சென்ற மாதம் சிறீலங்கா சென்றிருந்த தமிழ்நாட்டு சில அரசியல் கட்சிகளின் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்தபோது ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தவேளை ஜனாதிபதியும் நன்றிக் கடனாகவும் நினைவுச் சின்னமாகவும் ஏதோ பெட்டியொன்றை அந்தக் குழுவில் சென்ற கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் கொடுத்ததை அத்தனை தொலைக்காட்சிகளும் தொடர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தன.
பெற்றுக்கொண்ட பெட்டிக்குள் பணப்பொதிகள் இருந்தன என்று ஈழத்தமிழர் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. சிறீலங்கா அரசத்தலைவரிடம் பணம்பெற்று தமிழீழப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்ற கோணத்திலேயே புலத்திலும் தமிழ்நாட்டு புலிசார் அரசியல் மட்டத்திலும் இது ஏதோ முதன்முறையாக நடைபெற்ற சம்பவம்போல் மாறி மாறி பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்த அரசியல்வாதிகளை ராணுவத்தளபதி சரத்பொன்சேகா அரசியல் கோமாளிகள் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது என்று வேறுசிலர் தொலைபேசியில் அழைத்து தொலைக்காட்சியில் பேசுகிறார்கள்.
இந்தத் தமிழர்கள் கூறுவதுபோல் பணத்தைப் பெற்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போராட்டத்தை காட்டிக்கொடுத்தது உண்மையென்றால் தமிழர் வரலாற்றில் பணம் பரிமாறப்பட்டது இதுவா முதல்தடவை? இவர்களா முதல் துரோகிகள்?
80 காலப்பகுதியில் JR ஜெயவர்தனாவினுடைய முதல் ஜனாதிபதி காலப்பகுதி முடிந்து இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் வந்தபோது அவரை எதிர்த்து திரு கொபேகடுவ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் JRன் வெற்றிவாய்ப்பு மிக அரிதாகவே காணப்பட்டது. அன்றய காலத்தில் தமிழ் மக்களுக்கெதிராக மிக மோசமான அரச அடக்குமுறைகள் JR ரால் கட்டவிழ்த்து விடப்பட்ட நேரம் தமிழ் மக்களின் வாக்கே தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது.
தமிழ் மக்களின் தலைவராக அன்று திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார். அவரின் ஆலோசனையின்படியே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை அறிய காத்திருந்தார்கள். தேர்தலும் அண்மித்தது திடீரென அவரும் அவர் பாரியாரும் லிபியாவுக்கு விடுமுறையைக் களிப்பதற்காக சென்றுவிட்டார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் வந்தன.
தமிழ் மக்களுக்கு எதுவுமே சொல்லப்படவில்லை தேர்தலும் வந்தது தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாது அங்கலாய்த்தார்கள். தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட வேண்டிய JR வெற்றிபெற்று மீண்டும் ஜனாதிபதியானார். அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் TULFன் தலைவருமான அமிர்தலிங்கத்தையும் அவர் பாரியாரையும் விடுமுறையில் லிபியாவுக்கு உல்லாசப் பயணம் அனுப்பி வைத்தவர் அன்றய JR என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அவர்களின் லிபியப் பயணமே JR ஐ மீண்டும் ஜனாதிபதியாக்க உதவியது என்று அன்றய அரசியல் விமர்சகர்கள் தமது விசனத்தை தெரிவித்தார்கள்.
திரு அமிர் அவர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடைய வரலாற்றுத் தவறுகளில் இதுவும் முதன்மையானதாகப் பேசப்பட்டது.
அதன்பின் 2004 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்கே தீர்மான சக்தியாக இருந்தது. UNP வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருந்ததாக அன்றய கணிப்புகள் தெரிவித்தன. தமிழ் மக்களின் தலைவனாக மேதகு வே. பிரபாகரன் இருந்தார். இம்முறை அவர் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்ததன் மூலம் ரணில் தோற்கடிக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்குப் பின்னால் தேசியத் தலைவர் இருந்ததாக செய்திகள் வந்தன. மகிந்தவிடம் விடுதலைப் புலிகள் 100 கோடி ரூபாய் பணம் பெற்ற அரசியல் அசிங்கத்தை பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகாண்க!
கொடுக்கப்பட்டுள்ள நேரம் மிகக் குறுகியது என்பதை கவனத்தில் கொள்க. தவறும் பட்சத்தில் மேலுமொரு துரோகி தமிழ் மண்ணில் உருவாகிவிடுவார்.
மகிந்தவிடம் கனிமொழி பணம் பெற்றது காட்டிக்கொடுப்பென்றால் இதே மகிந்தவிடம் 100 கோடி பணம் பெற்று அவரை ஜனாதிபதியாக்கியதை எதற்குள் அடக்குவது?
மகிந்தவிடம் முதன்முதல் பணப்பெட்டி பெற்றது கனிமொழியா ? ——
கனிமொழியும் அந்தக் குழுவினரும் துரோகிகள் என்றால் 100 கோடி வாங்கியவர்கள் ? ——-
நிற்க! இனி அடுத்த குற்றச்சாட்டான அரசியல் கோமாளிகள் என்ற வாதம் உண்மைதானா என்பதைப் பார்ப்போம். அந்த உண்மைநிலையை அறிய நமது வரலாற்றில் பின்நோக்கிப் பயணிப்போம்.
ஈழத்திலேயிருந்த விடுதலைப் போராட்டத்தை படகுகளிலேற்றி இந்தியக்கரைக்கு இழுத்துச் சென்றவர்கள் ஈழப் போராளிகளே.
போனவர்கள் அங்கே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வீட்டுவாசல்களில் மண்டியிட்டுக் கிடந்தார்கள். அன்று முதலமைச்சராக இருந்த M G ராமச்சந்திரனிடம் 2 கோடி ரூபாய் பணத்தை பெற்றதன் மூலம் போராட்டத்தை விற்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை ஈழப்போராட்டத்தின் பங்குதாரர்களாக இழுத்துவந்தவர்கள் முன்னாள் தேசியத்தலைவர் மேதகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் LTTE அமைப்புமே.
இரண்டு கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டபோது மற்றய இயக்கங்களை மிகவிரைவில் அழித்துவிடலாம் என்ற வெறி பணம்கொடுத்து ஈழப்போராட்டத்தை இவர்கள் தமதாக்கிக் கொள்கிறார்கள் என்ற அரசியல் யதார்த்தத்தை அவர்களின் கண்களிலிருந்து மறைத்தது.
கொடுக்கப்பட்ட கோடி MGR ன் சொந்தப் பணமா? இல்லை MGRக்கு மூன்றாம் தரப்பால் கொடுக்கப்பட்ட பணமா என்பதை யாரறிவார்?
இவ்வாறான புலிகளின் வரறாற்றுத் தவறுகளையெல்லாம் மூடிமறைத்து விட்டு இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை சுண்டுவிரல் காட்டி அரசியல் கோமாளிகள் என்கிறார்கள்.
அடுத்தவர்முன் சுண்டு விரலைக் காட்டுகின்ற போது மூன்று விரல்கள் காட்டுபவரை காட்டுகின்றன என்ற யதார்த்தத்தை புலிச் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
தமிழ்நாட்டு மண்ணில் 17 அப்பாவி இந்தியத் தமிழர்கள் ஈழத் தமிழருக்காக தம்மைத்தாமே எரித்து தம்முயிரை தியாகம் செய்தபோது தொப்புள்கொடி உறவென்றார்கள்.
அப்பாவி இளைஞர்களை உசுப்பேத்தி மூளையைச் சலவை செய்து முத்துகுமார்களை உருவாக்கிக் கொடுத்தபோது இந்த அரசியல் கோமாளிகள் ஈழப்போராட்டத்தின் நம்பிக்கை நாயகர்களாக வர்ணிக்கப்பட்டார்கள்.
வீர வரலாற்றோடு ஆரம்பித்த ஈழப்போராட்டத்தை இறுதியில் ஐநாவின் முன் பெற்றோல் ஊற்றி தன்னைத்தானே எரித்துக்கொள்ளுகின்ற கொடூரமான தமிழ்நாட்டு அரசியலாக மாற்றியவர்கள், ஒட்டுமொத்த விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை இறுதியில் தானத் தலைவனைப் போற்றிப் புகழும் ஈனப் போராட்டமாக மாற்றி தமிழ்நாட்டின் தரம்கெட்ட அரசியலாக மாற்றியவர்களும் இவர்களே.
MGRமுன் கைகூப்பி ஓர் பண்ணை அடிமையைப்போல் நின்ற பிரபாகரனின் புகைப்படத்தை ஏதோ வரலாற்றுப் பதிவுபோல் அடிக்கடி காட்டிப் பெருமைப்படும் இந்த புலிச்சமூகம் இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அரசியல் கோமாளிகளென்று வாய்கூசாது அழைக்கிறது.
ஈழப்போராட்டத்துக்கு இவர்கள் செய்த துரோகத்தையும் எதிர்காலம் இல்லாது ஏற்படுத்திய இடைவெளியையும் மூடி மறைப்பதற்காக தொடர்ந்தும் வேறு யார்மீதும் பழியைப் போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.
எமது போராட்டத்தை ஆரம்பம் தொட்டே அழித்துவிட வேண்டுமென்ற கபட நோக்கம்கொண்ட சக்திகள் இவர்களின் பலவீனத்தை பற்றிக்கொண்டன. பணத்துக்காக இவர்கள் எதுவும் செய்யக் கூடியவர்கள் என்பதை கண்டுகொண்டார்கள். இலங்கை இராணுவத்துக்கெதிராக போரிட இந்தியாவிடமும் பின் இந்திய இராணுவத்துக்கெதிராக போரிட இலங்கையிடமும் பணம் பெற்றவர்கள். இந்திய ராணுவத்தை வெளியேற்ற முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸவுடன் மிக இலகுவாக பேரம்பேசி அலுவலை முடிந்த்தார்கள்.
இதைப் பார்த்திருந்த இன்னோர் சக்தி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை முடித்துக்கட்ட இவர்களது பலவீனத்தை பயன்படுத்தியது. இதன் விளைவு ஓரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற பலனை எதிரிக்குக் கொடுத்தது.
1) ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமிடையில் நிரந்தரமான இடைவெளியை ஏற்படுத்தியது.
2) புலிகள் உயிருடன் உள்ளவரை இந்தியாவோடு உறவாட முடியாத நிலையை உருவாக்கி தொடர்ந்தும் இந்தியாவினுடைய எதிர் சக்திகளுடனேயே உறவாட வேண்டிய நிற்பந்தத்தை உருவாக்கியது.
இப்படியாக நமது எரிந்த வீட்டுக்குள் எத்தனை பேர்தான் இலாபம் பெற்றார்கள். (தமிழர்களைத் தவிர)
மேற்குறிப்பிட்டது போல் பல வரலாற்று உண்மைகளிருக்க கலைஞர் கருணாநிதியும் அவர் மகள் கனிமொழியும் போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்று புதுக்கதை விடுகிறார்கள்.
தொடர்ந்தும் தமிழர் தமது கற்கால சிந்தனையிலிருந்து சிந்திப்பார்களேயானால் மீண்டுமொருமுறை தமிழன் வாழ்வு வெள்ளான் முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லப்படுவதை யாராலும் தடுக்க முடியாத நிலை தோன்றும்.
2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீன இராணுவத் தளபதி SUN TSU (இவர் சரத் பொன்சேகா போன்று போர்க்களத்தில் பல வெற்றிகளைக் கண்டவர்)ன் போரியல் பற்றிய குறிப்பிலிருந்து பெறப்பட்டு 21ம் நூற்றாண்டில் வாழும் ஈழத்தமிழர்கட்கு பொருத்தமானதாக இருப்பதை அவதானித்து அதை இங்கே தருகிறேன்:
“know your enemy, know yourself and you can fight a hundred battles without disaster.”
தமிழர் தமது பலத்தை மிகைப்படுத்திப் பேசி மார்தட்டுவதைவிட தமது உண்மையான பலவீனத்தை கண்டறிவதே அவர்களின் பாதுகாப்பிற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் வளம்சேர்க்கும். தமது பலத்தை கண்டறியாதவரை 21ம் நூற்றாண்டிலும் புராணங்களும் புளுகுகளுமே தமிழர் வாழ்வாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.
புராணங்களையும் புளுகுகளையும் நம்பி அரசியல் செய்யும் உலகத் தமிழ்த் தலைவர்கள் ஈழத்தமிழரின் போராட்ட நாயகர்களாக வர்ணிக்கப்பட்டு தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவார்கள். அன்று MGR இல் தொடங்கி இன்று சீமானில் வந்து நிற்கிறது. நாளை எந்தப் பூமான் வருவானோ தெரியாது ஈழத்தை வென்று தர.
பின் குறிப்பு:
அரசியல் கோமாளிகள்: இதை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மரபணு சொற்சேற்க்கை என்னும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து முன்மொழிந்தார். அதனால் இது மிகவும் வீரியம் கூடிய சொற்றொடராகக் கருதப்படுகிறது. பின் இது புலம்பெயர் புலிச் சமூகத்தால் வழிமொழியப்பட்டு இப்போது இவர்களின் பாவனையில் உள்ளது.
விடுதலைப்புலிகளுடன் இவர் பல ஆண்டுகள் போரிட்டு இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டதே இச் சொற்றொடராகும். இதன் மூலம் இவர் போரில் மட்டுமல்ல தமிழர் வாழ்விலும் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்டார். இச் சொற்றொடர் புலிச் சமூகத்தின் இன்பத்துக்குரியதும் புலிசார் ஊடகங்களின் ஆத்மதிருப்திக்கு உரியதுமானதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு IBC, GTV, தீபம் போன்ற சர்வதேச தரம்வாய்ந்த ஊடகங்களை கேட்டும் பார்த்தும் தெரிந்து கொள்க.
துரோகி: இது தமிழரசுக் கட்சியினால் அகழ்ந்தெடுக்கப்பட்டு TULF இனால் பட்டைதீட்டப்பட்டு விடுதலைப் புலிகளினால் மகுடமிடப்பட்டது. கடந்த 25 ஆண்டு காலம் அதன் ஏகபோக உரிமையாளர்களாக இருந்து கடுமையான கஸ்ரங்களின் மத்தியிலும் இதைப் பாதுகாத்து வந்தார்கள் என்ற பெருமையைப் விடுதலைப் புலிகள் தமதாக்கிக்கொண்டார்கள்.
இது புலிச் சமூகத்தின் மிகவும் இன்பகரமான சொல்லாகவும் புலிசார் ஊடகங்களின் மிகவும் கவர்ச்சியானதுமாக கணித்திருக்கிறார்கள். இது மிகஆழமான உட்பொருட்களை சுட்டி நிற்பதால் இதை ஓர் சர்வதேச தரம்வாய்ந்த சொல்லாக கருதுகிறார்கள்.
ஈழத்தமிழர் வரலாற்றில் கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில் அதிகமாக பயன்படுத்திய சொல் என்பதால் கின்னஸ்ஸில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறியிருக்கிறார்கள்.
இதன் மேலதிக விபரங்களுக்கு www. வி. பு. அகராதி. com என்று பார்க்க.
இது Oxford அகராதிக்கு இணையானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.