தேவையான போது தேவையான தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானிப்பதுடன் எந்தத் தேர்தலானாலும் அதனை நடத்தவும் அதனை எதிர்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே உள்ளதென பிரதமர் ரட்ணசிற விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. மக்கள் மாகாண சபைத் தேர்தல் மூலம் அதற்குப் பதிலளித்தனர். அடுத்துவரும் தேர்தல் வெற்றிகள் அரசாங்கத்தின் ஸ்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நாடு முழுவதும் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் மக்கள் சேவையை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. இதற்குப் பிரதிபலனாக அடுத்து என்ன தேர்தல் வந்தாலும் மக்கள் உரிய பதிலளிப்பர்.
அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று அரசாங்கம் மக்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நம்பிக்கையுடன் அரசு தொடர்ந்து முன்னேறுவது உறுதி. அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்திப் பயணத்தில் மேலும் பல பில்லியன் ரூபா நிதிச் செலவில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பல அடுத்தடுத்த வருடங்களில் நிறைவு பெறுவதுடன் அதன் பயனை மக்கள் அனுபவிப்பர்.
நாட்டை சுய உற்பத்தியில் தன்னிறைவடையச் செய்து வெளிநாட்டிற்குச் செல்லும் நிதியைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் பிரதான பாலங்கள் பல புனரமைக்கப்பட்டும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டும் உள்ளன.
இதற்கு 4,94,378 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதுடன் அடுத்த வருடத்திற்குள் நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் 2011ம் ஆண்டில் நிறைவு பெறுவதுடன் இதற்கென தேசிய நிதி 1500 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டு நிதி 8456 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளன.
மேலும் சீன அரசாங்கத்தின் 50,000 மில்லியன் நிதியுதவியுடன் இத்திட்டம் நிறைவுபெறவுள்ளது. அதேபோன்று திருகோணமலையில் 52,000 மில்லியன் ரூபா செலவில் புதிய மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடத்தில் நிறைவடைகிறது. இதற்கென அரசாங்கம் 5952 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. இதற்கென கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 4,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் 32,267 மில்லியன் ரூபாவை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இத்தகைய பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. அரசாங்கம் மக்கள் நம்பிக்கையுடன் தமது பயணத்தைத் தொடரும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
« அழகியற் கல்வியில் பட்டம் பெற்ற 3174 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் | Home | தென்மாகாண சபையின் முதலாவது அமர்வு பலத்த சர்ச்சையின் பின் தவிசாளர் தெரிவு »
Related posts:
- Will be added soon here...
