வவுனியா நகரசபையின் மாதாந்த கூட்டத்தை அதன் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் நேற்று (14 செப்ரம்பர் 2010) செவ்வாய் கிழமை இடை நிறுத்தியதைக் கண்டித்து நகரசபை உறுப்பினர்கள் பத்துப்பேரும் இணைந்து நகரசபைத் தலைவருக்கு எதிராக போராட்டத்திலீடுபட்டனர். வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் இன் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நகரசபை மைதானத்தில் கடும் வெயிலில் இரண்டு மணிநேரம் இப்போராட்டம் நடைபெற்றது.
வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:
இது பற்றி தேசம்நெற் இணையத்திற்கு கருத்துத் தெரிவித்த நகரசபை உறுப்பினர் ஜி ரீ லிங்கநாதன் குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறையைக் கூடப் பின்பற்ற நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் விசேட நகரசபைக் கூட்டத்தை கூட்டும்படி தாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் தன்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதும் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார்.
மேலும் நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டிவிட்டு அதற்கு முன்னதாகவே ஆயுதம் தாங்கிய பொலிசாரையும் அங்கு வரவழைத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகச் செயற்படும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் ஜனநாயக விரோதப் போக்கை கடைப்பிடிப்பதுமல்லாமல் ஆயுதம் தாங்கிய பொலிஸாரை வரவழைத்து நகரசபை உறுப்பினர்களை அச்சுறுத்தவும் முற்பட்டு உள்ளார். அதுவே நகரசபை உறுப்பினர்கள் சீற்றமடைவதற்குக் காரணமானது. இவ்வாறான ஜனநாயக விரோதப் போக்குகளைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் 10 பேரும் போராட்டத்தில் குதித்தனர்.
செப்ரம்பர் 14 கூட்டத்தில் நகரசபைத் தலைவர் மீது நகரசபை உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிப்பதாகவும் நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதாகவும் இருந்தது. தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றாகப் புறக்கணித்த நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் 72 நிமிடங்களாக தன்னைப் பற்றிய சுயபுராணத்தில் ஈடுபட்டதாகவும் இது கூட்டத்தைக் கூட்டுவதற்கு கோரிக்கை வைத்த நகரசபை உறுப்பினர்களை ஏமாற்றுவதாக அமைந்ததாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் இடையே குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர் செ சுரேந்திரன் நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதனுக்கு எதிராக நம்பிக்கையிலாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார். இந்நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் இ சிவகுமாரன் வழிமொழிந்தார். இதனைப் பொறுக்காத நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறினார்.
நகரசபை உறுப்பினர்கள் நகரசபை மைதானத்தில் தங்க போராட்டத்தை ஆரம்பித்ததும் ஊடகங்களில் செய்தி பரவியது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் வினோநோகராதலிங்கம் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களைச் சந்தித்து சமரசம் செய்ய முற்பட்டனர். அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக தங்களது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் 10 நகரசபை உறுப்பினர்களுக்குப் 10 000 மக்களைக் கொண்டு வந்து போராடுவோம் என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் சந்தித்து இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதாக சிவசக்தி ஆனந்தனும் வினோதரலிங்கமும் நகரசபை உறுப்பினர்களுக்கு உறுதி அளித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஒரு மாதத்திற்குள் அதனைச் செய்யத் தவறினால் தாங்களும் நகரசபை உறுப்பினர்களுடன் சேர்ந்து போராடுவோம் என சிவசக்திஆனந்தன் தெரிவித்ததாக ஜி ரி லிங்கநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ளது. அதன் தலைவர் எஸ் என் ஜி நாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மேலும் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவுக்கு நெருக்கமானவர். எஸ் என் ஜி நாதனை மாற்றாக இன்னுமொருவரை நியமிக்க தமிழரசுக் கட்சியின் பெயர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள் எவரும் இல்லை. அப்பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ரெலோவிற்கோ ஈபிஆர்எல்எப் சுரோஸ் அணிக்கோ விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.
வவுனியா நகரசபை கடந்த 10 மாதங்களாக செயற்படாமல் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உள்முரண்பாடுகள் காரணமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அண்மைய போராட்டமும் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர்களே தமது கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரசபை உறுப்பினர்கள் விபரம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) : எஸ். என். ஜி. நாதன் (நகரசபைத் தலைவர்), மு. முகுந்தரதன் (உப தலைவர்), இ. சிவகுமாரன் செ. சுரேந்திரன், ஐ. கனகசபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்எல்எம்சி) : அப்துல் லத்தீப் முனவ்பர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) : ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, க.பார்த்தீபன்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) : எம் எஸ் அப்துல்பாரி, ஜெ.ஏ.டி லலித்ஜெயசேகர
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வின் நேர்காணலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பற்றி மிகக் காட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேறினால் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுவார்கள் என்றும் அவர்களுக்கு என்று அரசியல் அந்தஸ்தோ கெளரவமோ இல்லையென்றும் பியசேன குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணம் ஒன்றே பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குலையாமல் வைத்துள்ளது. ஆனால் இந்த முரண்பாடுகளால் வவுனியா நகரசபை போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு இடைஞ்சலாகவே ஆகியுள்ளது.
George
கூட்டமைப்பினர் ஐரோப்பாவில் தானே நிற்கினம். யாராவது அவைய மடக்கி இந்த விசயத்தை கேட்கேலாதோ? அங்க கூட்டமைப்பின்ர நகரசபை 10 மாதமா இயங்கேல்ல. இவை ஐரோப்பாவில ‘ஊர்லாப்’ வந்திருக்கினம். இளைஞர்களை அணிசேர்த்து இயக்கம் வேற கட்டப் போயினமாம். சம்மந்தரும் அமுதரும் இயக்கம் கட்டி முள்ளிவாய்காலில முடிஞ்சு. இப்ப வித்தியாதரனும் சம்பந்தரும் ஐரோப்பிவில இருந்து இயக்கம் கட்ட வெளிக்கிட்டினம்.
palli
//கூட்டமைப்பினர் ஐரோப்பாவில் தானே நிற்கினம்.//
பார்த்து பேசுங்க யாராவது ;;; வைத்து கடத்தி விடபோறாங்க, அப்புறம் இருட்டில் வைத்து வவுனியா நகரசபைக்கு என்ன நடந்தது?? விடியுமுன் உங்கள் துணவிமார் மூலம் அதை சரி செய்யுங்கள் என கடத்தல்காரர் சொல்ல அப்படியே செய்வதுதான் உங்களுக்கு நல்லது என முகமூடி முதலாளி தொலைபேசியில் தொலைவில் இருந்து விரட்ட… அதனால்தான் சொல்லுகிறேன் அக்கம் பக்கம் பார்த்து ஏசுங்க பேசுங்க.
மாயா
//இப்ப வித்தியாதரனும் சம்பந்தரும் ஐரோப்பிவில இருந்து இயக்கம் கட்ட வெளிக்கிட்டினம்.//
முன்னமும், இவங்களாலதான் பொடிகள் இயக்கம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை போய் தமிழீழம் காண வழி செய்தனார்கள். மறுபடியுமா? பிள்ளைகளை வீடுகளுக்குள்ள அடைச்சி வையுங்கோ.