இலங்கைத் தமிழ் ஆவணங்கள்: ஆவணப்படுத்துதல் – வரலாறு – அதன் முக்கியத்துவம்: இராசையா மகேஸ்வரன்

இராசையா மகேஸ்வரன், B.A(Hons), Master of Library & Information Science சிரேஷ்ட துணைநூலகர், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை.

அறிமுகம்:
உலகில் சகல நாடுகளிலும் ஆவணக்காப்பகங்கள் உண்டு. ஆவணக்காப்பகங்கள் என்பது குறிப்பேடுகளை, வெளியீடுகளை தொகுத்து வைத்து பாதுகாக்கும் இடமாகும். இன்றைய ஆவணங் களை வருங்காலத்தவர்களுக்கு பாதுகாத்து வழங்குவது இதன் பணிகளுள் முக்கியமானதாகும். இலங்கையில் ஆவணப்பாதுகாப்புக்கு நீண்டகால வரலாறு உண்டு. மூன்றாம் நூற்றாண்டில் மன்னர்காலந்தொட்டு இலங்கையின் பௌத்தமடாலயங்களிலும், கோயில்களிலும், நூல்கள் பாதுகாக்கப்பட்டும், பயிலப்பட்டும் வந்துள்ளன. மகாவிகாரைகள், அபயகிரி விகாரை ஆகியன ஆவணப்பாதுகாப்பு நிலையங்களாக விளங்கியிருந்தன. இலங்கையில் 3ம் நூற்றாண்டு முதல் ஆவணப்பாதுகாப்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் ஐரோப்பிய ஆட்சிக்காலத்திலேயே 16ம் நூற்றாண்டில் ஆவணப்படுத்துதல், நூலகம் என்பன முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்டைக்காலத்தில் மன்னர்களால் வழங்கப்பட்டவை குறித்துவைத்த ஆவணம்“பின்பொத்” (Pinpoth) என அழைக்கப்பட்டது. இதனை வைத்துக்காத்தவர் “பொத் வருன்” (Poth Varun) நூல்காப்பாளர் என அழைக்கப்பட்டுள்ளனர். கோட்டை இராச்சியகாலத்தில் (1415 -1597) மன்னரால் வழங்கப்பட்ட வாய்மூல தண்டனைகளைக் குறித்துவைத்த “முகவெட்டி” (Mukavetti) என்ற ஆவணம் பயன்படுத்தப்பட்டதாவும், கண்டி இராச்சியகாலத்தில் ஆவணங்களை ‘மகாமோட்டி’ (Mahamoutti) பாதுகாத்ததாக வரலாறுகளில் காணப்படுகின்றன. இக்காலத்தில் மன்னர்கள் கொடையாக வழங்கிய காணிகளுக்கான ஓலைச்சீட்டு (olai Sittu’ , ‘Cul Put’) என அழைக்கப்பட்டதுடன் இவ்வாவணங்களை எழுதுபவரும், பாதுகாப்பவரும் ‘எழுதுனர்’ (liannah) எனவும் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றில் காணப்படுகின்றது. அநுராதபுரகாலத்தில் (300-1017) மன்னரது இராச்சிய நிதிக்கணக்குகள் ‘பண்டக பொத்தகம்’ (Pandaka–Pottagam) என அழைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரிஅறவிட்டவை ‘வரி பொத்தகம்’ (Vari-Pottagam) என அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றினை கூறும் மகா வம்சம், சூலவம்சம் என்பன தீபவம்சம் (Dipawamsa, Attakatha) எனும் 4ம்-6ம் நூற்றாண்டு ஆவண ஏடுகளைத் துணைக்கொண்டு எழுதப்பட்டுள்ளன.

போர்த்துக்கேயரே (1515-1656) ஆவணப்படுத்துதலை 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்துள்ளனர். ஓல்லாந்தர் (1640 – 1796) போர்த்துக்கேயரிடமிருந்து கொழும்பை 1656இல் கைப்பற்றியபோது ஆவணப்படுத்தப்பட்ட ஆவணங்களை கையளிக்கமறுத்து போத்துக்கேயர்கள் அழித்துள்ளனர். ஓல்லாந்தர் 1660-1662 காலப்பகுதியில் ஆவணப்படுத்துனர் (Record Keeper – Mr.Pieter de Bitter) நியமிக்கப்பட்டுள்ளார். இக்காலத்தில் பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு என ஆவணப் படுத்துதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர்களிடமிருந்து பிரித்தானியர் (1796-1947) இலங்கையை கைப்பற்றிய போது 1798 இல் ஒல்லாந்தரினால் (டச்சுக்காரர்) ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 1815இல் கண்டிஇராச்சியம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டபோது கண்டி ஆவணங்கள், அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மாவட்டக்காரியாலயங்களில் ஆவணக்காப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். 1870களில் நூலகங்களும், 1877ல் நூதனசாலையும் நூலகமும் (Museum and Library) ஆரம்பிக்கப்பட்ட பின் உள்ளுர் வெளியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் சட்டம் 1885ல் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை 19ம் நூற்றாண்டிலே நூல்கள் ஆவணப்படுத்தலை ஆரம்பித்துள்ளது. 1902ம் ஆண்டு ஆவணக்காப்பாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு கொழும்புக் கச்சேரியில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 1902ம் ஆண்டு ஆவணப்படுத்தலில் ஒரு திருப்புமுனையாக ஆவணப்படுத்தல் மீண்டும் மாவட்டமட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி, யாழ்ப்பாணம், காலி, கொழும்பு ஆகிய இடங்களில் நூதனசாலைகள் (Museums) ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1942-1943 காலப்பகுதியில் 2ம் உலகயுத்தகாலத்தில், ஜப்பான் கொழுப்பில் குண்டுபோட்டதால், ஆவணக்காப்பகம் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் (1876-1947) காலனித்துவநாடுகளின் வெளியீடுகள் காலனித்துவ பதிப்புரிமைச்சட்டத்தின் கீழ் (Colonial copy right Act) சேர்க்கப்பட்டு பிரித்தானிய நூதனசாலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

1796 இலிருந்து 1948 வரையிலான காலப்பகுதி வெளியீடுகள், ஆவணங்கள் பிரித்தானியாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1947 இலங்கை சுதந்திரம் பெற்றபின், சிலகாலம் கல்வியமைச்சின் கீழ் ஆவணக்காப்பகம் காணப்பட்டுள்ளது. 1951இல் அச்சக பதிப்புச்சட்டம் (“Printing press ordinance” 1951–20ம் சட்டம்) கொண்டுவரப்பட்டுள்ளது. 1952 இல் இலங்கை தேசிய நூல்விபரப் பட்டியலுக்கான உபஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்ட பின், கல்வி அமைச்சிலிருந்து ஆவணக்காப்பகம் உள்ளுராட்சி மற்றும் கலாசாரஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 1962இல் முதலாவது தேசிய நூற்பட்டியல் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தே வெளியிடப் பட்டதுடன், இதன் வெளியீட்டுக்கு பிரித்தானிய தேசியநூல் விபரப்பட்டியலின் பிரதமஆசிரியர் திரு.எ.ஜெ.வேல்ஜ்ஜின் சேவையும் பெறப்பட்டுள்ளது. 1963 தொடக்கம் வித்தியலங்கார பல்கலைக்கழகத்தில் ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டு 1975இல் ஆவணக்காப்பகம் பதியகட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 1974ஆம் ஆண்டிலிருந்து தேசியநூற்பட்டியல் தேசியசுவடிகள் திணைக்களத்திலிருந்து தேசியநூலகசபை பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

இத்தேசிய நூற்பட்டியல் சட்டவைப்பு நூற்சேர்க்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது. 1962 தொடக்கம் 1974ஆம் ஆண்டு வரையிலான தேசியநூற்பட்டியல் தேசியசுவடிகள் திணைக்களத் தினால் வெளியிடப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு 48ஆம் இலக்கச்சட்டத்தின் மூலம் இத்திணைக் களம் தேசிய ஆவணக்காப்பகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் நோக்கம், 1974ஆம் ஆணடு 48ஆம் இலக்கச்சட்டத்திலும், 1981ம் ஆண்டு 30ஆவது இலக்கச்சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1885ஆம் ஆண்டின் அச்சகம் வெளியீட்டு பதிவுச்சட்டத்திற்கு அமைவாக, அச்சகங்களும் வெளியீட் டாளர்களும் சகல நூல்களினதும் பிரதிகள் ஐந்தினை வழங்கவேண்டும். இதில் ஒரு பிரதி 1973க்குப் பின், தேசியநூலகசபைக்கு வழங்கப்பட வேண்டும். இன்னுமோர் பிரதி 1952இலிருந்து போராதனை பல்கலைக் கழகநூலகத்திலும், ஒரு பிரதி சுவடிகள் திணைக்களத்திலும் சட்டச்சேர்க்கையாக (Legal depository) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

1951 அச்சக வெளியீட்டாளர்கள் சட்டத்தின் பின், 1973இல், 45வது சட்டமாக தேசியசுவடிகள் சட்டம் (The National Archives Low no 48, 1973) கொண்டுவரப்பட்டது. 1973இல், 51வது சரத்துக் கேற்ப இலங்கை தேசிய நூலகசேவைகள் சபை(The Sri Lanka National Library service Board), ஸ்தாபிக்கப்பட்ட பின், இலங்கையில் வெளியிடப்படும் சகல வெளியீடுகளும் சட்டப்படி இச்சபை மூலம் ஆவணப்படுத்தப்பட்டுவருகின்றன. 1976 இல் இலங்கை தேசியநூலகசேவைகள் (The Sri Lanka National Library service), உருவாக்கப்பட்டதுடன் 1990 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய நூலகம் (The Sri Lanka National Library), ஆரம்பிக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேசதராதர நூல்எண் (ISBN) வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் சர்வதேசதராதர நூல்எண் (ISBN) பெற்றுக்கொண்டால் மாத்திரமே இலங்கை தேசிய நூற்பட்டியலில் (National Bibliography) பதியப்படுகின்றது. இலங்கையைச்சேருந்தவர்கள் சர்வதேசதராதரநூல் எண்களை (ISBN) வேறு நாடுகளில் பெற்றுக் கொண்டால் இலங்கையரது நூலாயினும் இலங்கை தேசியநூற்பட்டியலில் பதியப்படுவதில்லை.

இலங்கை உள்நாட்டு யுத்தம் நடைபெற்றகாலத்தில் ‘தமிழ் ஈழம்’ பிரதேசத்தின் வெளியீடுகள், ஆவணங்கள் தமிழ்ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை 2009இல் நடைபெற்ற யுத்தத்தினால் அழிந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. இதேபோல் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி கனகரத்தினம் என்னும் தனிநபரால் ஆவணப்படுத்தப்பட்ட தமிழ்ஆவணங்கள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

ஆய்வின் பிரச்சினைகள்:
இலங்கையில் தமிழ்ஆவணங்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுவதில்லை. தமிழ் நூல்கள் பல இந்தியாவிலும் பிறநாடுகளிலும் அச்சிட்டு வெளியிடப்படுவதும், இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேசதராதர நூல்எண் பெறப்படாமையும் எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்களின் அக்கறையின்மையும் போதிய தமிழ் உத்தியோகத்தர்களின்மையும், பாராமுகத்தன்மையும் தேசிய நூற்பட்டியலில் தமிழ்நூல்கள் பதியப்பட்டு ஆவணப்படுத்தப்படாதுள்ளன. இதனால் ஆய்வாளர்கள், எதிர்காலசந்ததியினர் இவை பற்றி அறியமுடியாதுள்ளன.

ஆய்வு முறை:
வரலாற்று துணையுடன் இலக்கிய வரலாற்று ஆய்வு நூல்களின் ஆதாரங்களுடன் இத்துறைசார்ந்த இரண்டாம் நிலை சான்றுகளுடன், களநிலையில் நேரடி அவதானிப்புகளுடனும், விளக்கநிலை வாயிலாகவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘நூல் தேட்டம்’ என்ற நூல்பட்டியல் ஆவணம் முதலாம் தொகுதி முதல் ஐந்தாம் தொகுதி வரை அவதானிக்கப்பட்டது. வெளியீட்டாளர்களின் விலைப்பட்டியல்கள், நூலகங்களில் வைப்பிலுள்ள நூல்கள், வகுப்பாக்கப்பட்டியல்கள் ஆகியன அவதானிக்கப்பட்டது. இவற்றுள் அநேகமான நூல்கள் நூல்தேட்டத்தில் பதியப்பட்டுள்ளதால், நூல்தேட்ட பதிவுகளை அடிப்படையாகக் கொண்டே கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் துண்டுப்பிரசுரங்கள், பாடசாலை பாடநூல்கள், பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்ட நூல்கள், வினாவிடைகள் வர்த்தமானி வெளியீடுகள், அரசதிணைக்கள அறிக்கைகள் ஆகியன தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆய்வின் நோக்கம்:
இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்துதல் பூரணமாக நடைபெறவில்லை என வெளிக் காட்டல், இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்துதலில் உள்ள இடர்பாடுகளை கண்டறிதலும், இவற்றினை களையும் வழிமுறைகளை கண்டறிதலும் தீர்வு காண்பதுமே இவ்வாய்வினது நோக்கமாகும்.

ஆய்வின் போது கண்டறிந்தவையும் அவதானிப்புகளும்:
‘சுவடிகள் ஆற்றுப்படை’ என்ற நான்கு தொகுதிகளாக எஸ்.ஏச்.எம்.ஜெமீல் இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்களது நூல்களை ஆவணப்படுத்தியுள்ளார். சா.ஜோ.செல்வராஜா மட்டக்களப்பு மாவட்ட நூலியல் தொடர்பான வரலாற்றினை ஆவணப்படுத்தியுள்ளார். க.குணராசா (செங்கை ஆழியான்) இலங்கை நாவல்கள் பற்றியும், கனக செந்திநாதன், தில்லையூர் செல்வராஜன் மற்றும் பேராசிரியர் பூலோகசிங்கம் ஆரம்பகால வெளியீடுகள் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ளனர். இதே போல் புகலிட மண்ணிலே நூல்களின் பதிவுகளை ஒன்று திரட்டியும் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களினது பதிவுகளையும் ‘நூல்தேட்டம்’ என்ற நூல்தொகுதியாக இலண்டனில் உள்ள நூலகர் என்.செல்வராஜ் வெளியிட்டுள்ளார். ஆயிரம் நூல்களுக்கு ஒரு தொகுதி; என்ற வகையில் ஆறு (6) நூல் தேட்டங்கள் வெளியிட்டுள்ளதுடன் இலங்கைத்தமிழர்களது, மலேசிய, சிங்கப்பூர் வாழ் இலங்கைத் தமிழர்களால் வெளியிடப்பட்ட நூல்கள் ஒரு தேட்டமாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தொடந்தும் இலங்கைத் தமிழ்நூல்களை பதிந்து வெளிகொணர்தலில் ஈடுபட்டுள்ளார்.

ஆய்வுக்காக உதாரணமாக, 2005ஆம் ஆண்டினை நோக்குவோமாயின், “நூல்த்தேட்டம்” என்ற நூலின் பதியப்பட்டுள்ள தமிழ் நூல்களினை எடுத்துக்கொண்டால், தொகுதி; ஒன்று – ஆறு வரை மட்டும் 2005ஆம் ஆண்டில் 361 இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பதியப்பட்டு காணப்படுகின்றன. இந்நூல்களில் இலங்கையில் 197 நூல்களும், சென்னையில் 99 நூல்களும், இங்கிலாந்தில் 24 நூல்களும், கனடாவில் 13 நூல்களும், ஜேர்மனியில் 08 நூல்களும், பாரிஸில் 07 நூல்களும், அவுஸ்ரேலியாவில் 05 நூல்களும், நோர்வேயில் 03 நூல்களும், டென்மார்க்கில் ஒரு நூலும் வெளியிடப்பட்டதாக பதியப்பட்டுள்ளன. இது 2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களின் பதிவின் இறுதி முடிவல்ல. பின்தொடரும் ஏனைய தொகுதிகளிலும் 2005ஆம் ஆணடு வெளியீடுகள் பதிப்படவுள்ளன. ஆனால் இலங்கைத் தேசியநூல்பட்டியலில் (National Bibliogrphy) 91 இலங்கைத்தமிழ் நூல்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. இதில் இரண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட நூல்கள் மத்திரமே பதியப்பட்டுள்ளன. 270 இலங்கைத்தமிழ்நூல்கள் பதியப்படாது காணப்படுகின்றது. எனவே இலங்கை தேசியநூல்பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியலில் 72 இலங்கை நூலாசிரியர்களின் நூல்கள் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் இலங்கை தேசிய நூல்பட்டியலில் ஒரே ஒரு நூல் மாத்திரமே பதியப்பட்டுள்ளது. இது இலங்கை தேசியநூற் பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அத்துடன் இலங்கை நூலங்களில் வைப்பிலுள்ள பல நூல்களுக்கும், இலங்கை தேசிய நூல்பட்டியலில் பதிவுகளைக் காணமுடியவில்லை. இதுவும் தேசியநூல்பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு ஒரு சிறந்ததோர் எடுத்துக்காட்டு ஆகும்.

மேலும், புகலிட மண்ணிலே இலங்கைத்தமிழர் நூல்களை ஒன்று திரட்டியும், இலங்கையிலே ஒன்று திரட்டியும் ஈழத்தமிழர் தேசியநூல்களின் ஆவணப்படுத்தலினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பணியை மேற்கொள்ளும் அமைப்புகளாவன:

 ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகமும் ஆய்வகமும்.(European Tamil Documentation and Research centre-ETDRC.)
 உலகத்தமிழ் நூலகம் ஸ்காப்ரோ, ஒன்றாரியோ, கனடா.
 வல்வை ஆவணக் காப்பகம், கனடா
 முல்லை அமுதன் ஆவணக்காப்பகம்
 தமிழ்தகவல் மையம் – ஆவணக்காப்பகம் – (Tamil Information centre-TDC Library)
 மலையகஆவணக்காப்பகம் -புசல்லாவ,- (இந்திய வம்சாவளி இலங்கையரது ஆவணங்கள்)
 பிரித்தானிய நூலகம் (British Library)
 இலண்டன் பல்கலைக்கழக நூலகம்- (SOAS–School of Oriental and African Studies Library, University of London)

தமிழ் நூல்களின், வெளியீடுகளின் ஆவணப்படுத்துதலில் காணப்படும் பிரச்சினைகள்
1. இலங்கையில் ஆவணப்படுத்துதலில் தொடர்ச்சியின்மை:

2. இலங்கை தவிர்ந்த பிறநாடுகளில் தமிழ் நூல்கள் வெளியிடுதல்:
2.1.1 நூல்களை வெளியிடுவோர், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் செலவு குறைவு மற்றும் சந்தைவாய்ப்பு போன்ற பொருளாதார காரணங்களினால் பல இலங்கைத் தமிழ் நூல்களை தமிழ்நாட்டில் வெளியிடுகின்றனர். இவ்வாறு சென்னையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு பதிவுகள் எதுவும் இலங்கையில் இல்லை. இவற்றுக்கு சர்வதேச தராதர எண் பெறப்படுவதும் இல்லை. எனவே, இவை இந்தியாவிலும் பதிவுசெய்யப்படுவதும் இல்லை.

2.1.2 1983-85 ஆண்டுக்காலப்பகுதியில் அரசியல்காரணங்களுக்காக பல நூல்கள் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டு இலங்கை தவிர்ந்த பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இவை இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரசுரங்களாகும். இவ்வெளியீடுகளின் பதிவுகள் இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லை.

2.1.3 தமிழகத்தில் சென்னையில் வெளியிடுவதற்கான காரணங்களில் பிரதானமானது, சென்னையில் வெளியீட்டாளர்களின் மூலம் வெளியிடப்படும் நூல்களை தமிழகஅரசு கொள்வனவு செய்வதே. எனவே எழுத்தாளர்கள் இந்தியாவில் வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு வெளியீடு செய்யும் போது தமிழகஅரசுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் இரண்டாம் பதிப்புகூட ‘இரண்டாம் பதிப்பு’ என குறிப்பிடப்படாது வெளியிடப்படுகின்றன.

2.1.4 ஈழத்து எழுத்தாளர்கள் தமது நூல்களின் முதல் பதிப்பினை இலங்கையில் வெளியிட்டு வரையறுககப்பட்ட விநியோகம் காரணமாக மீண்டும் தமிழகத்தில் மீள்பதிப்புச் செய்து இந்திய வாசகர்களுக்காக வெளியிடுகின்றனர். மாநிலமொழி அல்லாத நூல்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இருந்தபோதும், தமிழ்மொழி என்பதால் இலங்கை நூல்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லை.

2.1.5 இந்தியாவில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேச தராதர எண்(ISBN) பெறப்படாமைக்கு வெளியீட்டாளர்கள், அச்சகங்கள் “தீர்வை அல்லது வரி“ யிலிருந்து விலக்குப் பெற்று தப்புவதற்காக என கருதலாம்.

2.2 புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள்

2.2.1 1786இல் மலேசியாவின் பினாங்கு தீவினை கைப்பற்றிய பின் ஆங்கிலேயரால் வரவழைக்கப்பட்டு பின் அங்கு குடியேறிய இலங்கைத்தமிழர்களும், 1950களுக்கு முன் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொழில் நிமித்தம் குடியேறிய இலங்கைத்தமிழர்களது வெளியீடுகளும் நூல்களும் எங்கும் பதியப்படவில்லை. மலேசியா வாழ் யாழ்ப்பாணத்தமிழர்கள் ‘இலங்கைத்தமிழர்’ என்ற வரையறைக்குள்ளும் அடக்கப்படவில்லை.

2.2.2 உள்நாட்டு–தமிழ்ஈழ யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், நோர்வே, டென்மார்க், சுவிற்சலாந்து, கனடா, கென்யா, அவுஸ்திடேலியா, ஐக்கியஅமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளில் வாழும் இலங்கைத்தமிழர்களது வெளியீடுகளும் நூல்களும் எங்கும் பதியப்படாது ஆவணப்படுத்தப்படாது காணப்படுகின்றன. புலம்பெயர்ந்தநாடுகளில் புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள் அந்த அந்த நாடுகளில் தேசியநூற் பட்டியலில் இடம்பெறுவதும் இல்லை. ஆவணப்படுத்தப்பட்டு இருப்பில்∕சட்டவைப்பில் வைக்கப்படுவதுமில்லை.

3.இலங்கை தேசியநூற்பட்டியலில் பதியப்படாமை:
3.1 இலங்கையில் வெளியிடப்படும் நூல்களில் சர்வதேசதராதர எண் பெறப்படாதவை தேசிய நூற்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாதது போல் அச்சகம், வெளியீட்டாளர் சட்டப்படி கையளிக்கப்படாத தமிழ் நூல்களைத் ‘தேடிப்பெறல்’ இடம்பெறுவதுமில்லை.

3.2 இலங்கையில் கலாசார அமைச்சின் மூலம் சாகித்திய விருது வழங்கப்பட்ட நூல்கள் சிலவற்றின் பதிவுகளும் தேசிய நூற்பட்டியலில் காணப்படவில்லை. முன்னர் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு மடடும் சாகித்திய விருது வழங்கப்பட்டது. தற்போது பல சிறந்த எழுத்தாளர்கள் இலங்கையில் வெளியிடுவது செலவு அதிகம் என்ற காரணத்தினால் இந்தியாவில் அச்சிடுகின்றனர். அவற்றுக்கு விருதும் வழங்கப்படுகின்றன. ஆனால், இவை ஆவணப்படுத்தப்படவில்லை. தேசியநூற்பட்டியலிலும் இல்லை. அதனால் சட்டவைப்பிலும் இல்லை.

4 உள்நாட்டு யுத்தமும் அதன் தாக்கமும்:
4.1 இலங்கையின் யுத்தசூழல்காரணமாக புலம்பெயர்ந்தோர் தம் நூல்களை இலங்கையில் வெளியிடுவதற்கு பயங்கொள்ளுகின்றனர். ஈழமக்கள் விடுதலை தொடர்பான தகவல்கள் இருப்பின் இலங்கையில் வெளியீட்டாளர்கள் பல விசாரணகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதால் பல நூல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. தற்போது இந்தியாவிலும் வெளியிடுவது சிக்கலாகியுள்ளதால் ஐரோப்பாவில் வெளியீட்டு முயற்சிகள் சிறப்புப்பெற்றுள்ளன. ஆனால் இவை இலங்கையில் தேசிய நூற்பட்டியலில் சேர்ப்பதற்கு எவ்வித பிரயத்தனமும் எடுக்கப்படவில்லை.

4.2 ‘ஈழம்’ என்ற வார்த்தைப்பிரயோகமும் இலங்கையில் நூல்களை அச்சிட்டு வெளியிட பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளமை மற்றொரு காரணமாகும். வடகிழக்கு தமிழ் எழுத்தாளர்கள் தமது விடுதலை பிரச்சினைகள் தொடர்பான இலக்கிய நூல்களை இலங்கையில் வெளியிடாமல் வெளி நாடுகளிலேயே வெளியிட்டனர். இந்தப் பதிப்புத்தளமாக இந்தியாவே அமைந்தது.

4.3 யுத்தசூழலில் இலங்கை வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் ஈழத்தமிழரின் நூல்களை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் எழுத்தாளர்களை அணுகவும் இல்லை. இச்சந்தர்ப்பத்தினை இந்திய வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் பயன்படுத்திக்கொண்டார்கள்.

5. எழுத்தாளர், வெளியீட்டாளரின் புறக்கணிப்பும் திணைக்களத்தின் புறக்கணிப்பும்:
5.1தமிழ் பிரதேசஅச்சகங்களும், வெளியீட்டாளர்களும், பதிப்பகத்தார்களும் அச்சகச் சட்டமூலத்தின்படி சுவடிகள் காப்பகத்துக்கு ஒழுங்காக நூல்களை அனுப்பிவைக்காமை
5.2 தமிழ்நூல்கள் சுவடிகள் காப்பகததக்கு அனுப்ப வேண்டும் என்ற அக்கறையின்மை,
5.3 தேசிய சுவடிகள் திணைக்களத்துக்கு தமிழ் நூல்கள் கிடைக்காமை,
5.4 இலங்கைச்சுவடிகள் திணைக்களத்திலும், தேசியநூலகத்திலும் தமிழில் வேலைசெய்யக் கூடிய தேவையான தமிழ்ஆட்பலமின்மை நூற்பட்டியல் தயாரிப்பில் பின் தங்கியநிலை ஏற்பட ஒரு காரணமாகின்றது. இதனால் எதிர்கால சந்ததியினரின் ஆய்வுகளுக்குத் தேவையான பதிவுகள் குறைவடைந்துள்ளமை மாத்திரமல்லாது ஆவணப்படுத்துதல் இல்லாது போயுள்ளமை பெரும்குறைபாடு.

தீர்வும் முடிவுரையும்:
இலங்கையில் நூற்பதிவு இலக்கத்துடன் வெளியீட்டாளர் வெளியிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு இலங்கை தமிழ்நூல்கள் வெளியிடுவோரை “நூல் பதிவு” இலக்கம் பெற வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டும். நூல் வெளியீட்டாளரும் நூல் பதிவு இலக்கம் பெற ஆர்வம் காட்டவேண்டும். நூல் பதிவு இலக்கம் பெறாமல் வெளியிடுவோரிடம் நூல் வெளியிடுவதை தமிழ் எழுத்தாளர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
வெளியீடுகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு தேசியநூல் பட்டியலில் பதிவு செய்ய வழிகோல வேண்டும். இதற்காக அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும்.
.
தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். பாராமுகப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையிலும், பிறநாடுகளிலும் சட்டப்படி நூல்பதிவுஎண் பெறாத நூல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படுவது மூலம் நூற்பதிவினை ஊக்குவிக்க வேண்டும். அரச சார்பற்ற நிறுவனமாக எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் ஒன்றிணைந்து ஒரு ஆவணகாப் பகத்தினை அமைத்து தமிழ்நூல் ஆவணப்படுத்தலினை மேற்கொள்ள ஆவனசெய்ய வேண்டும்.

புகலிடநாடொன்றில் முழுமையான ஆவண காப்பகம் ஒன்றினை நிறுவுதல் வேண்டும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத்துக்கு எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் நூல்களை வழங்க வேண்டும்
சுவடிகள் திணைக்களம், தேசிய நூலகம் ஆகியன தமிழ் நூல்களை தேடிப்பெற வேண்டும். மற்றும் சர்வதேசதராதர எண் பெறாத நூல்களையும் தேசிய நூல்பட்டியலில் சேர்த்து பதியப்படவேண்டும். மேலும் புலம்பெயர்ந்தவர்களின் நூல்களையும் தேடிப்பெறல் வேண்டும். சுயதணிக்கைக்குட்படாது இலங்கையை சேர்ந்த, புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் நூல்களை சுவடிகள் திணைக்களம், தேசிய நூலகம் ஆகியனவற்றுக்கு வழங்க வேணடும்.

தமிழ் சாகித்திய பரிசு மற்றும் விருதுகள் வழங்கும் போது நூல் பதிவு இலக்கம் பெற்ற நூல்களை மட்டும் மதிப்பீடு செய்து பரிசுகள் வழங்கவேண்டும்.
உசாத்துணை நூல்கள்:
• கனக.செந்திநாதன், ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ கொழும்பு, அரசு வெளியீடு, (1964)
• செல்வராஜ், என்., “மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் -தொகுதி – 1”, ஐக்கிய இராச்சியம், அயோத்தி நூலக சேவைகள்;, 2007.
• செல்வராஜ்,என்., “நூல்தேட்டம் – தொகுதி – 1-5”, ஐக்கிய இராச்சியம், அயோத்தி நூலக சேவைகள், 2002-2008.
• செல்வராஜ், என்., “வேரோடி விழுதெறிந்து”, கொழும்பு, ஞானம் பதிப்பகம், 2009.
• நடராசா, எப், எக்ஸ், சி.,‘ஈழத்துதமிழ் நூல் வரலாறு’ கொழும்பு, அரசு வெளியீடு, 1970.
• பூலேகசிங்கம், பொ., “தமிழ் இலக்கியத்தில் ஈதை;தமிழர் பெருமுயற்சிகள்”, கொழும்பு, குமரன் இல்லம்’, 1970.
• மகாலட்சுமி, தி.,நிர்மலா, சூ., பூமிநாதன், த., ‘சுவடிச்சுடர்’,சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2002.
• ஜெமீல்,எஸ்,எச்,எம், “சுவடிஆறறுப்படை” கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப்பணியகம், 1994
• Maheswaran, R.,(2007), “Bibilometric Study of Tamil Publications in Sri Lanka in 2005” , Colombo, University Librarian association of Sri Lanka.
• National Library of Sri Lanka: Colombo; Sri Lanka National Library Service Board, 1995.

Wimalaratne, K, D, G,. “An Introduction to the National Archives in Sri Lanka,

”Colombo, Social Science Research Centre, National Science Council of Sri Lanka, 1978.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    கம்பியூட்டர் யுகத்தில் நவீன முறைகளில் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதற்கான முறைகள் குறித்து கட்டுரையாளர் சிறிதும் குறிப்பிடவில்ல.இன்னமும் ஈழத்தில் புத்தகம் போட்டால் அதனை ஐரோப்பாவில் சேகரிப்போம் என பத்தாம் பசலித் தனமாகக் கூறுகிறார். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட பின்பு எமது ஆவணங்கள் அழிக்கப்பட முடியாத வகையில் பேணப்படுவதற்கு சிறந்த வழி அவை digitise செய்யப் படுவது தான்.. இந்த வகையில் ஈழத்து எழுத்தாளர் அனைவரினதும் படைப்புக்களை வலைப் பின்னலில் ஏற்றிய நூலகம்.நெற் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்..அது பற்றி கட்டுரையாளர் ஒரு வரியேனும் குறிப்பிடாதது இது பற்றி அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறதா அல்லது வேண்டுமென்றே அதனை இருட்டடிப்பு செய்கிறாரா?

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    இந்தக் கட்டுரையை எழுதியவர் அதனை ஆய்வு என்று அழைக்கிறார். ஆய்வுக் கட்டுரையின் அறிமுகப் பகுதி எந்த நூலிலிருந்து பிரதியெடுக்கப்பட்டது என்பதை தயவு செய்து கூற முடியுமா?

    Reply
  • சுகந்தன்
    சுகந்தன்

    தமிழ்தேசிய ஆவணச் சுவடிகள் என்ற வலைப்பதிவை நாங்கள் நிறுவி அங்கு ஏராளமான ஆவணங்களை பதிவேற்றியிருக்கின்றோம். பதிவேற்றிக் கொண்டிருக்கின்றோம். ஆவணங்கள் அனுப்பி வைக்குமாறு ஆவணங்களை தொகுப்பதில் ஆர்வமுள்ள அனைவரிடமும் வேண்டுதல் விடுக்கின்றோம்.

    http://www.tamilarangam.net/index.php?option=com_xmap&sitemap=1&Itemid=115

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    தாமிரா மீனாஷி சில இளைஞர்கள் தமது ஆர்வத்தினால் இப்படியான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு ஒரு நயா பைசாவும் கிடைக்காது. கால விரயம் – நித்திரை விழிப்பு – தேடல் – ஏமாற்றம் என எத்தனையோ சோகங்கள் இருக்கும். இதில் பணமும் ; தொழில் நுட்ப அறிவில்லாவிட்டால் எவரையோ நம்ப வேண்டியும் இருக்கும்.

    இவர்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் என்றாவது சொல்லி ஊக்கப்படுத்தி ; அவர்களுக்கு அறிவுரை சொல்வோம்.

    இன்று ஒரு சில படங்களைக் கண்டு சீலன் என்ற இளைஞர் பேசினார். தனது வேலை நேரத்தில் அவர் பேசிய போது அவர் மனம் நோகாமல் அவர் ஓய்வாகும் தருணம் வரை காத்திருந்தேன். சாதாரணமாக இது எனக்கு பிடிக்காத ஒன்று. இரண்டு கிளைகளில் கால் வைக்கலாகாது.

    சில ஆவணங்களைத் தருவதாக சிலர் ஏமாற்றிய கதைகளையும் ; தனது இயலாமை மற்றும் ஆர்வம் குறித்தும் ; இதை யாரும் அழிக்காமல் இருக்க படும் அவதிகளையும் குறிப்பிட்டார். எனக்கு அந்த வேதனை தெரியும். நானும் அதை நன்கு அனுபவித்தவன். பிள்ளை பெத்துக் கொள்ளும் அல்லது பெத்தவளுக்குத்தான் அதன் வேதனை தெரியும்.

    அள்ளிக் கொடுக்க வேண்டாம். ஆதரிக்கும் மனப்பாங்காவது நமக்குள் வர வேண்டும்.

    உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் மட்டுமல்ல. தேவைப்படும் போது என்னால் உங்களுக்கு உதவ முடிந்தால் நிச்சயம் கை கொடுப்பேன்.

    Reply
  • மாயா
    மாயா

    மேலே எழுதும் பதிவுகள் நல்ல ஒரு விடயம். பாராட்ட வேண்டும். இருந்தாலும் தம்மை முன்நிலைப்படுத்திய விதத்தில் உள்ள பதிவுகளால் எம்மைப் போன்றவர்களால் சில மன சஞ்சலங்கள் உள்ளன. எவ்வளவோ தெரிந்தவர்கள் அமைதியாக ; அதாவது ஆழத்தின் அமைதி போல இருக்கிறார்கள். கரைகள் ஆக்ரோசப்படுகின்றன.

    உங்கள் பதிவுகள் எங்கேயிருந்து பெறப்பட்டன என்பதை ஆகக் குறைந்து ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும். எல்லாமே எல்லோரும் தந்திருக்க மாட்டார்கள். தந்தவர்களையாவது குறிப்பிடும் போது ஏனையவர்கள் தர முற்படுவார்கள். தேசத்தில் வரும் பதிவுகளுக்கு இதுவே நடக்கும். இது ஒரு சாபக்கேடு. இவை திருத்தப்பட வேண்டும். எனவே தாமிரா மீனாஷிசின் கருத்தில் சற்று உடன்பாடு உள்ளது. சற்று கோபப்பட்டு வார்த்தைகளை வேதனையாகக் கொட்டியுள்ளார். அவை அஜீவனின் பார்வையில் தவறாக இருந்தாலும் ; தாமிரா சொல்வதில் உண்மைகள் உள்ளன. அதை ஆவணங்களை எழுதுவோர் மனதில் கொள்ள வேண்டும். கிணத்துத் தவளைகளாக எழுதியுள்ளார்கள் என யாரும் அபிப்பிராயம் கொள்ளலாகாது.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    அஜீவன்

    உங்கள் கருத்திற்கும் நல்ல விஷயங்களைத் தொடர்ந்து ஆதரிக்கும் உங்கள் மனப்பாங்கிற்கும் மிக்க நன்றி.

    மின்வலையில் நூலகம் (noolaham.net) ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவளித்த அன்பர்களின் பெயர்களையும் அதன் உருவாக்கத்தில் அயராது உழைத்த இளைஞரதும், மேலும் அதைத் தொடர்ச்சியாக இயங்க வைக்க அயராமல் உழைப்பவர்களின் விபரங்களையும் நீங்கள் நூலகத்தின் முகப்பு பக்கத்தில் காணலாம்.

    துரதிர்ஷ்ட வசமாக இதன் உருவாக்கத்திலோ அல்லது தொடரும் இயக்கத்திலோ எனது பங்கு அணுவளவும் இல்லை என்பதை வருத்ததுடன் அறியத்தருகிறேன்.

    “இனிமேல் எரிக்க முடியாத எமது நூலகம்” என இதை வருணித்தார் எழுத்தாளர் அ. முத்துலிங்கம். ஆனால், ஒரு பல்கலைக் கழகத்தில் நூலகராகப் பதவி வகிக்கும் கட்டுரையாளருக்கு இது பற்றி தெரியாமல் போனதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    பதவி உயர்வுக்காக நாலு புத்தகங்களைப் பிரதியெடுத்து ஆய்வுக் கட்டுரை எழுதுபவர்களுக்கெல்லாம் தேசம்நெற் இடமளிக்கிறது என்பதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.

    இந்த மகத்தான ஆய்வைப் படித்தபின்பு எனது மனதில்பட்ட ஒரு விஷயம்: இந்த ஆய்வாளர் தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தலைமை நூலகராக நியமனம் பெறுவதற்கு மிகப் பொருத்தமான தகைமையுடைவர் என்பதே.. (இப்போது அந்தப் பதவி வெற்றிடமாக உள்ளது) அங்கே பதவியிலுள்ள ஏனைய ஆய்வுச் சிங்கங்களைவிட cut & paste கட்டுரை எழுதுவதில் இவர் ஒன்றும் சளைத்தவர் அல்ல. இத்தகையவர்கள் தான் இன்றைய தமிழ்சமூகத்தின் அறிவுஜீவிகள் என்ற யதார்த்தம் மிக்க மனக்கவலையைத் தருகிறது.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    இப்போது தாங்கள் எழுதியிருக்கும் கருத்துக்கு நன்றி தாமிரா மீனாஷி. உங்களது இப்படியான கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. என்ன செய்ய எங்காவது எடுக்கும் செய்திகளுக்கே கேட்டசி எனப் பொடாத தமிழ் ஊடகங்கள் தானாகவே தேடியதாக பில்டப் காட்டுகிறார்கள்.

    தாமிரா மீனாஷி மற்றும் மாயாவின் கருத்துகள் யதார்த்தமானவை. எல்லோருமே தகவல்களை தர மாட்டார்கள். தருவோரையாவது குறிப்பிட்டால்தான் நன்றிகளும் வாழ்த்துகளும் கிடைக்கும். மேற்கத்திய நாடுகளுக்கு வந்தாலும் ; மேற்கத்திய நாட்டவர்களது நாகரீகத்தை நாம் சிறிதளவாவது பின்பற்ற வேண்டும். நன்றி.

    மாயா எழுதியுள்ள “தேசத்தில் வரும் பதிவுகளுக்கு இதுவே நடக்கும்.” எனத் தெரிவித்திருக்கும் கருத்து சிந்திக்க வைக்கிறது.

    மேலே உள்ள ஆவணப்படுத்தல்களை ஒரு தேவைக்காக எவரும் தேவையான பகுதியை மட்டும் எடுக்க முடியாதபடி பீடீஎப் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. நான் மட்டும் வாழ வேண்டும் எனும் மனநிலையை இங்கே காண்கிறேன். நான் என்ற அகந்தையையே இங்கே காண முடிகிறது. ஒருவனுடைய தேவைக்காக அவனுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ள வழி செய்ய வேண்டும். அதன் பெயர்தான் தோழமை. வார்த்தைகளில் தோழமை என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

    மேற்கத்திய நாடுகளில் வல்லோர் மற்றும் கற்றோர் கண்டு பிடித்ததை அவன் எமக்குத் தந்ததால்தான் ; நாம் இங்கு கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இல்லாவிட்டால் நம்மவர் வைத்தியங்கள் / சாத்திரங்கள் / கலைகள் போல் அழிந்தே போகும்.

    இதை இன்றைய இளைஞர்கள் கருத்தில் எடுக்க வேண்டும். கற்றதை சொல்லிக் கொடு. பொது விடயங்களை திறந்து வை. அவை பல்கிப் பெருகும். இல்லாவிட்டால் உன் மரணத்தோடு அழிந்து விடும். ஈழ விடுதலைப் போராட்டம் அவ் வகையான ஒன்று.

    Reply
  • சுகந்தன்
    சுகந்தன்

    இந்த ஆவணங்களை இவ்வளவு நீண்ட நாட்களாக தொகுத்து கட்டிப்பாதுகாத்து அதனை வலைபதிவேற்றுவதற்காக தந்தவர்கள் செய்த வரலாற்றுக கடமை அளப்பரியது. பாராட்டுதற்குரியது. எவரால் இந்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டது என்பதையும் வலைப்பதிவில் குறிப்பிட அவர்கள் விரும்பும் பட்சத்தில் அந்த முழு உரிமையையும் அவர்களுக்கு அளித்தோம். சிலர் அதனை விரும்பினார்கள் இன்னும் சிலர் இதனை விரும்பவில்லை. எவ்வாறாயிருப்பினும் அவர்கள் பங்களிப்பு என்பதை எள்ளளவும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதுவும் அதில் உள்ள உழைப்பினை ஏற்றத்தாழ்வின்றி ஏற்றுக்கொள்ள எல்லோரும் முன்வர வேண்டும். நன்றி

    Reply
  • சுகந்தன்
    சுகந்தன்

    /மேலே உள்ள ஆவணப்படுத்தல்களை ஒரு தேவைக்காக எவரும் தேவையான பகுதியை மட்டும் எடுக்க முடியாதபடி பீடீஎப் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. நான் மட்டும் வாழ வேண்டும் எனும் மனநிலையை இங்கே காண்கிறேன். நான் என்ற அகந்தையையே இங்கே காண முடிகிறது./

    வரலாற்று ஆவணங்களை சிதைக்காமல் மாற்றம் செய்யாமல் உள்ளதை உள்ளபடியே உண்மை நகலாகவே ஆவணப்படுத்துவது சிறந்ததா அல்லது குறிப்பிட்ட பகுதிகளை அகற்றி தங்களுக்கு இலாவகமாக பாவிக்க கூடிய இலகுவான வழிவகையில் ஆவணப்படுத்துவது சிறந்ததா ? தொழில்நுட்பத்தை பாவித்து இநது பி.டி.எவ் வடிவத்தையே வெட்டிச் செதுக்கி மாற்றமுடியும் என்பது வேறு கதை. யாரும் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையிலேயே இவைகள் எல்லாருக்கும் கிடைக்கும் வகையிலேயே பதிவு ஏற்றப்பட்டிருக்கின்றது என்பதை மறந்துவிட்டு எப்படி இந்த வார்த்தைகளால் அலட்சியம் செய்தீர்கள் என்பது மனவருத்தம்.

    Reply
  • N.Selvarajah, Noolthettam
    N.Selvarajah, Noolthettam

    நூலகம்.நெற் இணையம் தொடர்பாக இங்கு பின்னூட்டங்கள் விடப்பட்டுள்ளன. அத்திட்டத்தில் பங்கேற்றவன் என்ற வகையில் சில கருத்துக்கள்:

    பதிப்புரிமைச்சட்டங்கள்- ஒரு நூலை ஆசிரியரின் அனுமதியின்றி மின்நூலாகப் பெணிப்பராமரிக்க அனுமதிப்பதில்லை. இந்தச் சிக்கலை சட்டபூர்வமாக இயங்கவிளையும் எந்தவொரு இணைய நூலகமும்> இணைய ஆவணக்காப்பகமும் முகம்கொடுத்தே வருகின்றன. அந்த வகையில் நூலகம்.நெற்றும் இதனை எதிர்கொண்டிருந்தது. பேராசிரியர் கைலாசபதியின் நூல்களை வலையமைப்பிலிருந்து மீளப்பெறநேர்ந்ததை நூலகம் டொட் நெற்றுடன் தொடர்புள்ளவர்கள் அறிவார்கள்.

    இங்கு பின்னூட்டத்தில் குறிப்பிட்டதுபோல இணைய நூலகங்களை முழுமையாக ஒருபோதும் தனிநபர் அல்லது தனியார் குழுவினரால் பேணுவது சிரமம். பதிப்புரிமைச் சட்டங்கள் இதற்கு எப்போதும் தடையாகவே இருக்கப்போகின்றன.

    மதுரை புரொஜெக்ட் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறுகின்றது. ஏராளமான நிதியுதவியுடன் சங்க இலக்கியங்களை (பதிப்புரிமை அற்றவை) இத்தளத்தில் பதிவுசெய்துள்ளனர். மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் இவ்வாறே திருவாசகத்தையும் பிற சமய இலக்கியங்களையும் பதிவிட்டுவைத்திருக்கிறார். இங்கு பின்னூட்டங்களில் குறிப்பிட்டதைவிட பலரும் இணையங்களில் நூல்களை பதிவுசெய்கிறார்கள். மற்றுமொரு உதாரணம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்துசென்ற திரு குமரேசன் அவர்களின் விருபா டொட் கொம்.

    மகேஸ்வரனின் ஆய்வு- செம்மொழி மகாநாட்டுக்காக வழங்கப்பட்டதாக அறிகின்றேன். அவர் இலங்கைத் தேசிய நூலகத்தின் தேசிய நூற்பட்டியலில் உள்ள குறைபாடுகளை நூல்தேட்டத்துடன் ஒப்பிட்டுக் கண்டறிந்து குறிப்பிடுகின்றார். இங்கு நூற்பட்டியல்துறை பற்றிய அறிதல்களையே இங்கு முதன்மைப் படுத்தியிருக்கின்றார் என்று கருதுகின்றேன். அதனால் எழுத்துருவிலும் மின்னுருவிலும் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை இங்கு ஒரேபார்வையில் இவர் ஆய்வுக்கு எடுத்திருக்கவில்லை என்று உணரமுடிந்தது.

    இங்கு மற்றுமொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. கட்டுரையை எழுதவதற்கு உதவிய நூல்களை இவர் கட்டுரையின் இறுதியில் பட்டியலிட்டிருக்கிறார். அந்தவகையில் வரவேற்கத்தக்கதே. இன்றளவில் எனது நூல்களையும்> கட்டுரைகளையும் எடுத்தாண்ட பலர் அதுபற்றி மூச்சே விடாதிருக்கும் நிலையில் இவர் பரவாயில்லை என்றே கருதுகின்றேன்.

    Reply
  • visvan
    visvan

    பெரும்பான்மையான இலங்கைத் தமிழ் ஆய்வுகளின் பயன்மதிப்பின்மைக்கு இவ்வாறான ஆய்வுகள் நல்ல உதாரணம். நூலகம்.நெற் (தற்போது ) ஏறத்தாழ ஐந்து வருடங்களுக்கு மேலாக புத்தகங்கள் சஞ்சிகைகளை ஆவணப்படுத்தி வருகின்றது. தற்போது ஏறத்தாழ 3500 க்கு மேற்பட்ட புத்தகங்களும் சஞ்சிகைகளும் அதில் உள்ளன.

    தவிரவும் நூலகம்.நெற் இன் பாதிப்பினால் இவ்வருட ஆரம்பத்திலிருந்து தமிழ் தேசிய ஆவணச்சுவடிகள் என்கிற இணைய ஆவணக்காப்பகம் தன்னிடமிருந்த நூல்களோடு நூலகத்திலிருந்து தரவிறக்கி மீள் பதிவேற்றியும் ஒரு ஆவணக்காப்பகத்தை நடாத்தி வருகிறது.

    ஆக தாமிரா சொல்வது போல் ஆவணப்படுத்தல் பற்றிய ஆய்வை மேற்கொண்டவருக்கு டிஜிட்டல் ஆவணப்படுத்தல் தெரியாமலிருந்தது என்பதும் அவ்வாறு டிஜிட்டல் ஆவணப்படுத்தலை மேற்கொண்டுவரும் நூலகம்.நெற் ஐ அறியாதிருந்ததும் என்பது அவரது புலமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. தெரிந்தும் அதனைத் தவிர்த்திருப்பாராகில் அதுவும் கூட அவரது புலமையையும் தகுதியையும் கேள்விக்குட்படுத்தியே தீரும்.

    Reply
  • Naathan
    Naathan

    1. கட்டுரையாசிரியர் முடிவுரையில் குறிப்பிட்ட நூற்பதிவு எண் பெறுவதன் முக்கியத்துவம் பற்றி கடந்த பத்தாண்டுகளாக ந. செல்வராஜா சொல்லிவருகிறார். (பார்க்க: செல்வராஜாவின் நூலியல் பதிவுகள் நூல், நூல் தேட்டம் முதற்றொகுதி முன்னுரை) புகலிட நாட்டு ஆவணக் காப்பகமொன்றையும் செல்வராஜா தொடங்கியுள்ளார்.

    அவ்வகையில் ஏற்கனவே நன்கு அடையாளங் காணப்பட்ட ஒரு விடயப்பரப்பை எடுத்து அரைத்த மாவை அரைப்பதாகவே கட்டுரை உள்ளது.

    2. வெளியீடுகளை ஆவணப்படுத்துதல் – வெளியீடுகள் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துதல் ஆகிய இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டதால் கட்டுரை தெளிவற்றுச் சாம்பாறாகியுள்ளது.

    நூல்தேட்டத்தில் 6000 நூல்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. அது ஒரு விபரப்பட்டியல். அப்பட்டியலைப் பயன்படுத்தி நூலொன்றைப் பற்றிய தகவலை அறியும் ஒருவர் அதனைத் தேடி நூலகங்களுக்குச் செல்லலாம்.

    Reply