புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

Boat Refugees_03இந்தோ னேசியக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அகதிகளின் அவலம் முடிவின்றித் தொடர்கின்றது. உலகமே நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களில் திளைத்திருக்கின்ற வேளையில் கடலில தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த அகதிகள் மறக்கப்பட்டு உள்ளனர். கொழும்பைச் சேர்ந்த சாமூவேல் ஜேக்கப் (29) என்ற இளைஞர் கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் உயிரிழந்தார். இவ்வாறான மிக மோசமான படகு விபத்து ஒன்றில் 200 வரையானவர்கள் மரணமடைந்த சம்பவம் கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுதினம் பொக்ஸிங் டே அன்று இத்தாலியில் இடம்பெற்றது. தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இடம்பெற்ற இப்படகு விபத்தில் மரணமாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையர்கள். இதுவே தமிழ் அகதிகளுக்கு இடம்பெற்ற மோசமான விபத்தாக உள்ளது.

தற்போது எரிமலை மையமாகவும் சுனாமியின் மையமாகவுமுள்ள இந்தோனேசியக் கடலில் 250 அகதிகள் சாதாரண படகில் தவிக்க விடப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சம் உலகமே கொண்டாடுகின்ற நத்தார் புதுவருடத்தையொட்டி இவர்களை மனிதாபிமான முறையில் அணுக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

Boat Refugees_03ஒக்ரோபர் 10 மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் இந்தோனேசிய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங்க்கு விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து ஜகார்ற்றா அருகில் உள்ள மேர்க் துறைமுகத்தில் 250 இலங்கைத் தமிழ் படகு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகு அகதிகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைவதற்கு முன்னரே தடுத்து அவர்களை இந்தோனேசியாவிலேயே தஞ்சம்பெற வைக்கின்ற ‘இந்தோனேசியத் தீர்வு’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலியா கடைப் பிடிக்கின்றது. இதன் மூலம் தனக்கு வரும் அகதிகள் பிரச்சினையை கைகழுவி விட்டு வருகின்றது.

இந்த அகதிகளை பலவந்தமாக வெளியேற்றி இந்தோனேசியாவில் தரையிறக்குவதை ஒரு தீர்வாக இந்தோனெசிய அதிகாரிகள் கொண்டுள்ளனர். ஓசானிக் வைக்கிங் கப்பலில் இருந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு ஒறுதி மொழியை இந்த அகதிகளுக்கு வழங்க அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றது. இதே காலப்பகுதியில் ஓசானிக் வைக்கிங் என்ற அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலால் காப்பாற்றப்பட்ட 78 தமிழ் அகதிகள் தரையிறங்க மறுத்தனர். அவர்களது தஞ்ச விண்ணப்பங்கள் சில வாரங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்கச் சம்மதித்தனர். தற்போது அவர்கள் உண்மையான அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனால் மேர்க் இந்தோனேசியத் துறைமுகப் பகுதியில் தத்தளிக்கும் அகதிகள் வரும் ஜனவரி 10 மூன்றாவது மாதத்தை கடலில் கழித்து உள்ளனர். அவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

 இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகள்:

உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

இந்தோனேசியக் கடலில் தொடரும் தமிழ் படகு அகதிகளின் போராட்டம் : த ஜெயபாலன்

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்!

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

புனைபெயரில் ஒழிந்து கொண்டு பத்திரிகா தர்மம் பேசும் எஸ் சிவரூபனுக்கு….. : நடராஜா சேதுரூபன்

Sethuruban with SLFP senior member Rajeeva Wijeyasingaஎஸ் சிவரூபன் தனது சொந்த முகத்துடன் கட்டுரையை வெளியிடாமல் தனது உருட்டுக்கும் புரட்டுக்கும் புனைபெயரில் கவர் எடுத்துக்கொள்கின்றார். சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்  பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. இவரிடம் உள்ள தாழ்வுமனப்பான்மையே இவரை மற்றவர்களது கல்வித் தகுதி திருமணம் போன்ற விடயங்களை கேவலப்படுத்த காரணம் என நினைக்கிறேன். என்னைப் பற்றிப் பிழையான தகவல்கள் பல உலாவருகின்றது. உங்களைப் போன்றவர்கள் ஒழிந்திருந்து செய்கின்ற ஊத்தை வேலைகள் தான் நிதர்சனத்திலும் இடம்பெற்றிருக்கும் என நினைக்கின்றேன். தற்போது நீங்கள் தேசம்நெற்றை இன்னொரு நிதர்சனமாக்கி இருக்கிறீர்கள்.

கட்டுரையாளர் எஸ் சிவரூபன் என்ற பெயருக்குள் ஒழிந்திருப்பவரிடம் நான் கேட்பது என்னைப் பற்றி எழுதிய ஒரு விடயத்திற்காவது உங்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை நீங்கள் உங்களது சொந்தப் பெயரில் அல்லது எஸ் சிவரூபன் என்ற பெயரில் ஒழிந்து கொண்டே வையுங்கள். நான் எழுதுவதை நிறுத்துகின்றேன். அது எனது குழுந்தைகள் மீது சத்தியம். அப்படி ஆதாரத்தை வைக்காவிட்டால் நீங்கள் எழுதுவதை நிறுத்துங்கள்.

1. ‘புலிகளின் நிதர்சனம் டொட்கொம் என்ற புலிகளின் இணையத்தளத்திற்கு நிர்வாகி ஆகிய சேது என அழைக்கபடும் நடராசா சேதுரூபன் என்பவருக்கு தமிழ் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவன்’ என்கிறார் இந்த கட்டுரை எழுதியவர்.

அப்படியானால் அவர் என்ன மொழியில் இணையம் நடாத்தினார்? தொடர்பில் இருந்திருந்தால் தமிழைத் தவிர உலக மொழிகள் எதுவுமே பாவிக்காத புலிகளுடன் என்ன மொழியில் சேது உரையாடி இருப்பார்? நான் தற்போது தேசம் இணையத்திற்கு தமிழில் தான் பதில் எழுதி உள்ளேன். சேதுவுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்பது கட்டுரையாளனின் தலைசிறந்த கண்டுபடிப்பு.

நிதர்சனம் இணையத்தளத்தை சேதுரூபனாகிய நான் இயக்கியதற்கான ஒரு ஆதாரத்தைத் தானும் கட்டுரையாளர் முன்வைக்கட்டும்.

சேதுரூபனாகிய நான் பொட்டமானுடன் நேரடித் தொடர்பில் இல்லாத போதும் அப்படி இருந்ததாக அடம்பிடிக்கும் கட்டுரையாளர் நான் பொட்டம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தட்டும்.

எந்தக் கொலைகளுடனும் அல்லது கொலை செய்தவர்களுடனும் எந்த தொடர்பும் வைத்திராத என்மீது சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடைந்தையாக இருந்தவர் என கூறபட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள கட்டுரையாளர் ஒரு செய்தியைத் தானும் ஆதரமாக காட்ட முடியுமா என்பதே சேதுருபனாகிய எனது சவால்.

மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரையுடைய கொலைக்கும் அது பற்றிய செய்திக்கும் அது வெளியான இணைய ஆசிரியருக்கும் இணையத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தால் அதனை வெளியிடுங்கள். எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.

இவை சாதாரண குற்றச்சாட்டுகளும் அல்ல. தண்டனைக்குரிய குற்றங்கள். இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட புலம்பல்கள். ஒரு தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவர் ஒழிந்திருந்து கொண்டு புலம்பியதை விமர்சனம் என்ற பெயரில் வெளியிட்டது தேசம்நெற்றின் தவறு.

Sethuruban with TELO Selvam and EPRLF Sureshபுலிகளுக்கும் சேதுவாகிய எனக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்திருந்தால் அதை மறைக்க வேண்டிய தேவை எனக்கு எள்ளளவேனும் இல்லை. எனக்கும் ஈ.பி.டி.பிக்கும் புளோட்டுக்கும் ரெலோவுக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்க்கும் இராணுவத்திற்கும் பொலிசுக்கும் இன்னோரன்ன பல சக்திகளுடனும் தொடர்பு இருந்தது அதை நான் ஏன் மறைக்க வேண்டும்?

2. 1998 காலபகுதியில் ஊடகத்துறையில் புகுந்து கல்வியையும் முழுநேர ஊடகத்துறையையும் தொடராக ஆரம்பித்து இலங்கை அரச தொலைக்காட்சி கொழும்பின் தமிழ் தேசிய பத்திரிகை ஊடாக யுத்த களத்து செய்தி சேகரிப்பு வரை ரிபிசி வானொலி, ஈரிபிசி வானொலி அதன் பின்னரான பல சர்வதேச ஊடகங்கள் வரை வேலை செய்து வருகிறேன். இந்த 11 வருடகால வராலாற்றை ‘ஒரு வயது குறைந்த ஒரு மூன்றாந்தர கோமாளி’யாக வர்ணித்தமை எழுத்தாளரின் தாழ்வு மனப்பான்மையை கட்டியம் கூறி நிற்கின்றது.

Tsunami Donation_to_Veerakesari_Journalistபாலாவின் பச்சில் ஊடகத்துறைக்குள் புகுந்து பாலா இறக்கும் வரை தொடர்பில் இருந்த வீரகேசரி பிரதம ஆசிரியராக 2006 வரை இருந்த பாலவின் ஊரவரான நடராஜா ஊடாகவே சேதுவும் வளர்க்கப்பட்டான். நடராஜாவுக்கும் பாலசிங்கத்துக்குமான செய்தி தொடர்பாளனாகவும் சமாதான காலத்தில் தனிபட்ட முறையில் சேதுவாகிய நான் செயற்பட்டிருந்தமை முக்கியமானது. 1994ம் ஆண்டுவரை அன்ரன் பாலசிங்கத்தின் அதிகமான மறைவிடங்கள் யாழில் கரவெட்டி துன்னாலைப் பகுதிகளே.

வீரகேசரியில் வேலை செய்த காலத்திலும் பாதுகாப்பு தரப்பினரது அனுமதிப் பட்டியல் தொடர்பான விபரங்களை பெற்று வெளியிடுவதே எனது வேலையாக இருந்தது. இலங்கையின் யுத்த முனைக்கு பிபிசி ஆணந்தியுடன் ஒரு சந்தர்பத்தில் அனுத்த ரத்வத்தை சகிதம் வன்னி களமுனைக்கு சென்று வந்தேன்.

Sethuruban with Rathika Kumarasamy3. ஒரு செய்தியாளன் என்ற முறையில் இலங்கை அரசும் உத்தியோகபூர்வமாக சேதுவுடன் நோர்வே வந்த நாளில் இருந்து பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்பில் இருந்தது. இன்று 08 வருடங்களாக இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலய அதிகாரிகள் அனைவராலும் சேது அறியபட்டவராகவே இருந்தான். சேது புலியாகவோ அல்லது புலி உளவுக்காறனாகவோ இருந்திருந்தால் இலங்கை அரசால் தனது நாட்டு பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இன்றும் எடுக்க முடியும். இங்கு வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதையும் இலங்கை தூதுவராலயம் நோர்வே அரசுக்கோ அல்லது சேதுவுக்கு எதிராக ஏன் முன்வைக்க இல்லை?

Sethuruban with British Parlimentarians and Councilor4. சேதுரூபன் லண்டனை விட்டு வெளியேறவில்லை எவராலும் வில்லங்கமாக வெளியேற்றப்படவும் இல்லை. சேதுரூபனாகிய நான் சட்டரிதியாக 08-11-2002 யு.எல் இலங்கை விமானத்தில் லண்டனில் உள்ள கால்ரன்லெசரில் சொந்தச் செலவில் விமானச் சீட்டைப் பெற்று இலங்கை சென்றேன்.

அதன்பின் 2 வாரம் கழித்து மீண்டும் அதே இலங்கை விமானத்தில் கொழும்பில் இருந்து பிரித்தானியா வந்து, பிரித்தானியாவில் இருந்து சட்டரிதியாக நோர்வே சென்றேன். நேர்வே சென்ற பின்பும் சட்டரீதியாக பல தடவை பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன்.

ஒருவன் நாடு கடத்தபட்டால் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றபட்டிருந்தால் பிரித்தானிய நடைமுறை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.

5. ”Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்?” என்பது கட்டுரை எழுதிய எழுத்தாளரின் சிறுபிள்ளைதனமான குற்றச்சாட்டு. சேதுரூபன் திருமணம் முடித்த நாளில் இருந்து குறித்த அதே விலாசத்தில் மனைவியுடன் சீரும் சிறப்புமாக இரண்டு குழந்தைகளுக்கும் தகப்பனாக வாழ்ந்து வருகிறேன். தன்னை புனைப் பெயரில் ஒழித்துக் கொண்டு எனது திருமணம் பற்றி கதைகட்டுகின்ற எழுத்தாளர் பத்திரிகா தர்மம் பற்றி ஊருக்கு உபதேசம் வேறு. குறித்த முறையில் திருமணம் முடித்திருந்தால் நோர்வேக்கு சேதுரூபன் சென்றிருக்கவும் முடியாது. நோர்வே நாட்டு குடிஉரிமை பெற்றிருக்கவும் முடியாது.

Sethuruban with UNP politician Jeyalath Jeyawardana6. புலிகள் அழிந்த பின்பு மகிந்தவுடன் தொடர்பு எடுக்க முற்படுவதாக குற்றச்சாட்டு முனைவைக்கபட்டுள்ளது. ஆனால் அது தவறு தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் முதல் ஜ.தே.கட்சி அமைச்சர்கள் வரை பலருடன் நான் அண்மைக் காலம்வரை தொடர்பில்தான் இருந்தேன். இன்றும் தொடர்பில்தான் இருக்கின்றேன்.

7. ஜரோப்பாலில் எனக்கு ரி.பி.சி விடயம் தவிர்ந்த எந்த விடயத்திலும் கிறிமினல் றக்கோட் இருந்தது இல்லை. தற்போது ரிபிசி விடயமும்கூட ஒரு சட்ட தவறாக மாறியுள்ளதால் அதை கிறிமினல் றக்கோட்டாக பார்க்க முடியுமா, முடியாதா என்பது சட்டத்தின் முன் நிக்கிறது.

அண்டப் புழுகுத்தனமாக கட்டுரையை எஸ் சிவரூபன் எந்தவித ஆதரமும் இல்லாமல் எழுதி உள்ளார். அதனை தேசம்நெற் விமர்சனம் என்ற பெயரில் பிரசுரித்தும் உள்ளது. தேசம்நெற் பத்திரகா தர்மம் உண்மையானது என்றால் அந்த ஆதாரங்களை வாங்கிப் பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ் சிவரூபனின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர் இதுவரை இப்படி எத்தனை அண்டப் புழுகுகளை எழுதினார் என்பது வெளிவரும்.

கட்டுரையாளர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் இதற்கு ஆதாரங்களை வைக்கும் வரை தயவு செய்து எழுதுவதை – புனைபெயரில் ஒழிந்திருந்து எழுதுவதை நிறுத்த வேண்டும்.

சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்

 ._._._._._.

விமர்சனக் கட்டுரைகள் சொந்தப் பெயரில் எழுதுவதற்கே தேசம்நெற் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இருப்பினும் இக்கட்டுரையை எழுதியுள்ள எஸ் சிவரூபன் என்பது புனைப்பெயர். கட்டுரையாளரது விமர்சனம் தேசம்நெற் ஆசிரியர்களில் ஒருவர் தொடர்பாக உள்ளதால் இவ்விமர்சனக் கட்டுரையை தேசம்நெற்றின் விதிமுறைகளுக்கு விலக்காக புனைபெயரிலேயே பிரசுரிக்கின்றோம். கட்டுரையின் இறுதியில் த ஜெயபாலனின் விளக்கக் குறிப்பும் இணைக்கப்பட்டு உள்ளது.

தேசம்நெற்

._._._._._.

டிசம்பர் 17 ம் திகதி இலண்டன் நேரத்துக்கு தேசம்நெற்றில் முன்னைநாள் நிதர்சனம் டொட் கொம் என்ற புலிகளின் இணையத்தள நிர்வாகி ஆகிய சேது என அழைக்கப்படும் நடராசா சேதுரூபன் மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கொழும்புக்குச் செல்வதாக செய்திக்கட்டுரையை எழுதிய தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அக்கட்டுரையில் (http://thesamnet.co.uk/?p=18265)   பின்வருமாறு எழுதுகிறார்.

“நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.”

நடராசா சேதுரூபன் 1978 ம் ஆண்டு இலங்கையில்  பிறந்தவர். துன்னாலையைச் சேர்ந்தவர். இப்பொதைய வயது 31 மட்டுமே. மேற்கூறிய விடயங்களை நாங்கள் சேதுவுடன் ஹாட்லிக்கல்லூரியில் படித்தவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளோம். ஹாட்லிக்கல்லூரியின் இணையத்தளத்திலும் சேதுவின் தகவலை (http://www.hartleycollege.com/cgi-bin/hweb/form/more/all_info.cgi?SERIAL=2136) பார்க்கலாம். அன்ரன் பாலசிங்கம் அடேலை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டது 1978 இல். (ஆதாரம் அடேல் பாலசிங்கத்தின் நூல் – த வில் ரு பிறீடொம்) 1978 ம் ஆண்டுக்குமுதலே முதல் மனைவி நோய் காரணமாக மரணமடைந்துவிட்டார். அதாவது முதல் மனைவி சேது பிறப்பதற்கு முதலே இறந்துவிட்டார். பிறகெப்படி சேது முதல் மனைவியுடன் பணியாற்றியிருக்க முடியும்? இது மிகப்பெரிய பொய். தகவல்களின் நம்பகத்தன்மை பற்றியும் இலங்கையில் அவர் ஊடகவியலாளராக பணியாற்றியதையும் பின்னூட்டத்தில் வாசகர்கள் கேள்வி எழுப்பியபின்னரும் ஜெயபாலன் தானும் பின்னூட்டத்தில் வந்து பின்வருமாறு எழுதுகிறார்.

“சேது இலங்கையில் வீரகேசரியின் தினசரிப் பதிப்பிலும் குறிப்பாக ரிபிசி யில் இருந்து பிரியும்வரை ரிபிசி யிலும் பணியாற்றியவர். சேதுவுடன் சமகாலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இன்னமும் இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளனர். அவர்கள் அதனை உறுதிப்படுத்தியும் உள்ளனர். சேது வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அன்ரன் பாலசிங்த்தின் முதல் மனைவியும் அங்கு பணிபுரிந்திருந்தார். அந்த உறவும் அன்ரன் பாலசிங்கத்தின் ஒரே ஊரவன் என்ற பிடிப்பும் ஒஸ்லோவில் சேதுவின் ரையை பாலா அண்ணை சரி செய்துவிடத் தூண்டியது.”

பத்தாண்டுகளுக்கு மேலாக தரமான பத்திரிகைத்துறையில் இருப்பவர் ஜெயபாலன். புலிகள் மாற்று இயக்கங்கள் இலங்கை அரசு எல்லாவற்றினதும் அரசியலை நன்கறிந்தவர். அப்படியானவர் புலிகளின் ஏஜண்டாக இருந்த தன்னைவிட ஏறத்தாள எட்டு வயதுகள் குறைந்த ஒரு மூன்றாந்தரமான கோமாளியான போலிப் பத்திரிகையாளனிடம் இலகுவாக ஏமாந்து போனது எவ்வாறு?
பாலசிங்கத்தின் வயது என்ன? சேதுவின் வயது என்ன.? முதல் மனைவியுடன தான் வேலைசெய்தேன் என்று சேது ஜெயபாலனிடம் சொன்ன புழுகை உறுதிப்படுத்தாமலும் தகவலின் மூலத்தை வாசகர்களிடம் சொல்லாமலும் CNN fox news மற்றும் நிதர்சனம் டொட் கொம் பாணியில் ஜெயபாலன் ஒப்புவிப்பதன் மர்மம் என்ன? என்ன சுலபமாக ஊத்தை சேது ஜெயபாலனின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டுப்போகிறான்.

பத்திரிகையாளர்கள் தவறு செய்யாதவர்கள் அல்ல. நல்ல பத்திரிகையாளன் தான் தவறு செய்ததும் தவறைத்திருத்தி மன்னிப்புக் கேட்பான். இங்கோ ஜெயபாலன் தன்னுடைய தவறைத் தெரிந்த பின்னரும் தன்னுடைய மிக மோசமான தகவல் மூலத்தை(சேது) யும் தன்னுடைய மிகப்பலவீனமான செய்திக் கட்டுரையாக்கத்தையும் மறைப்பதற்காக பிடிவாதக்காரனாக இருப்பதைப் போலுள்ளது.

இலங்கையின் முக்கிய பத்திரிகையாளர்களாகிய இக்பால் அத்தாஸ் க்கும் டீ.பீ.எஸ். ஜெயராஜ் க்குமிடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இக்பால் அத்தாஸ் வேணுமென்றே பிழையான தகவலை எழுதுவதில்லை. தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அவர் அடுத்தவாரத்தில் தன்னுடைய தகவல் தவறை சுட்டிக்காட்டி திருத்துவார். டீ.பீ.எஸ். ஜெயராஜ் வேண்டுமென்றும் தவறுதலாகவும் பல தகவல் மற்றும் வாதப்பிழைகளைச் செய்வார். அவர் தவறு சுட்டிக்காட்டப்பட்டாலும் அதனை சரி செய்துகொள்ளமாட்டார். இதன் காரணமாகவே அத்தாஸ் சர்வதேச ரீதியிலும் மதிப்புக்குரிய பத்திரிகையாளராக இருக்கிறார்.

சேதுரூபனைப் பற்றிய ஜெயபாலனின் கட்டுரையானது ஜெயபாலன் என்ற பத்திரிகையாளனின் நம்பகத்தன்மை சுயாதீனம் மற்றும் பத்திரிகைசார் அறங்கள் சம்பந்தமான மிக வலுவான கேள்விகளை எழுப்புகிறது.

என்ன காரணங்களுக்காக நடராசா சேதுரூபன் இலண்டனைவிட்டு வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு இலங்கைக்குச் செல்லவேண்டி வந்தது? பன்னர் ஒரு ஆயசசயைபந Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்? இத்தகைய முக்கியமான விடயங்கள் ஜெயபாலனின் கட்டுரையில் வேணுமென்றே தவிர்க்கப்பட்டு விட்டன.

நிதர்சனம் டொட் கொம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் மிரட்டிப்பணிய வைப்பதற்காகவும் விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் விடுதலைப் புலிகளால் கொல்லப்படப் போகிறவர்களின் “குற்றப் பத்திரிகையை” முன்கூட்டியே அறிவிக்கவும் புலிகளால் பயன்படுத்தப்பட்டது. இதனை நிர்வகித்தவர் சேது என்பதோடு சேதுவுக்கும் பொட்டம்மானுக்கும் நேரடித்தொடர்புகள் இருந்தது. அல்கைடா சம்பந்தப்பட்டு ஒரு இணையத்தை சேது நடாத்தி வந்திருந்தாரானால் இன்னேரம் அவர் சிறைக்குள்தான் இருப்பார். சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடந்தையாக இருந்தவர். மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரை கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே கொலைத்தண்டனை அறிக்கை நிதர்சனத்தில் வந்தது.

இப்படிப்பட்ட சேதுவையும் ஜெயபாலன் கூறுகின்ற “ஜனநாயகவாதிகள்” மற்றும் ரயாகரன் ஆகியோரையும் ஜெயபாலன் ஒரே தளத்தில் வைத்து விமர்சிப்பது ஏளனத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. ரயாகரனின் கட்டுரை மொழி மட்டுமே கண்டனத்துக்குரியது என்றால் சேதுவின் இணையம் Psychological warfare செய்ததோடு நிஜத்தில் பல கொலைகளுக்கும் உடந்தைபோனது.

சேதுவிற்கு தமிழில் ஒழுங்காக எழுத வாசிக்கத் தெரியுமா என்பதே கேள்விக்குரியது. நல்ல ஆய்வுக் கட்டுரைகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதக்கூடிய பகுப்பாய்வுத்திறனுள்ள ஜெயபாலன் சென்ற ஆண்டிலிருந்து குழு அரசியலின் இயங்கியல் காரணமாக தன்னுடைய நடுநிலைத்தன்மையை விரைவாக இழந்து வருகிறாரோ என்ற ஐயம் எழுகிறது. நிர்மலா ராஜசிங்கம் இராகவன் முதலியோர் மீது தனிப்பட்ட கவனமெடுத்து அவர்கள் மீது நடுநிலமையற்ற புலி அடிவருடிகளான தமிழ்நதி போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளை பிரசுரித்ததும் மீள்பிரசுரித்ததும் ஆனது குழு அரசியலுக்குப் பலியாகியமையாலா? மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளித்து அவை பிரசுரிக்கப்பட வேண்டியவை என்பது நியாயமானதுதான். ஆனால் நிர்மலா ராகவன் போன்ற சிலருடன் சச்சரவு ஏற்பட்ட பின்னர் மட்டும் அச்சிலர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி குறுகிய காலத்துக்குள் அவர்களைப்பற்றி வெளிவந்த “மாற்றுக்கருத்துக்” கட்டுரைகளை எழுதுவதற்கும் மீள்பிரசுரிப்பதற்கும் பின்னால் ஒரு குழு அரசியல் இருப்பதற்கான சாத்தியம் நிறையவுள்ளது.  இப்போது ஜெயபாலன் ஊத்தை சேதுவை மிக மென்போக்கோடு அணுகியம் தற்பாதுகாக்கிற அளவுக்கு அரவணைத்தும் ஓரளவுக்கு நியாயப்படுத்தியும் செல்வதை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். ஜெயபாலனின் அளவுகோல்களில் இரட்டைத்தன்மை மேலோங்கிவருகிறதா? சேதுரூபனுடையதோடு ஒப்பிடுகிறபோது நிர்மலாவினதும் ராகவனினதும் நேர்மை எவ்வளவோ மேலானது. ஆனால் நிர்மலா முதலியாரையும் அவர்தம் ஜனநாயக இயக்க காரரையும் விமர்சிக்கிறபோது ஜெயபாலன் மிகக்கடுமையான அளவுகோல்களையும் கடுமையான மொழியையும் பயன்படுத்துகிறார். ஊத்தை சேது புலிகள் அழிந்த இப்போது மிகப்பரிதாபகரமாக வேண்டுகிற பிரபல்யத்தையும் ஏன் நம்பகத்தன்மையையும் கூட தன்னை அழித்தும் ஊத்தை சேதுவுக்குத் தருகிறார் ஜெயபாலன்.

குறித்த கட்டுரையில் ஜெயபாலன் தனது பெயரில் பின்வரும் பின்னூட்டமூடாக சேதுவை நியாயப்படுத்த முயல்கிறார்.

“படித்தவன் எல்லாம் பண்பாணவன் பண்பாணவன் எல்லாம் படித்தவன் என்ற இந்தச் சிந்தகனயே சேதுவினை ஒரு ஊடகவியலாளனாக பொறுப்பான தொழில் செய்பவனாக பார்க்க முடியாமல் தடுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை சேது ஒரு தெரிந்த கெட்டவன். இங்கு ஒளிவு மறைவு இல்லை.

ஆனால் இங்கு பின்னூட்டங்கள் சொல்லும் ஊடக நேர்மையை எப்படி மதிப்பிடுவது. ஜனநாயம் மார்க்ஸியம் புரட்சி பேசுகின்ற ஊடகங்களுக்கும் சேதுவின் அன்றைய எழுத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்சேர்க்கிள் இணையத்தளத்தின் இத்தொடுப்பில் உள்ள கருத்துக்களை ஒரு தடவை பார்க்கவும். (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6223:2009-09-11-10-49-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50

சேது பின்னணியில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் நிதர்சனம் இணையத்தில் அல்லது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணையங்களில் எழுதப்பட்டவைக்கும் தமிழ் சேர்க்கிளில் உள்ள கருத்துக்கும் என்ன வித்தியாசம். தமிழ்சேர்க்கிளில் மே 18க்குப் பின் அதன் மொழியில் ஓரளவு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன் இரயாகரனனின் கட்டுரைக்கும் நிதர்சனம் கட்டுரைகளுக்கும் என்ன வேறுபாடு? நிதர்சனம் கட்டுரையில் மார்க்சியம் சோசலிசம் லெனின் மாஓ போன்ற சொற்கள் காணப்படமாட்டாது. மற்றுப்படி இரு இணையங்களிலும் தமிழில் உள்ள அத்தனை வன்மம் கொண்ட சொற்களையும் பார்க்கலாம்.

லண்டனில் பத்திரிகை நடத்தியவர் தலைமறைவாக இருந்து நடத்திய பின்னூட்டம்.கொம் இணையத்தளம் அதில் கருத்துக்கள் மொட்டைக் கடிதங்கள் எழுதிய ஜனநாயகவாதிகள், மாவோயிஸ்ட்டுக்கள் இவர்களையெல்லாம் எப்படி மதிப்பிடுவது. இவர்கள் எழுதியதற்கும் சேது எழுதியதற்கும் எவ்வித வேறுபாடுகளும் இல்லை.

சேது முக்காடு போடாமல் அவற்றைச் செய்ய மற்றையவர்கள் முக்காடு போட்டுக்கொண்டு அதனைச் செய்கிறார்கள். இந்த ஊத்தைக் கனவான்கள் ஒரு இயக்கத்திற்கு அல்லது ஒருசாராருக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. இவர்கள் ஜனநாயகம் மார்க்ஸியம் படித்தவன் பொறுப்பான தொழில் செய்பவன் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சமூகத்தை மெல்ல மெல்ல நாசமாக்குகிறார்கள். சேது போன்றவர்களை இலகுவில் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கலாம். ஆனால் மற்றையவர்களை அவ்வளவு இலகுவாக அடையாளம் காணவும் முடியாது சிகிச்சை அளிக்கவும் முடியாது. இவர்களே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள். மிகமோசமான சமூகக்கொல்லிகள்.” – த ஜெயபாலன்.

ஜெயபாலனின் கட்டுரைக்கூடாக மட்டும் சேது தனக்கு பிரபலம் தேடாமல் பின்னூட்டங்கள் ஊடாகவும் தேடுகிறார். இதனையும் ஜெயபாலன் அனுமதித்துள்ளார். 

சேது என்கிற சந்தர்ப்பவாத பச்சோந்தியின் இப்போதைய strategy பின்வருமாறு. நிதர்சனம் டொட் கொம் இயக்குனராக இருந்தபோது தனக்கும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்குமிருந்த தொடர்பை பகீரதப்பிரயத்தனம் செய்து மறைப்பது. தனக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்குமிடையிலேயே அதிலும் குறிப்பாக அன்ரன் பாலசிங்கத்துக்குமிடையிலேயே தொடர்பு இருந்ததான புதிய மாயப்புனைவை ஊடகங்கள் ஊடாக கட்டமைப்பது. புலிகள் அழிந்த இக்காலத்தில் மகிந்த ஆட்சியோடு தொடர்பு எடுப்பது. மீண்டும் புதிய எஜமானர்களுக்கு ஊடக ரவுடியாகி (எப்போதும் போலவே வேலை வெட்டிக்குப்போகாது) செல்வாக்கையும் செல்வங்களையும் அனுபவிப்பது.

ஐரோப்பாவில் criminal recordஐ உடைய ஒரு பச்சோந்தியும் கோமாளியுமானவரை மகிந்தவோ அல்லது சரத் பொன்சேகாவோ தங்களது பிரச்சாரத்துக்கு உபயோகிப்பார்களாயின் அவர்களிக்கு கிடைக்கவிருக்கும் தமிழ் வாக்குகளும் கிடைக்காமலே போகும்.

தேசம் நெற் போன்ற பொறுப்பான பத்திரிகைகள் சேது போன்றவர்களின் வேலைத் திட்டங்களுக்குப் பலியாகமல் இருக்க வேண்டும்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.//

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார். முதல் மனைவி பற்றிய எஸ் சிவரூபனின் குறிப்புச் சரியானதே. ஏனையவை எஸ் சிவரூபனுடைய ஊகம் அல்லது விமர்சனம்.

தவறுக்கு வருந்துகிறேன். முன்னைய கட்டுரையிலும் இத்திருத்தத்தை மேற்கொள்கிறேன்.

த ஜெயபாலன்

‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

Viyoogam_CoverRahuman_Jan‘மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்து கொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ என பிரித்தானியாவில் நடைபெற்ற மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழான வியூகம் வெளியிட்டு நிகழ்வில் அச்சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரகுமான் ஜான் தெரிவித்தார். டிசம்பர் 21ல் லண்டனுக்கு வெளியே நோர்பிற்றன் என்ற இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாறுபட்ட அரசியல் கருத்துக்களை உடையவர்களின் சந்திப்பாக இது அமைந்தது. கௌரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யமுனா ராஜேந்திரன், என் சபேசன் ஆகியோர் சஞ்சிகையின் மதிப்பீட்டை மேற்கொண்டனர். சஞ்சிகை மதிப்பீடு அதன் ஏற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து கலந்தரையாடல் இடம்பெற்றது. வழமை போன்ற நூலாசிரியரை நோக்கிய கேள்விகளாக அல்லாமல் கலந்துகொண்டவர்களிடையே கருத்துப் பரிமாற்றங்களும் விவாதங்களும் இடம்பெற்றது.

டிசம்பர் 13ல் இச்சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோவில் இடம்பெற்றது. இவ்வார நடுப்பகுதியில் இதன் வெளியீடு பாரிஸில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Yamuna_Rajendiranவியூகம் விரிவான ஆழமான விடயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் அவற்றை இத்தளத்தில் விரிவாக ஆய்வு செய்ய முடியாது எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் பொதுவான தனது மதிப்பீட்டை அங்கு வைத்தார். மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழாக வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இச்சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரைகள் அவ்வாறு அமையவில்லை என்றும் இச்சஞ்சிகை கோட்பாடு மற்றும் நடைமுறைசார்ந்த விடயங்களின் கலப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். சஞ்சிகையின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் அதனை ஒரு சஞ்சிகை என்பதிலும் பார்க்க நூலின் தோற்றத்தினையே வழங்குவதாகவும் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டார். வியூகத்தின் ஆசிரியர் தலையங்கம் அதன் கடந்த காலம் பற்றியும் தீப்பொறி மற்றும் உயிர்ப்பு சஞ்சிகை பற்றியும் பேசுவதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் சுயவிமர்சனம் செய்வதற்கான தளம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு வகைகளில் கடந்த காலப் போராட்டங்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் அவர்கள் இழப்புகளையும் துயரங்களையும் நேரடியாக அனுபவித்தவர்கள் அவர்கள் உணர்ச்சிபூர்வமாகவே அரசியலைப் பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார். ஆனால் அரசியல் என்பது உணர்ச்சிபூர்வமானது அல்ல என்றும் அது அறிவுபூர்வமாக கையாளப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டினார்.

ஒரு கோட்பாட்டு இதழானது அவ்வியக்கத்தின் கோட்பாட்டு அரசியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் வியூகத்தில் வெளிவந்துள்ள அத்தனை கட்டுரைகளுமே புனைப்பெயர்களில் வெளிவந்துள்ளதாகவும் வியூகம் சஞ்சிகையிலும் தொடர்புகளுக்கான எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனவும் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

20 வருடங்களுக்குப் பின்னர் தோழர் என்றழைக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறி தன் மதிப்பீட்டை ஆரம்பித்த என் சபேசன் இதனை ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகி உள்ளதாகக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் என்பது தேசிய அரசியல் என்பதைக் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த என் சபேசன் தமிழ் தேசியம் அக முரண்பாடுகள் பலவற்றைக் கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் அவற்றுக்காக தமிழ் தேசியத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இனசமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Sabesan_Nசமூகத்தில் உள்ள காழ்ப்புகள் முன்னோக்கி நகரவிடாமல் தடுப்பதாகக் கூறிய என் சபேசன் யமுனா ராஜேந்திரனின் மதிப்பீட்டில் பெரும்பாலும் உடன்படுவதாகத் தெரிவித்தார். குறிப்பாக கட்டுரைகளில் ஊகங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். புனைபெயர்களில் எழுதுவதில் யமுனா ராஜேந்திரனுடன் முரண்பட்ட என் சபேசன் புனைபெயரில் எழுதுவதற்கான பாதுகாப்பு போன்ற காரணங்களும் தேவையும் இன்னமும் இருப்பதாகத் தெரிவித்தார். வியூகம் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்டு தனது மதிப்பீட்டை முடித்துக் கொண்டார்.

மே 18 இயக்கம் சார்பாகவும் வியூகம் ஆசிரியர் குழு சார்பாகவும் கருத்து வெளியிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடந்து முடிந்த விதமும் முற்றாக அழிக்கப்பட்டதும் எதிர்பார்க்காத ஒன்று எனத் தனது கருத்துரையை ஆரம்பித்தார். இந்தப் புள்ளியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் எழுவதைச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றில்லை என்றால் அதனை வலிந்து போராட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆனால் அவ்வாறான ஒரு பிரச்சினை இருக்கும் போது ஒடுக்குகின்ற தேசம் வெற்றி கொண்ட படையாகக் கொக்கரிக்கின்ற போது அதற்க எதிராகப் பேசுவது ஒவ்வொரு அரசியல் உணர்வுள்ளவரினதும் தார்மீகக் கடமையென்றே தான் நினைப்பதாகத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் இவ்வாறான விவாதங்கள் பல்வேறு தளங்களிலும் இடம்பெறுவதாகக் கூறிய அவர் அவ்வாறான விவாதங்களிற்கான தொடக்கப் புள்ளியாகவும் அவ்வாறான விவாதங்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலுமே மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இது ‘முடிவல்ல புதிய தொடகம்’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் போராட்டத்தின் தோல்வியாக தற்காலிகமாக அமைந்தாலும் அவர்களைக் காப்பாற்றி இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகள் பிழையான தலைமையைக் கொண்டிருந்தது மட்டுமல்ல சரியான தலைமைகள் உருவாக முடியாமல் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்தனர் எனவும் குற்றம்சாட்டினார். போலியான ஒரு தலைமையைக் காப்பாற்றி இருக்க முடியாது எனத் தெரிவித்த ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுவிக்கபட்டிருந்த பிரதேசங்களில் மக்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் தாங்கள் விடுதலை அடைந்ததாக உணர்ந்தார்களா என்பதுமே முக்கியமான கேள்வி என்றும் சுட்டிக்காட்டினார்.  

சரி பிழையென்பது இருவழிகள் இவற்றில் எது சரி என்பதை வரலாறே தீர்மானிக்கும் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் இதில் நான் சரியாக இருக்கலாம் சிலவேளை நீங்கள் சரியாக இருக்கலாம் அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது எனத் தெரிவித்தார். மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும் என்பதையும் அவர் விளக்கினார். ஆனால் அப்படியல்லாமல் வெறும் காழ்ப்புணர்வுடன் வெறிகொண்ட மிருகங்கள் போல் குத்திக் குதறுகின்றோம் என்றும் கொம்பியூட்டர்களில் இருந்து இரத்த ஆறு ஓடாதது தான் ஒரு குறையாக இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். எல்லாவற்றையும் அரசியல் என்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் மார்க்சியம் புரட்சி ஏகாதிபத்தியம் திரிபுவாதம் இவற்றை நீக்கிப் போட்டப் பார்த்தால் வெறும் சேறும் சகதியுமே எஞ்சியிருக்கும் எனத் தெரிவித்தார். நபர்கள் சம்பவங்கள் என்பதைத் தாண்டி சமூக உறவுகளாக அரசியல் போக்குகளாகப் புரிந்தகொள்ள முடியவில்லை என்றால் இது என்ன அரசியல் என்றும் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சஞ்சிகையின் மதிப்பீடு தொடர்பான தனது கருத்துக்களை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றுது. இதில் பெரும்பாலும் தேசியவாதம் தொடர்பான விவாதமே கூடுதலாக நடைபெற்றது.

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் தேசிய விடுதலையூடாகவே அமையும் என்று மார்க்சிய அடிப்படையில் கூறிக்கொண்டாலும் அது இனரீதியான தோற்றப்பாட்டையே காட்டுவதாக ராகவன் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாண்டியன் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மார்க்சிய ரீதியில் அணுகுவதாகக் கூறிக்கொள்பவர்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலம் தீர்வுகாணலாம் என்று தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை மறைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.

கலந்தரையாடலில் கருத்து வெளியிட்ட என் சபேசன் முஸ்லிம்கள் தனியான தேசம் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இலங்கையில் சிங்களம் தமிழ் என்ற இருதேசங்களே உள்ளதாகவும் கருத்து வெளியிட்டார். அப்போது குறுக்கிட்ட ராகவன் அவ்வாறே சிங்களத் தலைமைகள் தமிழர்கள் ஒரு தனியான இனம் இல்லை எனக் கருதுவதாகத் தெரிவித்தார். என் சபேசனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாசில் பாலன் தேசிய இனங்களை வரையறுப்பது என்பது ஸ்ராலினின் வரையறைகளைக் கடந்து வரவேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன்னைத் தனித்துவமான இனமாக உணருமானல் அவர்கள் தனித்துவமான இனமாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பழங்குடிகள் இன்று அவ்வாறே உணருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சபா நாவலனும் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் தேசியம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இருந்துள்ளது எனத் தெரிவித்த த ஜெயபாலன் அது புலித் தேசியமாக ஆக்கப்பட்டு அதிலேயே புலிகள் ஊன்றி நின்றனர் என்றும் புலிகளின் தோல்வி என்பது அவர்களுடைய தோல்வி மட்டுமல்ல அவர்கள் ஊன்றி நின்ற தமிழ் தேசியத்தினதும் தோல்வியாகவே அமையும் என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.

காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டதை உதாரணங்களுடன் காட்டிய என் கெங்காதரன் மே 18 இயக்கமும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவுகளை எடுக்குமோ என்ற ஐயத்தை வெளிப்படுத்தினார்.

மாற்றுக் கருத்தக்கான விவாதத்திற்கான களத்தை உருவாக்குவதே தமது நோக்கு என்றும் இவ்வாறான நிகழ்வுகள் அதற்கு உதவும் என்றும் தெரிவித்த ரகுமான் ஜான் நடைமுறையில் உள்ள சாதனங்களின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி கேள்வி எழுப்பியதுடன் உண்மைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அதனை ஆராய்வதற்கான புதிய கோட்பாட்டு சாதனங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி அதனை விவாதிப்போம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்! என்றும் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

(குறிப்பு: இது கூட்டத்தில் இடம்பெற்ற உரைகளின் விவாதங்களின் தொகுப்பு. பெரும்பாலும் கருத்து வெளிப்படுத்தியவர்களது கருத்து மாற்றம் இல்லாமல் பதிவு செய்துள்ளேன். தவறுதலாக கருத்துக்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் சுட்டிக்காட்டவும்.)

Related Articles:

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

முன்னாள் ஐரோப்பிய ‘புலி’ ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவுக்காக பிரச்சாரம் செய்ய இலங்கை செல்கிறார். : த ஜெயபாலன்

Nadarajah_Sethurubanவருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நடராஜா சேதுரூபன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசணை வழங்குபவருமான கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் காலப்பகுதியில் இலங்கை வரவுள்ள சேதுரூபன் இலங்கையில் உள்ள குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நேர்காணல்கள வழங்க இருப்பதாகவும் கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். இத்தகவல் உண்மையானது என்பதை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய சேதுரூபன் இன்னும் இரு வாரங்களுக்குள் தான் இலங்கை செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு ஒன்று இலங்கையில் இருந்து நோர்வேக்கு வரவுள்ளதாகக் கூறிய அவர் இக்குழு சர்வதேச ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு திரட்டும் நோக்கில் வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இலங்கை செல்லவுள்ள சேதுரூபன் மீண்டும் அக்குழுவுடன் நோர்வே வரலாம் எனவும் கூறினார்.

நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் அன்புக்குரியவருடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.

அதன் பின்னர் ரிபிசி வானொலியில் ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன் ஏற்பட்ட முரண்பாட்டுடன் அவ்வானொலியைவிட்டு வெளியேறி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டவர். குறிப்பாக ரிபிசி யில் இருந்த காலத்தில் நட்பான ஹரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதன் பின்புலத்தில் நின்றவர்களில் சேதுரூபன் குறிப்பிடத்தக்கவர். இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலகிய ஆர் ஜெயதேவனுக்கு எதிரான மிகக் கடுமையான பிரச்சாரங்கள் சேதுரூபனால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஆர் ஜெயதேவன், ரிபிசி வானொலி என்பன தற்போது அரசுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்துகின்றன. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சேதுரூபன் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்.

தற்போது சேதுரூபனுடன் தொடர்புடைய எதிரும் புதிருமான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவனின் மனைவியின் குடும்பத்தினர் தான் இலங்கை அரசுக்கு உளவு பார்த்து வழங்குவதாக ஒஸ்லோவிற்கு வெளியே உள்ள மோல்டே பொலிஸ் நிலையத்தில் குற்றப்பதிவு செய்துள்ளதாக சேதுரூபன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பொறுப்பாளரான முரளி என்பவரும் அதே குற்றச்சாட்டை ஸ்ரோனர் பொலிஸ் நிலையத்திலும் தன்மீது பதிவு செய்திரப்பதாகவும் தெரிவித்தார். நோர்வேயில் மற்றுமொரு அரசுக்கு சார்பாக உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போது நோர்வே நியூஸ் என்ற இணையத்தளத்தின் ஆசிரியராகச் செயற்படும் சேதுரூபன் ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கெ ரி ராஜசிங்கத்திற்கு எதிராக மானநஸ்ட வழக்கைத் தொடுத்துள்ளார். சுவீடனில் வாழும் கே ரி ராஜசிங்கம் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனத் தன்னைக் குறிப்பிட்டு தன் பற்றிய அபாண்டமான செய்திகளை வெளியிட்டதாக சேதுரூபன் குற்றம்சாட்டியுள்ளார். Submissions_to_the_court_2009-09-16_and_2009-09-30.pdf , Letter_from_the_court_dated_2009-12-03_and_submission_from_the_defendants_dated_2009-11-16.pdf

இதே சமயம் லண்டன் ரிபிசி வானொலி உடைப்பிலும் சேதுரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

இவற்றுக்கிடையே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டின் ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டக் குழு தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சேதுரூபன் தெரிவிக்கின்றார். ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். தற்போது ஏசியன் ரிபியூன் இணையத்திற்கான நிதியை இலங்கை அரசே வழங்கி வருகின்றது என்ற செய்தி கடந்த ஆண்டு இலங்கைத் தேசிய நாளிதள்களில் வெளிவந்திருந்தது. அண்மையில் சரத் பொன்சேகா பற்றிய ஆதாரமற்ற செய்திகள் ஏசியன் ரிபியூனில் வெளிவந்தது தொடர்பாக சரத் பொன்சேகாவின் சட்ட குழு ஏசியன் ரிபியூன் மீதும் கே ரி ராஜசிங்கம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளனர். ஏசியன் ரிபியூன் மீது ஏற்கனவே சேதுரூபனின் வழக்கும் இருப்பதால் அது பற்றிய விபரம் அறியவே சரத் பொன்சேகாவின் சட்டக் குழு சேதுரூபனைத் தொடர்பு கொண்டதாக தெரியவருகின்றது.

மகிந்த ராஜபக்சவிற்கு சேதுரூபனின் ஆதரவு என்பது இவ்வாறான சட்டச் சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு நகர்வா எனக் கேட்ட போது எவ்வித கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதா எனக் கேட்ட போது ‘சரத் பொன்சேகா ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும் அதுவொரு நல்லஅம்சம்’ எனத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவதற்கோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா எனக் கேட்டதற்கு இப்போதைக்கு அவை பற்றி எதுவும் குறிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.// என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார்.

தவறுக்கு வருந்துகிறேன். தற்போது திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

த ஜெயபாலன்

மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்

முன்னாள் குழந்தைப் போராளிகள்தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைப் பற்றிக் கட்டிய விம்பமும் இறுதிப் போர்! இறுதிப் போர்!! என்று முழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஊடகங்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தவறான தகவல்களை அள்ளிவீசி அவர்களை ஒரு மாயை உலகிற்குள் தள்ளிவிட்டிருந்தனர். இன்று இந்த ஊடகங்களில் போர் முழக்கம் இல்லை. ஆனால் வெற்று முழக்கங்களுக்கு குறையுமில்லை. ஆனால் இந்த ஊடகங்களினால் யுத்த வலைக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட வன்னி மக்களது வாழ்வு இன்னமும் கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. மே 18 வரை வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக்கி அவர்கள் வகைதொகையின்றி கொல்லப்படுவதற்கும் வகைதொகையின்றி அங்கவீனர்கள் ஆவதற்கும் தங்கள் பூரண ஆதரவை வழங்கி வந்த புலிசார்பு ஊடகங்களும் தெரிந்தும் தெரியாமலும் புலிசார்பு ஊடகங்களால் வழிநடாத்தப்பட்ட இந்த மக்களது அவலத்திற்குப் பொறுப்பான புலம்பெயர்ந்த மக்களும் மே 18க்குப் பின் அந்த மக்களை பெரும்பாலும் கைவிட்டுள்ளனர். பாலியல் வல்லுறவு கொண்டவனையே கணவனாக்கும் தமிழ் தேசிய மரபின் அறத்தினையே புலித் தேசியம் பேசுபவர்கள் வன்னி மக்கள் விடயத்தில் எடுத்துள்ளனர். வன்னி மக்களுக்கு மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்திய அம்மக்களை மானபங்கம் செய்த இலங்கை அரசுதான் அந்த மக்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று இவர்கள் அம்மக்களைத் கைகழுவி விட்டுள்ளனர்.

மே 18க்குப் பின் தற்போது 6 மாதங்கள் ஓடிவிட்டது. இந்த மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளையாவது செய்வது பற்றி தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கின்றோம் மக்களுடன் நிற்கின்றோம் என்ற எந்த புலம்பெயர் அரசியல் அமைப்புகளும் முன்வரவில்லை. அந்த மக்களைச் சென்று பார்க்க தங்களை அனுமதிக்கவில்லை என்று ஒப்பாரி வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்று பார்த்த பின் அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை. வன்னி மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் போல் அல்லாது புலிகளின் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளின் பிரதிநிதிகளாகச் செயற்பட்ட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் வன்னி மக்கள் தொடர்பில் எதனையும் செய்ய முன்வரவில்லை. இலங்கையில் இருந்து ஐரோப்பா வந்து யுத்த முழக்கம் இட்டவர்கள் ஏன் மீண்டும் ஒருமுறை லண்டன் வந்து அந்த மக்களின் புனர்வாழ்விற்கு முழக்கம் இடக்கூடாது? அதற்கு யார் தடைவிதித்தனர்?

2004 டிசம்பர் 26 சுனாமி நடைபெற்று 5வது ஆண்டு நிறைவடைகின்றது. இந்த சுனாமி நிதி, கண்ணீர் வெள்ளம் என்றெல்லாம் மக்களிடம் சேர்த்த நிதி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை. வெண்புறா என்றும் வணங்கா மண் என்றும் தமிழ் சுகாதார அமைப்பு என்றும் பல பெயர்களில் தமிழ் மக்களுக்காகச் சேர்க்கப்பட்ட நிதிக்கு இதுவரை சரியான கணக்குகள் பொதுத் தளத்தில் வைக்கப்படவில்லை. வெண்புறா பொதுத்தளத்தில் வைத்த கணக்கு விபரம் சுண்டைக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவிலேயே செலவிழிக்கப்பட்டு உள்ளது. தாயக மக்களின் அவலத்தின் பெயரில் புலிசார்பு அமைப்புகளால் சேகரிக்கப்ட்ட நிதி பெரும்பாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அவ்வமைப்பு சார்ந்தவர்களின் புனர்வாழ்விற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

அன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசம் நிவாரணப் பணிகளைச் செய்ய முற்பட்ட போது நிதர்சனம் போன்ற இணையங்கள் அரசின் கைக்கூலிகள் என்ற சேறடித்தன. இன்று வன்னி மக்களுக்கான நிவாரணங்களை தேசம், லிற்றில் எய்ட் மேற்கொண்டபோது அதற்கு சேறடிப்பதற்கு நிதர்சனம் இயங்கவில்லை. அதன் வேலையை வேறு சிலர் (புலி மார்க்ஸிஸட்டுக்கள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இன்று இந்தப் புலம்பெயர் புலிசார்பு அமைப்புகளால் கைவிடப்பட்டவர்கள் அப்பாவிப் பொது மக்கள் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் ஆவர். குறிப்பாக சரணடைந்த சிறுவர் படையணியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான போராளிகளில் ஒரு சிறு பிரிவினர் அம்பேபுச புனர்வாழ்வு மையத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டனர். நவம்பர் 15 உடன் அம்பேபுச புனர்வாழ்வு மையம் மூடப்பட்டு அவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். தற்போது இரத்மலானை இந்துக் கல்லூரியில் 277 குழந்தைப் போராளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Ambepusse_Project_Little_Aid.pdf

இவர்களது புனர்வாழ்வுக்கான உதவிகளை மேற்கொள்ள இவர்களை யுத்தத்திற்கு அனுப்பிய புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள் தவறிவிட்டன. இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே போராட்டத்தில் இணைக்கப்பட்டதால் சாதாரண குழந்தைகளுக்குரிய மனநிலையில் இல்லை. இவர்களுக்கு விசேட உளவியல் பரமாரிப்பு அவசியமாகின்றது. ஆனால் இவர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பை புலம்பெயர் அமைப்புகள் ஏற்க மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் பிரச்சினைக்குரியவர்கள், உளவியல் பிரச்சினையுடையவர்கள் என்பதே முக்கிய காரணமாக உள்ளது.

little_aidஇந்த குழந்தைப் போராளிகளை நேரில் சென்று பார்த்து அவர்கள் விரும்பியபடி அவர்களுக்கு லிற்றில் எயட் 1785பவுண்கள் செலவில் இசைக்கருவிகளை வழங்கி அவர்களுக்கு சிறு ஆறுதலை அளிக்க முற்பட்டது. மேலும் லிற்றில் எய்ட் தேசம்நெற் மேற்கொண்ட வன்னிமுகாம் மாணவர்களுக்கான கல்வித் திட்டத்திலும் பங்களிப்புச் செய்தது. வன்னி முகாம் குழந்தைகளுக்கான பால்மா, முகாமில் இருந்தவர்களுக்கான துணி வகைகள், மரக்கறிகள் தற்போது மருந்து வகைகள் என லிற்றில் எய்ட் பெயருக்கு ஏற்ற அளவில் முடிந்த அளவில் சிறு உதவிகளை வழங்கியது. இந்த மக்களுக்கு உதவுவதை லிற்றில் எய்ட் தனது கடமையாக சமூகப்பொறுப்பாகக் கருதுகின்றது. தனது கணக்கு விபரம் முழுவதையும் இணையத்தில் பிரசுரித்துள்ள லிற்றில் எய்ட் இதுவரை 5521 பவுண்களை நன்கொடையாகப் பெற்றுள்ளது. ஆனால் 10183 பவுண்களை வன்னி முகாம்களின் உதவிக்கு செலவழித்துள்ளது. 5000 பவுண்கள் வரை லிற்றில் எய்ட் ரஸ்டிகளே பொறுப்பெற்றுள்ளனர். http://littleaid.org.uk/project_reports

இந்த மக்களுக்கு முடிந்த எல்லா வகையிலும் உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே ஒவ்வொருவருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த மக்கள் விடயத்திலும் தங்கள் சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காக அந்த உதவிகளுக்கு உபத்திரவம் விளைவிக்கின்ற ஒருசிலர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். வன்னி முகாம்களுக்கு தேசம்நெற் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் உதவிகள் தொடர்பாக சேறடிப்பதில் புலம்பெயர் கீபோட் மார்க்ஸிஸ்டுக்களே முன்னணியில் நின்றனர். தங்கள் மீது மார்க்ஸிட்டுக்கள் என்று விம்பத்தைக் கட்டமைக்கும் இவர்கள் இவ்வாறான உதவிகள் மார்க்ஸிய விரோதமானவை என்றும் மக்கள் விரோதமானவை என்றும் கட்டுரைகளை வரைந்து தள்ளினர். இவர்கள் வன்னி முகாம் மக்களுக்கு உதவுவதன் மூலம் இலங்கை அரசுக்கு கைக் கூலிகளாகச் செயற்பட்டார்கள் என்று உதவிகள் வழங்குபவர்கள் மீது சேறடித்தனர். வன்னி மாணவர்கள் கல்வியைத் தொடர நூல்களை வழங்கினால் முகாம்களை தொடர்ச்சியாக வைத்திருந்து பிழைப்பு நடத்துவதாக கண்டு பிடிப்புகளைச் செய்தனர்.

இவர்களுக்கிருந்த நோக்கமும் புலிகளுடைய நோக்கமும் பாரிய அளவில் வேறுபடுவதில்லை. புலிகள் மக்களை வருத்தி தங்கள் அரசியலை முன்னெடுத்தனர். இவர்களும் அதே மக்களை வருத்தி துன்பக் கேணியில் தவிக்க விட்டு தாங்கள் அவர்களுக்காக புரட்சிகர நடவடிக்கைகளில் (கீபோட்டில் கட்டுரை வடிப்பது) ஈடுபடுவதாக றீல் விடுகின்றனர்.

இவர்களது மனவிகாரங்களுக்கும் பொறாமைகளுக்கும் போக்கிடமாக தங்கள் இணையங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைன் பற்றி இவர்கள் எழுதியவை அரசியல் அல்ல வக்கிரம். இந்த வக்கிரச் சொல்லாடல்களை கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் மத்தியில் பொதுவாகக் காணலாம். ஏனெனில் இந்த கீபோட் மட்டைகள் ஊறியது ஒரே குட்டையில். தங்களுக்கு மார்க்ஸிய மகுடம் சூட்டுவதையே இவர்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியோ பல்லாயிரம் மைல்கள். அதற்குள் தங்களில் யார் மக்களின் பக்கத்தில் என்று இவர்களுக்குள் தற்போது குத்துவெட்டு. அந்தக் குத்து வெட்டுக்கு அணிசேர்க்க ஆளாய்ப் பறக்கின்றனர்.

மே 18க்குப் பின் 6 மாதங்கள் கடந்துவிட்டது. தற்போது குழந்தைப் போராளிகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் செஞ்சோலைக் குழந்தைகளும் தங்களுக்கான ஒரு உதவும் அமைப்பைத் தேடுகின்றனர். இச்சிறார்களும் உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஏனைய சிறுவர் இல்லங்களில் வைத்துப் பராமரிக்க முடியாத நிலையுள்ளது. அதற்கு உதவுதற்கு லண்டன் அமைப்பு ஒன்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது. 65 சிறுவர்களைக் கொண்ட செஞ்சோலை இல்லத்தை லண்டனில் உள்ள இவ்வமைப்பு ஜனவரியில் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு முன்னர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழந்தைப் போராளிகளைப் பராமரிப்பதில் காட்டிய அதே தயக்கம் இக்குழந்தைகள் விடயத்திலும் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த 277 குழந்தைப் போராளிகள் 65 செஞ்சோலைச் சிறார்கள் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவி மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது. இவ்வுதவிகளை தனிநபர்களாக மட்டும் அல்லது ஒரு சில அமைப்புகளால் மட்டும் மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசிடம் இருந்து இந்த மக்களுக்கு அதிககட்ச உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே சமயம் இம்மக்களைப் போராளிகளை இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் மட்டும் விட்டுவிட்டு அரசாங்கம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்று நாம் எமது பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரசாங்கத்தின் இனவாதப் போக்கும் இனவாதத்தை கக்குகின்ற அரச இயந்திரமும் அப்படியே தான் இருக்கின்றது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் புலம்பெயர்ந்த மக்களின் கவனம் எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.

வன்னி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையிலும் அரசியலுக்கு அப்பாலும் பலரும் செய்து வருகின்றனர். இருந்தாலும் பெரிய அளவான முயற்சிகளில் ஸ்தாபனங்கள் ஈடுபடுவது அவசியம். இந்த அமைப்புகள் மீது சமூகம் விழிப்பாக இருந்து அவர்களைக் கண்காணிக்க வேண்டுவது அவசியம். இவ்வமைப்புகள் மீதான கண்காணிப்பும் விமர்சனமும் மக்களுக்கு உதவிகள் சீராகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அதைவிடுத்து அம்மக்களை துன்பத்திற்குள் அலையவிட்டு போராட்டத்திற்கு ஆள்பிடிக்க முயற்சிப்பதாக இருக்கத் தேவையில்லை. போராட்டத்திற்கான நேரம் வரும்போது அவர்கள் அதனைச் செய்வார்கள். புலத்து புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள் புரட்சியை ஏற்றுமதி செய்யத் தேவையில்லை.

லிற்றில் எய்ட் http://littleaid.org.uk/இன் முதலாவது உதவித் திட்டம் மே 18 2009ல் வன்னி முகாம்களைச் சென்றடைந்தது. ஒக்ரோபர் 12 2009 வரையான காலத்தில் 10 உதவித்திட்டங்களை http://littleaid.org.uk/projects லிற்றில் எய்ட் 9474 பவுண்கள் செலவில் மேற்கொண்டது. இத்திட்டத்தின் ஊடாக டென்மார்க்கில் உள்ள எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு லிற்றில் எய்ட் ஊடாக 1140 கிகி எடையுள்ள மருந்துப் பொருட்களை வவுனியாவிற்கு அனுப்பி வைத்தது. இதன் சந்தைப் பெறுமதி 16000 பவுண்கள். இவற்றை டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய திட்டம் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால் தற்போது அவ்வமைப்பு 5500 கிகி எடையுள்ள மருந்துகளை முற்றிலும் இலவசமாக லிற்றில் எய்ட்க்கு தர முன்வந்துள்ளது. இத்தொகுதி மருந்துப் பொருட்களின் சந்தைப் பெறுமதி 40 000 பவுண்களுக்கும் அதிகமாகும். இத்தொகுதி மருந்துப் பொருட்கள் தற்போது கொழும்பைச் சென்றடைந்துள்ளது. முன்னைய திட்டத்தைப் போன்று வன்னிக்கு இம்மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை லிற்றில் எய்ட் ஏற்றுள்ளது. அதற்கு ஒரு சில ஒத்துழைப்புகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றும் உள்ளது. இம்முறை இம்மருந்துப் பொருட்களின் விநியோகத்தை மேற்பார்வையிட டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் தலைவரும் லிற்றில் எய்ட் சார்பில் கொன்ஸ்ரன்ரைனும் இலங்கை செல்கின்றனர்.

மேலும் டிசம்பர் 20 லிற்றில் எய்ட் அமைப்பின் நிதி சேரிப்பு நடவடிக்கையின் ஓரு முயற்சியாக ஒன்றுகூடல் ஒன்றுக்கும் இராப்போசன நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்வு நிதி சேகரிப்புடன் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கான நீண்ட காலத் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்த ஆர்வமுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை பொது வேலைத்திட்டத்துடன் இணைக்கின்ற ஒரு முயற்சியாகவும் அது அமையும்.

நிகழ்வு விபரம்:
Doors Open – 8 :00pm – till late
32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA
Contact: 07886530996

வன்னி மக்களின் நல்வாழ்வில் அக்கறையுடன் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர். இங்கு லிற்றில் எய்ட் பற்றி எழுதியதன் மூலம் அவர்களது உதவிகளை குறைத்து மதிப்பிட முடியாது. லிற்றில் எய்ட் மூலம் அம்மக்களின் தேவைகளை தனித்து நின்று செய்துவிட முடியாது. புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த நம்பகமான அமைப்புகளுடாகவோ அல்லது தனித்தோ தங்களால் ஆன உதவிகளை மேற்கொண்டு அம்மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அம்மக்களை அரசியல் சதுரங்கத்தின் காய்களாக பயன்படுத்துவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது.

டிசம்பர் 26 2009ல் சுனாமியால் தன்னுயிரை இழந்த அனாமிகா பாலகுமாரின் நினைவு நிகழ்வு கிழக்கு லண்டனில் இடம்பெறவுள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்களின் இழப்புகளில் அனாமிகா போன்ற ஒரு சில இழப்புகளே அவரது பெற்றோர் லண்டனில் உள்ளதால் நினைவுகூரப்படுகின்றது. ஏனைய இழப்புகள் மறக்கப்பட்டு விட்டன. ஆனால் அந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்புகளைத் தாங்கி தங்கள் வாழ்க்கையைத் தொடருகின்றனர். இந்நிலையே வன்னி அவலத்தில் இருந்து மீண்ட மக்களுக்கும். தம் அன்புக்குரியவர்களை தம் அங்கங்களை இழந்தவர்கள் என்று இவர்களது எதிர்காலம் கடினமானதாக அமையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் திரையில் வன்னி மக்களின் முகங்கள் வராது, வானலைகளில் அவர்களின் குரல்கள் ஒலிக்காது, பத்திரிகை இணையங்களிலும் அவர்களது பதிவுகள் வராது. இம்மக்களுக்கான நலத்திட்டங்களை இப்போது ஆரம்பிக்காதுவிட்டால் இன்னும் சில மாதங்களில் இவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள்.

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

P Rayaharanநாம் தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். 20ம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த துறை தகவல் தொழில்நுட்பம். இந்த 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியின் பலாபலன்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு உள்ளோம். மித மிஞ்சிய தகவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி உலகம் இன்று விவாதிக்கின்றது. ஆனால் தமிழ் சமூகம் இந்தத் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின் அடிப்படைகளைக் கூட அனுபவிக்க முடியாத யுத்த சூழல் இலங்கையில் இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வரை தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றும் இலங்கை அரசும் தகவல்கள் மீதான தங்கள் அதீத கட்டுப்பாடுகளை கொண்டிருந்தனர். கொண்டிருக்கின்றனர்.

ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை தகவல்கள் மீதான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அவர்களுக்கு தகவல்கள் பலவழிகளிலும் கிடைத்தது. தகவல்களைப் பெறுவதற்கான பலவழிகளும் இருந்தது. ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்கள் உண்மைகளைத் தவறவிட்டன. தம் விருப்பு வெறுப்புகளுக்கும் தங்கள் அரசியல் தேவைகளுக்கும் ஏற்ப தகவல்களை வடிகட்டிக் கொடுத்தனர். மக்களை மாயைக்குள் வைத்திருந்தனர்.

நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவினமான நிலையில் இருந்தனர், பலவந்தமாக இளைஞர் யுவதிகளை படையணியில் சேர்த்தனர், மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர், தமது சொந்த மக்களையே சுட்டுக் கொன்றனர் என்ற விடயங்கள் சர்வதேச ஊடகங்களிலும் வன்னியில் இருந்தும் வந்திருந்த போதும் புல்ம்பெயர்ந்த தேசங்களில் இருந்த புலிசார்பு ஊடகங்கள் இந்த உண்மைகளைக் கண்டுகொள்ள மறுத்தனர். மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது விம்பங்களைக் கட்டமைத்தனர். அதனாலேயே மே 18 2009 காலையில் மக்கள் நித்திரையால் எழும்பியபோது ‘சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது’ போன்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களில் பலர் இன்னமும் அதன் தாக்கத்தில் இருந்து மீளவில்லை.

இலங்கை அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் மிகப்பெரும் மனித அவலம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த போதும் 20 000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் மக்கள் கொல்லப்பட்ட போதும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவதற்குப் பதில் தமது அரசியல் விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டே தகவல்களைச் சமைத்துக் கொண்டனர். இதன் மூலம் தாயகத்தில் இருந்து 6000 மைல்களுக்கும் அப்பால் ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான ஒரு மாயையைச் சூழலை புலத்தில் உருவாக்கியது. இன்றும் பலர் அச்சூழலிலேயே வாழ்கின்றனர்.

தகவல்கள், தகவல்களின் நம்பகத்தன்மை, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளல் என்பன பொதுத் தளங்களில் தகவல்களைப் பரிமாறுபவர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாயமான பொறுப்பு. விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தகவல்களைக் கட்டமைப்பதும் உண்மைகளைத் திரிபுபடுத்துவதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பாரதூரமானவை.

இன்றும் சிலர் இதனை உணர மறுக்கின்றனர். அந்த வரிசையில் தமிழரங்கம் பி இரயாகரனும் குறிப்பிடத்தக்க ஒருவர். அண்மையில் அவர் எழுதிய கட்டுரையில் இருந்து:
“வட்டுக்கோட்டை தீர்மானம்”, “நாடு கடந்த தமிழீழம்”, “மே 18 இயக்கம்” .. என்று புலிகள், தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை மூடிமறைத்து எப்படி நிகழ்கால அரசியலை செய்ய முனைகின்றனரோ, அதைத்தான் மாற்று கருத்து தளத்திலும் செய்ய முனைகின்றனர். மொத்தத்தில் கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.”

பி.இரயாகரன் Tuesday, 15 December 2009 11:22

வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், மே 18 இயக்கம் என்ற மூன்றையும் இரயாகரன் புலிகள் அமைப்பின் தொடர்ச்சியாகக் குறிப்பிடுகின்றார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுத்த கி பி அரவிந்தனும் நாடுகடந்த தமிழீழத்தை முன்னெடுக்கும் விஸ்வானந்தன் உருத்திரகுமாரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பவர்கள். இவை இரண்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலின் தொடர்ச்சி என்பது பொதுவாக நிறுவப்பட்ட உண்மை.

மே 18 இயக்கம் தீப்பொறி அமைப்பின் தொடர்ச்சி என்பதும் வியூகம் இதழ் உயிர்ப்பின் தொடர்ச்சி எனபதும் சுயவிமர்சனங்களுக்கு ஊடாகவே தாங்கள் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளப் போவதாகவும் வியூகம் சஞ்சிகையின் ஆசிரியர் தலைப்பு தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பான கட்டுரை டிசம்பர் 9ல் மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன் என்ற தலைப்பில் தேசம்நெற்ல் வெளியாகி இருந்தது. ரொறன்ரோவில் டிசம்பர் 13ல் இடம்பெற்ற வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ‘விவாதக் களத்திற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது’ என்றும் ‘அதன் ஆரம்பமே வியூகம்’ என்றும் ரகுமான் யான் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை வியூகம் ஆசிரியர் தலைப்புக் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேலாக வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மட்டுமல்ல ‘விடுதலைப் போராட்டமும் புலிகளும்’ என்ற பிரதான கட்டுரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது. வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு டிசம்பர் 14 மாலை 8:48க்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

— On Mon, 14/12/09, Tamil Circle <tamil_circle@yahoo.no> wrote:

> From: Tamil Circle <tamil_circle@yahoo.no>
> Subject:
> To: tamil_circle@yahoo.no
> Date: Monday, 14 December, 2009, 8:48 PM
> கடுமையாக
> விமர்சிக்கப்பட வேண்டிய நிலையில் – பார்வைக்கு      
>      
> தமிழரங்கம்
> இணையத்தளம்  கருத்து
> மக்களைப் பற்றிக்
> கொண்டால் அது மாபெரும்
> சக்தியாக
> உருவெடுக்கும்
>                                                              
>           www.tamilcircle.net 
>
> வர்க்கம், அரசியல்,
> சாதியம், பெண்ணியம்,
> தேசியம், நிறம், மதம்,
> பண்பாடு, கலாச்சாரம்,
> இசை, சுற்றுச்சூழல் …
> என அனைத்து
> விடையங்களையும்
> இத்தளத்தில் நீங்கள்
>
> காணமுடியும்.                 
>        
> மின்னஞ்சல்  tamilcircle@tamilcircle.net     
> tamil_circle@yahoo.no

அதாவது மே 18 இயக்கம் புலி சார்பானது என இரயாகரன் எழுதுவதற்கு முதல்நாளே வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனிடம் இருந்துள்ளது. tamil_circle@yahoo.no என்ற மின் அஞ்சல் முகவரியில் இருந்து இது அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

அப்படி இருக்கையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், அமைப்புகளுடன் மே 18 இயக்கத்தையும் இணைத்து மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி அமைப்பு என்று இரயாகரன் முத்திரை குத்துவது எதற்கு? இதற்கு இரு காரணங்கள் இருக்க முடியும்.
1. தவறான தகவல் : வழமை போல் இரயாகரன் எவ்வித உறுதிப்படுத்தலும் நம்பகத்தன்மையும் இல்லாத தகவலைக் கொண்டு மே 18 இயக்கம் – வியூகம் பற்றிய தவறான முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
2. தகவலை மறைப்பது : இரயாகரன் உண்மையை அறிந்திருந்த போதும் தகவல்களை வடிகட்டி தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அதனைத் திரிபுபடுத்தி வெளியிட்டு இருக்க வேண்டும்.

இரயாகரன் தவறான தகவல்களின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இது இரயாகரனுக்கு மட்டுமுள்ள குறைபாடும் அல்ல. இது கீ போட் மாஸ்க்ஸிஸ்டுக்களுக்குள்ள பொதுவான குறைபாடு. இவர்கள் தகவல்களைச் சேகரிப்பது உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. தங்கள் உழைப்பைச் செலுத்துவதும் இல்லை. ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிட்டுக்கள். இவர்கள் பிரதான நீரோட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதனால் இவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மூலங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற முடிகின்றது. தங்கள் அரசியலுக்கு வலுச் சேர்க்கும் தகவல்கள் எதனையும் எவ்வித விசாரணையும் இல்லாமல் இவர்கள் பயன்படுத்துவார்கள்.

இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன் என்ற கட்டுரையில் இரயாகரன் அறுதியிட்டு சரியென வெளியிட்ட செய்திகள் எப்படி முற்றிலும் தவறான செய்திகளாக அமைந்தது என்பது உதாரணங்களுடன் மிக விரிவாக எழுதப்பட்டு உள்ளது. அதனால் தவறான தகவல்கள் அடிப்படையில் இராயாகரன் கட்டுரையை எழுதி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பானது என இரயாகரன் எழுதியது தவறான செய்திகளின் அடிப்படையில் அல்ல. ஏனெனில் இரயாகரன் மே 18 இயக்கம் அதன் பின்னணி பற்றிய தகவல்களை அறிந்த ஒருவர். யூலை இறுதிப் பகுதியில் அரசியல் நட்பு சக்திகளுடன் உரையாடலை ஆரம்பிக்கு முகமாக ஐரோப்பா வந்த ரகுமான் யான் ஓகஸ்ட் 1ல் பாரிஸில் இரயாகரனைச் சந்தித்து உரையாடினார். இந்த உரையாடல் நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தமிழரங்கத்தில் கட்டுரை எழுதிய இரயாகரன் பின்வரும் அழைப்பை நட்புசக்திகளுக்கு விடுத்தார். ”மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!? இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை.”  இரயாகரன் தீப்பொறி அல்லது ரகுமான் யான் புலிகள் சார்ந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றால் ஏன் இந்த விமர்சனத்தை அன்று வைக்கவில்லை.

மேலும் அன்று இரயாகரன் எழுதியது ”எம்முடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள், இயல்பாக தம்முள் பாட்டாளி வர்க்கத்தை மறுக்கும் எதிர்ப்புரட்சி அரசியல் கூறுடன்தான், தம்மை முன்னிறுத்த முனைகின்றனர்.’‘ இந்த வரிகளின் மூலம் இரயாகரன் தனது நோக்கத்தை அம்மணமாகத் தெரிவிக்கிறார். “Over time it’s going to be important for nations to know they will be held accountable for inactivity,You’re either with us or against us in the fight against terror.” நவம்பர் 6 2009ல் இதனைத் தெரிவித்தது வேறு யாருமல்ல அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஸ். இதே கருத்துப்படவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் நடந்து கொண்டார். தனது வழியே சரியானது என்றும் அந்தவழியில் பயணிக்காதவர்கள் தமிழ் தேசியத்தின் துரோகிகள் என்றும் சுட்டுக்கொன்றார். இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தனது வழியில் பயணிக்காதவர்களை நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்கள் என்று வைகின்றார்.

தங்கள் அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஜோர்ஜ் புஸ், வே பிரபாகரன், மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இரயாகரனும் மிரட்டுகின்றார். டிசம்பர் 6ல் ரமிள்சேர்க்கிளில் இருந்து யோகன் கண்ணமுத்துவுக்கு (அசோக்) அனுப்பப்பட்ட மின் அஞ்சல்:
From: tamilcircle@tamilcircle.net
To: ashokyogan@hotmail.com
Subject: tamilcircle
Date: Sun, 6 Dec 2009 18:31:17 +0000

”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.”

2007 டிசம்பர் பிற்பகுதியிலும் 2008 ஜனவரியிலும் என்எல்எப்ரி யின் ஹற்றன் நஸனல் வங்கிக்கொள்ளை தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் பலரும் இரயாகரனிடம் கேள்வி எழுப்பினர். தன்னிடம் அவ்வாறான ஒரு கேள்வி எழுப்பப்பட்டதற்கே பொங்கியெழுந்து பல கட்டுரைகளை எழுதிய இரயாகரன் குறிப்பிட்ட வங்கிக் கொள்ளை தொடர்பாக எந்தப் பதிலையும் கூறவில்லை. ஆனால் ஓராண்டு கழித்து ”அசோக், நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப் பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.” என்று இரயாகரன் மிரட்டுகின்றார். இரயாகரனின் இந்த அரசியல் நேர்மையை என்னவென்பது.

இரயாகரனும் இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் மார்க்ஸிஸத்தில் புலிகள் அல்ல. இவர்கள் புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள்.

மே 18 இயக்கம் மீதும் ரகுமான் யான் மீதும் புலி முத்திரை குத்துவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது இரயாகரனுடைய முன்னைய கட்டுரை மூலம் மிகத் தெளிவாகிவிட்டது. ரகுமான் யான் தன்னுடன் பாரிஸ்க்கு கதைக்க வந்ததை ”எமது வழிதான் சரியானது என்பது, தெளிவாக அரசியல் ரீதியாக உணரப்படுகின்றது.” என்று புல்லரித்துக் கொண்ட இரயாகரன் ரகுமான் யான் மே 18 இயக்கத்தை ஆரம்பிக்கிறார் என்ற செய்தி உறுதியானதும் பல்டி அடித்துக் கொண்டார். ”கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.” என்று ஒரு குற்றச்சாட்டை போட்டு வைக்கின்றார். மற்றவர்களை மக்களுடன் நிற்காதவர்கள் என்று எழுதும் இரயாகரன் ”எதுக்கு வாக்கு போடுகின்றோம்!?, ஏன் போடுகின்றோம்!? என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது.” என்று மக்களை மந்தைகள் என்று திட்டித் தீர்க்கின்றார். ”ஆறாவது அறிவை இழந்த மந்தைகள்” என்று மேலதிக விளக்கமும் கொடுக்கின்றார். ‘தமிழ் சமூகத்தில் ஆறறிவுள்ள ஒரே அரசியல் விலங்கு ‘அண்ணன் இரயா’ மட்டும் தான் என்பதனை இந்த தமிழ் சமூகம் அறிந்திருந்தால் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஒரு பட்டாசு வெடியுடனேயே முடித்திருக்கலாம்.’ என்ற கணக்கில் தான் இரயாகரன் தன்னைப் பற்றிய விம்பத்தைக் கட்டமைக்கின்றார். 

இராயாகரன் தன்னைப்பற்றிக் கொடுக்கும் மற்றுமொரு பில்ட்அப் ”இன்று இலங்கையில் நான் மட்டும்தான் பெருமளவில் சமூகம் சார்ந்த உணர்வுடன் சமூக விடயங்கள் மீது எழுதுகின்றேன். அதற்காக தனித்து குரல் கொடுக்கின்றேன்;….. எனது சொந்த உழைப்பில் தான் எனது நூல்களை அச்சில் கொண்டு வந்துள்ளேன். கொண்டு வருகின்றேன். இருந்தும் இந்தப் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவோர் கிடையாது. …. இது எனது சுயபுராணமோ விளம்பரமோ அல்ல. இன்றைய சமூக எதார்த்தம் சார்ந்த சூழலில் நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. இந்த நிலையிலும் கூட நான் எனக்காக அல்ல சமூகத்துக்காகவே என்னை வருத்தியே உழைக்கின்றேன்.”

இவற்றிலிருந்து மே 18 இயக்கம் புலிகள் சார்பான அமைப்பு என்ற இரயாகரனின் குறிப்பு இரயாகரன் மிகத் திட்டமிட்டு தனது அரசியல் விம்பத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் சேறடிப்பே என்ற முடிவுக்கே வர முடிகின்றது. சேறடிப்புடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாத இரயாகரன் தங்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்கள் இடையேயான பனிப் போரில் அதனுடன் சம்பந்தப்படாத ரகுமான் யான் இராணுவச் சீருடையில் நிற்கின்ற படத்தைப் போட்டுள்ளார். கட்டுரையுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்புகைப்படம் அதில் பிரசுரிக்கப்பட்டது யாருக்கு ரகுமான் யானை காட்டிக்கொடுக்கும் முயற்சி? இது ஒரு அப்பட்டமான காட்டிக்கொடுத்தலே. ஒரு போராளி அவனுடைய சமூகத்தின் உடமை. அவனைக் காட்டிக்கொடுக்கின்ற உரிமையை இரயாகரன் எங்கிருந்து பெற்றார். இந்தக் காட்டிக் கொடுப்பு இரயாகரன் மக்கள் நலன்சார்ந்து செயற்படவில்லை என்பதை மட்டும் உறுதியாக்குகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த லண்டன் வந்திருந்த போது அவருடன் ஒரு நேர்காணல் ஒன்றைச் செய்திருந்தேன். அப்போது தனது தாடி பற்றி நகைச்சுவையாகத் தெரிவித்த அமைச்சர் தேவானந்த தனக்கு பிடல் கஸ்ரோ மீது மிகுந்த அபிமானம் என்றும் அவரளவுக்கு வர முடியாவிட்டாலும் அவர் போன்று தாடியை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இப்படி வாழ்க்கையில் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கும். அப்படித்தான் இரயாகரனுக்கும் புரட்சி செய்ய முடியாவிட்டாலும் புரட்சிக்காரன் போல் இராணுவச் சீருடையும் தொப்பியும் அணிந்து செல்ல விருப்பம் மட்டுமல்ல டென்மார்க்கில் இரயா குழுவின் கூட்டமொன்றுக்கு இரயாகரன் இராணுவச் சீருடையும் சிவப்புத் தொப்பியும் அணிந்து பங்குபற்றினாராம். ஸ்ரண்ட் காட்டுவதற்குப் படம் தேவைப்பட்டால் உங்களுடைய இந்தப் படத்தையே போட்டிருக்கலாமே. எதற்காக சம்பந்தப்படாத ரகுமான் யானின் படத்தை அவ்விடத்தில் போட வேண்டும். கீ போட் புரட்சியாளர்களுக்கு தலைமறைவு வாழ்வின் யதார்த்தத்தை அவ்வளவு இலகுவில் புரிய வைத்திட முடியாது.

எது எப்படியானாலும் இரயாகரனும் அவர் ஊறிய அதே குட்டையில் ஊறிய கீ போட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் தங்கள் வெற்றுக் கோசங்களால் மக்களை மட்டுமல்ல அவர்களுடைய மக்களையும் வென்றெடுக்க முடியாது. இவர்கள் தங்களை மாஓயிஸ்ட்டுக்கள் என்பதால் மாஓவின் மொழியில் காகிதப் புரட்சியாளர்கள் என்பதே வெகுபொருத்தமானது. இவர்கள் ”நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. ” என்று கட்டுரை எழுதுவதற்கே லாயக்கு. இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மீது விமர்சனம் வைப்பது ஒரு வகையில் பாலவர்ணம் சிவக்குமார் மீது கல் எறிந்ததற்குச் சமனாகும். இவர்களை அனுதாபத்துடன் அணுகுவதே முறை. குழந்தைகளின் மனநிலையை அறிய அவர்களிடம் வெள்ளைத் தாளையும் பேனையையும் கொடுத்து கீறச் சொல்வார்கள். வளர்ந்தவர்களுக்கு கீ போட்டைக் கொடுத்து எழுதச் சொல்கிறார்கள். இவர்களின் எழுத்துக்களை மொழி உளவியல் நிபுணரிடம் கொடுத்தால் அவர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவார்கள். இதனை ‘கீபோர்ட்-மார்க்ஸ்-சின்ட்ரம்’ என வகைப்படுத்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

குறிப்பு: நண்பர் இரயாகரன் எப்படியும் நீங்கள் இக்கட்டுரைக்கு சில கட்டுரைத் தொடர்கள் எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுதுவது தான் உங்கள் உளநலத்திற்கும் நல்லது. ஒரு சிறு வேண்டுகோள் வழமையாக நீங்கள் எழுதும் கட்டுரைகளை தொகுப்பாக வெளியிடுவது உங்கள் வழக்கம். அதனால் ஏற்கனவே நீங்கள் தேசம்நெற் பற்றி எழுதிய கட்டுரைகளையும் இனிமேல் எழுதப் போகின்ற கட்டுரைகளயும் தொகுத்து ஒரு புத்தகமாக்க முடியுமா என்று பாருங்கள். இப்பொழுது எனக்கு வாசிக்க நேரமில்லை. புத்தகமாக இருந்தால் வயதான காலத்தில் பேரப் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு உந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். ஒத்துழைப்பிற்கு நன்றி.

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் – ஓர் அறிமுகம் : என் செல்வராஜா

ETDRC_Logoஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும்
(European Tamil Documentation and Research Centre – ETDRC)

தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்த போதும் கணிசமான தொகையில் தமிழர்கள் பரந்துள்ள நாடுகள்:
01 – இந்தியா 02 – இலங்கை 03 – மலேசியா 04 – சிங்கப்பூர் 05 – அவுஸ்திரேலியா 06 – தென் ஆபிரிக்கா 07 – பிரித்தானியா 08 – பிரான்ஸ் 09 – ஜேர்மனி 10 – சுவிஸ்லாந்து 11 – இத்தாலி 12 – நோர்வே 13 – சுவிடன் 15 – அமெரிக்கா 14 – கனடா

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவியல் வளங்கள்:
1. பல்கலைக் கழகம்
 1.1 SOAS : School of Oriental and African Studies
 1.2 ஒக்ஸ்போர்ட் – கேம்பிரிட்ஜ் நூலகங்களின் தெற்காசியப் பிரிவு

2. பொது நூலகங்கள்
 2.1 பிரித்தானிய நூலகம் (British Library)
 2.2 லண்டன் உள்ளுராட்சி சபை நூலகங்கள்

3. சிறப்பு நூலகங்கள்
 3.1 தமிழர் தகவல் நடுவம் – லண்டன் (அரசியல் மற்றும் சமூகவியல் துறை)
 3.2 உலகத் தமிழர் நூலகம் (ஒன்ராரியோ, கனடா)

4. தனியார் நூல் சேகரிப்புகள்
 4.1 முல்லை அமுதனின் சேகரிப்புகள்
 4.2 என் செல்வராஜாவின் சேகரிப்புகள்
 4.3 இன்னும் பலர் …..

தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தகவல் வளங்களையும் இந்த நூலகங்கள் கொண்டிருக்கின்றனவா ? 
தமிழ்ச் சமூகத்திற்கான இந்த அறிவியல் வளங்களை ஒரு ஆய்வாளர் எளிதில் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதா ?
தமிழரல்லாத ஒரு ஆய்வாளரால் தமிழ்ச் சமூகம் சார்ந்த ஒரு ஆய்வை மேற்கொள்ள இந்நூலகங்கள் போதிய பின்புலத்தை கொண்டுள்ளனவா?

இல்லை!!!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தமிழரின் சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார, வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரும் எந்தவொரு தமிழ் அல்லது தமிழரல்லாத ஆய்வாளருக்கும் தேவையான தகவல் வளங்களையும் அத்தகவல்களைப் பெறுவதற்கான வழிகாட்டலையும் வழங்குவதற்கு தமிழர்களின் வாழ்வியல் பின்புலத்தில் அமைக்கப்பட்ட அறிவுசார் தகவல் களஞ்சியங்களே பொருத்தமானவையாகும்.

இந்த எண்ணக்கருவில் பிறந்ததே ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC) ஆகும்.

நோக்கங்கள்:

* தமிழ், தமிழர் தொடர்பான நூல்களையும் ஆவணங்களையும் ஆய்வேடுகளையும் ஒளி, ஒலிப் பதிவுகளையும் சேகரித்து பாதுகாத்தல்.

* தமிழ், தமிழர் தொடர்பான ஆய்வுகளுக்குத் தேவையான மூலாதாரங்களை அடையாளம் கண்டு ஆய்வாளருக்கு வழிகாட்டுதல்.

* இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் நூல்களுக்கான காப்பகமாக செயற்படுதல்.
 
* சர்வதேச ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பினை மேற்கொண்டு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தல்.

* சர்வதேச பல்கலைக்கழக நூலகங்களின் தமிழியல் பிரிவினருடன் தொடர்பினை ஏற்படுத்தி நூலக வளங்களைப் பகிர்ந்துகொள்ளல்.

செயற்பாடுகள்:

இதன் அடிப்படையில்
* ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC)  என்ற அறிவியல் நிறுவனம் Charity Commissionஇன் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவிலக்கம் : 1127365

* தற்போது ETDRC தற்காலிகமாக 48 Hallwicks Road, Luton, LU2 9BHஇல் இயங்குகிறது.

* நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தனிப்பட்ட சேகரிப்பான 3000 நூல்களுடன் ETDRC தற்போது இயங்குகிறது. நிர்வாகக் கட்டட வசதி ஏற்பட்டதும் மேலும் பலர் தங்களின் தனிப்பட்ட சேகரிப்புகளை வழங்குவதற்கு முன் வந்து உள்ளனர்.

* மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் தற்போது ETDRCஇன் சேவைகள் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

எம்முள் எழும் சில வினாக்கள்:

இன்றைய போர்க்காலச் சூழலில் இது அவசியமா?
முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழர்களின் அடையாளம் இப்பொழுது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அதனால் தமிழர் பற்றிய வாழ்வியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் சேகரித்து பாதுகாப்பதும், அதை தமிழர்களும் தமிழர்கள் அல்லாதவர்களும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்ய வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

தமிழர்களுக்கான ஆவணக் காப்பகம் தாயக மண்ணில் அல்லவா உருவாக்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் எதற்கு?
1981ல் யாழ்ப்பாண நூலகமும் பின்னர் ஹாட்லி கல்லூரி நூலகமும் எரியூட்டப்பட்டதன் பின்னர் அங்குள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழர்களுக்கான ஒரு ஆவணக் காப்பகத்தை இலங்கைக்கு வெளியே உருவாக்குவது அவசியமானது.

தாயகத்தில் ஏற்கனவே தேசிய நூலகமும் பிராந்திய பொது நூலகங்களும் இயங்கி வந்த போதிலும் வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு அவற்றை இலகுவாகப் பயன்படுத்த எவ்வித வசதியும் இல்லை.

3.2 மில்லியன் இலங்கைத் தமிழர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் பற்றிதும் இவர்களின் அறிவியல் தேவைகளுக்குமான ஆவணக்காப்பகமும் ஆய்வு நிறுவனமும் மேற்கு நாடொன்றில் அவசியம். அது உலகின் தலைநகரான லண்டனில் அமைவது மிகவும் பொருத்தமானது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறைக்கு தமிழ் தெரியாத நிலையில் இந்த தமிழ் நூலகம் அவசியமா?
முதலில் ETDRC ஒரு பொதுநூலகம் அல்ல. அது தமிழ் நூலகமும் அல்ல. தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதவர்களுக்குமான ஒரு ஆய்வு நிறுவனம்.

இரண்டாம் தலைமுறையினருக்கு கல்வி மொழியாகத் தமிழ் இல்லை. எதிர்காலத்தில் தமது வேர்களை தேட முற்படும் இத்தலைமுறையினருக்கும் இவ்வாறான காப்பகங்கள் அவசியம்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இந்த அறிவியல் நோக்கம் கொண்ட அமைப்பு தழைத்து வளர்வதற்கு உங்கள் உதவி முக்கியமானது.

சிறுதுளி. பெரு வெள்ளம்!

நிறுவனத்தின் சேகரிப்பினை வளர்த்தெடுக்க உங்களால் முடிந்த வரையில் நூல்களையும் ஆவணங்களையும் வழங்குங்கள்!
மாதம் ஒர் சிறு தொகையை ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கினூடாக சென்றடைவதற்கான ஒர் ஒழுங்கை ஏற்படுத்துங்கள்!

Bank  :  Abbey
Account Name :  ETDRC
Sort Code :  09-01-27
Account No :  24459051

நிறுவனத்தின் நிதிவளம் செழிப்பின் தனியானதொரு கட்டிடத்தில் விரைவிலேயே செயற்பட வாய்ப்பு ஏற்படும்.

எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் எமது தமிழ் வேர்கள் பற்றி அறிய வேண்டாமா ?
புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது தமிழர் வாழ்வியல், வரலாறு, கலாச்சாரம் பற்றிய அறிவியல் தகவல்களை பன்னாட்டவரும் அறிய வழிவகை செய்ய வேண்டாமா ?
முடிவு உங்கள் கைகளில்.
சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!

நன்றி!!!

._._._._._._.

ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனமும் ஆவணக்காப்பகமும் நடாத்தும் விருந்துபசார நிகழ்வு டிசம்பர் 12ல் நடைபெறவுள்ளது. ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்தினதும் ஆவணக் காப்பகத்தினதும் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கான உங்கள் ஆதரவை வழங்குவதன் மூலம் ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கும் ஆவணக் காப்பகத்திற்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.

நிகழ்வு விபரம்:
Doors Open – 6:30 pm till late

32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA

Contact: N Selvarajah : 07817 402 704 or 01582 703 786

 

இந்தோனேசியக் கடலில் தொடரும் தமிழ் படகு அகதிகளின் போராட்டம் : த ஜெயபாலன்

Boat Refugeesஇந்தோனேசிய அரசு படகு அகதிகளின் தஞ்ச உரிமையை அங்கிகரிக்க வேண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டிய மனிதத்துவ உதவிகளைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி பிரித்தானியாவில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை தமிழ் சொலிடாரிட்டி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்தோனேசியவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு அகதிகள் தொடர்பான தொடர்ச்சியான கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் தமிழ் சொலிடாரிட்டி மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

கவனயீர்ப்புப் போராட்டம்
Indonesian Embassy
Grosvenor Square (nearest tube: Bond Street)
4pm Friday 4 December 09.

ஒக்ரோபர் 10 மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் இந்தோனேசிய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங்க்கு விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து ஜகார்ற்றா அருகில் உள்ள மேர்க் துறைமுகத்தில் 250 இலங்கைத் தமிழ் படகு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகு அகதிகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைவதற்கு முன்னரே தடுத்து அவர்களை இந்தோனேசியாவிலேயே தஞ்சம்பெற வைக்கின்ற ‘இந்தோனேசியத் தீர்வு’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலியா கடைப் பிடிக்கின்றது. இதன் மூலம் தனக்கு வரும் அகதிகள் பிரச்சினையை கைகழுவி விட்டு வருகின்றது.

Alexஇலங்கைப் படகு அகதிகளின் பேச்சாளராகியுள்ள அலெக்ஸ் என்றறியப்பட்ட குகனேந்திரராஜா சஞ்சீவ் (27)வின் தாயார் சத்தியா ராஜரட்ணம் (46) சென்றவாரம் கனடா வன்கூவரில் இருந்து இந்தோனேசியா சென்று தனது மகனை விடுவிக்க முயற்சி செய்தார். அதற்காக ஐநா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆலயம், இந்தோனேசிய அதிகாரிகள், கனடிய தூதரகம் ஆகியவற்றுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றார். ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை.

எவ்வித நிபந்தனையும் இன்றி படகில் இருந்து வெளியே வரும்படி கேட்டதாக இலத்திரனியல் வியாபாரப் பெண்மணியான அலெக்ஸின் தாயார் சத்யா ராஜரட்ணம் தி குளோப் அன்ட் மெயில் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். ‘எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்றும் ‘வேதனையாக உள்ளது’ என்றும் தெரிவித்துள்ள அவர் ‘எனக்கு எதுவும் செய்ய முடியவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார். ‘இந்தோனேசிய அரசினை நம்ப முடியாது’ எனத் தெரிவித்த அலெக்ஸின் தாயார் மேலும் தெரிவிக்கையில் ‘அவர்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கும்படியும் சமூகமான வாழ்வுக்கான உத்தரவாதத்தையும் வழங்கினால், அவர்கள் தரையிறங்குவது பற்றி ஆராய்வார்கள். ஆனால் யாரும் அந்த உத்தரவாதத்தை வழங்கமாட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

அந்த ‘இந்தோனேசியத் தீர்வு’ திட்டத்தில் தற்போது 250 இலங்கைத் தமிழ் அகதிகள் சிக்கி உள்ளனர். தற்போது மேர் துறைமுகத்தில் உள்ளவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுக்கின்றனர். நேரடியாக இலங்கையில் இருந்து புறப்படாத இப்படகுக் கப்பல் மலேசியாவில் இருந்தே புறப்பட்டு உள்ளது. இலங்கையில் இருந்து ஏற்கனவே மலேசியா, இந்தோனேசியாவிற்கு புலம்பெயர்ந்திருந்த பலரும் அங்கு சமூகமான ஒரு வாழ்வை மேற்கொள்ள முடியாத நிலையில் இக்கப்பலில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லப் புறப்பட்டு இருந்தனர். மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான ஜெனிவா உடன்பாட்டில் கைச்சாத்திட்டு இருக்கவில்லை. இங்கு வாழும் அகதிகள் மிகவும் நெருக்கடியான இக்கட்டான இருண்ட எதிர்காலத்தையே கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டனர். அதற்கு ஒருவருக்கு 12000 வெள்ளிகள் கட்டணம் செலுத்த வேண்டியும் இருந்தது.

இவ்வாறு இக்கப்பலில் ஏறியவர்களில் ஒருவரான அலெக்ஸின் கடந்த காலம் சர்ச்சைக்கு உரியது. 5 வயது முதல் கனடாவில் வளர்ந்த அலெக்ஸ் அங்கு பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏ கெ கண்ணன் குழுவைச் சேர்ந்தவர். இவர் கொலை மிரட்டல், வாள், செமி ஓட்டோமற்றிக் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தமைக்காக கனடாவில் சிறைத் தண்டனை பெற்றவர். 2003ல் இவர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்ட்டு இருந்தார். ஊடகப் பேச்சாளராக இவரது ஆங்கிலப் பேச்சு கனடியச் சாயலுடன் வெளிவந்தவுடன் இவரது கடந்தகாலம் வெளிச்சத்திற்கு வந்தது. http://www.scribd.com/doc/22355905/Kulaendrarajah-Sanjeev-a-k-a-SANJEEV-KUHENDRARAJAH-a-k-a-Alex அது கப்பலில் இருந்த அகதிகள் மீதும் தவறான பார்வையை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது.

Boat Refugees250 இலங்கைப் படகு அகதிகளின் இருண்ட எதிர்காலம் இரண்டாவது மாதமாகவும் தொடர்கிறது. இலங்கை அரசு மனித உரிமைகளை மீறுகிறது, யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளது என்றெல்லாம் சர்வதேச நாடுகள் குரல் எழுப்பிய போதும் இந்த அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற போக்கே இந்த மேற்கு நாடுகளிடம் காணப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த பிரித்தானியாவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி டெஸ் பிரவுணி இலங்கைப் படகு அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். ‘தமிழர்கள் உட்பட இலங்கையர்களைத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கை பாதுகாப்பானது என்று நாங்கள் கருதுகிறோம்’ என்று நவம்பர் 10ல் கன்பராவில் டெஸ் பிரவுணி தெரிவித்து இருந்தார்.

இந்தோனேசிய கடற்படையினர் இதுவரை பலாத்காரமாக அவர்களை வெளியேற்றுவதில்லை என்ற நிலையிலேயே உள்ளனர். ஆனால் அவர்கள் தாங்களாக வெளியேறுவதற்கான நெருக்கடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அவுஸ்திரேலியா முழுமையாகத் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ள நிலையில் இரண்டாவது மாதமாகவும் அவர்களின் அவுஸ்திரேலியா செல்வதற்கான போராட்டம் தொடர்கின்றது.

 இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகள்:

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்!

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் நிறைவுபெற்றது. : புன்னியாமீன்

images.jpgவன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் கீழ் கணிதம்,  வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் 06 மாதிரி வினாத்தாள்களை வழங்கியுள்ளதுடன்,  தனது இவ்வருடத்துக்கான நிவாரண செயற்றிட்டத்தை நிறைவு செய்து கொண்டது. 

வன்னி மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்ற நீண்டகால அடிப்படையைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும்,  தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்ட செயற்பாடுகளை முன்னேடுக்கத் திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதற் கட்டமாக தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட கல்வி நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய எமது கல்வி நிவாரண செயற்றிட்ட உதவிகளைப் பெற்ற 507 மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை எமக்கு மன நிறைவினையளித்தது. அதேநேரம்,  தரம் 5 மாணவர்களின் செயற்றிட்டத்தை ஆரம்பித்த வேளையில் 300 மாணவர்களை சித்தியடையச் செய்ய வைக்கும் இலக்கோடு தான் நாம் செயற்பட்டோம்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால்,  மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும்,  அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை பாதுகாக்கும் நோக்கில் எமது கல்வி நிவாரண செயற்றிட்டங்களை முன்னெடுத்தோம்.

இந்த அடிப்படையில் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள்,  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள்,  ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினைத் வகுத்தோம்.

எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்திற் கொண்டோம்.

01.  நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை

02.  யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை

03.  சாதாரண தர பரீட்சை தரம் 10,  11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே,  பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாட அலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.

04.  நிவாரணக் கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ, வசதிகளோ இல்லாதிருந்தமை.
 
05.  புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட,

யுத்த சுழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.

இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக்கூடிய கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10,  11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும்,  மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக்கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம்.

எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட 5 பாடங்களுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் 5 ஐயும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும்,  பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.

அதேநேரம்,  மாதிரிவினாத்தாள்கள்,  அரசாங்க வினாத்தாள்கள், கையேடுகள் என 77 அலகுகளாக வகுத்து இவற்றின் அச்சீட்டுக்கான தனித்தனி அச்சீட்டு செலவு விபரங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினோம்.

இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்களல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக்  கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களில் ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால்,  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

எமது இத்திட்டத்துக்கு உதவிகள் வழங்கியவர்கள்

அகிலன் பவுண்டேஷன் (லண்டன்) 500 பவுண்கள்
கரன் சேவிர்ஸ் ஸ்ரேசன்ஸ்  (லண்டன்) 500 பவுண்கள்
திரு பொன் சிவசுப்ரமணியம் (லண்டன்) 500 பவுண்கள்
தேசம்நெற் (லண்டன்) 500 பவுண்கள்

லண்டனிலிருந்து மொத்தம் 2000 பவுண்கள் கிடைத்தன.

கனடாவிலிருந்து (கனடாவில் திரு. Ahilan Navaratnam   அவர்கள் எமது திட்டத்திற்கு தானாக முன்வந்து பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்.)                
Ahilan Navaratnam                   500.00.  CDN
Vijayakaran Thuraisingam       200.00. CDN
Jeyanandan Sinniah                  100.00   CDN
Seenivasagam Navaratnam     100.00. CDN
N.Visuvalingam                            50.00. CDN
Sriskandarajah Anandarajah      50.00.  CDN    
Velupillai Pramsothy                   50.00.  CDN
Aiyadurai Shanmuganathan       50.00.  CDN
P.Arunasalam                               50.00.  CDN
R.Chandrarajan                            20.00.  CDN
V.Joganathan                                20.00.  CDN
                               Total –          1190.00. CDN
அனுப்புதல் செலவு               10.00   CDN
இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்தத் தொகை 1180.00 CDN
இலங்கை நாணயப்படி 129, 210.00 ரூபாய்களாகும்.
பிரித்தானிய நாணய அலகுப்படி 680 பவுண்களாகும்.

இத்திட்டத்திற்கு லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் கிடைத்த மொத்தத் தொகை 2680 பவுண்களாகும்.

இப்பணத்தொகையைக் கொண்டே நாம் 6290 மாணவர்களுக்குமான அச்சீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

எம்மால் அனுப்பப்பட்ட 6 மாதிரி வினாத்தாள்களுக்கும் மொத்த அச்சீட்டுச் செலவு 2847 பவுண்கள்.

மீதமான 167 பவுண்களை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இச்செலவீனங்களுக்கு மேலாக போக்குவரத்து, பொதியிடல் போன்ற செலவுகளையும் சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இது குறித்த பூரணமான கணக்கறிக்கை எமது செயற்றிட்டத்துக்கு பங்களிப்பு செய்தோருக்கு புத்தக வடிவில் அனுப்பப்படும். அக்கணக்கறிக்கையைப் பெற விரும்புவோர்கள் பின்வரும் ஈமெயில் முகவரிக்கு தங்களது முகவரிகளை அனுப்புமிடத்து தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கை 40
எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் நிறை 761 கிலோகிராம்கள். 

அதேநேரம்,  இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.

அக்கடிதங்களை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும், இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும்,  கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால், வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இதனால் பேராதனைப் பல்கலைக்கழக மற்றும்  கண்டி பிரதேச புகழ்பெற்ற ஆசிரியர்களிடமிருந்து மாதிரிவினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் பெற்றுக் கொண்டோம். குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை சிந்தனைவட்டமே பொறுப்பேற்றுக் கொண்டது.

இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த எம்மவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. விசேடமாக பணமாகவன்றி தாம் ஏற்கனவே தயாரித்த மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகளையும்கூட தருவதற்கு இவர்கள் முன்வராமை இவ்விடத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமே.

நாம் வழங்கிய மாதிரிவினாத்தாள்களை பின்வரும் பெருந்தகைகள் எமக்குத் தயாரித்துத் தந்தனர்.

ஜனாப் யூ.எல்.எம். பஷீர் – வரலாறு ஆசிரிய ஆலோசகர்
திருமதி மஸீதா புன்னியாமீன் – பயிற்றப்பட்ட கணித, விஞ்ஞான ஆசிரியர்
ஜனாப் ஏ.எம். பாயிஸ் – பயிற்றப்பட்ட கணித ஆசிரியர்
செல்வி தஸ்மின் ரியால் – தமிழ் பட்டதாரி ஆசிரியர்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு

மேலும், எம்மால் வழங்காமல் கைவசமுள்ள மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் தயாரித்துத் தந்த பெருந்தகைகள்.

ஜனாப் யூ.எல்.எம். பஷீர்;
திருமதி மஸீதா புன்னியாமீன்;
செல்வி தஸ்மின் ரியால
ஜனாப் ஏ.எம். பாயிஸ்
திரு. சிவநாதன் (கல்விப் பணிப்பாளர்)
திருமதி. எம்.ஐ. நளீமா
திருமதி. எம்.ஐ.எஸ்.மும்தாஜ்
திருமதி. சாபிரா நஸார்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு

இவர்களுக்கு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் வன்னி முகாம் அகதிகள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

எமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள்:

1. ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாத இறுதியில் எம்மால் ஆரம்பிக்க முடியாமல் போனமை (இதற்கு மூல காரணம் ஆரம்பத்தில் எமக்கு நிதியுதவிகள் கிடைக்காமையே)

2. ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் முகாம்களில் இருந்த மாணவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டமை (இம்மாணவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டாலும்கூட எம்மால் அனுப்பப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் மீள்குடியேறிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.)

3. பிரதான காரணம் மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர வேறு எவ்விதமான நிதியுதவிகளும் எமக்குக் கிடைக்காமை.

எவ்வாறாயினும் ஓரளவுக்காகவது ஒரு சிறிய உதவியாவது வன்னி மாணவர்களுக்கு  செய்யக் கிடைத்தமையை ஒரு பேறாகவே கருதுகின்றோம். இத்திட்டத்திற்கு எம்மால் ஒரு மாணவனுக்கு வழங்க முடியுமாக இருந்த தொகை 45 பென்ஸ்கள் மாத்திரமே.

எதிர்கால ஆலோசனைகள்:

தற்போது அரசாங்கம் செயற்பட்டுவரும் முறையில் அரசாங்கம் 2010 ஜனவரி 31க்கு முன்பு முகாம்களிலுள்ள அனைத்து அகதிகளையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. (டிசம்பர் விடுமுறைக்கு முன்பாக கிளிநொச்சி முல்லைத் தீவு பிரதேசங்களில் மேலும் பல பாடசாலைகள் திறக்கப்படலாம்)

பாடசாலைகளைத் திறப்பதால் மாத்திரம் அல்லது திறந்த பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மாத்திரம் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துவிட மாட்டாது. விசேடமாக புலம்பெயர் தமிழர்களும்,  இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களும் வன்னி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவற்றையும் தமது செயற்றிட்டங்களில் சேர்த்துக்  கொள்ளல் வேண்டும்.

குறிப்பாக மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களிலுள்ள பாடசாலைகள் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளதாகவுள்ளன. போதிய ஆசிரியர்கள் இல்லை. போதிய வளங்கள் இல்லை. உள்ள வளங்களைக் கொண்டே தற்போதைய கல்வி நிலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இத்தகைய மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்த திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியம். எமது அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து அகதிமுகாம்களில் வாழ்ந்த மாணவர்களுக்கு தரம் 05 பாடப்பரப்பை மையப்படுத்தி எம்மால் ஒரு நிறைவான வழிகாட்டலைக் காட்ட முடிந்தது. இதன் விளைவாக 507 மாணவர்கள் சித்தியடைந்தனர். 2010ஆம் ஆண்டில் நிவாரணக் கிராம மாணவர்கள் என்பதை விட மீள்குடியமர்த்தப்பட்ட மாணவர்கள் என்றடிப்படையில் தரம் 05 புலமைப்பரிசில்,  க.பொ.த.சாதாரண தரம்,  க.பொ.த. உயர்தரம் போன்ற மூன்று அரசாங்கப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துதல் வேண்டும். இது உங்கள் பொறுப்பு.

விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால்,  ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு. இது யதார்த்தம். எனவே பேசிப்பேசிக் காலத்தைக் கழிக்காமல் நிலையான திட்டமொன்றின் கீழ் இணையுமிடத்து வன்னி மாணவர்களின் கல்வித்தரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியில்லாவிடில் அம்மாணவர்களின் கல்விநிலை இன்னும் சில ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்படுவது தவிர்க்க முடியாததே.

அவ்வாறு ஏற்பட்டால் என்றோ ஒரு நாள் நாம் கைசேதப்பட வேண்டிய நிலை உருவாகும்.