்தனை வட்டம் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள வன்னி முகாம் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் – 2009
செயற்றிட்ட அறிக்கை:
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தரம் 11 இல் கல்வி பயிலும் 6290 மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக வேண்டி தேசம் நெற் – சிந்தனை வட்டம் இணைந்து செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் – 2009 பற்றிய விரிவான அறிக்கை.
மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் வவுனியா நலன்புரி நிலையப் பாடசாலைகளின் இணைப்பாளரும் துணுக்காய் கல்வி வலையப் பணிப்பாளருமான திருவாளர் த. மேகநாதன் 2009.08.17 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் இதற்கான வேண்டுகோளை விடுத்து உதவி கோரி இருந்தார்.
நோக்கம்:
வன்னியில் நடைபெற்று முடிந்த யுத்தத்தினால் பாடசாலைக் கல்வியை இழந்து நிவாரண கிராமங்களில் குடியேறியுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு உட்பட வடபகுதி மாணவர்களின் கல்வி நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடல். நீண்ட காலங்களாக பாடசாலை முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்த இம் மாணவர்கள் கற்றவற்றை மறக்காமலிருப்பதற்கும் பாடசாலைக்குச் செல்லாத காலங்களில் கற்பிக்கப்பட்ட விடயங்களை சுருக்கமாக மீட்டுவதற்கும் இவர்கள் எதிர்நோக்கும் அரசாங்கப் பரீட்சைகளை நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய மாணவர்களைப் போல நம்பிக்கையுடனும் அச்சமின்றியும் எதிர்நோக்கக் கூடிய ஆயத்த நிலையை உருவாக்குதல்.
திட்டம்:
நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து 2009 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நேரடி பாடப்பரப்புக்கு உட்பட்ட வகையில் கல்வி நிவாரண உதவிகளை வழங்குவதினூடாக பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தல்.
இலக்கு:
கடந்த காலங்களில் அரசாங்கப் பரீட்சையை எதிர்நோக்கிய வடமாகாண மாணவர்கள் பெற்ற சித்தி வீதத்தை பாதுகாத்தல். குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் நலன்புரி நிலைய மாணவர்களுள் 35 சதவீதத்துக்கு மேலான மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புக்கான அனுமதியைப் பெறக்கூடிய வகையில் சித்தியடையச் செய்தல்.
மாணவர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி நிவாரண உதவிகள்:
1 மாதிரி வினாத்தாள்கள்
2. கையேடுகள்
1 மாதிரி வினாத்தாள்கள்:
புதிய பாடப்பரப்பை உள்ளக்கிய பல்தேர்வு வினாக்கள், கட்டுரை வினாக்கள் அமைப்பு வினாக்களைக் கொண்ட ஆறு மாதிரி வினாத்தாள்கள் ஐந்து பிரதான பாடங்களுக்கும் தனித்தனியே வழங்கப்படும். மொத்தமாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் 6 மாதிரி வினாத்தள்கள்படி 5 பாடங்களுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களாகும்.
இந்த மாதிரிவினாத்தாள்கள நலன்புரி நிலைய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களினதும் அம்முகாம்களுக்குச் சென்று கற்பிக்க உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடனும் பரீட்சைகளாக நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
இந்த மாதிரி வினாத்தாள்கள் அரசாங்க வினாப்பத்திரங்கள் மதிப்பீடு செய்யும். ஆசிரியர்களாலும், வினாப்பத்திர உருப்படிகளை தயாரிப்பதில் அனுபவம் மிக்க ஆசிரியர்களாலும் ஆசிரிய ஆலோசகர்களாலும் நலன்புரி நிலைய மாணவர்களின் கல்வி நிலையைக்கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும்.
2008 அரசாங்கப் பரீட்சை வினாத்தாள்கள்:
ஐந்து பிரதான பாடங்களுக்கும் தனித்தனியே வழங்கப்படும். மொத்தமாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்ட அரசாங்கப் பரீட்சை வினாத்தாளகள் 05 ஆகும்.
3 கையேடுகள்:
நலன் புரி நிலைய மாணவர்களின் கல்வி நிலையைக்கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கையேடுகள் ஒவ்வொரு பாடத்திற்கும் சுமார் 10 வரை கையேடுகள் வழங்கப்படும். இக்கையேடுகள் வழிகாட்டிக் குறிப்புக்களைக் கொண்டதாகவும் பயிற்சிகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான பாடங்கள்:
1.விஞ்ஞானம்
2.தமிழ்
3.கணிதம்
4.ஆங்கிலம்
5.வரலாறு
உதவி வழங்கப்பட வேண்டிய மாணவர் எண்ணிக்கை:
வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும், அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் தற்போது அகதிகளாக நலன் புரிநிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
2009.07.31ஆம் திகதி அறிக்கைப் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் சுமார் 60,000 மாணவர்கள் மொத்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைப்படி 2009 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் எண்ணிக்கை வருமாறு:
வலயம் 0 – 535 மாணவர்கள்
வலயம் 01 – 1261 மாணவர்கள்
வலயம் 02 – 1401 மாணவர்கள்
வலயம் 03 – 912 மாணவர்கள்
வலயம் 04 – 907 மாணவர்கள்
வலயம் 05 – 99 மாணவர்கள்
சுமதிபுரம் நிவாரண முகாம் – 156 மாணவர்கள்
வீரபுரம் நிவாரண முகாம் – 116 மாணவர்கள்
தர்மபுரம் நிவாரண முகாம் – 136 மாணவர்கள்
IDP பாடசாலைகள் – 583 மாணவர்கள்
புல்மோட்டை நலன்புரி நிலையம் – 184 மாணவர்கள்
மொத்தம் – 6290 மாணவர்கள்
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செலவீனம்:
ஒரு மாணவனுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 10 அல்லது 8 (5 பாடத்திற்கும் 42) வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் 6 (5 பாடத்திற்கும் 30) மாதிரி வினாப்பத்திரங்களையும் ஒரு (5 பாடத்திற்கும் 5) அரசாங்க வினாப்பத்திரத்தையும் வழங்குவதற்கு 900 ரூபாய் ஆகின்றது. (அண்ணளவாக 5 பவுண்கள்)
6200 மாணவர்களிற்கும் ஒவ்வொருவருக்கும் 42 கையேடுகளையும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாப்பத்திரங்களையும் வழங்குவதற்கு 5 661 000 ரூபாய் செலவாகின்றது. (அண்ணளவாக 30 000 பவுண்கள்)
மாணவனுக்கு 5 பாடத்திற்கும் 5 வினாத்தாள்களை வழங்க ஏற்படும் செலவு:
ஒரு பாடத்திற்கு ஒரு வினாத்தாள் வழங்க ஏற்படும் செலவு 15 ரூபாய்
5 பாடத்திற்கும் 5 வினாத்தாள்கள் வழங்க ஏற்படும் செலவு 75 ரூபாய்
6290 மாணவர்களுக்கு 5 பாடத்திற்கும் 5 வினாத்தாள்கள் வழங்க ஏற்படும் செலவு 471 750 ரூபாய்
(அண்ணளவாக 2500 பவுண்கள்)
ஒரு மாணவனுக்கான வழிகாட்டிக் குறிப்பேடுகளுக்கு ஏற்படும் செலவு:
விஞ்ஞானம் பாடத்திற்கான 10 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 100 ரூபாய்
கணித பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 80 ரூபாய்
வரலாறுப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 80 ரூபாய்
தமிழப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 80 ரூபாய்
ஆங்கிலப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 56 ரூபாய்
6290 மாணவர்களுக்கான வழிகாட்டிக் குறிப்பேடுகளுக்கு ஏற்படும் செலவு:
விஞ்ஞானம் பாடத்திற்கான 10 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 629 000 ரூபாய்
(அண்ணளவாக 3400 பவுண்கள்)
கணித பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 503 200 ரூபாய்
(அண்ணளவாக 2700 பவுண்கள்)
வரலாறுப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 303 200 ரூபாய்
(அண்ணளவாக 2700 பவுண்கள்)
தமிழப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 503 200 ரூபாய்
(அண்ணளவாக 2700 பவுண்கள்)
ஆங்கிலப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 352 200 ரூபாய்
(அண்ணளவாக 1900 பவுண்கள்)
தொடர்பு விபரங்கள்:
பிரித்தானியாவில்:
த ஜெயபாலன் : 0044 208 279 0354 அல்லது 0044 7800 596 786 அல்லது thesam97@hotmail.com
ரி சோதிலிங்கம் : 0044 7846 322 369 அல்லது sothi@btinternet.com
இலங்கையில்:
பி எம் புன்னியாமின் : 0094 812 493 892 அல்லது pmpuniyameen@yahoo.com
சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்வி! இளமையில் கல்வி சமூகத்தின் அஸ்திவாரம்!
thramu
போர்க்காலத்தில் இராணுவ தளபாடங்கள் பெற பலிகளுக்கு புலம் பெயர் மக்கள் அளித்த உதவிகள் பெரும் தொகை அவையாவம் அழிந்து போய்விட்டன – குழந்தைகள் பாடசாலைப் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் புலம்பெயர் மக்களுக்கு உண்டு இந்த உதவியில் பெறும் கல்வி எந்த யுத்தத்pனாலும் அழிக்க முடியாததது.
புலம் பெயர் மக்களின் உதவியினாலே இந்த பிள்ளைகள் முகாமில் வாழ வேண்டிய நிலை ஏற்ப்பட்டது என்பதம் கவனம் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த குழந்தைகள் அடுத்த வருடம் இந்த முகாமில் இருக்கமாட்டார்கள்
புன்னியாமீன்
அன்புள்ளம் கொண்ட தேசம்நெற் நண்பர்களே!
வன்னி நிவாரணக் கிராமங்களில் தங்கி கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டமாக 4872 மாணவர்களுக்கு 30 மாதிரிவினாத் தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் தேசம்நெற், சிந்தனைவட்டம் இணைந்து சில பரோபகாரிகளுடன் இணைந்து வழங்கியதை தாங்கள் அறிவீர்கள். சுமார் 28 இலட்சம் ரூபாய் பெறுமதிமிக்க அந்த நிவாரண வேலைத்திட்டம் எம்மைப் பொறுத்தமட்டில் மிகவும் வெற்றிகரமான முறையில் செய்து முடிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான முழுமையான கணக்கறிக்கையை இயலுமான வரை தேசம்நெற் நண்பர்களுக்கு பி.டி.எப். மூலம் அனுப்பி வைத்தோம். முகவரி கிடைக்காத சில நண்பர்களுக்கு எம்மால் அனுப்ப முடியாதிருந்திருக்கலாம். எனவே எமது தரம் 5 கல்வி நிவாரண செயற்றிட்டம் தொடர்பான முழுமையான அறிக்கையைப் பெற விரும்பும் நண்பர்கள் அவ்வறிக்கையைப் பெற விரும்பின் தயவுசெய்து பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுடன் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
த. ஜெயபாலன் thesam97@hotmail.com
ரி. சோதிலிங்கம் sothi@btinternet.com
புன்னியாமீன் pmpuniyameen@yahoo.com
புன்னியாமீன்
நிவாரணக் கிராமங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
வன்னி நிவாரணக் கிராமங்களிலிருந்து இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. நிவாரணக் கிராமங்களில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் தங்கியிருக்கின்றனர். அதேநேரம், மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு பொதுப்படையான வெட்டுப்புள்ளி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகதிமுhகம்களில் உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை ஒப்புநோக்கும்போது பொதுப்படையான மாவட்ட வெட்டுப்புள்ளி விதிக்கப்படுமாயின் மாணவர்கள் பாதிப்படைய இடமுண்டு. இதனைக் கருத்திற் கொண்டே நிவாரணக் கிராம மாணவர்களுக்கு வெட்டுப்புள்ளி வெளியிடப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இவ்வாரத்துக்குள் நிவாரண கிராம மாணவர்களின் பரீட்சை முடிவுகள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இம்முடிவுகள் வெளிவந்ததும் நிவாரண கிராமங்களிலுள்ள சித்தியடைந்த அனைத்து மாணவர்களினதும் விபரங்களை தேசம்நெற் இல் நாம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.