மக்களை துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கு ஏதுவாக மிதிவெடிகள், நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் மிதிவெடிகள் அகற்றும் மேலும் ஐந்து நவீனரக இயந்திரங்கள் இன்று இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படுகின்றன.
250 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி 5 இயந்திரங்களும் ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து தருவிக்கப்படுவதாக தேசநிர்மாண அமைச்சு அறிவிக்கிறது. இன்று காலை 7.30 க்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மேற்படி 5 இயந்திரங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும்.
மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேச நிர்மாண அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, தேசநிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி ஆகியோர் இன்று விமான நிலையத்தில் மேற்படி இயந்திரங்களை பொறுப்பேற் கவுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை உடனடியாக குடியமர்த்துவதற்கு ஏதுவாக மேற்படி மிதிவெடிகள் அகற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதேபோன்று ஏற்கனவே 10 இயந்திரங்களும் தருவிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா வடக்கு, மன்னார் பகுதிகளில் மிதிவெடி, கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன