படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

Oceanic_Viking_Refugeesஅவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் இறந்துள்ளதாகவும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 01) இரவு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இருந்து 350 கடல்மைல் தொலைவில் உள்ள கோகோஸ் தீவுக்கு அண்மையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த போது 39 பேர் படகில் இருந்துள்ளனர். அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கிக் கொண்டிருக்கையில் திரவ வாயுவை ஏற்றி வந்த ‘எல்என்ஜி பைனியர்’ரும் யப்பானிய மீன்பிடிப் படகில் வந்தவர்களும் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து 27 பேரைக் காப்பாற்றி உள்ளனர். ஏனையவர்கள் பற்றிய அச்சம் கவலையளிப்பதாக இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே 39 பேர் பயணித்த படகிற்கு பின்னால் 59 பேருடன் சென்ற மற்றுமொரு படகு கோகோஸ் தீவுகளுக்கு அண்மையில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவ்வாண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசியக் கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். 2000 பேர்வரை தஞ்சம் கோரி உள்ளனர்.

அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு தங்கள் கதவுகளை அடைக்கின்ற போக்கு ஆண்டுக்கு ஆண்டு கடுமையாக்கப்பட்டு வருகின்றது. தஞ்சம் கோருபவர்களுக்கான கதவுகள் அடைக்கப்பட்டு வருவதால் தஞ்சம் கோருபவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இந்தக் கதவடைப்பானது தமிழ் மக்களுக்கு மட்டுமான நடவடிக்கையாக இல்லாது போனாலும் இதனால் தமிழ் மக்கள் கணிசமான அளவில் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

2002ம் ஆண்டு கணிப்பின் படி உலகம் முழுவதும் 20 மில்லியன் மக்கள் கரிசனைக்குரிய மக்களாக கணிக்கப்படுகின்றனர். இவர்களில் 12 மில்லியன் பேர் அகதிகள். ஒரு மில்லியன் வரையானவர்கள் தஞ்சம் கோருபவர்கள் என்ற கணிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை உலகின் வறிய நாடுகளே பொறுப்பேற்றுள்ளன. உதாரணத்திற்கு 2002ல் 7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கினி 3 மில்லின் சியரலியோன் அகதிகளுக்கும் 150 000 லைபீரியன் அகதிகளுக்கும் இடமளித்தது. பாகிஸ்தானிலும் தன்சானியாவிலும் மாதாந்தம் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை ஐரோப்பாவின் முழு ஆண்டுக்கும் வரும் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஒப்பிடக் கூடியது.

பிரித்தானியா உலகின் 2 வீதமான அகதிகளுக்கே அடைக்கலம் வழங்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 300 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலேயே அகதிகள் உள்வாங்கபட்டனர். 1000 மக்கள் தொகைக்கு பிரித்தானியா இருவரினதும், நோர்வே, சுவீடன் நால்வரினதும் சுவிஸ்லாந்து, அயர்லாந்து மூவரினதும் தஞ்ச விண்ணப்பங்களை ஏற்கின்றன. இத்தரவுகள் 2001 ம் ஆண்டுக்கு உரியவை. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 50 வீதம் வரை குறைந்துள்ளது. தரவுகள் இவ்வாறு அமைய இந்நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் மத்தியில் உலகின் 25 வீதமான அகதிகள் தங்கள் நாடுகளுக்கே வருவதாகக் கருதுகின்றனர். வலதுசாரி ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இவ்வாறான தவறான கருத்துக்களை பரப்பி அகதிகள் பற்றிய தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்த வழிகோலினர்.

இந்தப் பின்னணியிலேயே தற்போது அவுஸ்திரேலியாவில் விபத்துக்கு உள்ளான கப்பல் அகதிகளின் நிலையையும் இந்தோனேசியாவின் கடலில் தத்தளிக்கும் 260 அகதிகளையும் மற்றுமொரு முனையில் இந்தோனேசியாவில் தத்தளிக்கும் 76 அகதிகளையும் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 அகதிகளின் நிலையையும் பார்க்க வேண்டும்.

2ம் உலகமகா யுத்தத்திற்குப் பின் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பனிப்போர் அரசியல் காரணங்களுக்காகவும் பின்னைய சூழலில், தங்கள் சனத்தொகை வீழச்சி அடைவதையும் தங்கள் வயதடையும் சனத்தொகையை சமப்படுத்தவும் தங்கள் எல்லைகளைத் திறந்துவிட்ட மேற்கு நாடுகள் பனிப்போர் முடிவுக்குப் பின் தங்கள் ஐரோப்பிய எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டன. தொண்ணூறுக்களின் பின் ஆண்டுக்கு ஆண்டு தங்கள் எல்லைகளை இறுக்கி வந்துள்ள மேற்கு நாடுகள் மெலனியத்தற்குப் பின் தங்கள் எல்லைகளை இறுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கின. தங்கள் எல்லைகளை இறுக்குவதற்காக தங்களுடன் இணைந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின.

இக்கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி உயிரைப் பணயம் வைத்து மாண்டவர்கள் பலநூறு. அவ்வாறு மாண்ட தமிழர்களும் பலநூறு. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பனிக் காடுகளுக்குள் பனிக்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட தமிழ் உயிர்கள் பல. மேற்கு ஐரோப்பா நோக்கி வந்த ஐவர் பராகுவேயில் கைவிடப்பட்டு பனிக்குளிரில் சில தினங்கள் விடப்பட்டதால் அவர்களுடைய கால்கள் அழுகி அவை நீக்கப்பட வேண்டி ஏற்பட்டது. கொன்கிறீட் கலக்கும் வாகனத்தில் ஒழிந்து வந்தவர்கள் சிலர் எல்லைக் காவலாளி இயத்திரத்தை இயக்கிய போது மரணமடைந்தனர். பிரித்தானியாவின் வாயிலில் 58 சீனர்கள் மூச்சுத் தினறி இறந்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பிரயாணத்தை மேற்கொண்ட பல தமிழர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிரிழந்துள்ளனர்.

தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இத்தாலிக் கடலில் இடம்பெற்ற விபத்து தமிழ் அகதிகளின் புலம்பெயர்வில் ஏற்பட்ட பெரும் விபத்து. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். அவர்களில் இலங்கையர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இத்தாலிக் கடலில் நின்ற கப்பலில் இருந்து படகுக்கு இறங்கும் பொழுது ஏற்பட்ட இவ்விபத்தில் படகு கவிழ்ந்து இவ்விபத்து நிகழ்ந்தது. கனடா கடல் பகுதியில் படகில் இறக்கப்பட்டவர்கள் நடுக்கடலில் சிக்கித் தவித்ததும் அதில் உயிரழந்தவருடன் படகு அகதிகள் காப்பாற்றப்பட்டதும் ‘வெல்கம் ரு கனடா’ என்று ஆவணமானது. எரித்திரியாவின் கடலில் வீழ்ந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஏழு பேர் இலங்கைத் தமிழ் அகதிகள். தற்போது அவுஸ்திரேலியாவில் ஒரு அவலம் நடந்துகொண்டுள்ளது. இவ்வாறு ஒரு சில சம்பவங்களை மட்டுமே நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு செய்தியாகாத பல சம்பவங்கள் உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் நீண்ட யுத்தம் காரணமாக இலங்கையின் தமிழ் மக்களின் சனத்தொகையில் மூன்றிலொருவர் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மேற்கு நாடுகளை நோக்கிப் புறப்பட்டு தங்கள் இலக்குகளை அடையாமல் இன்னமும் உலகின் பல்வேறு பாகங்களில் சிக்குண்டு இருண்ட எதிர்காலத்துடன் உள்ளனர். தங்கள் இலக்குகளான மேற்குலகை வந்தடைந்தவர்கள் மட்டும் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர் எனக் கொள்ள முடியாது என்றாலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சூழலில் உள்ளனர். இவ்வாறு தங்கள் இலக்குகளை அடைய முடியாமல் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்பவர்கள் பெரும்பாலும் மறக்கப்பட்ட மனிதர்களாகவே வாழ்கின்றனர். இவர்கள் யார் எங்கு உள்ளனர் என்பது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்த கொள்ளவும் முயற்சிக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அகதி அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் கூட எதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அதனைக் கைவிட்டு அரச உதவிகள் எதற்குக் கிட்டுமோ அந்த நடவடிக்கைகளை மட்டும் செய்து கொண்டிருக்கின்றன. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகள் நடவடிக்கைக்குழு தற்போது நீரிழி நோயைத் தடுப்பது பற்றியும் யோகாசனம் பற்றியும் தான் சொல்லிக் கொடுக்கின்றது. உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்ந்த போதும் கைவிட்பட்ட இவர்கள் பற்றிய எவ்வித கவனமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தோனேசியக் கடலில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் தொடர்பில் தமிழ் ஒருங்கிணைப்பு மட்டுமே அவுஸ்திரேலிய தூதரலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழக்கக் கோரியது. அவுஸ்திரேலியா தமிழ் கொங்கிரஸ்ம் அதற்காக குரல் எழுப்பி வருகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட பொழுது அதனைத் தடுத்து மனித அழிவையும் அவலத்தையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத மேற்குலகம் தற்பொழுது இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவிட்டதாக அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டு வருகின்றது. அதே இலங்கை அரசினால் மனித உரிமைகள் மீறப்பட்ட அகதிகள் 260 பேர் இந்தோனேசியக் கடலில் தவிக்கின்றனர். அந்த அகதிகளுக்கு எந்தவொரு மேற்கு நாடும் தஞ்சம் அளிக்க முன்வரவில்லை. கடந்த நான்கு வாரங்களாக நடுக்கடலில் தவிக்கும் இவர்களுக்கு தஞ்சம் வழங்கும்படி இந்த நாடுகள் அவுஸ்திரேலிய அரசை வலியுறுத்தவும் இல்லை. மறுமுனையில் கனடாவில் தஞ்சம் கோரியவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மேற்குலகின் மனித உரிமைக் கோசங்கள் அவர்களின் அரசியல் சதுரங்கத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது என்பதற்கு ஆய்வுகள் அவசியமற்றது.

அவுஸ்திரேலியாவின் எல்லையில் மூன்று அவலங்கள் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.

ஒன்று: அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் நவம்பர் 1ல் கப்பல் மூழ்கி பயணித்தவர்கள் மரணமுற்றிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவுஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் – அம்சா வுக்கு ஞாயிறு காலை அவல அழைப்பு விடுக்கபட்டது. அழைப்பு விடுக்கப்பட்டு ஒன்பது மணிநேரத்திற்குப்பின்னரே ஜப்பானிய மீன்டிபிடிப் படகு சம்பவ இடத்தை அடைந்துள்ளது. அதற்குப் பின் பல மணி நேரங்களுக்குப் பின் திரவ வாயுவை ஏற்றும் எல்என்ஜி பைனியர் அவ்விடத்தை அடைந்தது. ஆனால் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எல்என்ஜி பைனியர் மூழ்கிக் கொண்டிருந்த படகைக் காணும் தூரத்திலேயே நின்றதாக செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இரண்டு: ஒக்ரோபர் 18ல் இந்தோனேசிய அவுஸ்திரேலிய சர்வதேசக் கடலில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் ஓசானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் யாவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதி மாகாண ஆளுநர் இந்தோனேசியா தஞ்சம் கோருவோரைக் கொட்டும் இடமல்ல என அவர்களைத் தரையிறக்க மறுத்துவிட்டார். பின்னர் காப்பாற்றப்பட்டவர்கள் பின்ரன் தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்களை அவுஸ்திரெலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லும்படி கோருகின்றனர். ஆனால் தஞ்சம் கோருபவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மூன்று: அவுஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட 260 பேர் கொண்ட கப்பல் இந்தோனேசியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு மேர்க் துறைமுகத்தில் ஒக்ரோபர் 10 முதல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ளவர்கள் தங்களுக்கு அடைக்கலம் வழங்குமாறு அவுஸ்திரேலியாவை கோரி வருகின்றனர். அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுக்கின்றனர்.

ஆனால் அவுஸ்திரேலிய அரசியல் களம் தஞ்சம் தொடர்பில் யார் கடும்போக்கானவர்கள் என்ற போட்டியில் இறங்கி உள்ளது. அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் முன் வரிசை உறுப்பினர் ரொனி அபோர்ட் குடிவரவு தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட் மேற்கொண்ட மென் போக்கே இவற்றுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

ரொனி அபோட் மேலும் தெரிவிக்கையில் இந்தோனேசியாவில் உள்ள கப்பல் அகதிகளை இந்தோனேசியா ஏற்காத பட்சத்தில் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டு வழமையான குடிவரவு விதிகளுக்கு அமைய நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். குடிவரவு கொள்ளையை இறக்கமாக்குவதற்குப் பதில் தளர்த்தியதால் அவுஸ்திரேலியா நோக்கி படகு அகதிகள் கவரப்படுவதாகவும் அவர் தன் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் தன் குற்றச்சாட்டை அத்துடன் நிறுத்தவில்லை அவ்வகதிகள் கிறிஸ்மஸ் தீவுகளுக்க கொண்டுவரப்பட்டால் அது அகதிகளை நாடுகடத்தலில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும் வெற்றியாகும் என்றும் அது அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட்டின் கொள்கைகளுக்கு கிடைக்கும் தோல்வி என்றும் தெரிவித்தார்.

கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று சம்பவங்களும் இந்தோனேசிய – அவுஸ்திரேலிய அரசுகளின் தஞ்சம் தொடர்பான கடும்போக்குகளை அம்பலப்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலிய அரசு தஞ்சம் கோருபவர்களை தனது கரைகளில் இறங்கவிடாது இந்தோனேசிய கடற்படையினரைக் கொண்டு தடுத்து வைக்கின்றது. இவற்றைவிட இவ்வாண்டு இவ்வாறான 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலிய இந்தோனேசிய அரசுகளுக்கு இடையேயான உடன்பாட்டின் படி தஞ்சம் கோருவோரை இந்தோனேசியாவில் வைத்துப் பராமரிப்பதன் மூலம் தனது கையைக் கழுவிக்கொள்கின்றது அவுஸ்திரேலியா. இந்தோனிசிய அதிகாரிகள் தஞ்சம் கோருவோரை அடிப்பதாகவும் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை மருத்துவ வசதிகளை வழங்குவதில்லை அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும் அவுஸ்திரேலிய சட்டத்தரனியும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவருமான ஜெசி ரெய்லர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அகதி நிலைதொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை அவுஸ்திரேலிய – இந்தோனேசியப் பிரதமர்கள் நவம்பரில் மேற்கொள்ள உள்ளனர். சிங்கப்பூரில் இன்னும் சில தினங்களில் நவம்பர் 8ல் சிங்கப்பூரில் இடம்பெவுள்ள ஏபெக் மாநாட்டிலும் அதன் பின் அவுஸ்திரேலியாவில் நவம்பர் 18 – 19ல் நடைபெறவுள்ள சந்திப்பிலும் இவ்வகதிகள் விடயம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகதிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் ‘இந்தோனேசியத் தீர்வு’ எவ்வளவுதூரம் தீர்வாக அமையும் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே கிளம்பி உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • வீரகேசரி இணையம்
    வீரகேசரி இணையம்

    இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றும் ஒரு படகு அவுஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு அருகில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 59 பேருடன் சென்ற இந்தப் படகுடன் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    கடந்த ஞாயிற்றுக் கிழமை நீரில் முழ்கிய 40 பேருடன் சென்ற படகிற்கு பின்னால் இந்தப் படகு சென்றதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும் இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    1875இல் பிரேசிலில் இருந்து சட்டவிரோதமாக ரப்பர் மர விதைகளை பிரித்தானியர் கடத்தி இலங்கை மலேசியா போன்ற நாடுகளில் விதைத்து ரப்பர் செய்கையை உண்டுபண்ணினார்.
    இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் கண்டு பிடித்த தேயிலை மரத்தின் விதைகளை இலங்கைக்கு கொண்டு வந்து இலங்கையில் தேயிலை செய்கையை உண்டு பண்ணினர்
    அந்த காலத்தில் விசா இல்லாமல் எல்லா நாட்டுக்கும் திரிந்து அந்த நாடுகளை எல்லாம் சூறை ஆடிவிட்டு இப்போ விசா இல்லாமல் தங்கட நாடுகளுக்கு வர ஏலாது என்கிறார்கள்

    Reply