படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் தற்போது மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றன. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது விடுதலைப்புலிகள் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களின் மனைவிமார் மற்றும், முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளின் உறவினர் என பலர் சாட்சியமளித்தனர். பலர் தங்கள் உறவினர்கள் எங்கிருக்கின்றார்கள் எனத்தெரியாத நிலையில் அவர்களை மீட்டுத்தருமாறு கோரினர். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம், அமெரிக்கப் போதகரான எவ். மில்லர் உட்பட பல பொதுமக்களும் அங்கு சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனின் மனைவி வனிதா சிவரூபன் சாட்சியமளிக்கையில் தனது கணவனை மீட்டுத் தருமாறு கோரினார்.
தானும் கணவரும் பிள்ளைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, கையில் காயப்பட்ட நிலையிலிருந்த கணவருக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி படையினர் அவரை அழைத்துச் சென்றதாகவும், அவர் விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் என்பதால் அவருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என படையினர் அப்போது தம்மிடம் கூறியதாகவும், அவர் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியாமலுள்ளதாகவும், அவரை மீட்டுத்தருமாறும் வனிதா சிவரூபன் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார்.
முகாமில் வைத்து புலனாய்வுப்பிரிவினர் என தம்மை அறிமுகப்படுத்திய இருவர் தனது கணவர் வைத்தியசாலையில் இருப்பதாகவும், தன்னை அங்கு வருமாறும் அழைத்தனர் எனவும், அவர்களில் தமக்கு சந்தேகம் எற்பட்டதால் அவர்களுடன் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பலர் தங்களின் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் மனுக்களையும் கையளித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறுகின்றன.