இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு விடயமும் சர்வதேச அளவில் விவாதத்திற்குரியதாகிறது. இது தமிழ் மககளின் அரசியலுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் அதற்கு அப்பாலும் விரிந்துள்ளது. 2011 ஜனவரி 5 முதல் ஜனவரி 8 வரை இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாடு அம்மாநாட்டை ஏற்பாடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது முதல் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
மேற்படி மாநாட்டுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் இம்மாநாடு பற்றிய விவாதக்களத்தை தேசம்நெற் ஆரம்பித்து வைக்கின்றது.
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், கவிஞர்கள் அறிவுமதி, தாமரை, பத்திரிகையாளர்கள் சோலை, சுதாங்கன் தொடங்கி நியூயோர்க் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு, டெக்மார்க் தமிழர் பேரவை எழுத்தாளர் எஸ் பொ, பிரான்ஸில் கி பி அரவிந்தன் என பலரும் இந்த மாநாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இவ்விவாதத்தின் ஆரம்பக் கட்டுரையாக சர்வதேச மாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி சில மாதங்களுக்கு முன் அனுப்பி வைத்த எதிர்வினைகளுக்கான பதில் பதிவிடப்படுகின்றது.
._._._._._.
யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)
இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத் தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil தொலைக் காட்சியிலும் தொலைபேசி ஊடாக விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் மூலையிலே சோம்பிக்கிடக்காமல் தொடர்ந்தும் கலை, இலக்கியப் பணிகளிலும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கும் அகதிகளுக்கும் உதவும் மனிதாபிமானப் பணிகளிலும் அயராமல் ஈடுபட்டுவருகின்றேன்.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாக நான் வாழ்ந்தவன் இல்லை. 1972 ஆம் ஆண்டு முதலே கலை, இலக்கிய, ஊடகத்துறையில் எனது பணிதொடர்கிறது. உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் எனது பணிதொடரும்.
போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்(Ceylon Students Educational Fund-Inc) பணிகளில் அர்பணிப்போடு இயங்கி அதனை இன்றளவும் காப்பாற்றி வருகின்றேன்.
இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடர்ச்சியாக கடந்த 22 வருடகாலமாக இயங்கிக் கொணடிருப்பதுடன், கடந்த ஆண்டு மே மாதம் வன்னியில் முள்ளிவாய்காலில் முற்றுப்பெற்ற ஈழ யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிச் சிறார்கள் (ஆண்கள்- பெண்கள்) இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஆசைப்பட்ட போது அவர்களது கல்வி சார்ந்த நலன்களை கவனிக்க மாணவர் கல்வி நிதியம் ஊடாக பணியாற்றினேன்.
இத்தனை வேலைப்பளுவுக்கும் மத்தியில்தான் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் விழா என்ற இலக்கிய இயக்கத்தையும் தோற்றுவித்து தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாவை முன்னெடுத்தேன்.
இதற்கும் அரசியல் சாயம் பூசி பகிஷ்கரித்தவர்களின் போலி முகங்களையும் அப்போது என்னால் பார்க்க முடிந்தது. 2001 ஆம் ஆண்டுமுதல் அவுஸ்திரேலியாவில் மெல்பன், கன்பரா, சிட்னி ஆகிய மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக வருடம்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாக்களை ஒழுங்காகவும் கனதியாகவும் தரமாகவும் நடத்துவதற்கு நான் கடுமையாக உழைத்திருக்கின்றேன்.
முத்த படைப்பாளிகளான எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராஜதுரை, கவிஞர் அம்பி, ஓவியர் ஞானசேகரம், நாட்டுக்கூத்துக் கலைஞர் அண்ணாவியார் இளைய பத்மநாதன், கலைவளன் சி சு. நகேந்திரன், பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம், கட்டிடக்கலைஞரும் குத்துவிளக்கு திரைப்பட தயாரிப்பாளருமான வி.எஸ.துரைராஜா, தையற்கலை நிபுணர் திருமதி ஞானசக்தி நவரட்ணம், இலங்கையின் மூத்த மலையக படைப்பாளி தெளிவத்தை ஜோசப் ஆகியோரை இந்த எழுத்தாளர் விழாக்களில் பாராட்டி கௌரவித்து விருதுகளும் வழங்கியிருக்கின்றேன். இந்தப்பணிகளை முன்னெடுப்பதற்காக எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary & Arts Society Inc- ATLAS) உறுப்பினர்கள் எனக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த அமைப்பு அவுஸ்திரேலியா அரசில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த அனுபவங்களின் தொடரச்சிதான் நான் முன்னெடுத்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு.
இப்பொழுது நான் இலங்கையில் ஒழுங்கு செய்துள்ள எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கும் அரசியல் சாயம் பூசுவதற்கு ஒருகூட்டம் முற்பட்டிருக்கிறது.
இலங்கையில் சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டை நடத்துவதற்கு நாம் தீர்மானித்ததற்கு பல காரணங்கள் இருந்தன.
உலகம் பூராவும் சிதறுண்டு வாழும் ஈழ எழுத்தாளர்கள் தமது இலக்கிய உறவுகளை மீண்டும் காலம் கடந்துவந்து சந்திப்பதற்கும் குறிப்பிட்ட சந்திப்பானது கூடிக்களைந்து உண்டுகளித்துவிடும் ஒன்றுகூடலாக அமையாமல் பல ஆக்கபூர்வமான கலை, இலக்கியம், மற்றும் கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுப்பதற்காகவுமே திட்டமிடப்பட்டது.
அனுபவம் இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத அனுபவம் மேலானது என்பார்கள். அதுபோன்று அவுஸ்திரேலியாவில் பத்து ஆண்டுகளாக தங்கு தடையின்றி தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து தங்கு தடையின்றி இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை நடத்திவரும் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களினாலும் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டுவதற்கு பலரதும் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்றேன். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பே இந்த யோசனை இலங்கையில் நடந்த மல்லிகைப்பந்தல் இலக்கியச் சந்திப்பில் இலங்கை படைப்பாளிகளினால் முன்வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டு இலங்கை, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் வதியும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், படைப்பாளிகளுடன் தொடரச்சியான உறவும் தொடர்பும் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த மகாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க மிகவும் பொறுத்தமானவன் முருகபூபதிதான் என்ற கருத்து குறிப்பிட்ட கொழும்பு சந்திப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றதுடன், என்னிடம் சில பணிகளும் ஒப்படைக்கப்பட்டன.
2009 ஜனவரியில் வெளியான மல்லிகை 44 ஆவது ஆண்டு மலரில் ‘தொலைபேசி மான்மியம்’ என்ற கட்டுரையின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு பற்றி பதிவு செய்திருக்கின்றேன்.
அதனைப் படித்த மேலும் பல படைப்பாளிகள் என்னுடன் தொடர்புகொண்டு இந்த யோசனைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர் .
தமிழகத்திலும் அவுஸ்திரேலியாவிலும் அகலக்கால் பதித்துள்ள எமது மூத்த படைப்பாளியான எஸ்.பொ. அவர்களுக்கு, எனக்கிருக்கும் சர்வதேச இலக்கிய தொடர்புகள் தெரிந்தமையால் தான் பல வருடங்களுக்கு முன்னர் அவரால் வெளியிடப்பட்ட ‘பனியும் பனையும்’ என்ற புலம்பெயரந்த படைப்பாளிகளின் கதைத் தொகுப்புக்காக எனது ஆதரவை நாடியிருந்தார். நானும் என்னால் முடிந்த அளவு கதைகளை அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரித்துக் கொடுத்தேன்.
குறிப்பிட்ட ‘பனியும் பனையும்’ வெளியானது. ஆனால் தொகுப்பாசிரியர்கள் என்ற பெயரில் இந்தப்பணியில் சிறுதுரும்பும் எடுத்துப் போடாத எனது இனிய தமிழக நண்பர் இந்திரா பார்த்தசாரதியின் பெயரை எஸ்.பொ. அவர்கள் சேர்த்துக்கொண்டார். எனது பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
ஏன் இப்படிச்செய்தீர்கள்?- என்று அவருக்கு மிகநெருக்கமாக இருந்தவர்கள் கேட்டபோது அவரிடமிருந்து ஆழ்ந்த மௌனம்தான் வெளிப்பட்டது.
தாம் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் இழந்துபோன இலக்கிய அந்தஸ்தை தமிழகத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முதல் முயற்சிதான் குறிப்பிட்ட நூலின் தொகுப்பில் அதற்குச் சம்பந்த மில்லாதவரின் பெயரைச் சேர்த்துக்கொண்டது.
இதற்கெல்லாம் முன்னோடியாக இலங்கையில் ஏற்கனவே வெளியான தமது நூல்களை தமிழகத்தில் மீள்பிரசுரம் செய்யும்போது தமிழக நூலக அபிவிருத்திச்சபையின் அங்கீகாரத்தைப் பெற்று விற்பனை செய்துகொள்வதற்காக குறிப்பிட்ட ஏற்கனவே வெளியான தமது நூல்களை (தீ, சடங்கு உட்பட பல நூல்கள்) தமிழகத்தில் இரண்டாம் பதிப்பு எனச் சுட்டிக் காட்டாமல் புத்தம்புதிய முதல் பதிப்பு என்று காண்பித்துக் கொண்டதுடன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ராமனுஜம், சாலை. இளந்திரையன் போன்ற நன்கு தமிழகத்தில் அறியப்பட்டவர்களின் அணிந்துரைகளுடன் தமிழக அங்கீகாரத்துக்கு அவாப்பட்டுக் கொண்டார்.
இலங்கையில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் டானியல், ஜீவா, ரகுநாதன், சுபத்திரன் போன்ற இடதுசாரி படைப்பாளிகளுடன் இணைந்து இயங்காமல் ஆலயப்பிரவேசம் மற்றும் தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் சேர்ந்து கொள்ளாமல் தாம் தோற்றுவித்த நற்போக்கு இலக்கிய முகாமை செலுமையுடன் வளர்த்துக்கொள்ளத் தெரியாமல் தனக்குத்தானே பகைவனாகிக் கொண்ட எஸ். பொ. அவர்கள் ஒரு சந்தரப்பத்தில் தமிழ் நாட்டில் மேலே குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தம்மை தக்கவைத்து தமது நூல்களை தமிழகத்தில் மறுபிரசுரம் செய்துவிட்டு, இப்போது தம்மை ஒரு தலித் இலக்கியப் போராளி என்று காண்பிப்பதற்காக மற்றுமொரு வேடம் புனைவதற்காக முயன்றுள்ளார்.
இலங்கைக்குச்சென்று தமது முன்னாள் நண்பர்களை சந்திப்பதற்காகவும் இழந்துபோன மரியாதையை மீட்டுக்கொள்வதற்காகவும் முருகபூபதியின் தயவை இவர் எப்படி நாடியிருந்தார் என்பதை எனது ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் நூலில் இடம்பெற்றுள்ள ராஜஸ்ரீகாந்தனின் கடிதங்கள் விளக்கும்.
அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இலக்கியப்பவர் என்ற அமைப்பின் தோற்றத்துக்கு காரணமாக இருந்து, பின்னர் அதனால் புறக்கணிக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவில் இழந்துபோன செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டிக்கொள்ள இவர் முயன்றபோது, எவருமே மித்ரா பதிப்பகத்தின் வெளியீட்டு விழாவுக்கு இவருக்காக தலைமை தாங்க முன்வராதபோது மெல்பனிலிருந்து முருகபூபதியை வரைவழைத்து (முருகபூபதி தமது சொந்தச் செலவில்தான் விமானம் ஏறினார்) குறிப்பிட்ட விழாவை நடத்தினார்.இச்சம்பவங்கள் எழுத்தில் அழுத்தமாக பல பத்திகளில் பதிவாகியிருக்கின்றன.
2009 இலே சர்வதேச மகாநாட்டில் சமரபிக்கப்படும் யோசனைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக பலதடவை எஸ்.பொ. அவர்களை நான் தொடர்புகொள்ள முனைந்தும் முடியாமல்போனது.
பின்னர் யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்கள் மூலம் தகவல் அனுப்பினேன். தகவல் கிடைத்ததும் எஸ்.பொ. சொன்ன வார்த்தைகள் “I am always with Murugapoopathy. He doing Good Job. I am Going to support”
‘பனியும் பனையும்’ தொகுதியை மீள் பிரசுரம் செய்வதற்காக மீண்டும் எனது தயவை அவர் நாடினார். .அவரது இயல்புகளை நன்கு தெரிந்திருந்தமையால் நான் அதற்கு மறுத்துவிட்டேன்.
அவுஸ்திரேலியாவிலிருக்கும் அவரது நண்பர்கள் மூலமாகவும் என்னை இந்த தொகுப்பு வேலைக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளப்பார்த்தார். எதையெதை யாராhல் செய்துமுடிக்க முடியும் என்பது அவருக்கு நன்கு தெரியும். நான் இதுவிடயத்தில் மீண்டும் ஏமாறத்தயாரில்லை என்று அவருக்கே தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கின்றேன்.
அந்த இரண்டாவது பதிப்பு முயற்சி பல மாதங்களாகியும் இன்றுவரையில் எனது தயவும் உதவியும் இல்லாமல் கிடப்பிலிருக்கிறது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் நடந்த சர்வதேச மகாநாட்டுக்கான முதலாவது விரிவான ஆலோசனைக்கூட்டம் தொடர்பான செய்தியும் படங்களும் தமிழ்நாடு யுகமாயினி 2009 மார்ச் இதழில் பிரசுரமாகியிருக்கிறது.
ஆசிரியர் சித்தன் இம்மாகாநாட்டுக்கான தமிழக பிரதிநிதியாக இயங்குவார் என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சித்தனும் தமது ஆசிரியத் தலையங்கத்தில் மகாநாட்டை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்திருந்தார்.
மற்றுமொரு இலக்கிய சிற்றிதழான இனிய நந்தவனம் ஏப்ரில் இதழிலும் மகாநாடு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
எமது மகாநாட்டின் நிகழ்ச்சிகளின் இணைப்பாளர்களில் ஒருவரான நண்பர் அந்தனிஜீவா தமிழகம் சென்று பாண்டிச்சேரி வரையில் பயணித்து இம்மகாநாடு குறித்த எமது 12 அம்ச யோசனைகளை பிரதியெடுத்த விநியோகித்துள்ளார்.
அதனைப் பார்த்த பா.செயப்பிரகாசம் மற்றும் பல தமிழக எழுத்தாளர்கள் என்னுடன் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டனர். தாமரை இதழ் ஆசிரியரும் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் கட்சி துணைச்செயலாளருமான மகேந்திரன் எனது குடும்ப நண்பர். அவரும் இந்த மகாநாடு தொடர்பாக தமது ஆதரவை நண்பர் அந்தனிஜீவாவிடம் தெரிவித்திருக்கிறார்.
இப்படியெல்லாம் பல முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்க… திடீரென்று அந்தர் பல்டி அடிப்பது போல எனக்கும் எனது இலக்கிய நேர்மைக்கும் என்னுடன் இணைந்து மகாநாட்டு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் எதிராக அவதூறும் அபாண்டமும் பழிச்சொற்களையும் பரப்புவதற்கு எஸ்.பொ. வரிந்துகட்டி எழுந்திருப்பதன் மர்மம் என்ன?
2009 டிசம்பர் முதல் 2010 ஜூன் வரையில் எதுவுமே பேசாமல் ஆழ்ந்த மௌனம் காத்துவிட்டு இப்போது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு அவர் புறப்பட்டுள்ளதற்கான ரிஷி மூலம் – நதி மூலம் என்ன?
போர் நடந்த காலப்பகுதியின் பின்னர் 2009 டிசம்பர் ஞானம் இதழ் (115 ஆவது இதழ்) எஸ்.பொ.வுக்காக இலங்கையில் பவளவிழா சிறப்பு மலர் வெளியிட்டபோது அதனை மானசீகமாக ஆதரித்து ஏற்றுக்கொண்டவருக்கு, அந்த மலர் வெளியான மண்ணில் போர்க்குற்றம் நடந்தது தெரியாமலா இருந்தது. “இத்தருணம் எனக்கென்ன பவளவிழா மலர்” என்று கேட்காமலிருந்துவிட்டு இப்போது குறிப்பிட்ட ஞானம் இதழ் ஆசிரியரும் இணைந்துள்ள மகாநாட்டுப் பணிகளை கொச்சைப்படுத்த முனைந்துள்ள மர்மம் என்ன?
இலங்கையில் போர் முடிந்தபின்னர் நான் அங்கே சென்று சுமார் ஒருமாத காலம் தங்கியிருந்து கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களுக்கும் சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் மாணவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் வன்னி அகதி முகாமிலிருந்து ஊக்கமுடன் கல்வி கற்று வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற பல ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு சைக்கிள்கள் (துவிச்சக்கரவண்டிகள்) பெற்றுக்கொடுத்ததுடன் அவர்களையும் எமது புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்துக்கொண்டேன். இதற்கெல்லாம் அவுஸ்திரேலியாவிலிருக்கும் இரக்கமுள்ள தமிழ் அன்பர்கள் உறுதுணையாக விளங்குகிறார்கள்.
இந்தப்பணிகள் பற்றி ஏற்கனவே பல உண்மையான அறிக்கைகள் எமது இணையத்தளத்திலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.
இலங்கைப் பயணத்தின்போது போர் நடந்த இடத்தில் பாதிப்புற்ற எழுத்தாளர்களையும் சந்தித்து அவர்களுக்கும் அத்துடன் மனநலம் குன்றிய படைப்பாளி ஒருவருக்கும் உதவி வழங்கியதுடன் திருகோணமலையில் தற்போது தங்கியிருக்கும் கவிஞர் புதுவை ரத்தினதுரை அவர்களின் மனைவி, பிள்ளைகளையும் அவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் என்னால் இயன்ற உதவிகளும் செய்தேன்.
வலதுகை கொடுப்பது இடதுகைக்குத்தெரியக்கூடாது.
எனது இந்தப்பயணம் குறித்தும் புதுவை ரத்தினதுரையும் மற்றும் சில போராளிகளும் சரணடைந்தது தொடர்பான பல தகவல்களையும் நான் விரிவாக எழுத வேண்டும் என்று ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா வாழ் தமிழ்ப் படைப்பாளிகள் என்னிடம் கேட்டுக்கொண்டபோதும் அப்படி எழுதி எனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ள நான் விரும்பவில்லை. பல இடங்களுக்கும் சென்று கெமராவில் படங்களை எடுத்த நானும் எனது இலக்கிய நண்பர்களும் புதுவை ரத்தினதுரையின் குடும்பத்தை சந்திக்கச் சென்றபோது கெமராவை எடுத்துச்செல்ல விரும்பவில்லை.
நாம் அவர்களை எமக்கு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக சந்திக்கச் செல்லவில்லை என்பது மாத்திரமே உண்மை. அவரும் மற்றும் சிலரும் எங்கோ உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி ரஞ்சி ரத்தினதுரையும் மற்றும் பிள்ளைகள் உறவினர்களைப் போலவே நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.
எமக்கு ஆக்கபூர்வமான பணிகளும் கடமைகளும்தான் முக்கியமே தவிர மலினமான பரபரப்போ, மலினமான நேர்காணல்களோ சுயதம்பட்டம் அடிக்கும் அறிக்கைகளோ அல்ல.
இலங்கையில் போர் நடந்தது. போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பினாலும் நடந்துள்ளன. இதனை யாராலும் மறைக்க முடியாது. இது தொடர்பான நடவடிக்கையில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஈடுபடும்.
அதற்காக இலங்கை மக்களின் அன்றாட வாழ்வு தொடராமலா இருக்கிறது?
யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் நடக்காமலா இருக்கிறது?
கொழும்பில் பிரபலமான ஆடிவேல் விழா நடக்காமல் இருக்கிறதா? இதற்கு தமிழகத்திலிருந்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வருகைதராமலா இருக்கிறார்கள்.?
கம்பன் கழகத்தின் கம்பன் விழாவும் இசைவேள்வியும் நடக்காமலா இருக்கிறது?
மாத்தளை என்ற மலையக ஊரில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த உற்சவமும் ஐந்துரத பவனியும் பல்லாயிரக்கணக்hன தமிழ் பக்தர்கள் மத்தியில் நடக்காமலா இருக்கிறது.?
கொழும்பு புறக்கோட்டையில் தமிழ்ப் பெண்கள் பாற்குடம் சுமந்து திருவிழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளவத்தையில் ஆண்கள் வேல்குத்தி பறவைக்காவடி எடுக்கிறார்கள்.
இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, மெகா ஸ்டார், புரட்சிக்கலைஞர் ஆகியோரின் மசாலாப் படங்கள் காண்பிக்கப்படாமலா இருக்கிறது.
இலங்கை தமிழ்ப் பிரதேசங்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் சிரமப்பட்டு சேகரித்த மருந்து மற்றும் உணவுப்பொருட்களை கப்பலில் அனுப்பமுடியாமல் போனபோது ஐக்கிய நாடுகள் சபைக்கும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இந்திய மத்திய அரசுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்து சாகும்வரையில் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் இலங்கையிலும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகி அவருக்கும் அதனைத் தயாரித்த நிறுவனத்திற்கும் கோடி கோடியாக எமது தமிழ் மக்கள் கொடுத்தார்களே? அப்போது எங்கே போனது தமிழ் இன மான உணர்வு?
சுனாமியினால் கடற்கோள் வந்து எஸ்.பொ. பெண்ணெடுத்த கிழக்கு மாகாணம் பாதிப்புற்ற போதும் தாம் பிறந்து தவழ்ந்து விளையாடிய யாழ்ப்பாண மண்ணில் அகதிகளின் எண்ணிக்கை பெருகியபோதும் அந்தப் பக்கமே எட்டியும் பார்க்காத அம்மக்களின் தேவைகளுக்காக ஒரு சதமேனும் செலவிடாதவர்தான் இப்போது திடுக்கிட்டு எழுந்து போர்க்குற்றம் நடந்த மண்ணில் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கு தமது கண்டனத்தை தெரிவிக்கிறார்.
யார் ஐயா உம்மிடம் கருத்துக்கேட்டது?
கருத்துக்காக பல தடவைகள் தொலைபேசியிலும் தொடர்புகொண்டபோது சாமர்த்தியமாக நழுவிக்கொண்டு இப்போது அதுவும் 2010 ஜூன் மாதத்திற்குப் பின்னர் அறிக்கையும் அவுஸ்திரேலியாவை குறிபார்த்து வனொலி பேட்டிகளும கொடுப்பதன் மர்மம் என்ன? இவற்றின் ரிஷிமூலம் என்ன?
மகாநாட்டுக்கான நிதிவளம்:
பச்சைத் தண்ணீரில் பலகாரம் பொரிக்க முடியாது. 2009 ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் அதற்கு முன்னர் 27-12-2009 ஆம் திகதி கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழிலும் இந்த மகாநாட்டிற்கான செலவுகளுக்கு எப்படி நிதி சேகரிக்கப்போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவே சொல்லியிருக்கின்றோம்.
இலங்கையில் வாழ்க்கைச்செலவு உயர்வினாலும் போருக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் கஷ்டமுறும் படைப்பாளிகளிடமிருந்து நிதியுதவி பெறாமல், உலகெங்கும் வாழும் ஈழத்து படைப்பாளிகள் சுமார் 500 பேரிடமிருந்து தலா ஒருவர் $100 வெள்ளிகளை நன்கொடையாக தருவதன் மூலம் இந்த மகாநாட்டை சிறப்பாகவும் கலை. இலக்கிய கனதியுடனும் நடத்த முடியும் என்று கூறியிருக்கின்றேன். அத்துடன் பாதிப்புற்ற தமிழ்ப் படைப்பாளிகளின் குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கும் எண்ணத்தையும் வெளியிட்டிருக்கின்றேன்.
இதற்கெல்லாம் உதவப் போகிறவர்கள் புகலிடத்தில் வாழும் மனிதநேயப் படைப்பாளிகளே தவிர போலி முகங்கள் அல்ல.
கிடைக்கப்பெறும் நிதி நன்கொடைகளுக்கு பற்றுச்சீட்டுகள் தரப்படுவதுடன் மகாநாடு முடிந்து ஒரு மாத காலத்துள் வரவு-செலவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளரிடம் (Auditor) காண்பிக்கப்பட்டு உதவியவர்களுக்கும் படைப்பாளிகள் சமூகத்துக்கும் சமர்ப்பிக்கப்படும்.
இந்த ஒன்று கூடல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்ளும் முயற்சியாகவே நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்படும் என்றும் பேசியிருக்கின்றேன். பல பத்திகளில் எழுதியுமிருக்கின்றேன்.
இலங்கையில் நடந்த திரைப்பட விழா ஒரு கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சி. அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டது. அதனை எதிர்தார்கள் பகிஷ்கரித்தார்கள். அதற்கு ஒரு நோக்கம் இருந்தது.
ஆனால் எமது எழுத்தாளர் ஒன்று கூடலானது மிகவும் சாதாரண எளிமையான சிறுகச்சிறுக சேமித்து ஒரு ஏழைக்குடும்பம் நடத்தும் எளிமையான வைபவத்துக்கு நிகரானது.
இதனை அரசியலாக்கி அதற்குப் பின்னால் சிங்கள. தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றெல்லாம் கற்பனையில் பிதற்றி சிறியதொரு நிகழ்வை பூதாகரமாக்கி தமது பொறமைப் பொச்சங்களை அம்பலப்படுத்தி அதற்கு நெருப்பூட்டி அதில் குளிர் காய்ந்து கெர்ண்டிருப்பவர்களை நாம் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்.?
எந்த ஆதாரத்தில் நாம் இலங்கை அதிபரிடம் லஞ்சம் வாங்கித்தான் இதனை நடத்துகின்றோம் என்று நாக்கூசாமல் சொல்கிறார்கள்?
தமது இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் சவாரி செய்வதற்கும் இச்சந்தர்ப்பத்தில் தோதான வாகனமாக இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை கருதுகிறார்கள். இலங்கையில் நடத்தாமல் மலேசியாவில் நடத்தலாம் என்று மகத்தான யோசனைகளை அவுஸ்திரேலியாவிலிருந்து சொல்லுபவர்கள் அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் மிகச்சாதாரண தமிழ் எழுத்தாளர் விழா நடந்த மண்டபத்தின் பக்கமே எட்டியும் பார்த்ததில்லை. அதனை நடத்திய சங்கத்தின் சிறுசேமிப்புக்கோ கோரிய நிதியுதவிக்கோ ஒரு சதமேனும் கொடுத்ததும் இல்லை.
எழுத்தாளர் விழாக்களினதும் நடத்தவிருக்கும் மகாநாட்டினதும் பூர்வீகம் தெரியாமல் ஏதோ தாமும் இருக்கிறோம் பேர்வழிகள் எனச்சொல்லிக் கொண்டு தமக்கேயுரித்தான காழ்ப்புணர்வுகளுக்கு சொல் அலங்காரம் அணிவித்து போலி அரிதாரம் பூசி பவனி வருகிறார்கள்.
இதனை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது ஐரோப்பாவிலிருந்து (பிரான்ஸ்) ஒரு இலக்கிய நண்பர், நீண்ட காலத்திற்குப் பின்னர் தமது மனைவி பிள்ளைகளுடன் இலங்கை சென்று வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களிலும் கொழும்பிலும் சுமார் 46 நாட்களை மகிழ்ச்சியோடும் பிரிநதவர்களை மீண்டும் பார்த்த குதூகலத்துடனும் விரிவான கடிதம் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்துள்ளதுடன். மகாநாட்டுப் பணிகளிலும் ஒத்துழைக்கின்றார்.
இதுவரையில் நாம் பல புலம்பெயர் படைப்பாளிகளிடமிருந்து மகாநாட்டு மலர்கள், நூல்கள் ஆகியனவற்றுக்கு பல படைப்புகளை பெற்றிருப்பதுடன் நிதிப்பங்களிப்பையும் பெற்றுள்ளோம்.
மகாநாட்டிற்காக இலங்கையில் பிரத்தியேகமாக ஒரு வங்கிக்கணக்கும் திறக்கப்பட்டு உதவ விரும்பும் படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இப்படியொரு சர்வதேச நிகழ்வு நடக்கப்போகும் விடயமே அங்குள்ள எந்தவொரு அரசியல் வாதிகளுக்கும் சொல்லப்படவில்லை. நாம் அரசியல்வாதிகளோ, வியாபாரிகளோ, பரபரப்பான விளம்பரம் தேடும் போலிகளோ இல்லை.
காலம் கடந்து குடும்பங்கள் எங்காவது ஓரிடத்தில் ஒன்றுகூடுவதுபோன்று கலை இலக்கிய குடும்பத்தினர் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சந்தித்துக்கொள்ள விரும்பியிருக்கிறார்கள்.
இதனை வைத்துத்தான் இலங்கை அரசாங்கம் தனக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெறப்போகிறது என்று சொன்னால்…
ஆடிவேல் விழாவையும் நல்லூர்க்கந்தன் உற்சவத்தையும் மாத்தளை முத்துமாரியம்மன் ரதோற்சவத்தையும் அங்கே நாடுபூராவும் தமிழ்ப்பாடசாலைகளில் நடைபெற்றுவரும் தமிழ்த்தின விழாக்களையும் வாராந்தம் நடக்கும் நூல் வெளியீட்டுவிழாக்களையும் தொடர்புபடுத்தியும் தனக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டிருக்கலாமே?
வெளியிலிருந்து வரப்போகிறவர்கள் தமது விடுமுறை மற்றும் வசதிகருதித்தான் வருவார்கள். வரவசதியில்லாதவர்கள் தமது கட்டுரைகளை படைப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு அரங்கு, படைப்புகளில் செவ்விதாக்கம், சிறுவர் இலக்கியம் , நாடகம், கூத்து, குறும்படம் வலைப்பதிவு உட்பட பல நுண்கலைகள் தொடர்பான கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற விருக்கின்றன.
தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலுமிருந்து வருகைதரும் சிற்றிதழ் ஆசிரியர்களின் கருத்தரங்கு அமர்வும் நடைபெறவிருக்கிறது.
ஏற்கனவே திருக்குறள், பாரதி கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயரக்கப்பட்டுவிட்டன. தமிழக படைப்பாளிகள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.சின்னப்பபாரதி ஆகியோரின் படைப்புகளும் இலங்கையில் டொமினிக்ஜீவா, திக்குவல்லை கமால், மேமன் கவி, செங்கைஆழியான், சாந்தன், மலரன்பன். தி.ஞானசேகரன் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள் சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. அத்துடன் மார்டின் விக்கிரமசிங்கா, கருணாசேன ஜயலத், குணசேனவிதான, ஜி.பி.சேனநாயக்கா உட்பட பலரது சிங்களப்படைப்புகள் தமிழுக்கு மொழிபெயரக்கப்பட்டுவிட்டன.
(இத்தருணம் ஒரு சிறுதகவல்: ஜெயகாந்தன் ஆசிரியராகவிருந்து முன்னர் வெளியான கல்பனா இதழில் குணசேனவிதானவின் சிங்களச்சிறுகதை தமிழில் மொழிபெயரக்கப்பட்டு வெளியானது.)
தமிழர் புகலிட நாடுகளில் எம்மவரின் தமிழ்ப்படைப்புகள் (நாவல், சிறுகதை, கவிதை, வாழ்க்கை வரலாறு) ஆங்கிலத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் பெயர்க்கப்பட்டுள்ளன.
எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 6 ஆவது எழுத்தளர்விழாவில் (07-01-206) நான் தொகுத்து வெளியிட்ட ‘உயிர்ப்பு’ சிறுகதைத் தொகுப்பில் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்கள் 20 பேரின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டேன்.
தற்போது இக்கதைத்தொகுதியை கனடாவிலுள்ள மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான ஒரு சகோதரி ஆங்கிலத்தில் மொழிபெயரத்து அனுப்பியுள்ளார். இத்தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் – முன்பு வசித்த 20 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருக்கின்றன. பின்னர் இங்கு வதியும் 45 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து வானவில் என்ற தொகுப்பை 7 ஆவது எழுத்தாளர் விழாவில் (27-01-2007) வெளியிட்டேன். எனினும் இந்த தொகுப்பு நூல்களிலும் எனது எந்தவொரு படைப்பும் இல்லை என்பது அவற்றை பார்த்தவர்களுக்கும் படித்தவர்களுக்கும் நன்கு தெரியும்.
மொழிபெயர்ப்புத்துறையில் எதிர்நோக்கப்படும் சவால்கள் சங்கடங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்வதற்காகத்தான் சர்வதேச மகாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கு நடைபெறவிருக்கிறது.
சிங்கள படைப்பாளிகளுடன் நாம் புரிந்துணர்வுடன் இயங்குவதையும் சிலர் கொச்சைப்படுத்தி அரசியலாக்கப் பார்க்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்துடன் பல வருடகாலமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர்ப் பிச்சினை இருந்தாலும் தமிழ் வாசகர்கள் கன்னடப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பை படிக்காமலா இருக்கிறார்கள்.
பிறப்பால் கன்னடராகப் பிறந்த நடிகர், நடிகையர்கள் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.
நாடு, மொழி, இனம், மதம், சாதி கடந்து சிந்திப்பவனே ஆரோக்கியமான கலைஞன், படைப்பாளி. எதனையுமே அரசியலாக்கி அதில் ஆதாயம் தேட முனைபவர்களுக்கு காலம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்.
தீதும் நன்றும் பிறர்தர வரா.
மகாநாடு திட்டமிட்டபடி நடக்கும் வருகைதர விரும்புபவர்கள் இலங்கையராக இருந்தால் தாயகத்தின் யதார்த்த நிலையையும் அங்குள்ள படைப்பாளிகளின் ஆதங்கங்களையும் நேரில் பார்ப்பார்கள். தமிழகம் உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு இந்தப் பயணம் சிறந்ததொரு வாழ்வனுபவமாக மனதிலும் எதிர்காலப் படைப்புகளிலும் பதிவாகும்.