ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முறியடிப்பு : அமைச்சர் மஹிந்த சமரசிங்க

mahinda-samara.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு வானிலை அவதானிப்பு மையத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்ககையில், “இலங்கையின் உண்மையான நிலவரம் குறித்தும், அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடடிக்கைகள் குறித்தும் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணையகத்தில் விளக்கமளித்தோம். வழமையாக ஒரு வாரகாலம் இடம்பெறும் இக்கூட்டம், இம்முறை உயர் மட்ட அமர்வுகள் காரணமாக ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது. ஜெனீவா விஜயத்தின் போது அங்கு வருகை தந்த பிராந்திய, ஏனைய நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள், மனித உரிமை அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். மேற்கு பிராந்திய அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு நாம் அழைப்பு விடுத்த போதும்,அதற்கான வாய்ப்பினை அவர்கள் தரவில்லை.எனினும் டென்மார்க், சுவீடன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன் நாம் கலந்துரையாடினோம். இலங்கையின் உண்மை நிலவரம் குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தத் தயாராக இருப்பதாக அவர்களுக்கு தெரிவித்துள்ளோம்.அத்துடன் ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடினோம்” என அமைச்சர் தெரிவித்தார்.

“இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள், விவாதங்கள் மேற்கொள்ள பல அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தின. அத்துடன் இலங்கை விடயம்குறித்து மனித உரிமைகள் ஆணையகத்தில் விவாதத்திற்கு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எமது தோழமை நாடுகள் எனக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகள் ஆணையக தலைவருக்கு ‘இது இலங்கையின் உள்விவகாரம். இலங்கை அரசாங்கம் இது குறித்து விளக்கமளிக்கத் தயாராக உள்ளது’ என தெரிவித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இடமளிக்கவில்லை” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, இடம்பெயந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் நலன் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மனித உரிமைகள் அமைச்சர், “தற்போது நலன்புரி நிலையங்கள் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை மீள்குடியேற்ற அமைச்சும், அரசாங்க அதிபரும் மேற்கொண்டு வருகின்றனர். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்காக அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.இது வழங்கப்பட்டதும் இம்மக்கள் சுதந்திரமாக நடமாடலாம்.அத்துடன் இடம்பெயர்ந்து வந்த மக்களுள் ஆதரவற்ற முதியோர்கள் மன்னாரிலுள்ள முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படவுள்ளனர்” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும் வன்னியிலுள்ள மக்கள் நலன்கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தற்போது முல்லைத்தீவிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு 56,000 பேர் வெளியேறி வருகின்றனர். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. எனினும் அனுப்பப்படும் பொருட்களுள் 50 சதவீதமானவற்றை விடுதலைப் புலிகள் எடுக்கின்றனர். எனினும் புதுமாத்தளன் பகுதியில் உள்ள மக்களும் இலங்கை மக்களே. அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கம் தொடர்ந்து அனுப்பி வைக்கும்” என அமைச்சர் பதிலளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • MANITHA NEYAN
    MANITHA NEYAN

    THE RIGHT MAN IS THE ONE WHO SEIZES THE MOMENT

    Reply