மரணத்தின் வாசனை: போர் தின்ற சனங்களின் கதை : என் செல்வராஜா, (நூலகவியலாளர்)

Smell_of_Death_Book_Coverஇளம் படைப்பாளி, த.அகிலன் எழுதியுள்ள மரணத்தின் வாசனை என்ற அருமையானதொரு சிறுகதைத் தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது. “போர் தின்ற சனங்களின் கதை” என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் த.அகிலன், ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 1983இல் வடபுலத்தில் பிறந்தவர். மரணத்துள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இன்று கொள்ளத்தக்கவர். தான் புலம்பெயர்ந்து வந்தபின்னர், உறவினருடன் அவ்வப்போது மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களினூடாகத் தன் செவிகளுக்குள் வந்துசேர்ந்த பன்னிரண்டு மரணச்செய்திகளின் வாயிலாக விரியும் உறவின் பரிமாணமே இச்சிறுகதைகளாகும். ஒவ்வொரு கதையும் ஒரு மரணத்தை மட்டுமல்லாது, அந்த மரணத்துக்குரியவரின் வாழ்வு – அவ்வாழ்வினோடு தனது வாழ்வு பின்னப்பட்ட சூழல் என்பன மிக அழகாகவும் உணர்ச்சிகரமாகவும் போர்க்கால இலக்கியமாக இச்சிறுகதைத் தொகுதிக்குள் பதிவாகியுள்ளன. இந்நூல் சென்னையிலிருந்து வடலி வெளியீடாக 180 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது பதிப்பு ஜனவரி 2009இலும், 2வது பதிப்பு மே 2009இலும் வெளியிடப்பட்டுள்ளது.

இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரு சிறுகதைகளும், முன்னதாக அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தில் மரணத்தின் வாசனை என்ற தொடராக வெளிவந்திருக்கின்றன. இச்சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரையையும் அப்பால் தமிழ் இணையத்தள நெறியாளரான திரு.கி.பி.அரவிந்தன் அவர்கள் பாரிசிலிருந்து வழங்கியிருக்கிறார்.

அவர் நூலுக்கு வழங்கிய தனது முன்னுரையில் குறிப்பிடும் சில வரிகளை வாசகர்களுடன் நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.

“மரணத்துள் வாழத்தொடங்கிய ஈழத்தமிழ் சமூகத்தில் 1983இல் பிறக்கும் த.அகிலன் எதிர்கொள்ளும் மரணங்களே, அம்மரணங்கள் வழியாக அவனுள் கிளறும் உணர்வுகளே இவ்வெழுத்துக்கு வலிமையைச் சேர்க்கின்றன. மரணத்தின் வாழ்வினுள் பிறந்து அதன் வாசனையை நுகர்ந்து வளரும் ஒரு முழுத் தலைமுறையின் பிரதிநிதியாகவே த.அகிலன் எனக்குத் தென்படுகின்றான். அந்தத் தலைமுறையின் எண்ணத் தெறிப்புகளே இங்கே எழுத்துக்களாகி உள்ளன. தந்தையைப் பாம்புகடித்தபோது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தடுக்கின்றது. அப்படி அதன் பின் அகிலன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மரண நிகழ்வின் பின்னாலும் இராணுவ ஆக்கிரமிப்பின் கொடுங்கரங்கள் தடம் பதிக்கின்றன. இந்த மரணத்தின் வாசனை என்பதே ஆக்கிரமிப்பின் நெடிதான். மரணத்தினுள் வாழ்வு என்பதன் ஓரம்சம் இராணுவ ஆக்கிரமிப்பு என்றால் அதன் அடுத்த அம்சம் ஊர்விட்டு ஊர் இடம் பெயர்தல். அகிலன் ஊர்விட்டு ஊர் இடம்பெயர்கிறான் காடுகள் ஊர்களாகின்றன. ஊர்கள் காடுகளாகிப் போகின்றன. அலைதலே வாழ்வாகிப் போகின்றது.” இது கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் அகிலனின் நூலுக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதியாகும்.

Smell_of_Death_Book_Coverத.அகிலனின் மொழிநடை வித்தியாசமானது. இடையிடையே ஈழத்தமிழரின் பேச்சு வழக்கில் கலந்து அமைந்தது. இந்த மொழி வழக்கில் இடையிடையே இயல்பாகக் கலந்துவரும் அங்கதச் சுவையே அவரது சிறுகதைகளுக்கு வெற்றியைத் தேடித்தருகின்றது என்று நம்புகின்றேன். தமிழகத்தில் வெளிவந்துள்ள இந்த ஈழத்து நூல் வெற்றிகரமான சந்தை வாய்ப்பினையும் அங்கு பெற்று இரண்டாவது பதிப்பும் வெளிவந்திருக்கின்றது என்பது அவர் பயன்படுத்தியுள்ள சுவையான ஈழத்து மொழி நடையை தமிழக வாசகர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை எமக்கு உணர வைக்கின்றது. இந்த நூலின் தொடக்கத்தில் சொல் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சில பிராந்திய சொற் பிரயோகங்கள் ஈழத்து வாசகர்களையே விளக்கக் குறிப்பினை நாடவைக்கும் என்பதால், தமிழகத்தில் வெளியிடப்படும் ஈழத்தமிழரின் பிராந்திய மொழிவழி நூல்களுக்கு சொல் விளக்கக் குறிப்புகள் தவிர்க்கமுடியாதவையாகும்.

இந்நூல் ஈழத்தின் போர்க்கால சமூக வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தினை எம் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. அந்தச் சூழலில் அகிலனுடன் வாழ்ந்துவந்துள்ள எமக்கு, இன்று சிறுகதைகளாக வாசிக்கும்போது, உணரப்படும் பகைப்புலங்கள் பல நினைவுகளை கனத்த நெஞ்சுடன் அசைபோட வைக்கின்றன. ஒவ்வொரு கதையை வாசித்த பின்னரும் நீண்டநேரம் அந்த அசைபோடல் எமது உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் நிலைத்து நின்று குறுகுறுக்கின்றது. மரணத்துள் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் சமூக வாழ்வின் ஒரு பக்கத்தை தமிழகத்தின் வாசகர்கள் உணர்வுபூர்வமாகத் தரிசிக்கவும் இந்நூல் வழிகோலுகின்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் – குறிப்பாக புலம்பெயர் இலக்கிய வரலாற்றின் ஒரு பரிமாணத்தை இந்நூல் பதிவுசெய்கின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நூல் இந்திய விலையில் 125 ரூபாவாக தமிழகத்திலும், வடலி வெளியீட்டாளர்களின் இணையத்தளத்திலும் விற்பனைக்குள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *