வங்கதேச துணை ராணுவத்தினர் கலகத்தில் 200 ராணுவ அதிகாரிகள் கொலை -பாதாள சாக்கடையில் பிணக் குவியல்

buyinfromreuters.jpgவங்க தேசத்தில் 2 நாட்களாக துணை ராணுவத்தினர் நடத்திய கலகம், அரசின் கடும் எச்சரிக்கையால் ஓய்ந்தது. கலவரத்தில் ரைபிள் படைப் பிரிவின் இயக்குனர் உட்பட 200 ராணுவ அதிகாரிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.  130 அதிகாரிகளை காணவில்லை. பாதாள சாக்கடையில் குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. வங்கதேசத்தில் வங்கதேச ‘ரைபிள் படை’ என்ற துணை ராணுவ படையில் 40 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.

அவர்களில் 20 ஆயிரம் பேர் தலைநகர் தாகாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும், மற்றவர்கள் மற்ற மாகாணங்களில் உள்ள முகாம்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம், பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இது அலட்சியப்படுத்தப்பட்டு வந்ததால் ஆத்திரத்தில் இருந்த அவர்கள், கடந்த புதன்கிழமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு, வீரர்கள் கலகத்தில் இறங்கினர். அதிகாரிகளை விரட்டி விரட்டி சுட்டனர்.

தலைமை அலுவலகத்துக்கும் தீ வைத்தனர். கலகத்தை அடக்க ராணுவம் அழைக்கப்பட்டது. கலகத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று பிரதமர் ஹசீனா  அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஒரு பிரிவு வீரர்கள் சரண் அடைந்தனர். மற்றொரு பிரிவினர்  தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். 2வது நாளில் மற்ற முகாம்களுக்கும் கலகம் பரவியது. அதைத் தொடர்ந்து பிரதமர் ஹசீனா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தலைமையகத்தை டாங்கி களுடன் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த ராணுவம் தயாரானது. இதையடுத்து, எல்லா வீரர்களும் சரண் அடைந்தனர். இதன் மூலம், 2 நாட்கள் நடைபெற்ற கலகம் முடிவுக்கு வந்தது. இந்த கலகத்தில் துணை ராணுவ படையின் இயக்குனர் ஷகீல் அகமது உட்பட 200 ராணுவ அதிகாரி கள் சுட்டுக் கொல்லப் பட்டள்ளனர். சம்பள உயர்வு பற்றி வீரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய சில நிமிடங்களில் ஷகீல் அகமது அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

அப்போது, 4 வீரர்கள் பாய்ந்து சென்று அவரை பிடித்து சுட்டுக் கொன்றதாக துணை ராணுவத்தின் லெப்டினென்ட் கர்னல் சையது குவாம் ரஜ்மான் கூறினார். இவரும் வயிற்றில் குண்டு பாய்ந்து உயிர் தப்பியுள்ளார். தலைமையக வளாகத்தில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் கொள்ளை யடிக்கப்பட்டு உள்ளன.கலகம் ஓய்ந்ததும் தலைமை அலுவலகத்துக்குள் ராணுவம் நுழைந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டது.

பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு இடத்தில் புதிதாக குழி தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் காணப் பட்டது.  அந்த இடத்தை தோண்டியபோது, 38 அதிகாரிகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தன.
 
மேலும் உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கிறதா என்று தேடப்படுகிறது.  அலுவலக வளாகத்தில் உள்ள பாதாள சாக்கடையிலும் பிணக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இன்னும் 130க்கும் மேற்பட்ட அதிகாரிகளை காணவில்லை.  கலவரத்தில் ஈடு பட்ட 300 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலகத்தில் காயம் அடைந்து  சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகளை பிரதமர் ஹசீனா நேற்று பார்த்தார்.

அப்போது அவர், ”கலகத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், அதிகாரிகள் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்ட வர்களுக்கு மன்னிப்பு கிடையாது”  என்று அறிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *