கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

kahiliya.jpgவிடுதலைப் புலிகளின் நிதி தொடர்பான விபரங்களை வழங்குவது தொடர்பாக கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் அளித்த உதவிக்காக அவருக்கு மன்னிப்பு வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்தால் அது தொடர்பாக தான் ஆச்சரியப்படமாட்டேன் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அத தெரணவின் 360 நிகழ்ச்சியின்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். கே.பி.வெளியிட்ட தகவல் மூலம் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் பலவற்றை அதிகாரிகளால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அந்தச் சொத்துகளின் பெறுமதி குறித்துக் கண்டறியப்பட்டதா அல்லது இலங்கைக்கு அவை கொண்டுவரப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது அதனை வெளிப்படுத்தும் நிலைப்பாட்டில் தான் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். ஆயினும் உரிய வேளையில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனுக்கு விசேடமான பதவி ஏதாவது வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இது தொடர்பாக தீர்மானிப்பது உயர்மட்ட அதிகாரிகளைப் பொறுத்தது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டுக்கு எதிராக கே.பி. மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவர் தண்டனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் வலியுறுத்துவது தொடர்பாக அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, “அவருக்கான தண்டனையை அவர் தற்போது பெற்றுக்கொண்டிருக்கிறார். தனது சொந்த மனச்சாட்சிக்கு எதிராகப் போராடுவது அதிகளவுக்குப் போதுமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மன்னர் போன்று வாழ்ந்தவர் கே.பி. இப்போது அவர் தனது சகல சிறப்புரிமைகளையும் இழந்துவிட்டார். தனது தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், இப்போது நாட்டுக்காக அவர் அதிகளவுக்குச் செய்கிறார் என்பதையிட்டு நாம் திருப்தியடைவது அவசியமானதாகும். அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *