தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக ஆரம்பகால உறுப்பினராகவும் அவ்வியக்கத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகவும் இருந்த கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாதன் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளை அழிப்பதற்கு தயாரிக்கப்பட் புரொஜக்ற் பீக்கனின் இறுதிக் கட்டத்தை மேற்கொள்வதில் முக்கிய நபராக உள்ளார். புலிகளின் பெரும்பாலான தலைமைகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவர்களை களையெடுக்கும் முயற்சிகளுக்கு கே பி யின் பங்கு தற்போது இலங்கையில் மிக அவசியமான ஒன்றாகி உள்ளது. கே பிக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றியும் கே பி யை முதலமைச்சராக்குவது தொடர்பாகவும் இலங்கையரசு தீவரமான ஆலோசணைகளை நடாத்தி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியை கே பி யை வைத்து முன்னெடுப்பதன் மூலம் முள்ளை முள்ளால் எடுக்கும் கைங்கரியத்தை மேற்கொள்ளலாம் என இலங்கையரசு கருதுகின்றது. அதன் ஒரு அம்சமாக புலம்பெயர்ந்த ஒன்பது பேர்கொண்ட குழுவொன்று கே பியின் அழைப்பில் இரகசியமாக இலங்கை சென்றிருந்தது. இக்குழுவில் புலிகளின் முன்னணி அமைப்புகளான பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர் சுகாதார அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வணங்கா மண் ஆகிய நிதிசேகரிப்பில் முன்னின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அல்லது அவ்வமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கலந்த கொண்டுள்ளனர். ஆனால் தற்போது அவ்விஜயம் பெரும்பாலும் பரகசியமாகி விட்டுள்ளது. இக்குழுவில் சென்றவர்கள் விபரம் வருமாறு:
பிரித்தானியா: சார்ள்ஸ் அன்ரோனிதாஸ், டொக்டர் வேலாயுதம் அருட்குமார், சிறிபதி சிவனடியார், விமலதாஸ்
பிரான்ஸ்: கெங்காதரன்
சுவிஸ்லாந்து: டொக்டர் சந்திரா மோகன் ராஜ்
அவுஸ்திரேலியா: டொக்டர் ரூபமூர்த்தி
கனடா: பேரின்பநாயகம், சிவசக்தி
இவர்களில் நால்வர் லண்டனில் இருந்து சென்றுள்ளனர். இவர்களில் சார்ள்ஸ் அந்தோனிதாஸ் முன்னாள் ரெலோ முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். அவ்வியக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின் அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டவர். பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலிகளின் முன்னரங்க அமைப்புகளுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவர். கே பி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட செய்தி வெளிவந்த போது அவரை விடுவிப்பதற்காக சில முயற்சிகளையும் எடுத்தவர். இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள இவரை இவருடைய அண்மைய விஜயம் பற்றி கருத்தறிய அவருடன் தொடர்பு கொண்ட போதும் தகவல்பெற முடியவில்லை.
இந்த விஜயத்தில் லண்டனில் இருந்து சென்ற மருத்துவர் வேலாயுதம் அருட்குமார் காரைநகரைச் சேர்ந்தவர். புலிகளின் தீவிர ஆதரவாளர். இவருடைய சகோதரர்கள் புலிகளின் உறுப்பினர்களாக இருந்தனர். இவரும் பிரித்தானியத் தமிழர் பேரவையில் அறியப்பட்ட முக்கிய உறுப்பினர். பரமேஸ்வரன் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருந்தபோது பரமேஸ்வரனுடைய உடல்நிலையை பரிசோதிக்க நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் வேலாயுதம் அருட்குமார் முக்கியமானவர்.
சிறிபதி சிவனடியார் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர். ஜேர்மனியில் இருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவர். இவரது குடும்பமே புலிகளுக்கு மிக ஆதரவானவர்கள். இவரது சகோதரி புலிகளுடன் நிதிகொடுக்கல் வாங்கல் உறவுகளை மேற்கொண்டு இருந்தவர். ஒரு தடவை புலிகள் இவரிடம் இருந்து பெற்ற நிதியை திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையால் இவரும் இவரது கணவரும் தூக்கிட்டு மரணித்தனர். இருந்தும் சிறிபதி சிவனடியார் புலிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவந்தவர். இவர் தீபம் தொலைக்காட்சியின் பங்குதாரர் செல்வகுமாரின் மைத்துனர். தீபம் தொலைக்காட்சியிலேயே பணியாற்றி வருகின்றார். தீபம் தொலைக்காட்சிக்கான கலையகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் தீபம் தொலைக்காட்சி இரகசிய சந்திப்பு ஒன்றையும் நடாத்தி இருந்தது. இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் சிறிபதி சிவனடியார் இலங்கையிலேயே நிற்பதாக அறியமுடிகின்றது. அவருடன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
ஏனையவர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் முழுமையாக வரவில்லை.
இவர்களுடைய பயண ஏற்பாட்டை மேற்கொண்டதில் மார்ச் 2009ல் இலங்கை சென்ற டயஸ் பொறா டயலொக் குழுவிற்கும் சம்பந்தம் உண்டு. இக்குழுவில் சென்ற டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோர் கே பி யை புலம்பெயர்ந்த புலி அதரவுக் குழுவினர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததில் ஈடுபட்டு இருந்தனர். கே பி யினதும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவினரதும் வடக்கு நோக்கிய பயணத்தில் டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோரும் கலந்தகொண்டதாக தெரியவருகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
‘வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம்’ என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நிறுவி அதனூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி கே பி வெளிநாடுகளில் இருந்து சென்ற குழுவினருடன் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது. வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்து விபரங்களை சேகரிப்பதிலும் அதனை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வருவதிலும் இலங்கை அரசு மிகவும் கவனமாக உள்ளது. புலிகளுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரை ஆண்டு வருமானத்தை வழங்குகின்ற 3 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாக ஜேன்ஸ் வீக்லி என்ற புலனாய்வுச் சஞ்சிகை 2007ல் மதிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிதியின் சிறுபகுதி மீண்டும் ஆயுத வன்முறையை மேற்கொள்ள விரும்புபவர்களின் கைகளுக்குச் செல்லுமாயின் அவர்களால் தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாவிட்டாலும் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற ஸ்தீரத்தன்மையை குலைக்க முடியும். இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இலங்கை அரசு மிகக் கவனமாக உள்ளது.
மே 18 2009ல் யுத்தம் முடிவடைந்த போதும் இலங்கையில் முற்றுமுழுதாக புலிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடவில்லை என இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மத்தியில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்காங்கு சிறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டும் உள்ளது. தப்பியோடிய புலிகளில் சிலர் இன்னமும் இலங்கையின் காட்டுப் பகுதிகளில் உள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு கடைப்பிடிக்கும் மிகக் கடுமையான செய்தித் தணிக்கை காரணமாக ஊடகங்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றன. ஆங்காங்கு இராணுவ வீரர்கள் ஒரு சிலர் காயமடைந்து அல்லது மரணமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு வரும் சம்பவங்கள் இடம்பெறவே செய்கின்றன. இவை புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளால் நிகழ்வதாக அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாத நிலையொன்று உள்ளது. அண்மையில் ஒளிபரப்பப்பட்ட ஸ்ரீபன் சார்க்கரின் ஹாட் ரோக் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு போராளியின் வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
தடுத்து வைக்கப்பட்டு உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை விடுவிப்பதில் அரசு தயக்கம் காட்டி வருவதற்குள்ள பல காரணங்களில் முக்கிய காரணமாக இருப்பது புலிகள் மீண்டும் தங்களை ஒழுங்கமைக்க முற்படும் போது, விடுவிக்கப்படும் போராளிகள் மீண்டும் அவர்களினால் இயக்கத்திற்குச் சேர்க்கப்படும் வாய்ப்பு இருப்பதே. அதனாலேயே கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை விடுவிப்பது காயப்பட்டவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் முற்றுமுழுதான மனமாற்றத்தை ஏற்படுத்தவே கே பி மற்றும் வெளிநாட்டுக் குழுவினர் இந்தப் போராளிகளைச் சந்திக்கவும் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை 3 பிரிவுகளாகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் கைப்பற்ற 12 மாதங்களை ஒதுக்கி 3 ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் போட்டு அதனை வெற்றிகரமாகவும் அரசு நிறைவேற்றியது.
01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றியது.
இதன் மூலம் புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகள் (அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை) முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி – தற்போதைய காலப்பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமைந்துள்ளது. இந்த புரொஜக்ற் பீக்கன் திட்டம் 2007ல் வெளியே கசிந்திருந்தது. இது பற்றிய விரிவான கட்டுரை ஏப்ரல் 7 2009ல் தேசம்நெற்றில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது புலிகளை களையெடுக்கின்ற இறுதி நடவடிக்கைகளில் இலங்கையரசு மிகத் தீவிரமாக உள்ளது.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2011 ஏப்ரலில் புலிகள் முற்றாக களையெடுக்கப்பட்ட பின்னரேயே நடாத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் புலிகளுடனான யுத்தத்தால் கிடைத்த இராணுவ வெற்றி சரத்பொன்சேகாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அடிபட்டுச் சென்றுவிடலாம் என்ற அச்சத்தாலும் அதனை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தலாம் என்பதாலும் ஜனாதிபதித் தேர்தல் திட்டமிடப்பட்டதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே இடம்பெற்றது.
புரஜக்ற் பீக்கனின் இறுதிக்கட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைக் களையெடுக்கின்ற நடுநிலையாக்குகின்ற முயற்சிகளுக்கு புலிகளையே அரசு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. உள்நாட்டில் புலிகள் மிகவும் பலவீனமான நிலையில் கிட்டத்தட்ட போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்தது போன்ற நிலையிலேயே உள்ளனர். ஆனால் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் கட்டமைப்பு யுத்தத்தினால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் புலிகளின் தலைமைகள் அழிக்கப்பட்டதால் அவர்கள் மாற்றுத் தலைமையின்றி ஆளுக்காள் ஆழமான சந்தேகம் கொண்டவர்களாக உள்ளனர். இருந்தாலும் இந்த வெளிநாட்டுப் பிரிவில் ஒரு பகுதியினர் மீண்டும் இலங்கையில் ஒரு ஆயுத வன்முறையை உருவாக்கத் தீவிரமாக முயற்சிக்கின்றனர். இவர்கள் அங்கு காடுகளில் பதுங்கியுள்ள மீளிணைகின்ற புலிகளுக்கு ஒரு பின்பலத்தை பொருளாதார பலத்தை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு நம்புகின்றது.
அண்மைக் காலமாக ஒட்டுக்கேட்கப்படும் தொடர்பாடல்கள் புலிகளின் நடமாட்டங்களை உறுதிப்படுத்துவதாக இலங்கைப் புலனாய்வுத்துறையிடம் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. மே 18 முடிவில் சரணடைந்தவர்களில் புலிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் இருந்துள்ளனர் என்பதையும், அவர்கள் புலிகள் என அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பெரும்தொகைப் பணத்தைச் செலுத்தி முகாம்களில் இருந்து வெளியேறி இலங்கைக்கு வெளியே சென்றுவிட்டதையும், இலங்கை இராணுவத்தரப்பு தற்போது உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒத்துக்கொள்கின்றது. அவ்வாறு தப்பியவர்களில் பிற்காலங்களில் வே பிரபாகரனின் ஆலோசகராக இருந்த மு திருநாவுக்கரசும் ஒருவர். யுத்தத்தின் இறுதிநாளில் இலங்கைப் படையிடம் சரணடைந்த மு திருநாவுக்கரசு குடும்பத்தினர் முகாமை விட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தங்கி உள்ளனர். இவ்வாறு தப்பித்த பலர் இந்தியா, மலேசியா, வியட்நாம், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தலைமறைவாகி உள்ளனர். இவர்களில் யாராவது மீளிணையும் புலிகளுக்கு தலைமை கொடுத்து நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் என்ற அச்சம் இலங்கை இராணுவத்தரப்பில் தற்போது வெளிப்படுகின்றது. அதனைத் தவிர்ப்பதற்கும் கையாள்வதற்கும் கே பி யின் ஆளுமையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அரசு ஆராய்கின்றது.
‘தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி பற்றிய விபரங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது தொடர்பாக கே பி க்கு பொதுமன்னிப்பு அழிக்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்’ என ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல யூன் முற்பகுதியில் தெரிவித்து இருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘கே பி வெளியிட்ட தகவல்களால் வெளிநாடுகளில் இருந்த புலிகளின் பல சொத்துக்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது’ என்றும் தெரிவித்தார். ஆயினும் அச்சொத்துக்களின் பெறுமதி பற்றியோ அல்லது அவை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா என்ற தகவல்களையோ அமைச்சர் வெளியிட மறுத்துள்ளார். ‘மன்னர் போன்று வாழ்ந்தவர் கே.பி. இப்போது தனது சகல சிறப்புரிமைகளையும் இழந்துவிட்டார். தனது தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், இப்போது நாட்டுக்காக அவர் அதிகளவுக்குச் செய்கிறார் என்பதையிட்டு நாம் திருப்தியடைவது அவசியமானதாகும். அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்’ என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
2009 மார்ச் 27 – 29 ல் வெளிநாட்டுத் தமிழர்கள் குழு இலங்கை அரசின் அழைப்பில் தலைநகர் கொழும்பு சென்றது. ‘ஸ்ரீலங்கன் டயஸ்பொறா டயலொக்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் புலிகளின் முக்கிய தலைவரான திரு கே பத்மநாதன் உடன் இலங்கை அரசு ஒழுங்கான தொடர்பில் இருப்பதாக அப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் பசில் ராஜபக்ச கே பியை அழைக்கும் போது திரு கே பத்மநாதன் என்று கௌரவமாகவே அழைத்திருந்தமையும் அச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
கே பி பெரும்பாலும் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகளில் தலைமறைவாகவே செயற்பட்டு வந்தவர். 2007 செப்ரம்பர் 10ல் கே பி பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக பாங்கொக் போஸ்ற் செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தி இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாழும் நாடுகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆயினும் தாய்லாந்துப் பொலிஸார் இச்செய்தியை மறுத்து இருந்தனர். கே பி கைது செய்யப்பட்ட போதும் ஊழல் நிறைந்த தாய்லாந்துப் பொலிஸ் உயர் அதிகாரிகளால் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கில் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்திருந்த நிலையிலேயே கே பி கைது செய்யப்பட்டதான செய்தி அல்லது வதந்தி வெளிவந்தது. இச்சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்பது இதுவரை வெளிவரவில்லை.
இச்சம்பவத்திற்கு முன்னதாகவே கே பி அவருடைய சர்வதேசப் பொறுப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தார். பின்னர் 2008ன் பிற்பகுதியில் கே பி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் 2009ல் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் சிரேஸ்ட பிரதிநிதியாகவும் பிரதிநிதியாக புலிகளின் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டார்.
மே 18ல் புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட நிலையில் கே பி தன்னையே புலிகளின் தலைவராக அறிவிக்கின்றார். அவ்வாறு ஒருவரை அறிவிப்பதற்கான அதிகாரம் கே பியைத் தவிர வேறு யாரிடமும் இருந்திருக்கவும் இல்லை. தலைவராக அறிவிக்கப்பட்ட கே பி மாறுபட்ட கருத்தடையவர்களையும் இணைத்து நாடுகடந்த அரசாங்கம் ஒன்றை அமைக்க வி உருத்திரகுமாரன் தலைமையிலான குழுவொன்றை உருவாக்கினார். அதற்காகப் பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். இரகசியத் தன்மையை மிகக்கடுமையாக பின்பற்றுகின்ற அமைப்பை உருவாக்கி அதன் வளர்ச்சியில் இரண்டறக் கலந்த கே பி சாதாரணமாகவே பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். அவரை பலரும் மலேசியா சென்றே சந்தித்து வந்தனர். அவர் தனது இருப்பு பாதுகாப்புப் பற்றி அதிகம் கவனம் கொண்டிருக்கவில்லை. தனது பாதுகாப்பை வேறுவழிகளில் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தற்போது கொள்ளமுடியும்.
அதன் பின்னர். ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.
தற்போது கே பிக்கு பொது மன்னிப்பு அழிப்பது பற்றியும் அவரை முதலமைச்சராக்குவது பற்றியும் அரசாங்கத்தரப்பில் தீவரமாக ஆலோசிக்கப்படுகின்றது. கே பி தற்போது இலங்கையில் இருந்து நாடுகடந்த தமிழீழக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், தமிழர் சுகாதார அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை என புலிகளின் முன்னரங்க அமைப்புகளில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றார்.
கே பி முழுமையாக அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் அபிவிருத்தியில் ஈடுபடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை தன்னிடம் பேசியவர்களுக்குத் தெரிவிப்பதாக தேசம்நெற் அறிகின்றது. மேலும் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகுந்த நம்பிக்கைக்குரிய மனிதர் என்றும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர் என்றும் அவர் தன்னைச் சந்தித்தவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கே பி யின் அழைப்பில் இலங்கை சென்றவர்கள் தொடர்பில் கே பியுடன் முரண்பட்டவர்கள் குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை குற்றச்சாட்டுக்களை வைப்பதில் அல்லது அவர்களுக்கு வழமைபோல் துரோகிப் பட்டம் வழங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. சென்றவர்களில் சிலர் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலிகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள்.
கே பி யின் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் எவ்வளவுதூரம் வெற்றிகரமாகச் செயற்படப் போகின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் நாளுக்கு நாள் அரசியல் ரீதியாகப் பலவீனமடைகின்றனர். அதேநேரம் அவர்களிடம் உள்ள சொத்துக்கள் பெரும்பாலும் ஒரு சிறுகுழுவினரினால் அனுபவிக்கப்பட்டுக் கொண்டும் உள்ளது. தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் மத்தியில் கே பி யின் நிலை முக்கிய விவகாரமாகி உள்ளது. கே பி யின் நிலையை விளங்கிக்கொள்வதில் சர்ச்சைகளும் சங்கடங்களும் காணப்படுகிறது. புலிகள் எப்போதும் அரசியல் அடிப்படையில் அணிசேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் நபர்களின் அடிப்படையிலேயே அணி சேர்ந்தனர். அதனால் அவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலைக் கையாள முடியவில்லை. தொடர்ந்தும் நபர்கள் தொடர்பான முரண்பாடுகளிலேயே காய்களை நகர்த்துகின்றனர்.
கே பி இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படுவது என்ற முடிவை எப்போது எடுத்தார் என்பது தற்போது மில்லியன் பவுணுக்குரிய கேள்வியாக உள்ளது. 2006 மேயில் புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்ட போதே கே பி இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பித்துவிட்டாரா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்பினரிடமும் உள்ளது.
புலிகளை அழிக்கின்ற புரொஜகற் பீக்கன் வீச்சுடன் இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்தே தாக்கி அழிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாக இலங்கை இராணுவம் அதற்கு நன்றியைத் தெரிவித்து இருந்தது. ஆனால் இதில் எங்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை கே பி யும் முக்கியமான தகவல்களை இலங்கைக்கு வழங்கி வந்ததாக லண்டனில் உள்ள இந்திய அதிகாரி ஒருவர் தங்களைச் சந்திக்க வந்த தமிழ் பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.
புலிகள் முற்றுமுழுதாக இலங்கை அரச படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு இருந்தநிலையில் தாங்கள் ஆயுதங்களை மௌனிப்பது என்ற முடிவை எடுத்த போது அவர்களின் பிரதான வெளித்தொடர்பு கே பி உடனேயே இருந்தது. அதேசமயம் புலிகளின் உள்ளுர் தலைவர்கள் தமிழக அரசியல்வாதிகள் நோர்வேயில் எரிக்சோல் ஹெய்ம், ரைம்ஸ் பத்திரிகையாளர் போன்றவர்களுடன் தொடர்பைப் பேணி வந்தனர். இவர்களுடைய படுகொலைகள் நிகழ்வதற்கு 48 மணிநேரத்திற்குள் இவர்கள் மேற்குறிப்பிட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
கே பி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்து இருந்தால் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதில் இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் கே பி க்கும் தொடர்பு இருந்தால் புலிகளின் தலைமையை சரணடைய வைக்கும் முயற்சியிலும் சரணடையும் பட்சத்தில் சர்வதேச பாதுகாப்புடன் அவர்கள் இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லப்படுவார்கள் போன்ற நம்பிக்கைகளையும் கே பி அவர்களுக்கு வழங்கி இருக்கக் கூடும். ஆனால் இவை யாவும் முழுமையான தகவல்கள் கிடைக்கும் வரை அறுதியிட்டுக் கூறிவிடக் கூடியதல்ல.
அதேவேளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு தங்களின் பிரதிநிதியாக கே பி புலிகளாலேயே நியமிக்கப்பட்டு இருந்தவர். ஆனாலும் புலிகள் கே பி இல் மட்டும் தங்கி இருக்கவும் இல்லை. கே பி முன்னர் புலிகளின் ஒரு பகுதியினரால் ஓரங்கட்டப்பட்டு பின்னர் மீண்டும் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். கே பி மீதான சந்தேகம் புலிகளுக்கு ஏற்பட்டு இருந்தால் அப்படியான ஒருவரின் கையில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்திருப்பார்களா என்பதும் கேள்விக்குரியது. பேச்சுவார்த்தைகளுக்கு கே பி புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதால் பேச்சுவார்தையில் ஈடுபட்டவர்களிடையே குறிப்பாக கோதபாய ராஜபக்சவுக்கும் கே பி க்கும் இடையே ஒரு உறவு ஏற்பட்டு இருக்கக் கூடும்.
யூன் 14 2009ல் தேசம்நெற்றுடன் கே பி தொடர்புகொண்டதில், 2002 பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகளை வெளியேற வேண்டாம் என்று தான் வலியுறுத்தி வந்ததாகவும், தலைவர் தனது ஆலோசனையிலும் பார்க்க தமிழக அரசியல் வாதிகளிடம் இருந்து தினம் கிடைக்கும் ஆலோசணைகளையே கூடுதலாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். கே பி பிற்காலங்களில் யுத்தத்தைத் தொடர்வதில் பெரிய நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை பெரும்பாலும் அறிய முடிகின்றது. கருணா அம்மான் புலிகளில் இருந்து வெளியேறுகின்ற முடிவை எடுத்ததற்கும், புலிகளின் தலைமை தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுப்பதே காரணம் எனத் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தைகளில் புலிகளைப் பிரதிநிதித்துவம் செய்த கருணா எடுத்த அதே முடிவுக்கே கே பியும் வந்துள்ளார்.
கே பி க்கும் இலங்கை அரசுக்குமான நெருக்கமான உறவு யுத்தத்தின் பிற்பகுதியில் கே பி பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது முதல் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் அதற்கு முன்பே கே பி இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு இருந்தால் புலிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் துரோகத்தனமாக அது அமையும்.
புலிகள் தங்களில் இருந்து மாறுபட்ட கருத்துடையவர்கள் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி இறுதியில் தங்களுக்குள்ளேயே துரோகிகளைத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
புலிகளை யுத்தத்தின் ஆரம்பம் முதலேயே பேச்சுவார்த்தை மூலமான உடன்பாட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியதாக கே பி தேசம்நெற்றுக்குத் தெரிவித்து இருந்தார். இதனை கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு முன்னும், பின்னரும் கூறியதாகவும் ஆனால் தமிழகத் தேர்தல் முடிவுகளில் தலைமை மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார். அப்போது யுத்தமுனையில் இருந்து வந்த தகவல்கள் அனைத்தும் தாங்கள் தமிழீழத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிவித்து வந்தன. மே 16 2009 இலேயே சூசை முதற்தடவையாக தாங்கள் ஆயுதங்களை மௌனிக்க வைக்கத் தயார் என்று அறிவிக்கின்றார். இப்பேச்சு புலிஆதரவு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. புலிகள் தாங்கள் சரணடையத் தயார் என முதலும் கடைசியுமாகத் தெரிவித்தது அப்போதே.
எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் திறமையாகப் பேரம்பேசக் கூடியவருக்கும் இந்நிலையில் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது மிகக் கஸ்டம். ஓரிரு சதுர கிலோ மீற்றருக்குள் முழுமையாக இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கும் தலைமையை காப்பாற்ற பேச்சுவார்த்தை நடாத்த கால அவகாசம் இல்லை. சரணைடைவதற்கான நிபந்தனைகளை விதிக்கவும் புலிகளிடம் ஒருபிடியும் இருக்கவில்லை. தங்களை சில மணிநேரத்திற்குக் கூட தற்காத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சரணடைவதற்கான முடிவை அவர்கள் அறிவித்தனர். சரணடைவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் அங்கு நேரம் இருந்திருக்கவில்லை. அதனால் இலங்கை அரச தரப்பில் அல்லது இராணுவம் சொல்வதையெல்லாம் நம்புவதைத் தவிர அங்கு புலிகளுக்கோ, அவர்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கே பி க்கோ வேறுவழி இருந்திருக்க முடியாது.
இலங்கை அரசு கே பி க்கு சில நம்பிக்கை சமிஙைகளை வழங்கி கே பி மூலமாக புலிகளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கலாம். இதுவரை புலிகளின் தலைமை சரணடைந்ததும் அவர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற தகவல் மட்டுமே உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. எவ்வாறு அது சம்பவித்தது என்பது இன்னமும் ஊகங்களுக்கே விடப்பட்டு உள்ளது.
இவற்றைத் தொடர்ந்து ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் இன்றியே கே பி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர் இலங்கையின் சிறைக்கூடங்களில் தடுத்த வைக்கப்பட்டு இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவினால் கட்டப்பட்ட “விசும்பாய” வில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூனியன் பிளேசில் உள்ள இந்த வாஸஸ்தலத்திலேயே அநுரா பண்டாரநாயக்காவும் வாழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கைது இலங்கை அரசாங்கத்தாலும் கே பி ஆலும் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் என்றே தற்போது அறிய வருகின்றது. இந்தக் கைதுக்கு முன்னதாகவே கே பி க்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் கே பி யால் புலிகள் அமைப்பை நீண்ட காலத்திற்கு தலைமை தாங்க முடியாது. சர்வதேச உளவு நிறுவனங்களுக்கே வேண்டப்பட்ட கே பி, இன்று அனுபவிக்கின்ற சுதந்திரக் காற்றை பலவருடங்களாக அனுபவித்திருக்கவில்லை. மேலும் புலிகளில் ஒரு பகுதியினர் தலைமையின் அழிவுக்குத் தன்னை ஒரு காரணமாகக் காட்டுவதால் புலிகளாலும் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமும் தவிர்க்க முடியாதது. அதனால் நோயாளியுமான இவர் இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்று சரணடைவதே அவருக்கு பாதுகாப்பானதாக அமைந்திருக்கும். அந்த நாடகமே ஓகஸ்ட் 7 2007 ல் மலேசியாவில் அரங்கேறியிருக்க வாய்ப்புள்ளது.
தற்போது ஆலோசிக்கப்படுவது போல் வட மாகாண முதல்வராக கே பி நியமிக்கப்பட்டால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புலிகளினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது என்றும் கொள்ள முடியும். அங்கு எழக்கூடிய எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவானாலும், காடுகளில் உள்ள புலிகள் மீளினைந்து சில தாக்குதல்களை மேற்கொண்டாலும், அதனை புலிகளை வைத்தே இலங்கை அரசினால் கையாள முடியும். இலங்கையின் எந்தக் காடுகளின் மூலைகளில் எப்படிப் பதுங்க முடியும் என்பது முதல் சர்வதேச பாதாள உலகில் எவ்வாறு ஆயுதங்களை வாங்கி எப்படிக் கொண்டுவர முடியும் என்பதுவரை அனைத்தையும் அறிந்தவர்கள், ஒரே பாசறையில் உண்டு உறங்கியவர்கள், இன்று இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர். இவர்களுக்கு புலிகள் எப்படிச் சிந்திப்பார்கள் என்பதும் நன்கு தெரிந்தே இருக்கும்.
இதற்குள் அண்மையில் ஒரு புலி ஆதரவாளர் ‘கே பி இலங்கை அரசாங்கத்தினுள் புகுந்து விளையாடுகிறார்” என்றும் பெருமைகொண்டார். ‘தலைவர் உள்ளுக்கு விட்டு அடித்து முடிந்துவிட்டார். இப்ப கே பி இன் ரேன்’ என்று அவருக்கு என் கருத்தைத் தெரிவிப்பதைவிட என்ன சொல்ல முடியும்.
புலிகளின் பெயரில் மட்டுமே தமிழ் மக்களின் விடுதலை இருந்ததே அல்லாமல் அவர்களின் அரசியலிலோ செயற்பாடுகளிலோ தமிழ் மக்களின் விடுதலை பற்றிய உணர்வோ சிந்தனையோ இருக்கவில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் விடுதலையின் பெயரில் மிகப்பெரிய அழிவுகளும் அனர்த்தங்களும் நேர்ந்துள்ளது. பானையில் இருப்பதே அகப்பையில் வரும் என்பதற்கமைய இன்று புலிகளில் எஞ்சி நிற்பது கே பி, பிள்ளையான், கருணா….. புலம்பெயர்ந்த நாடுகளை எடுத்தால் நெடியவன், ரூட்ரவி, தனம் ….
இந்த சூழலுக்கள் தான் தாயகத்தின் தமிழ் மக்கள் வாழ வேண்டிய நிலையுள்ளது. இவர்களையோ இலங்கை அரசாங்கத்தையோ நிராகரித்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. கடந்த மூன்று தசாப்த கால யுத்தமும் அதில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் ஏற்படுத்திய அழிவும் சாதாரணமானதல்ல. இது தமிழ் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை தடுத்தது மட்டுமல்ல பல பத்து ஆண்டுகள் பின்நோக்கியும் தள்ளியுள்ளது. மீண்டும் அந்த மக்களை கொண்டு வந்து வளர்ச்சிப் பாதையில் விடுவது அவசியமாகின்றது. அதற்கு எதிரான அரசியல் தடைகளை உடைப்பதற்கான வழிவகைகளை ஆராயப்பட வேண்டும்.
இச்சூழலில் தமிழ் மக்களின் அபிவிருத்தி கருதிச் செயற்படுபவர்கள் தங்கள் நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக இருப்பது அவசியம். தமிழ் மக்கள் என்ற பெயரில் செய்யப்படும் எந்த விடயமும் அந்த மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அதனை இரகசியமாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கே பி யைச் சந்தித்தவர்கள் சந்திக்க முன்னரோ அல்லது சந்தித் பின்னரோ பின்னரோ தமது நோக்கம் பற்றி வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்யாதது அவர்கள் மீது பலவாறான சந்தேகங்களுக்கு இட்டுச்செல்கின்றது. இவ்வாறான மூடுமந்திர சந்திப்புக்கள் ஆரோக்கியமானதல்ல.
குறிப்பாக இக்குழுவில் பயணித்த சார்ள்ஸ் அந்தோனிதாஸ் ஜனநாயக நடைமுறை பற்றியும் வெளிப்படையான அரசியல் பற்றியும் பொது இடங்களில் கருத்து வெளியிட்டுவருபவர் இப்பயணம் குறித்து மௌனிப்பது தவறான முன்னுதாரணமாக அமையும். தமிழ் சமூகத்தில் காணப்படும் இவ்வகையான மூடுமந்திரமான அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்.