பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.

K Thevathasanசினிமாத் துறையில் மிகுந்த ஆர்வம் உடையவரும் இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்தவருமான கனகசபை தேவதாசன் இன்று (நவம்பர் 15 2010 முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். நியூ மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் 2008 யூனில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களுக்கு மோலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தேவதாசன் தனக்கு விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றார். இதே கோரிக்கைகளுக்காக முன்னரும் உண்ணாவிரதம் இருந்து உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். தற்போது அந்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில் தேவதாசன் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றார்.

இந்த உண்ணாவிரதம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

”2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன?” எனக் கேட்டு நவம்பர் 21 2009ல் அப்போதைய நீதியமைச்சர் மகிந்த மொறகொடவுக்கு  தேவதாசன் கடிதம் எழுதி இருந்தார்.

தேவதாசன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித நீதி விசாரணையும் இன்றி காலவரையறையற்று தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் 20 வருடங்களாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொண்ட அரசு சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகளை நியாயமான முறையில் விடுதலை செய்து வருகின்றது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் அடங்குகின்றனர். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டு இருந்த ஒருவரை தொடர்ந்தும் நீதி விசாரணையின்றி காலவரையறையின்றி தடுத்து வைத்திருப்பது எவ்வாறு நீதியாகும் என தமிழ் மக்களிடையே கேள்வி எழுகின்றது. தேவதாசன் மட்டுமல்ல பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பய்ங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறான நியாயமான நடவடிக்கைகள மட்டுமே தமிழ் மக்களிடம் அரச மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் என்பது தமிழ் அரசியல் ஆர்வலர்களுடைய கருத்தாக உள்ளது.

கனகசபை தேவதாசன் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது தொடர்பான முன்னைய பதிவு:

சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *