நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (Nelson Mandela International Day) : புன்னியாமீன்

Nelson_Mandelaமுதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் 2010 ஜூலை 18ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்பட்டது. தென்னாபிரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற போது நிலைத்து நிற்கவேண்டியவர்களுள் மண்டேலாவும் ஒருவராவார். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் ஒளிக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி, ஜனாதிபதியாக, சமாதான நோபல் பரிசின் சொந்தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.

2010 ஜூலை 18 இல் இடம்பெற்ற முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தில் “மண்டேலா ஆபிரிக்காவின் மைந்தன் / தேசத்தின் தந்தை என்ற திரைப்படமொன்றும் திரையிடப்பட்டுள்ளது. அத்துடன், மண்டேலாவை கௌரவித்து ஐ.நா. பொதுச் சபையில் உத்தியோகபூர்வமற்ற அமர்வொன்றும் இடம்பெற்றுள்ளது. நெல்சன் மண்டேலா “மக்களின் மனிதர்” என்ற புகைப்படக் கண்காட்சியும் இடம்பெற்றதாக ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருந்தார். ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளிலும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜுலை 18 ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிற வெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மாமனிதரான நெல்சன் மண்டேலாவின் 92வது பிறந்த தினமான 2010 ஜூலை 18 இல் முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதென 2009 நவம்பரில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவுகூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை முன்நகர்வாக ஜூலை 18 இல் நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாட வேண்டுமென கியூபா பாராளுமன்றம் தீர்மானித்தது. அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான அமர்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதத்துவத்திற்கு அளப்பரிய சேவையைச் செய்த நெல்சன் மண்டேலாவை கௌரவித்து கியூபா பாராளுமன்றம் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. கியூபா முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தவர் நெல்சன் மண்டேலாவாகும்.

நெல்சன் மண்டேலா  (Nelson Mandela International Day), ஜூலை 18, 1918 இல் பிறந்தவர். இவர் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத்தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். ஆரம்பத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை) தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், (இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.

இதற்கு ஓர் உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அது மட்டுமன்று. கலப்பின, கறுப்பு நாட்டவரோடு அவர்கள் கிரிக்கெட் விளையாடியது கூடக் கிடையாது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971), அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை. அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடுகளுடனும் விளையாடியதில்லை. நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை செய்யப்பட்டது.

மண்டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. 2010 இல் உதைபந்தாட்ட உலக கிண்ணத்துக்கான போட்டியும் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்தது.

மண்டேலா சிறுபராயத்தில் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டார். இவரது குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம்பராயத்திலே கல்வியைப் பெறுவதில் கூடிய ஆர்வம் கொண்ட மண்டேலா, பின்பு இலண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.

1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சி் அதிகாரங்களைப் பொறுபேற்ற அரசு: அராஜக நடவடிக்கைகளை கட்டழ்த்தது. இனவாதமும் அடக்கு முறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். இவரின் தலைமையில் அரசின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டன.

Nelson_Mandelaமண்டேலா தனது பல்கலைக்கழகத் தோழன் ஒலிவர் ரம்போவுடன் இணைந்து இன ஒதுக்களுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மண்டேலா ஒலித்தார். இதன் விளைவு பயங்கரமாக மாறியது. 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரின் சுமார் 150 தோழர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முன்னால் சாத்வீகம் தோல்வியுறும் போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென இவரால் உணரமுடிந்தது. வேறுவழியின்றி ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா மாறினார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை முன்னெடுத்தார்.

1961 டிசம்பர் 16 ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. தாக்குதலுக்கான இலக்குகளாக அரச, இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள், தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அப்போதும் எக்காரணம் கொண்டும் எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது” என வற்புறுத்தி நின்றார்.

இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடைசெய்யப்பட்டது. இத்தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது. 1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது.

தென்னாபிரிக்காவில் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க்கைத் தொடர்ந்து 10 மே 1994 இல் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 14 ஜூன் 1999 வரை பதவி வகித்தார். மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். இவரைத் தொடர்ந்து தென்னாபிரிக்கத் தலைவராக பதவியேற்றவர் தாபோ உம்பெக்கியாவார். 3 செப்டம்பர் 1998 முதல் 14 ஜூன் 1999  அணிசேரா இயக்கப் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.

இவரின் முதலாவது வாழ்க்கைத் துணைவி எவெலின் மாசே (1944–1957). பின்பு 1957 இல் வின்னி மண்டேலாவைக் கரம்பற்றி 1996 வரை வாழ்ந்தார். 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவிட்டு மண்டேலா விடுதலையாகி வெளியே வந்ததும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.  1998 இல் கிராசா மாச்செலை மணம் புரிந்த இவர் அவருடன் வாழ்ந்து வருகிறார். மெதடிசம் சமயத்தவரான இவர் தற்போது ஹூஸ்டன் எஸ்டேட்டில் வாழ்ந்து வருகிறார். 1993இல் மண்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் ஜெயிலில் இருந்த போது, ஜெயில் அதிகாரியாக இருந்த டிகிளார்க்குடன் சேர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இனஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடிய நெல்சன் மண்டேலா அதிகாரத்துக்கு வந்த பின்னர் தனது கறுப்பின மக்களை அதுகாலவரை ஒடுக்கு முறைக்குள்ளாக்கிய வெள்ளையர்களை மன்னித்து நல்லிணக்கப்போக்கினைக் கடைபிடித்தார். தென்னாபிரிக்காவில் இனஒதுக்கல் ஆட்சியின் முடிவுக்குப் பின்னரான காலகட்டம் அனர்த்தங்கள் மிகுந்ததாகவே இருக்கும் என்று உலகம் நினைத்தது. ஆனால், இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதிவழிச் செயற்பாடுகளில் வெள்ளை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துச் செயற்பட்ட நெல்சன்மண்டேலா 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்லின ஜனநாயகத் தேர்தலின் பின்னர் அமைத்த ஆட்சி உலகத்தின் நினைப்பைப் பொய்யாக்கியது. மண்டேலா ஆட்சியின் அடிநாதமாக நல்லிணக்கக் கோட்பாடே அமைந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *