கிளிநொச்சியை இலங்கை அரசபடைகள் கைப்பற்றியதாக ஜனவரி 2ல் அறிவிக்க அதற்கு பல்லாயிரம் மைல்கள் தொலைவில் மத்திய கிழக்கில் காஸாவிற்கு ஜனவரி 3 அன்று இஸ்ரேலியப் படைகள் அனுப்பப்பட்டு காஸா முற்றுகைக்கு உள்ளானது. காஸாவாக இருந்தாலென்ன கிளிநொச்சியாக இருந்தாலென்ன யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கங்கள் ஒரே மாதிரியானவையாக அதிகார வேட்கை குன்றாததாக அப்படியே இருக்கின்றது. ஆனால் காஸாவிலும் சரி கிளிநொச்சியிலும் சரி பொதுமக்களுக்கு ஏற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இழப்புகளும் துயரங்களும் தொடர்கதையாகத் தொடர்கிறது.
‘சுதந்திரக் காற்றை சுவாசிக்க வன்னி மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பேன்’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது வாக்கு வங்கியை நிரப்புவதற்கு ஆரம்பித்து வைத்த யுத்தம் ஒரு குறியீட்டு வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்து உள்ளது. அதே பாணியில் பெப்ரவரி 10ல் வரவுள்ள தேர்தலில் தனது வாக்கு வங்கியை நிரப்ப இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மட் தனது துருப்புக்களை காஸாவிற்கு அனுப்பி உள்ளார். ‘இது பாலஸ்தினியர்களுக்கு எதிரான யுத்தமல்ல ஹமாஸின் ஏவுகணைகளை அழிப்பதற்கான யுத்தம்’ என்று விளக்கம் அளிக்கும் எகுட் ஒல்மட் அங்கு சில தினங்களுக்கு உள்ளாக கொல்லப்பட்ட பல நூற்றுக் கணக்கான பாலஸ்தீனிய பொது மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. அந்த மரணங்களுக்கு ஹமாஸே பொறுப்பு என்று பொறுப்பற்ற விதத்தில் பதிலளிக்கிறார்.
கிளிநொச்சியினதும் காஸாவினதும் புவியியல் அமைவுதான் மாறுபட்டு உள்ளதே அல்லாமல் இந்தப் பிரதேசங்களின் யுத்தப் பின்னணியும் அதில் ஈடுபடுபவர்களின் பின்னணியும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையே. பிரித்தானிய காலனியாதிக்கத்துக்குள் இருந்தது உட்பட, இலங்கை – இஸ்ரேல் உள்நாட்டு யுத்தங்களில் ஒத்த புள்ளிகள் நிறையவே உள்ளன. மேலும் தமிழீழ விடுதலை இயக்கங்கள் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பிடம் பயிற்சி எடுத்ததும், இலங்கை இராணுவம் மொசாட்டிடம் பயிற்சி எடுத்ததும் தெரிந்ததே. பிற்காலங்களில் இஸ்ரேலிய இராணுவம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஒரே காலப்பகுதியில் பயிற்சிகளை வழங்கியதும் அம்பலமாகி இருந்தது.
இலங்கை, இஸ்ரேலிய அரசுகளின் ஒடுக்குமுறையும் கட்டற்ற இராணுவப் போக்கும் பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. இரு அரசுகளுமே பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதாகக் கூறிக்கொண்டு தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தங்கள் இராணுவ இயந்திரத்தை முடுக்கிவிட்டு உள்ளனர். தன்னால் வளர்க்கப்பட்ட பின்லாடனால் (அல்கைடா) செப்ரம்பர் 11, 2001ல் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலை வைத்துக் கொண்டு உலகின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களை எல்லாம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. அந்த முத்திரை விடுதலைப் புலிகளுக்கும் ஹமாஸிற்கும் சேர்த்துக் குத்தப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் அந்த பயங்கரவாத முத்திரையைக் குத்தவதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது. இன்று இலங்கை இஸ்ரேல் உட்பட அரச பயங்கரவாதங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறது அமெரிக்கா. ‘இஸ்ரேல் தனது நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை (காஸா மீது தாக்குதல் நடத்துவதை) எடுப்பது தவிர்க்க முடியாது’ என்று ஜோர்ஜ் புஸ் காஸா மீதான தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். உலக சமாதானத்தைச் சொல்லி ஆட்சியைக் கைப்பற்றிய தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, காஸா பற்றி மௌனமாகவே இருக்கிறார். இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக பதவியேற்க உள்ள அவர் இஸ்ரேல் விடயத்தில் ஜோர்ஜ் புஸ்ஸின் தடங்களையே தொடருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து அரசுகள் மட்டும் தான் அதிகார வேட்கையுடன் நடந்துகொள்கின்றன என்று கூறிவிட முடியாத அளவுக்கு அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களும் அதிகார வேட்கையுடனேயே இயங்குகின்றனர். இதில் விடுதலைப் புலிகளும் ஹமாஸ்ம் ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்கள். தங்களுடன் உடன்படாதவர்களை தீர்த்துக் கட்டும் இவர்களின் அரசியல் இவர்களின் அமைப்புகளில் ஸ்தாபனப்படுத்தப்பட்டு உள்ளது. ஹமாஸ்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள வேறுபாடு, முன்னையது மத அடிப்படைவாத அமைப்பு பின்னையது இன அடிப்படைவாத அமைப்பு. இரு அமைப்புகளுமே மக்கள் விடுதலை என்ற பெயரில் அவர்களை மந்தைகளாகவே நடத்துகின்றனர்.
யசீர் அரபாத்தின் ‘பற்றா’ இயக்கத்தைசச் சேர்ந்த பாலஸ்தீனிய ஜனாதிபதி மொகமட் அப்பாஸ், ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ பலம் அழிக்கப்படுவதை மறைமுகமாக விரும்புகிறார். ஹமாஸ் காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளது. ‘பற்றா’ வெஸ்ற் பாங் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்த உள்ளது. இந்த ‘ஹமாஸ் – பற்றா’ முரண்பாட்டில் ‘பற்றா’ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சிலரை ஹமஸ் இந்த போர்ச் சூழலிலும் படுகொலை செய்து உள்ளது. ஆனால் பாலஸ்தீனிய பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படுவதால் குறைந்த பட்சம் மொகமட் அப்பாஸ் இஸ்ரேலுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டு உள்ளார்.
ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறில்லை. தமிழ் மக்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை தங்கள் அதிகார ஆசையை தக்க வைத்துக் கொண்டால் சரி என்று புலி எதிர்ப்பு அணிகள் எல்லாம் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் தொங்கிக்கொண்டு உள்ளனர். இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் வன்னி யுத்தத்தில் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி மூச்சுக் கூடவிடவில்லை. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்று அர்த்தமில்லை. ‘புலிக்கு இறைத்த நீர் வாய்கால் வழியோடி மக்களுக்கும் பொசிந்து உள்ளது.’
இலங்கையில் உள்ள புலியெதிர்ப்பு தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கை அரசின் தயவில் தங்கி இருப்பதாலும் புலிகள் பலமிழந்து போகும் பொது ஏற்படும் வெற்றிடத்திற்கு தாங்கள் தெரிவு செய்யப்படுவோம் என்ற கனவிலும் மறந்துபோயும் மகிந்தவின் மனம் கோணாமல் நடந்தகொள்ள வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் ‘அதிகாரத்தை தகர்கிறோம் பார்’ என்று இஸங்கள் பேசியவர்களும் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் ஒரு துண்டைப் பிடித்தவிட வேண்டும் என்று உன்னி உன்னிப் பார்க்கிறார்கள். மக்களின் பக்கத்தில் நின்று பிரச்சினையை நோக்க இவர்கள் தயாரில்லை. இவர்களது புலியெதிர்ப்பு ‘கட்ராக்’ நோயினால் இவர்களுக்கு பார்வைக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு வலது – இடது என்று விதிவிலக்கு எதுவும் இல்லை.
இவ்விடத்தில் கட்டுரையாளர் நஜிமில்லாஹி தேசம்நெற்றில் எழுதிய கட்டுரையின் ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ”இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல. எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டி வளர்க்கப்படுகிறது.
எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.”
கட்டுரையாளர் நஜிமில்லாஹியின் அச்சம் (முழுமையாக அவருடைய கட்டுரையைப் படிக்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்: பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி : http://thesamnet.co.uk/?p=6137) மிகவும் நியாயபூர்வமானது.
கிழக்கை வெற்றி கொண்ட மகிந்த அரசு முற்றிலும் ஒரு பொம்மை மாகாணசபையொன்றை கிழக்கில் உருவாக்கி உள்ளது. மகிந்த மாத்தையாவின் பஸ்ஸில் எங்கு போகிறோம் என்று கேட்காமலேயே தொங்கிக்கொண்டு ஏறியவர்கள் கருணா – பிள்iளையான் அணியினர். மகிந்த மாத்தையாவின் உண்மையான ‘கோளயாக்கள்’. அப்படி இருந்தும் கிழக்கு மாகாண சபைக்கு குறைந்தபட்சம் 13வது திருத்தத்தைக் கூட முழுமையாக கொடுக்க ஜனாதிபதி தயாராகவில்லை.
இப்போது வடக்கை விடுவிக்கிறேன் சுதந்திரக் காற்றை வீசச் செய்கிறேன் என்று கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவுக்கு இராணுவம் புறப்பட்டு உள்ளது. வடக்குக்கான உள்ளுராட்சித் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசு ஜனவரி 6ல் அறிவித்து உள்ளது. கிழக்கு போன்று வடக்கிலும் டக்ளஸ் மற்றும் புலியெதிர்ப்பு அணிகளின் ஆதரவுடன் தேர்தல் இடம்பெற்று ஒரு பொம்மை அரசு உருவாக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளே நிறைய உள்ளது. அந்த பொம்மை அரசுகளில் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் புலத்தில் இருந்தும் சிலர் ஓடிச்சென்று தங்கள் முன்னாள் அமைப்புகளுடன் ஒட்டிக்கொள்ளலாம். சின்னமாஸ்ரர், பிரபாகரன், ஜெகநாதன், குமாரதுரை என்று இந்தப் பட்டியல் இன்னும் இன்னும் நீளலாம்.
ஆனால் இந்த வடக்கு – கிழக்கு மாகாண அரசுகள் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளைத் தன்னும் தீர்க்கக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.
இன்று மக்களுக்கு அரசியல் தீர்வு என்பதிலும் பார்க்க அவர்கள் சுவாசித்து தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது உண்மை. அந்த வெளி எதிர்காலத்தில் நிரந்தரமாக பிரச்சினையைத் தீர்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். இவ்விடயத்திலேயே மகிந்தவின் அரசு மீதான நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிறது. பொங்கல் பரிசாக குடாநாட்டு மக்களுக்கு 24 மணிநேர மின்சாரம், கிழக்கு மக்களுக்கு அபிவிருத்தி என்ற கதையாடல்கள் மூலம் அடிப்படைப் பிரச்சினையை அரசு ஓரம்கட்டப் பார்க்கிறது. கிளிநொச்சி பிடிக்கப்பட்டதை தனது கட்சி அலுவலகங்களுடாக வெடிகொழுத்திக் கொண்டாடிய அரசு, கொழுத்திய வெடியில் இலங்கை மக்களின் பால்மா பிரச்சினை அடிபட்டுப்போனது.
இலங்கை – சிங்கள, தமிழ், முஸ்லீம் ,மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பி குறுகிய சுயநல அரசியல் நோக்குடன் செயற்பட்ட காலம்காலமாக பதவிக்கு வந்த அரசுகள், நாட்டை இந்த யுத்தச் சூழலுக்குள் தள்ளி சிரழித்து உள்ளன. இந்த நச்சுச் சூழலில் இருந்து உடைத்து வெளியே வந்து மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் கவனம்கொள்ளும் என்ற சிறு நம்பிக்கையை ஏற்படுத்தும் எவ்வித சமிஞ்சையையும் அவர்கள் காட்டவில்லை.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காது என்ற பாடத்தை இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளன.
ஹமாஸ் – புலிகள் வானத்தில் இருந்து பூமியில் தற்கொலைப் போராளிகளாகக் குதிக்கவில்லை. அங்கிருந்த அரசியல் சூழல் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. அந்த அரசியல் சூழலில் அடிப்படை மாற்றம் ஏற்படும்வரை ஹமாஸை – புலிகளை அழிக்க முடியாது. ஹமாஸ்க்கும் புலிகளுக்குமான தேவை இருக்கும் வரை சேக் அமட் யசின் – பிரபாகரன் போன்றவர்கள் தங்கள் பயங்கரவாத அரசியலை தொடர்வதில் அவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை.
இன்று (ஜனவரி 6) இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் காஸாவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 மாணவ மாணவியர் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற கோரச் செய்தி வெளிவந்தது. செஞ்சோலையில் கடந்த ஆண்டு 64 மாணவிகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. தவறான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எப்படி விமானத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்? ஹமாஸ் – புலிகள் பொறுப்பற்று நடந்தால் அவைசார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படித் தண்டிக்க முடியும்? இவ்வாறான தாக்குதலை நடத்துகின்ற இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் பொறுப்பென்ன?
சேக் அசாத் யசின் – பிரபாகரன் ஆகியோரின் விளைநிலங்களே இந்த இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் அரச பயங்கரவாதம் என்றால் மிகையல்ல.
இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது பற்றியது அல்ல எமது ஆதங்கம். அந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்படுவது பெரும்பாலும் அப்பாவிப் பொது மக்களும், பலாத்காரமாகவும் பொருளாதார நெருக்குதலாலும் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு சிறிய பயிற்சியுடன் முன்னரங்க காவல்நிலைகளில் விடப்படும் இளம் போராளிகளின் இழப்புமே. மேலும் பொருளாதார அடிமட்டத்தில் இருந்து தள்ளப்பட்ட இராணுவ வீரர்களதும் இழப்பும். இந்த இழப்புகளின் மீது பெறப்பட்டது தான் இந்த கிளிநொச்சி நகர் மீதான வெற்றி. இது ஒரு குறியீட்டு வெற்றியே அல்லாமல் வேறொன்றுமல்ல.
அந்த வெற்றியின் மீது காதல் கொண்டு அறிக்கைகளும் கருத்துகளும் தூள் பறக்கின்றன. அதில் புலம்பெயர் தீவிர புலி எதிர்ப்பு அணியும் பின்நிற்கவில்லை. மகிந்த அரசு ஏதோ தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்துவிட்டதாக இவர்கள் போடும் கூத்து தாங்க முடியவில்லை. ‘புலிகள் அங்கு தாக்கி விட்டார்கள். இங்கு தாக்கிவிட்டார்கள். தமிழீழத்தை அண்மித்துவிட்டோம்’ என்று புலம்பெயர் புலி அதரவு வாலாக்கள் போட்ட கூத்திற்கு எவ்வித குறைவில்லாமல் புலம்பெயர் மகிந்த ஆதரவு வாலாக்கள் கூத்தடிக்கிறார்கள்.
காஸா மீதான இஸ்ரெலின் தாக்குதலைக் கண்டிக்கும் ஜனநாயகம் – மாற்றுக் கருத்து பேசுபவர்கள் முரண்நகையாக இலங்கை அரசு வன்னி மீது மேற்கொள்ளும் முற்றுகையை வரவேற்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டாலேயே தமிழ் மக்களுக்கு விமோசனம் என்றும் இலங்கை அரசபடைகளின் வன்னி யுத்தம் தவிர்க்க முடியாதது என்று விளக்கம் வேறு. யுத்தம் என்பது புனிதமானது அல்ல. ஹமாஸ் நடத்தும் யுத்தமும் புனிதமானதல்ல. ஹமாஸ், விடுதலைப் புலிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களுமல்ல. சளைத்தவர்களுமல்ல. எதிலும். இஸ்ரேலினுடைய இராணுவ நடவடிக்கை எவ்வளவு மோசமானதோ அதேயளவு இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளும் அடிப்படையில் மோசமானதே. ஹமாஸ் விடுதலைப் புலிகள் இரண்டுமே ஒரே அடிப்படைவாத அரசியலையும் ஒரே மாதிரியான அரசியல் மற்றும் இராணுவ தந்திரோபாயங்களைக் கொண்ட அமைப்புகளே. இவற்றில் ஏற்ற இறக்கங்கள் பார்ப்பதில் அர்த்தமில்லை.
அடிப்படை அரசியல் பிரச்சினைக்கான தீர்வை கொண்டிராத இராணுவ நடவடிக்கைகளும், வெற்றிகளும் இஸ்ரேல் – இலங்கையில் மட்டுமல்ல உலகின் எப்பாகத்திலும் நிரந்தர அமைதியை ஏற்படுத்தப் போவதில்லை. இதந்தப் பாடம் இஸ்ரேலுக்கோ இலங்கைக்கோ புதிதல்ல. 2006ல் இஸ்ரேல் லெபனானில் இதைக் கற்றுக்கொண்டது. ஆனால் புரிந்து கொள்ளாமல் மீண்டும் கஸாவில் அதே தவறைச் செய்கிறது. யாழ்ப்பாணத்தை, கிழக்கை இலங்கை அரசு வெற்றி கொண்டது. ஆனால் அங்கு வன்முறைகள் தொடர்கிறது. இன்றுள்ள இராணுவச் சமநிலை மாற்றப்படாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இதில் இந்தியா உட்பட சர்வதேச அரசியல் மாற்றங்கள் அரசியல் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது இராணுவச் சமநிலையை மாற்றமடையச் செய்யலாம். இவை தனியாக விவாதிக்கப்பட வேண்டும்.
ஹமாஸ் – விடுதலைப் புலிகள் போன்ற அடிப்படைவாத இயக்கங்கள் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க முடியாது. ஆனால் மட்டற்ற அரச பயங்கரவாதம் அவர்களின் பயங்கரவாதத்திற்கு விளைநிலமாக உள்ளது. முன்னையதற்கு முற்றுப் புள்ளி வைத்து அடிப்படை அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் அதுவே ஹமாஸ் – புலிகளின் அடிப்படைவாத அரசியலின் முடிவின் ஆரம்பமாக இருக்கும். அடிப்படை அரசியல் மாற்றம் இல்லாத இந்த இராணுவ நடவடிக்கைகளும் வெற்றிகளும் அடிப்படைவாத பயங்கரவாத அரசியலுக்கான விளைநிலங்களாக மாறுவது தவிர்க்க முடியாது. இந்தப் அடிப்படைப் பாடத்தை திரும்பத் திரும்பக் கற்றுக்கொண்டும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். இஸ்ரேலிய அரசு – இலங்கை அரசு – ஹமாஸ் – புலிகள் புரிந்துகொள்ள மறுக்கும் அரசியலுக்கு பாலஸ்தீனியர்களும் தமிழர்களும் செலுத்தும்விலை மிக மிக அதிகம்.
ashroffali
திரு ஜெயபாலன் அவர்களின் கட்டுரையுடன் ஓரளவுக்கு நானும் ஒத்துப் போகின்றேன். உண்மையில் முன்னைய அரசாங்கங்கள் கட்டவிழ்த்து விட்ட அரச பயங்கரவாதமே இன்று புலிகளின் பயங்கரவாதத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. அது உண்மைதான். அதற்காக நாங்களும் வன்முறைக்கு வன்முறை தான் பதில் என்பதாக கோதாவில் இறங்குவது முட்டாள்தனமானது.
ஜாலியன் வாலா பாக் படுகொலைகளின் பின்னும் அகிம்சா வழியில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்டதன் காரணமாகவே இந்தியாவின் விடுதலைப் பயணத்துக்கான மக்கள் ஆதரவைக் கட்டியெழுப்பவும் அதனைத் தக்க வைத்துக் கொள்ளவுமான சூழலைப் பேணிக்கொள்ள முடிந்தது. அகிம்சா வழியில் போராடியதன் காரணமாகவே சிறை வாழ்க்கையின் பின்னாயினும் இனவெறி அரசைத் தூக்கியெறிந்து விட்டு தென்னாபிரிக்காவின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள மண்டேலாவிற்கு முடியுமாக இருந்தது. இனஒதுக்கல் கொள்கைக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடிந்தது. இவ்வாறாக இன்றைய உலகில் ஜனநாயக வழி மூலமான செயற்பாடுகளின் வெற்றிகள் குறித்து எண்ணற்ற எடுத்துக் காட்டுகளை முன்வைக்கலாம்.
இலங்கையிலும் கூட அதற்கு மேலான அரசியல் சாதகங்களை அடைந்து கொள்வதற்கான பல வாய்ப்புகள் தமிழ்த்தலைவர்களால் தட்டிக் கழிக்கப்பட்டன. அல்லது தமது பரம்பரை அரசியல் வாய்ப்புக்காக ஒட்டுமொத்த தமிழினத்தின் நன்மை பலி கொடுக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கையின் முன்னைய அரசுகளின் அரச பயங்கரவாதம் எவ்வாறு புலிகளின் பயங்கரவாதத்திற்கு கால்கோளாக அமைந்ததோ அதை விட சற்றும் குறையாத அளவில் அல்லது அதற்கும் மேலாக தமிழ்த்தலைவர்களின் செயற்பாடுகளும் ஒரு பின்புலமாக அமைந்ததை யாராலும் மறுக்க முடியாது.
எடுத்துக்காட்டாக 1915ம் ஆண்டின் சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் போது அன்றைய தமிழ்த் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கெதிராக சிங்களத் தலைவர்களுடன் கைகோர்த்து நின்றார். ஒரே மொழி பேசும் சகோதர இனங்களுக்கிடையிலான சந்தேகப் பார்வை அன்று தொட்டு ஆரம்பமானது. அன்றைய நிலையில் தமிழ்த் தலைவர்கள் ஒரு பக்கமும் சாராது நடுநிலை வகித்து பிரச்சினையைத் தீர்ப்பதில் அக்கறையெடுத்திருந்தால் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமை குறித்த பயம் சிங்களத் தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கும். அதன் மூலம் எங்களுக்கெதிரான அனகாரிக தர்மபால போன்றோரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறவிடாமல் தடுக்க முடிந்திருக்கும். துரதிருஷ்டவசமாக தமிழ் மக்களின் (தமிழ் மக்கள் எனும் போது முஸ்லிம்களும் தான் உள்ளடங்குகின்றனர் என்பது எனது கருத்து)தனிப் பெரும் தலைவர்கள் என்று கருதப்படுகின்றவர்கள் தமது சுயநலத்துக்காக என்று…. செயற்படத் தொடங்கினார்களோ அன்று தான் தலைவிதி மாறத் தொடங்கியது.
அது மட்டுமன்றி மறைந்த பிரதமர் டீ.எஸ். சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இந்திய வம்சாவளியினரின் பிரஜாவுரிமையை இல்லாதொழிப்பதற்கு ஆதரவளித்ததன் காரணமாகவே ஜீ.ஜீ.பொன்னம்பலம் அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொண்டார். இவ்வாறாக தத்தமது சுயநலத்துக்காக எங்களையே காட்டிக் கொடுக்கத் துணிந்த எமது அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளே இன்று இலங்கையில் தமிழ் பேசும் சமூகம் இந்தளவுக்கு அல்லல்படக் காரணமாயிற்று. அன்று ஜீ.ஜீ.பொன்னம்பலம் விட்ட தவறு இன்று வரை மலையக மக்களின் துன்பத்துக்குக் காரணமாயிற்று. அந்த மக்கள் படும் அவலங்களுக்கான பொறுப்பில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு.
அடுத்ததாக நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை எமது தலைவர்கள் முன்வைத்ததும் எமக்கான உரிமைகளை வென்றெடுக்கத் தடையாக அமைந்தது. ஏனெனில் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்பதே எனது அபிப்பிராயமாகும். இலங்கையின் ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் மொத்த சனத்தொகையே இருபத்தி ஐந்து வீதத்துக்கும் குறைவாக இருக்கையில் நாங்கள் எப்படி அப்படியான ஒரு கோரிக்கையை வலியுறுத்த முடியும்.? அதற்குப் பதிலாக இந்தியாவின் மாநிலங்களையொத்த உள்ளக சுயநிர்ணய முறையொன்றுக்கான கோரிக்கை அன்று முன்வைக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அதனை ஆரம்ப கட்டத்திலேயே நாம் வென்றெடுத்திருக்க முடிந்திருக்கும். அதற்குப் பதிலாக இரண்டு இனங்களுக்கிடையிலான கசப்புணர்வு வலுப்பெற்றதன் பின் அவ்வாறான ஒரு கோரிக்கை எவ்வகையான சாதக பலனையும் தரப் போவதில்லை. அதன் பின் வந்த காலங்களில் நிலைமை கட்டுமீறிப் போன நிலையில் நாங்கள் எங்கள் பக்கத் தவறுகளை மறந்து அடுத்தவர்களின் தவறுகளை மட்டுமே உயர்த்திப் பிடிக்க முயன்றதும் எமது சறுக்கலின் ஆரம்பம் என்பதே எனது கருத்தாகும். எங்களுக்கான சுய விமர்சனம் இல்லாத நிலையில் அதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளாத வரையில் நாங்கள் எந்த வெற்றிகளையும் எட்ட முடியாது.
ஆயுதப் போராட்டம் ஆரம்பமான சூழல் கூட தொடக்கத்தில் தமிழ் மக்களுக்குச் சாதகமாகவே இருந்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவும் அரவணைப்பும் கிடைத்திருந்தது. அதனைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் நாங்கள் இன்று எமக்கான உரிமைப் போராட்டத்தில் நீண்ட தூரத்தைக் கடந்திருக்க முடிந்திருக்கும். ஆனால் நாங்கள் அதிலும் தவறு செய்திருக்கின்றோம். ஆரம்பத்தில் சக இயக்கங்களை அழிப்பதில் தொடங்கி கடைசியில் சக இனத்தையே அழிப்பது வரையான ஒரு பாசிசச் சித்தாந்தம் எமது போராட்டத்தைச் சிதைத்து விட்டது. எமக்குள்ளான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி விட்டது.
இந்தியாவின் மத்தியஸ்தம் மூலம் உருவான மாகாண சபைகள் தீர்வுத் திட்டம் சிற்சில குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்திருந்தால் ஓரளவுக்கு நிலைமையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். அத்துடன் தனது வழிகாட்டலை ஏற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் அந்த தீர்வுத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது தொடக்கம் அதற்கு மேலான அதிகாரப் பகிர்வு வரையான விடயங்களில் இந்தியா தனது ஆதரவை தலையீட்டை எமக்குச் சார்பாக நல்கியிருக்கும். ஆனால் நாங்கள் அதையும் கெடுத்துக் கொண்டோம். வரதராஜப் பெருமாளுக்கு எதிராக புலிகள் தான் பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்தார்கள். ஒரு தமிழனுக்கு எதிராக இன்னொரு இனத்தைச் சேர்ந்தவருடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்ட வரலாறு இயக்கங்களுக்கிடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது புலிகளால்தான். ஆனால் அதன் மூலம் புலிகள் தான் லாபமடைந்தனரே தவிர தமிழ் மக்கள் எதுவித நன்மையையும் அடைந்து கொள்ளவில்லை.எந்த மக்களுக்காக மாகாண சபை முறை உருவாக்கப்பட்டதோ அந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாய் சொல்லிக் கொண்டவர்களே பேரின அரசியல்வாதியொருவருடன் கூட்டுச் சேர்ந்து மாகாண சபையைக் கலைக்க வைத்தார்கள். மற்றபடி புலிகளின் தூண்டுதல் காரணமாக பிரேமதாச மாகாண சபையைக் கலைக்க முற்பட்டாரே தவிர அது அவரது சுய முடிவல்ல. கடைசியில் மாகாண சபை மூலமாக எமது மக்களுக்கு ஓரளவுக்கேனும் உரிமைகளை பெற்றுத் தர முயன்ற பாரதத்தின் இளம் தலைவர் ராஜீவ் காந்தியையே புலிகள் படுகொலை செய்தனர். தமிழ் மக்கள் விடயத்தில் பலமான ஆதரவுத்தளமாக இருந்த இந்தியாவின் நிலைப்பாடு அத்தோடு மாறிப் போனது. இப்படியாக எமக்கான வாய்ப்புகளை நாம் தான் கெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ மாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்வை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. அதற்குப் பதிலாக நாம் ஆரம்பத்தில் நல்மனதுடன் அதனை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று ஓரளவுக்கேனும் அதனைவிட அதிகமான சாதகங்களைப் பெற்றுக் கொண்டிருக்க முடிந்திருக்கும். ஆனால் நாம் அதனையும் கெடுத்துக் கொண்டுவிட்டோம். அத்துடன் அது சம்பந்தமான தலையீட்டை வழங்கக் கூடிய இந்தியாவின் ஆதரவுத் தளத்தையும் இழந்து விட்டோம். அவையெல்லாம் எங்களுடைய முட்டாள்தனங்களால் நிகழ்ந்தவையாகும். அதிலும் புலிகள் செய்த வரலாற்றுத் தவறுகள் எந்தக் கட்டத்திலும் சீர்படுத்த முடியாதவையாகும்.எனவே இனியாவது நாங்கள் எங்களுக்கிடையிலான ஒரு பொது இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம். முரண்பாடுகளை மறந்து விட்டு ஒன்றிணைந்து செயற்பட முன்வருவோம். இல்லாவிட்டால் இன்றுள்ளதைப் பார்க்கினும் எதிர்கால நிலைமை மோசமானதாக அமையலாம்.
அடுத்ததாக இன்று அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தமிழ்த்தலைவர்கள் மீதான விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். புலிகள் பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைத்த அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க சதி செய்ததற்குப் பதிலாக இன்றைய அரசாங்கத்துடன் இருக்கும் தமிழ்த்தலைவர்கள் ஏராளமான விடயங்களைச் சாதித்துக் காட்டியுள்ளார்கள். தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படுவதன் அவசியம் குறித்து சிங்கள மக்களிடையே ஆரோக்கியமான சிந்தனைப் போக்கை வளர்ப்பதற்கு அவர்களின் செயற்பாடுகள் தான் பெருமளவில் உதவுகின்றன.
மேலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அடிப்படையில் இனவாதமற்றவர். ஆனாலும் எங்களுடைய தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கைவிட்டதன் காரணமாக அவரது அரசாங்கம் ஓரளவுக்கு அழுத்தங்களின் மத்திலேயே முன்கொண்டு செல்லப்படுகின்றது. அதனை மாற்றுவதற்கான முயற்சிகள் எங்கள் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படுமாயின் ஓரளவுக்கு சாதகமான சூழ்நிலையொன்றை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதற்குப் பதிலாக எப்போதும் அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டிருப்பதில் எதுவித பயனுமில்லை.
பரீட் - காத்தான்குடி
இலங்கையிலும் காஸாவிலும் மோதல்கள் ஏன் தொடர்கின்றன என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் டியக்கின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் கற்கைகளுக்கான கல்லூரியின் இணைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான டாமியன் கிங்ஸ்பெரி கிளர்ச்சியாளர்களின் தளங்கள் அழிக்கப்படலாம். ஆனால், அவர்களின் துயரங்களுக்கு உண்மையான தீர்வுகள் அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளனார்.
இது தொடர்பாக டாமியனின் கருத்தை இணையத்தளமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது; விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சியை இலங்கைப் படையினர் கைப்பற்றியுள்ளனர். காஸாவுக்குள் இஸ்ரேலியப் படையினர் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளனர். பிரிவினைவாத இயக்கமொன்றின் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட தோல்வியாக சிலசமயம் இதில் ஒன்று அமையலாம். மற்றையது ஒரு பகுதியின் நிர்வாக அதிகாரம் பறிக்கப்படுவதாக இருக்கலாம்.
வேறுபாடுகள் இருப்பினும் இலங்கையினதும் காஸாவினதும் மோதல்களுக்கிடையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமைத் தன்மைகள் உள்ளன. ஹமாஸ் அமைப்பினரும் புலிகளும் அழிவின் விளிம்புக்கு ஏன் வந்துள்ளனர் என்பது பற்றியும் ஏன் இரு மோதல்களும் தொடரும் என்பது குறித்தும் இந்த ஒத்ததன்மைகள் விபரிக்கின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் அவர்களின் தலைநகரைக் கைப்பற்றியதன் மூலம் வெற்றியீட்டப்பட்டுள்ளது. அண்மையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் பல இழக்கப்பட்டன.
2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தல்களை தொடர்ந்து இஸ்ரேலுடன் அவ்வப் போது ஹமாஸ் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. பொருளாதாரத் தடையால் காஸாப் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டனர். இஸ்ரேல் மீதான ஹமாஸின் ரொக்கட் தாக்குதலை தொடர்ந்து மூன்று வாரங்களாக காஸா மீது வான் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. இந்த இரு விடயங்களிலும் தற்போதைய இராணுவ நோக்கங்கள் இலக்கை எட்ட முடியுமா என்பது சந்தேகமே. 2002 ஆம் ஆண்டிலிருந்து தங்கள் வசம் வைத்திருந்த பகுதியிலிருந்தும் ஒரு தசாப்தகாலமாக தமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்து பாரிய நிலப்பிரதேசத்திலிருந்தும் புலிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காஸாவில் ஹமாஸின் நிர்வாக ஆற்றலை அழித்து விடுவதை இஸ்ரேல் நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த இரு விடயங்களுமே நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்ட இராணுவ இலக்குகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டவையாகும்.
புலிகளினதும் ஹமாஸினதும் நிர்வாக ஆற்றலை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும். 2002 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாடு குறித்து புலிகள் கலந்துரையாடினர். நெகிழ்வுத் தன்மையின்மையும் முன்நிபந்தனைகளும் பேச்சுவார்த்தை மூலமான வாய்ப்பை இழக்கச் செய்தன. இதேபோன்று இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் எல்லையில் நிலக்கீழ் சுரங்கப்பாதைகளை அமைத்ததன் மூலம் ஈட்டிருந்த வெற்றிகளை ஹமாஸ் புறந்தள்ளி விட்டது. இரு விடயங்களிலும் மீதவாதிகளை கடும் போக்காளர்களே வெற்றி கொண்டனர். ஆனால், ஊக்குவிப்பளிக்கும் விவாதங்களை கடும் போக்காளர்கள் முன்வைக்கின்றனர். இலங்கையின் பல்வேறு அரசாங்கங்களிடம் இதய சுத்தியில்லை என்றும் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதும் தமிழ் தரப்பினரால் முன்வைக்கப்படும் வாதமாகும். இஸ்ரேலிய அரசாங்கங்களும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட இடமளிக்கவில்லை. காஸாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இஸ்ரேல் இடமளிக்கவில்லை. இந்த இரு விடயங்களிலுமே இஸ்ரேலிய, இலங்கை அரசாங்கங்கள் தமது தரப்பிலுள்ள கடும் போக்காளரின் பணயக் கைதிகளாகியுள்ளனர். மனப்பூர்வமான இணக்கப்பாடு என்பது அரசியல் ரீதியாக பிரதிகூலமானது என்பது அவர்களின் கருத்தாகும்.
இலங்கையிலும் இஸ்ரேலிலுள்ள சமூகங்களிலுமுள்ள குறிப்பிடத்தக்க சக்திகள் சமாதானத்தை விரும்புகின்றன. “பயங்கரவாதம்’ என்பதை கைவிட்டால் இரு அரசாங்கங்களுக்குமே அரசியல் ரீதியாக இழப்பாகும். புலிகளும், ஹமாஸும் பயங்கரவாத அமைப்புகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் தத்தமது மக்களின் பிரதிநிதிகளென இந்த இரு அமைப்புகளாலும் உரிமை கோரமுடியும். 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாலஸ்தீனத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பு தெளிவான முறையில் மக்கள் ஆணையைப் பெற்றது. புலிகள் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. யுத்த நிலைமை வாக்களிப்பை அர்த்தபுஷ்டியானதாக்காது என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆயினும் வடக்கு, கிழக்கில் அவர்களுக்கு பரந்தளவு ஆதரவு உள்ளது.
குறிப்பிட்ட அளவு அரசாங்கமென்ற தன்மையைக் கொண்டிருந்த அந்தஸ்து அகற்றப்பட்டாலும் தாக்கிவிட்டு மறைதல் என்ற உபாயத்தை இரு அமைப்புகளிடமிருந்தும் எதிர்பார்க்க முடியும். இராணுவ ரீதியில் பின்னடைவை சந்தித்தாலும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆற்றலை இந்த இரு அமைப்புகள் கொண்டிருக்கும் சாத்தியம் காணப்படுகிறது. அவர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் அவர்களுக்கான ஆதரவு தளத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதுடன் எதிர்காலத்தில் ஆட்திரட்டலுக்கும் களம் அமைப்பதாக அமையும்.
ஆனால், அதிகார பீடத்திலிருக்கும் இஸ்ரேலும் இலங்கையும் இந்த மோதல்களுக்கு இறுதித் தீர்வை காணமுடியும். சமாதான நோக்கத்துடன் யுத்தத்தில் ஈடுபடும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் இறுதித் தீர்வைக் காண முடியும். காஸா, மேற்குக்கரை என்ற இரு பகுதிகளும் பாலஸ்தீன அரசு என்பதை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இஸ்ரேலியரும் பலஸ்தீனியரும் போட்டி போட்டு உரிமை கோரும் ஜெருசலேமை பொதுவானதாக சகலரும் நிர்வகிக்கும் நகரமாக்க வேண்டும். இலங்கையில் கொழும்பு அரசாங்கம் சிறுபான்மைத் தமிழருக்கு அதிகபட்ச அரசியல் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும். தனி நாடாக இல்லாவிடினும் குறைந்தது உண்மையான சுயாட்சியுடன் கூடிய ஒன்றுபட்ட பிராந்தியமென்ற அந்தஸ்துடனான தீர்வை வழங்க வேண்டும். இலங்கை, இஸ்ரேல் நாடுகளிலுள்ள ஆளும் கட்சிகள் தமது சொந்த தேசிய வாத இனமேலாதிக்க வாதத்தை வெற்றி கொண்டு தத்தமது ஆட்புல எல்லைக்குள் உள்ள மக்களுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். தத்தமது நிலப்பரப்பு அவர்களின் சொந்த வாழ்வுக்குத் தேவையானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த அங்கீகாரம் இல்லாவிடின் இரு இடங்களிலுமே சமாதானம் சாத்தியமற்றதொன்றாகும்.
பரீட் - காத்தான்குடி
தேவையான நேரத்தில் எழுதப்பட்ட தேவையான கட்டுரை. காஸா இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவின் இரட்டைவேடத்தையும் முழு உலகத்திற்குமே அழகாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஜெயபாலன் அண்ணா மானுடம் செத்துக் கொண்டிருக்கும் இக்கட்டத்தில் எதைக் கதைத்து என்ன செய்ய?
அருட்செல்வன்
பாலஸ்தீனத்தில் நடப்பதையும், இலங்கையில் இடம்பெறும் பயங்கரவாதத்தையும் ஒரே தராசில் வைத்து எடை போட முயலக்கூடாது எனக் கேட்டு கொண்ட தேசிய பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேற்குலகிடம் இராஜதந்திர ரீதியிலேயே கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு நடப்பது பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பலியாகி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியபோது அங்கும் இஸ்ரேல் படையினர் தடை செய்யப்பட்ட ஹமாஸ் குழுவினருக்கு எதிராகவே தாக்குதல் நடத்துவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயத்தை பெரிதுபடுத்த விரும்பாத அமைச்சர் ரம்புக்வெல நழுவலான பதிலை தெரிவிக்க முயற்சித்தார். அரசாங்கம் இருதரப்பினரிடமும் இராஜதந்திர ரீதியிலான கோரிக்கையை மட்டுமே விடுத்துள்ளது. எந்தத்தரப்பு மீதும் அழுத்தத்தை பிரயோகிக்க முற்படவில்லை. பாலஸ்தீன மக்கள் மீது தாம் நெருக்கமான உறவை வைத்திருக்கின்றோம். ஜனாதிபதி பாலஸ்தீன மக்களுக்காக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருபவராவார். அதனடிப்படையில் தான் அந்த மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக அமைச்சர் தெரிவித்தார்.
Saraniyan
யுத்தத்தில் ஈடுபடுபவர்களின் நோங்கங்ளை அறிந்துகொள்ள முன்னர் இந்தக் கட்டுரை புலிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் செம வெற்றிகண்டுள்ளது.
இடதுகள்/ இஸங்கள்/ வாலாக்கள் என்றெல்லாம் ஆத்திரமடைந்து எழுதும் அளவுக்கு என்ன நிகழ்ந்துவிட்டது????
புலியை எதிர்த்தால் மகிந்தாவை ஆதாpப்பது மகிந்தாவை எதிர்த்தால் புலியை ஆதாpப்பது இது இரண்டுக்கும் அப்பால் அரசியலே இல்லையா?
புயியெதிர்ப்போ அரசோ இவரது தோல்விக்குக் காரணமில்லை தொடர்ச்சியான இவரது முட்டாள்த் தனங்களே இவரது தோல்வியின் காரணம் இவனால் சமூகத்துக் கேற்பட்ட பாதிப்புக்களை சகிக்கமுடியாத சிலர் சத்தமாகச் சொல்கிறார்கள் அவ்வளவு தான்!
“குரங்காட்டியின் தயவை தனது விடுதலைக்காக குரங்கு எதிர்பார்க்கக் கூடாது” எனற இலகுவான தத்துவம் தொpந்தவர்கள் பலர் நாட்டில் உள்ளார்கள். குரங்காட்டி கயித்தை கைவிட்டால் அவனுடைய பிழைப்புக் கெட்டுப்போகும்.
அதிகாரவர்க்கமும் மக்களின் உரிமைகளை மறுப்பதால் தன்னை வளர்த்துக் கொள்வது. இதை மக்கள் உணரும் போதெல்லாம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அதற்குப் படை பலம் தேவை. இதற்கு எந்த வகையிலும் மாறுபடாத அரசுதான் மகிந்தாவின் அரசும்.
மறுக்கப்பட்ட உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடரும் அரசுகளுக்கெதிராக தொடரும் நிற்பந்தமாக ஒட்டுமொத்த நாட்டு மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு விடுவிக்கப்பட்டது இப்போ என்ன தேனாறா பாய்கிறது? வடக்கு விடுக்கப்பட்டாலும் பொம்மையாட்சி தான் வரும்! இவைகளெல்லாம் அரசியல் முதிர்ச்சியில்லாத சிறுபிள்ளைத் தனமான கேள்விகளும் எழுத்துக்களும்.
புலப்பெயர்விலிருந்து புலம் நோக்கித் தேர்தலுக்காகப் போனவர் பட்டியலிலுள்ள பெயர்களையும் மகிந்தாவையும் உயரத்தில் தூக்கியவர்கள் ஒரு காலத்தில் மறுபக்கம் மாறி நின்று புலிகளை ஆதாpக்கலாம். இது நிதானித்து செயற்படாத அவசரக்குடுக்கைத் தனமும் நீண்ட தொலை நோக்கற்ற அரசியல் அரையவிலுமாகும்.
அகமட் யசின்/ பிரபாகரன் தோற்றுவிக்கப்பட்டவர்கள் இல்லையென்றில்லை பிரபாகரன் தோன்றிய போது போராட்டம் பெற்றிருந்த மக்களாதரவு தற்பொழுது 100 வீத எதிர்ப்பாகப் பாpணமித்துள்ளது. வலிந்து இழுத்துப் படையணி கட்டவுள்ளது.
இவனோடு இதற்கென் தோன்றியவர்களை அழித்தொழிக்கும் அரக்கத் தனத்தை கையியெடுத்தவன்.
பத்துக்கு மேலான விடுதலை இயக்கங்களை கொண்டது பலஸ்தீன விடுதலை இயக்கக் கூட்டு இதில் அடிப்படைவாதிகளும் இடது அமைப்புகளும் கூட இருந்தன. கருத்து முரண்கள் அவ்வப் போது தோன்றும் கொலைகளும் கூட நிகழும் ஒட்டுமொத்தமாக ஒரு இயக்கம் இன்னொன்றை அழித்ததில்லை. பலஸ்தீன மண்ணை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவிக்கும் பொது நோக்கில் இணைந்தே இருந்தனர்/ இருக்கின்றனர்.
புலிகளிடம் எந்தப் பொது நோக்கோ/ விடுதலை முனைப்போ இல்லாத வெறும் கொலைகார இராணுவக் கும்பல். இதை ஒப்பிட்டுப் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததாக இந்தக் கட்டுரை காட்டினாலும் நோக்கம் தோற்றுப்போகிறது..
உலகமக்கள அனைவாpன் பொது எதிரியான அமொpக்காவின் காடைத்தனத்தை கங்காpயப் படுத்தும் போக்கிலித்தனமான இஸ்ரேலுடன் இலங்கை அரசை ஒப்பிட்ட விதம் அரசியல் அற்புதம்.
புலிவேறு மக்கள் வேறு என்று பிரிக்க முடியாத இக்கட்டிலும் மக்களின் அழிவுகளை இயலுமான அளவில் குறைத்திருந்தது என்பதே உலகத்தின் அவதானம். இஸ்லாமிய மக்களை கொத்துக்கொத்தாக அழிக்கும் நோக்கில் பள்ளி/ சந்தை/ பள்ளிவாசல் பார்த்துக் குண்டு போடும் இஸ்ரேலும் ஒப்பீட்டில் ஒன்றா? கடந்த ஆண்டு 67 சிறார்கள் விமாக் குண்டுவெடிப்பில் இறந்ததென்ற துயரான சம்பவம் நிகழ்ந்தது உண்மை அவர்கள் யாராக இருந்தாலும் கவலையே ஆனால் அவர்கள் செஞ்சோலைக்குரியவர்கள் தானா? என்ற விடையம அப்போதே சர்ச்சைக்குரியதாகி ஊடகங்களால் அடக்கி வாசிக்கப்பட்டது.
புலிசார் ஊடகங்கள் கூட இப்பொழுது முதலைக்கண்ணீருக்குள் ஒரு தாரக மந்திரம் கசிய விடுகிறார்கள் “புலி அழிக்கப்பட வேண்டியது தான் ஆனால் அங்குள்ள மக்கள்?”
புலிகளை அழிப்பதென்றால் எப்போ? எங்கு?? எப்படி?? யார்???
வால்க்காவிலிருந்து கங்கை வரை கண்ணீர் விட்டாலும் இனிப் புலியைக் காப்பாற்றுவது கடினம்!!!!!
மாற்றுகருத்துதோழர்
ஹமாஸ் காஸாபிரதேசத்தில் ஈட்டிய ஐனநாயகதேர்தல் வெற்றியை அங்கீகரிக்க மறுத்த அமெரிக்கா பிரித்தானியா இஸ்ரேலும் மற்றும் மேற்கு ஐரோப்பியர்களும் அதை தனது மக்கள் செல்வாக்கற்ற வங்குரோத்ததனத்தை ஈடுசெய்ய பாவித்த மொகமட் அப்பாஸின் பற்றா அமைப்பும்தான் ஹமாஸை ஐனநாயக வழியிலிருந்து புறந்தள்ளி ஆயுதவன்முறையை நாடவைத்தனர். மொகமட் அப்பாஸின் பற்றா அமைப்பு இருக்கு மட்டும் பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதிகிட்டபோவதில்லை. மக்கள் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பை வலிந்து புறம்தள்ளுவதன் மூலம் யார் பயங்கரவாதிகள் என்ற உண்மை தெரிகிறது. இதே நிலைதான் ஈழத்திலும். என்ன சிறிலங்கா பருப்பு புலிகளிடம் வேகுதில்லை.
palli
//குரங்காட்டியின் தயவை தனது விடுதலைக்காக குரங்கு எதிர்பார்க்கக் கூடாது” எனற இலகுவான தத்துவம் தொப்ந்தவர்கள் பலர் நாட்டில் உள்ளார்கள். குரங்காட்டி கயித்தை கைவிட்டால் அவனுடைய பிழைப்புக் கெட்டுப்போகும்.//
இதை விட விளக்கம் எந்த கொம்பனாலும் தரமுடியாது. சரநியன் அந்த தத்துவத்தை தெரிந்தவர் தான் நிங்களும் என்பதை பல்லியும் புரிந்துகொள்கிறது. தயவு செய்து எழுதுங்கள். நம் தேசத்துக்காக இந்த தேசத்தில் நன்றி.
பல்லி
hg
என்னதான் நடக்கும்?
மலையகம் முதல் முஸ்லீம் மக்களை மேய்க்கும் தலைமைகள், எப்படி மக்களை மந்தைகளாக வைத்து, பிழைக்கின்ற ஒரு அரசியல் சூழல் உள்ளதோ அந்த நிலைக்கு மக்கள் உணர்வு மட்டம் தயாராகவே உள்ளது. (இதை பின்னால் விரிவாக பார்ப்போம்.)
எது போராட்டம்?
இலங்கை தழுவிய ஒரு வர்க்கப் போராட்டம் தான். இது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த, எல்லைக்குள் நடப்பதைத் தவிர வேறு போராட்ட சூழல் கிடையாது. சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத கட்சி, கம்ய+னிஸ்ட் கட்சியல்ல. அது வர்க்கப் போராட்டமுமல்ல. வர்க்கப் போராட்டத்துக்கான சர்வதேச சூழலும், சர்வதேச பொருளாதார நெருக்கடியும் இன்று உருவாகியுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்படும் வேலை இழப்புகள், 30 லட்சம் இலங்கை தொழிலாளர்களின் வாழ்வைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உள்நாட்டின் ஏற்றுமதி சரிகின்றதால், ஏற்படும் வேலை இழப்புகள். யுத்தம் முடிய, இராணுவத்தில் உள்ள 5 லட்சம் இளைஞர்களும், இதை அண்டி வாழ்ந்த மேலும் 5 லட்சம் இளைஞர்கள் வீதிக்கு வருவார்கள். மிக கொந்தளிப்பான வர்க்கப் போராட்டம் தொடங்கும் நிலைக்குள் இலங்கை செல்லுகின்றது. (இதை பின்னால் விரிவாக பார்ப்போம்.)
தாமிரா மீனாஷி
புலி அழிக்ககப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவதற்கு புலியின் மக்கள் சார்ந்த நடவடிக்கைகளே காரணம். புலியும் அவர்களது ஏஜென்டுகளும் இன்னொரு ஆமிக்காரர்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகார போதை தலைக்கேறி நடந்து கொண்டதுதான் பிரதான காரணம். குறி தவறாமல் சுடுவதற்கான திறமையை வளர்த்துக் கொண்டவர்கள் மக்களைத் தலைமை தாங்கி வழிகாட்டிச் செல்வதற்கான திறமையை வளர்க்கத் தெரியவில்லை. ஆயுத்தத்தைக் காட்டினால் மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்பியிருந்ததே அவர்களது இன்றைய பின்னடைவுக்கு காரணம். மக்களை வாணவேடிக்கைகளால் மயக்கி வைத்திருக்க முடியும் என்ற தப்புக்கணக்கை இனிமேலாவது கைவிட்டாலன்றி விமோசனமில்லை. அண்டிப்பிழைக்கும் வெளிநாட்டு ஏஜென்டுகளும், அறிவுஜீவிகள் என தம்மைக் கூறிக் கொண்டு வால்பிடிப்பவர்களும் இருக்கும்வரை ஒவ்வொரு தமிழ் போராளியின் அர்ப்பணிப்பும் உயிர்த்தியாகமும் வீணடிக்கப்பட்ட அநியாயம்தான்.
ஆசிரியர் ஜெயபாலன் தனது கட்டுரை மூலம் ஒரு அவசியமான விவாதத்தைத் தொடக்கி வைத்தது வரவேற்கப் பட வேண்டியதே.
ராபின் மெய்யன்
பலஸ்தீனத்தின் பிரச்சனையின் பின்னணியை புரிந்துகொள்ள உயிர்மெய்.காம் இலுள்ள கட்டுரை உதவும்:
மாற்றுகருத்துதோழர்
“மிக கொந்தளிப்பான வர்க்கப் போராட்டம் தொடங்கும் நிலைக்குள் இலங்கை செல்லுகின்றது.”
யதார்த்த வரிகள். தமிழீழ மலர்வுடன் சிறிலங்காவில் இராணுவபுரட்சியும் அதனால் இராணுவ பொருளாதார ரீதியில் வதைபடபோகும் சிறிலங்கா குடிமக்கள் போராட்டநிலைக்க தள்ளபடுவார்கள். அது வர்க்கப் போராட்டம் தொடங்கும் ஏதுநிலைக்கு இட்டு செல்லும்.
chanran.rajah
அரசாங்கம் புலிகளைக் கொன்ற தங்களது ராணுவத்தின் உயிர்களைப் பயணம் வைத்து தமிழ் மக்களைக் காப்பாற்ற போராடி வருகிறது.
புலியின் சேட்டைகள் இல்லாவிட்டால் மகிந்த இதைச் செய்திருப்பாரா?
காசாவில் என்ன நடக்கிறது?
ரொக்கற் அடிப்பது போன்ற சேட்டைகளை கமாஸ் விட்டபடியால்தானே இஸரேல் போய் தாக்கவேண்டிள நிலை வந்தது. பயங்கரவாதி களுக்கு எப்போதும் புத்தி வருவதில்லை. அவர்கள் மக்களின் பிணங்களின் மீத வாழுகிறார்க்ள. மக்களின் உயிரை அவர்கள் தின்று கொழுக்கிறார்கள்.
மாற்றுகருத்துதோழர்
“அரசாங்கம் புலிகளைக் கொன்ற தங்களது ராணுவத்தின் உயிர்களைப் பயணம் வைத்து தமிழ் மக்களைக் காப்பாற்ற போராடி வருகிறது.”
தமிழ் மக்களைக் காப்பாற்றும் சிங்களராணுவத்தின் இலட்சனம் இதுதான். (2ம் இணைப்பு)வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: கைக்குழந்தை உட்பட 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை; 29 பேர் படுகாயம் [வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 03:14 பி.ப ஈழம்]
ashroffali
//உலகமே இதுவரை கேள்விபடாத காம அரக்கதனத்தை பிணத்துடன் குடும்பம் நடத்தி அந்த வீரசாகச்தை வேறு வீடியோபதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட சிங்கள இராணுவத்தின் குரூரமனநிலையை உலகமே பார்த்து.//
முதலில் அந்த வீடியோவை நன்கு ஒரு தடவை பார்த்து விட்டு கருத்தைப் பதியுங்கள். ஏனெனில் அதில் இருப்பது கொச்சை சிங்களமே தவிர சிங்களவர் பேசும் சிங்களமல்ல. ஆக யார் செய்திருப்பார்கள் என்பது விளங்கக் கூடியது தானே? மன்னார் வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட மார்ட்டின் மூர்த்தி குடும்பத்தின் குட்டிச் சிறுமிக்கே கொடூரம் செய்து கொன்றுவிட்டு திசை திருப்ப முயன்றவர்களுக்கு இது ஒன்றும் கஷ்டமான விடயமில்லையே? இப்படி மாற்று கருத்து என்ற பெயரில் மாட்டுத்தனமாக சிந்திப்பவர்கள் இருக்கும் வரை பாசிசத்தின் கோரத் தாண்டவம் ஓயப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு விமோசனம் கிட்டப் போவதில்லை.