மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மனோ கணேசனின் சகோதரருமான பிரபா கணேசன் மற்றும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் ஆகியோர் August 04 2010 ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். இன்று காலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதுடன், August 04 2010 நாடாளுமன்றத்தில் அரசாங்க வரிசையிலும் அமர்ந்து கொண்டனர்.
பிரபா கணேசன் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார் என்ற செய்தியை முதலில் ஜனநாயக மக்கள் முன்னணி மறுத்த போதும், தற்போது இந்தியா சென்றிருக்கும் மனோ கணேசன் பிரபா கணேசனை கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் செயலாளர் ந.குமரகுருபரனுக்கு இது குறித்து தாம் அறிவித்துள்ளதாகவும், தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபா கணேசன் தமது முதுகில் குத்திவிட்டதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கியதேசிய கட்சியோடு இணைந்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.